ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் : தொடரும் விசாரணை
கொடும் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் கொண்டிருந்த நட்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருவதாக தேம்ஸ் வேலி காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது முன்னாள் இல்லமான ‘ராயல்லாட்ஜில்’ காவல்துறை தொடர் சோதனை நடத்தி வருகிறது. ஆண்ட்ரூ எப்ஸ்டீனின் தனித்தீவுக்கு சென்றதுடன் தான் வர்த்தகத் தூதராக இருந்தபோது அரசின் ரகசிய விஷயங்களையும் எப்ஸ்டீனுக்கு கசிய விட்டுள்ளார்.
டிரம்ப்புக்கு ஒத்துழைக்க மறுப்பு : ஸ்டார்மர் திடீர் மாற்றம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஈரானைத் தாக்க பிரிட்டனின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த டிரம்ப் கோரிக்கை விடுத்தார். அது சர்வதேசச் சட்டங்களை மீறும் செயல் என அதனை பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் நிராகரித்துள்ளார். ரஷ்யா மீது தாக்கு தல் நடத்த உக்ரைனுக்கு தொடர் உதவிகளை செய்வதுடன் அமெரிக்காவுடன் இணைந்து ஏமன் மீதும் பிரிட்டன் குண்டு வீசியுள்ளது. இந்நிலையில் டிரம்ப்புக்கு ஒத்துழைக்க மறுப்பது ஐரோப்பா அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஈரானை தாக்க இஸ்ரேல், அமெரிக்கா தீவிரம் ஈ
ரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அந்நாட்டின் மீது தாக்கு தல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இஸ்ரேலும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளது. இது அப்பிராந்தி யம் முழுவதும் போர்ப் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இத்தகைய சூழலில் அமெரிக்கா கூறுவதை 10-15 நாட்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் நாங்கள் முதலில் தாக்குதல் நடத்த மாட்டோம். எங்கள் மீது தாக்குதல் நடத்தால் பதிலடி கடுமையாக இருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழிலாளர் விரோத நடவடிக்கை : அர்ஜெண்டினாவில் முழு வேலைநிறுத்தம்
அர்ஜெண்டினாவில் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது அந்நாட்டு கீழவையில் விவாதத்தில் உள்ளது. இது தொழிலாளர்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய நட வடிக்கை என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த சட்டச் சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவிற்கு பொது வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த அந்நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான தொழிலாளர் பொது கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதன்படி பிப்ரவரி 19 அன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது.
‘அடிமைத்தனம், காலனித்துவம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்’
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூட்டத்தில் அடிமைத்தனம், நாடு கடத்தல் மற்றும் காலனித்துவ ஆட்சி ஆகியவை ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிப்.14-15 தேதிகளில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 39 ஆவது அமர்வில் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆப்பிரிக்க மக்கள் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு வரலாற்று ரீதியான நீதி மற்றும் இழப்பீடு கோரவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
