கம்பி கட்டும் கதையல்ல, வன்முறையை கட்டமைக்கும் சதி சங்பரிவாரின் முகத்திரை கிழிந்த மைக்கேல்பட்டி!
“தமிழகம் கலவர பூமியாக மாறும்” - இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகத் தமிழக பா.ஜ.க தலைவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் ஒரு ‘சாபச் சொல்’. ஆனால், அந்தச் சொல்லுக்குப் பின்னால் மறைந்திருப்பது தமிழக மக்களின் மீதான அக்கறையல்ல; மாறாக, எவ்விதமான வன்முறையையும், பொய்யையும் பயன் படுத்தித் தமிழகத்தில் கால்பதிக்கத் துடிக்கும் ஒரு பெரும்பான்மை மதவாத அமைப்பின் அதிகாரப் பசி. 2017-இல் தீக்கதிர் இதழில் இந்த கட்டுரை யாளர் எழுதிய ‘பொன்னாரின் ஒப்புதல் வாக்கு மூலம்’ என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டிய அதே நயவஞ்சகப் பாதைதான், இன்று லாவண்யா மரண விவகாரத்திலும் சி.பி.ஐ அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. மைக்கேல்பட்டி: ஒரு மரணமும் கட்டமைக்கப்பட்ட வன்மமும் 2022-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 17 வயது மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு துயரமானது. ஒரு கிரா மப்புறப் பெண் குழந்தை, கல்வியின் மூலம் தன் வாழ்வை உயர்த்த நினைத்த கனவு கலைந்த அந்த நொடியில், ஒரு ‘கும்பல்’ மட்டும் அங்கே மரணத்தில் அரசியல் செய்யக் காத்திருந்தது. அப்போது தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை, எவ்வி தத் தரவுகளுமின்றி “மதமாற்ற நிர்பந்தத்தால்தான் தற்கொலை நடந்தது” என்று ஒரு பெரும் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டார்.
இன்று சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை, அண்ணாமலையின் அந்த ‘கம்பி கட்டும் கதையை’ அடித்து நொறுக்கியுள்ளது. 2010-ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்க ளின் பட்டியலை ஆய்வு செய்த சி.பி.ஐ, 15 ஆண்டு காலத்தில் ஒருவர் கூட மதம் மாறியதாக தரவுகள் இல்லை என உறுதி செய்துள்ளது. விரிவாக விசாரணை நடத்தி, துல்லியமான உண்மைகளின் அடிப்படை யில் அந்த முடிவைத் தெரிவித்துள்ளது. அப்படி யென்றால், ஏன் அண்ணாமலையும், வி.எச்.பி-யின் முத்துவேலும் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள்? காரணம் தெளிவானது: தமிழகத்தில் மதரீதியான ஒரு பிளவை உண்டாக்கி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் அவர்களின் நோக்கம். வரலாறெங்கும் விரியும் பொய்களின் நிழல் இது ஏதோ லாவண்யா மரணத்தில் மட்டும் நடந்த ‘விபத்தல்ல’. சங்பரிவார் அமைப்புகளுக்கு இது ஒரு ‘வழக்கமான நடைமுறை’. 2017-இல் சுட்டிக் காட்டிய சம்பவங்களை இன்று மீண்டும் நினைவூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடந்த 2017 ஜூன் மாதம், இராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகி அஸ்வின்குமார் தாக்கப்பட்டபோது, எச். ராஜா “முஸ்லிம் பயங்கரவாதிகள் மிருகத்தன மாகத் தாக்கினார்கள்” என்றார். நாராயணன் திருப்ப தியோ ஒருபடி மேலே சென்று, “இராமநாதபுரத்தைத் தலிபான்கள் நிறைந்த மாவட்டம்” எனச் சித்தரித்து, அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி னார். அந்த வழக்கில் காவல்துறை கைது செய்த மணிகண்டன், ரவி, முத்துராமலிங்கம், சதீஷ் போன்றோர் யார்? இவர்கள் எவராவது இஸ்லாமி யர்களா? இல்லை. ஆனால், அந்தப் பொய்யின் மூலம் இராமநாதபுரத்தில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்க எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவர்கள் சொல்வதை உண்மை என்று நம்பிப் பதறிய அப்பாவிகள் கலவரத்தில் இறங்கியிருந்தால், எத்தனை இஸ்லாமி யர் வீடுகள் சூறையாடப்பட்டிருக்கும்? எத்தனை இளைஞர்களின் வாழ்வு சிறையில் தொலைந்தி ருக்கும்? அந்தச் சிதைவுகளின் மீது காவிக்கொடியைப் பறக்கவிடுவதுதான் இவர்களது ‘அரசியல் சூழ்ச்சி’. பிணத்தின் கீழே செருப்பு மாலை: வக்கிரத்தின் உச்சம் அதே 2017-ஆம் ஆண்டு ஜனவரியில், திருப்பூரில் பா.ஜ.க நிர்வாகி முத்து (என்கிற மாரிமுத்து) தற்கொலை செய்துகொண்டார்.
ஒரு மனிதன் தற்கொலை செய்துகொண்ட அந்தத் துயரமான சூழலில், அவரது சடலத்தின் கீழே பா.ஜ.க கொடி, மோடியின் படம் ஆகியவற்றை வைத்து, அதற்குச் செருப்பு மாலை அணிவித்த நயவஞ்சகம் யாருடையது? தற்கொலை செய்துகொள்பவர்கள் சில விநாடிகளில் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளத் துடிப்பார்கள் என்று அறிவியல் சொல்லும் நிலையில், முத்துவே இதையெல்லாம் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால், பிணத்தைப் பார்த்தவுடன் அதை ஒரு மத மோதலாக மாற்ற, அவசர அவசர மாகச் செருப்பு மாலையைத் தொங்கவிட்ட அந்த அழு கிப்போன வக்கிர மூளை யாருடையது? முத்துவின் மரணம் கடன் மற்றும் சொந்த காரணங்களால் நடந்தது எனத் தெரிந்ததும், அவரது குடும்பத்தை சந்திக்க வருவதாகச் சொன்ன பா.ஜ.க தலைவர்கள் அப்படியே கழன்று கொண்டார்கள். குண்டு வைப்பதும், கலவரத்தை தூண்டுவதும் இவர்களே என்பதற்குத் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகக் குண்டுவெடிப்பே சாட்சி. 2008-இல் அங்கேயே குண்டு வைத்துவிட்டு, இஸ்லாமியத் தொப்பிகளைப் போட்டு நாடகமாடிய இந்து முன்னணி யினரின் செயலை நீதிமன்றமே கண்டித்துத் தண்டனை வழங்கியுள்ளது. தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத் தன் வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிக் கொண்ட திண்டுக்கல் பா.ஜ.க நிர்வாகி முதல், கேரள பா.ஜ.க அலுவலகக் குண்டுவெடிப்பு நாடகம் வரை இவர்களது வரலாறு என்பது ‘சுயநலச் சதிகளால்’ ஆனது. நீதித்துறையின் அவசரமும் சி.பி.ஐ-யின் முடிவும் லாவண்யா விவகாரத்தில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக காவல்துறையிடம் கூடக் கருத்துக் கேட்காமல், மின்னல் வேகத்தில் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றினார். இது ஏதோ “முதல் அடி” என்று எச். ராஜா போன்றோர் குதித்தனர்.
ஆனால் சி.பி.ஐ-யோ, பள்ளியில் நடந்த டார்ச்சர்களும், காணாமல் போன பொருளை மாணவிதான் எடுத்தார் எனச் சுமத்தப்பட்ட பழிச்சொல்லும்தான் தற்கொலை க்குக் காரணம் என்று கூறியுள்ளது. வி.எச்.பி-யின் முத்துவேல், மாணவியின் தந்தை மற்றும் சித்தியை மூளைச்சலவை செய்து, “உடலை வாங்காதே, தலைமறைவாக இரு” எனப் பணித்ததை இன்று சி.பி.ஐ அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் துயர மரணத்தைக் கூடத் தன் அரசியலுக்காகப் பயன்படுத்தும் இவர்களின் மனசாட்சி எத்தகையது? கிறிஸ்தவ நிறுவனங்கள் தென்னகத்தில் மருத்து வம் மற்றும் கல்வித் துறைகளில் ஆற்றி வரும் சேவையை எவரும் மறுக்க முடியாது. மதமாற்றத் தடைச் சட்டம் என்பது ஆசை காட்டியோ, மிரட்டி யோ மதம் மாற்றுவதற்குத்தான் தடையாக இருக்கிறதே தவிர, ஒருவர் தன் விருப்பப்படி மதத்தைப் பரப்புவ தைத் தடுக்க முடியாது. ஆனால், ஒட்டுமொத்த கிறிஸ்தவ நிறுவனங்களின் மீதும் வன்மத்தைக் கொட்டுவதற்காக ஒரு சிறுமியின் உயிரைப் பணயம் வைத்ததுதான் சங்பரிவாரின் சாதனை. அண்ணாமலை மன்னிப்புக் கேட்க வேண்டும் வருத்தமான விஷயம் என்னவென்றால், தமிழக ஊடகங்களும் இத்தகைய பொய்ப் பிரச்சா ரங்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றன.
அண்ணாமலை போன்றவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டால், அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் அதை விவாதப் பொருளாக்கியது ஆரோக்கியமானதல்ல. ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு, ஒரு மதச்சாயம் பூசப்பட்ட செய்தி எத்தகைய வன்முறையைத் தூண்டும் என்பது நன்றாகவே தெரியும். தெரிந்தே தான் அவர் தமிழக மக்களைக் குழப்ப முயன்றார். எனவே, அண்ணாமலை தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். அவர் அன்று வெளியிட்ட வீடியோக்கள் எவ்வளவு வேகத்தில் பரவினவோ, அதே வேகத்தில் “நான் சொன்னது பொய், மதமாற்றம் அங்கே நடக்கவில்லை” என்கிற ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் பகிரங்கமாக வெளியிட வேண்டும். தமிழகம் ஒருபோதும் கலவர பூமியாகாது. இங்கே இடதுசாரி இயக்கங்களும், பெரியாரும், அண்ணாவும், விதைத்த பகுத்தறிவுச் சிந்தனை வலி மையானது. ஆனால், சங்பரிவார் அமைப்புகள் ஓயப் போவதில்லை. லாவண்யா மரணத்தில் அவர்கள் தோற்றிருக்கலாம், ஆனால் நாளை வேறொரு துயரத்தைப் பிடித்துத் தொங்க அவர்கள் தயாரா வார்கள். அத்தகைய நயவஞ்சகங்களை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமக்களுக்கும் உண்டு.