articles

img

தமிழகத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதல் - ஓர் ஆழமான அலசல் - எஸ்.பி.ராஜேந்திரன்

தமிழகத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதல் - ஓர் ஆழமான அலசல்

தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு. திருப்பூரின் பின்னலாடை, ஆம்பூரின் தோல் பொருட்கள், கோயம்புத்தூரின் இயந்திரங்கள், சென்னையின் வாகன உதிரிபாகங்கள் என இம்மாநிலம் ஒரு மிகப்பெரிய உலகளாவிய தொழிற்சாலையாகவே இயங்கி வருகிறது. ஆனால், 2025 ஆகஸ்ட் 7 மற்றும் 27 ஆகிய தேதிகளில் டிரம்ப் நிர்வாகம் அறிவித்த 50 சதவீத சுங்கவரி, தமிழகத்தின் இந்த பெருமிதத்தின் மீது விழுந்த இடி. இது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட வரி உயர்வு அல்ல; இது திருப்பூரின் தெருக்களில் அலைந்து திரியும் வேலையிழந்த தொழிலாளியின் கண்ணீர், ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளின் மூடிய கதவுகள், காஞ்சிபுரத்தின் தறிகளில் தேங்கிக் கிடக்கும் பட்டு நூல்களின் மௌன அழுகை... எனலாம். இன்று தமிழகத்தின் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். 52 பில்லியன் டாலர் மதிப்புள்ள மாநிலத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரம், ஒரு மிகப்பெரிய பள்ளத்தை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தின் தொழில்துறை இத்தகையதொரு மோசமான சரிவைச் சந்தித்ததே இல்லை, என தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

1 சுங்கவரி எனும்  இருண்ட அத்தியாயம் ரஷ்யா - உக்ரைன் போரின்

பின்னணி யில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியது; அதற்கு டிரம்ப் நிர்வாகம் எதிர்வினை யாற்றிய விதம், தமிழகத்தின் உழைக்கும் வர்க்கத்தை கடுமையாக தாக்கியுள்ளது. 2025 ஆகஸ்ட் 7-இல் விதிக்கப்பட்ட 25 சதவீத ‘பரஸ்பர வரி’ ஒரு எச்சரிக்கையாகத் தெரிந்தாலும், ஆகஸ்ட் 27-இல் விதிக்கப்பட்ட 25 சதவீத ‘தண்டனை வரி’ என்பது ஒரு நேரடித் தாக்குதல். இதன் விளைவாக, அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்ந்தது. சில பொருட்களுக்கு, குறிப்பாக திருப்பூ ரின் பின்னலாடைகளுக்கு 64 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஒரு ஆடை, அமெரிக்காவில் 164 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் 20 முதல் 30 சதவீத வரியோடு சந்தையில் இருக்கும்போது, இந்தியப் பொருட்களை யார் வாங்குவார்கள்? இந்த நியா யமற்ற போட்டியால் தமிழகத்தின் சந்தை மற்ற நாடு களுக்குத் தாரைவார்க்கப்படுகிறது. இது வெறும் வர்த்தகப் போர் அல்ல, இந்தியாவின் பொருளாதார இறையாண்மை மீதான தாக்குதல்.

2 திருப்பூரின் துயரம் :  பின்னலாடைத் தொழிலின் வீழ்ச்சி

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி யில் 68 சதவீதத்தைத் தன் தோளில் சுமக்கும் திருப்பூர், இன்று ஒரு போர்க்களமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள 6 லட்சம் தொழிலாளர்களில் கணிசமான வர்கள் வேலை இழந்துள்ளனர்; அல்லது வேலைக்கு எப்போது அழைக்கப்படுவோம் என நிச்சயமின்றி உள்ளனர்.  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (TEA) தெரி விக்கும் தரவுகள் ஆபத்தை உணர்த்துகின்றன. சுமார் ₹15,000 கோடி மதிப்புள்ள உறுதிப்படுத்தப் பட்ட ஆர்டர்கள் ஒரே மாதத்தில் ரத்து செய்யப்பட்டுள் ளன. திருப்பூரின் 90 சதவீத நிறுவனங்கள் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் (MSME). அவையெல் லாம் அடுத்தடுத்த ஆர்டர்களை நம்பி இயங்குபவை. ஒரு மாதம் ஆர்டர் இல்லை என்றால் கூட அந்த நிறு வனங்களால் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாது. இன்று 2,500-க்கும் மேற்பட்ட பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் 20 சதவீதம் முற்றிலும் மூடப்பட்டுவிட்டன. பெண் தொழிலாளர்களின் நிலை திருப்பூரின் பலமே பெண் தொழிலாளர்கள் தான். சுமார் 3,90,000 பெண்கள் இங்கு வேலை செய்கிறார்கள். தையல் இயந்திரங்களின் ஓசை யோடு தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைச் செதுக்கியவர்கள் இவர்கள். இன்று அந்த இயந்தி ரங்கள் அமைதியாகின்றன. “வேலை இருந்தால் தான் அடுப்பு எரியும்” என்கிற நிலையில் இருக்கும் இந்தப் பெண்கள், வாழ்வாதாரத்திற்காக எங்கே போவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.  நிறுவனங்களின் சாட்சியம் ஆர்ஆர்கே காட்டன்ஸ் (RRK Cottons India) போன்ற பெரிய நிறுவனங்களே தங்கள் 5 தொழிற் சாலைகளில் 2-ஐ மூடிவிட்டன. வால்மார்ட் மற்றும் டிஸ்னி போன்ற உலகளாவிய பெரும் நிறுவனங்களு க்கு ஆடை தைத்துக் கொடுத்த நிறுவனங்கள் இன்று வாங்குபவர்கள் இல்லாமல் தவிக்கின்றன. முடிக்கப் பட்ட ₹60 கோடி மதிப்புள்ள ஆடைகள் கிட்டங்கி களில் தேங்கிக் கிடக்கின்றன

. 3 மூலப்பொருள் விலை உயர்வும் சிறு தொழில்களின் முடக்கமும்

சுங்கவரி ஒரு பக்கம் ஏற்றுமதியைக் கொல்கிறது என்றால், மறுபக்கம் உள்நாட்டில் மூலப் பொருட்களின் விலை உயர்வு சிறு தொழில்களை நசுக்கி வருகிறது. ஜவுளித் துறையில் பஞ்சு விலை மற்றும் நூல் விலை நிலையற்று இருப்பதால்,சிறு உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கின்ற னர். இறக்குமதி செய்யப்படும் சில ரசாயனங்கள் மற்றும் இயந்திரப் பாகங்கள் மீதான வரி விதிப்பும்,  உற்பத்தியைச் செலவு மிகுந்ததாக மாற்றிவிட்டது. கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள நூற்பு ஆலைகளில் (Spinning Mills) உற் பத்தியாகும் நூல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின் றன. “ஏற்றுமதி முடங்கியதால், உள்நாட்டுச் சந்தையி லேயே சரக்குகள் குவிகின்றன. இது விலையைக் குறைப்பதோடு, எங்களின் லாப வரம்பையும் அழித்து விட்டது” என ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குறுந்தொ ழில் உரிமையாளர் வேதனைப்படுகிறார். இதனால், வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், ஏல அறிவிப்பு எப்போது வருமோ எனப் பயந்து பல உரிமையாளர்கள் துயரின் விளிம்பிற்குச் சென்றுள்ளனர்.

4 சென்னை :  உதிரிபாக உற்பத்திக்கு ஆபத்து

“ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படும் சென்னை, வாகன உதிரிபாக ஏற்று மதியில் இந்தியாவின் இதயம். இங்கு உற்பத்தியா கும் பாகங்கள் தான் உலகெங்கிலும் உள்ள புகழ் பெற்ற கார்களில் பொருத்தப்படுகின்றன. ஆனால், சுங்கவரி உயர்வால் அமெரிக்க நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களைச் செய்யத் தயங்குகின்றன. வாகன உதிரிபாக உற்பத்தியாளர் சங்கத்தின் (Automotive Component Manufacturers Asso ciation (ACMA)) தரவுகளின்படி, கடந்த சில மாதங்க ளாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி எந்த வளர்ச்சியும் இன்றி அப்படியே உறைந்து போயுள்ளது. புதிய திட் டங்கள் அனைத்தும் ‘ஹோல்ட்’ செய்யப்பட்டுள்ளன.

 5 தோல் தொழிலின்  இருண்ட காலம்?

ஆம்பூர்-ராணிப்பேட்டை-வேலூர் பெல்ட், இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் 40 சத வீதத்தைப் பங்களிக்கிறது. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள். சுங்கவரி உயர்வால் இங்கு கணிசமான வேலைகள் பறி போகும் அபாயத்தில் உள்ளன. தோல் தொழிலாளர்களின் கதைகள் மிகவும் உருக்கமானவை. ஃபரிதா லெதர் பேக்டரியில் பணிபுரிந்த 42 வயது கோபி, இன்று வேலை இல்லா மல் தன் பிள்ளைகளின் கல்விக்கட்டணம் கட்ட முடி யாமல் தவிக்கிறார். நர்சிங் படிக்கும் அவரது மகள் கள் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட செய்தி, ஒரு தனிமனிதரின் துயரம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கத்தின் கல்விக்கனவு சிதைக்கப்படுவதன் அடையாளம். ஃபரிதா குரூப்பின் தலைவர் ரபீக் அகமது எச்ச ரிப்பது போல, அவர்கள் பணியமர்த்தியுள்ள 10,000 பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் விரை வில் வேலை இழக்கக்கூடும். தோல் பதனிடும் தொழிற் சாலைகளின் ரசாயன நெடியை விட, இன்று அந்தத் தெருக்களில் வறுமையின் நெடி அதிகமாக வீசுகிறது. பல தொழிலாளர்கள் இப்போது கட்டிட வேலைக்கும், விவ சாயக் கூலி வேலைக்கும் செல்லத்தொடங்கிவிட்டனர். ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கு?

 6 கோயம்புத்தூரின் நெருக்கடி

கோயம்புத்தூரின் “பம்ப் தலைநக ரம்” என்ற பெருமை இன்று கேள்விக்குறியா கியுள்ளது. 800-க்கும் மேற்பட்ட பம்ப் மற்றும் வால்வு தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவிற்குத் தேவையான உயர்தர இயந்திரப் பாகங்களை அனுப்பி வந்தன. இன்று 3 லட்சம் தொழிலாளர்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற நிலைக்குழு கோயம்புத்தூரில் ஆய்வு செய்தபோது, தொழிலதிபர்கள் கண்ணீரு டன் தங்கள் நிலையை விளக்கினர். “2008 உலகளா விய மந்தநிலை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் கோவிட் என எல்லாவற்றையும் நாங்கள் தாங்கிக் கொண்டோம். ஆனால், இந்த சுங்கவரி எங்களை மீள முடியாத படுகுழியில் தள்ளிவிட்டது” என்கிறார் கோவை கம்ப்ரசர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் ரவீந்திரன். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கோயம்புத் தூரின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள். ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து வந்த அவர்கள், இன்று வேலை இல்லாமல் தொழிற்சாலை விடுதிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

 7 துறைமுகங்களில் தேங்கும் சரக்குகளும் வீணாகும் உழைப்பும்

சென்னை மற்றும் தூத்துக்குடி துறை முகங்களில் அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் முடங்கிக் கிடக்கின்றன. சுங்கவரி அதிகரிப்பால், அமெரிக்க இறக்குமதியாளர்கள் சரக்குகளைப் பெற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இதனால், சரக்குப் பெட்ட கங்களுக்கான வாடகை (Demurrage charges) அதி கரித்து, ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் சுமையை ஏற்றியுள்ளது. “நாங்கள் கஷ்டப்பட்டுத் தயாரித்த பொருட்கள் துறைமுகத்தில் கிடக்கின்றன. வாடிக்கையாளர் வரி யைச் செலுத்தத் தயாராக இல்லை, நாங்களும் செலுத்த முடியாது. இப்போது அந்தப் பொருட்கள் என்னவாகும் என்று தெரியவில்லை” எனத் தூத்துக்கு டியைச் சேர்ந்த கடல் உணவு ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகிறார். இறால் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியில் 58-60% வரி விதிக்கப்பட்டுள்ளதால், இத்துறை மொத்தமாக முடங்கும் அபாயத்தில் உள்ளது.

8 கரூர், ஈரோடு மற்றும் சேலம்: பாரம்பரியத் தொழில்களின் சிதைவு

கரூரின் வீட்டு ஜவுளித் தொழில் ஆண்டு க்கு ₹9,000 கோடி ஈட்டித் தருகிறது. இன்று அங்கும் வேலையில்லாத் திண்டாட்டம். வாரத்திற்கு 7 நாட்கள் ஓடிய தொழிற்சாலைகள் இன்று 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. அமெரிக்க வாங்குபவர்கள் கோடைகால முன்பதிவுகளை மொத்தமாக நிறுத்திவிட்டனர். ஈரோட்டின் ஜவுளி ஆலைகள் நூல் தேக்கத்தால் திணறுகின்றன. சேலத்தின் கைத்தறி நெசவாளர்கள் அமெரிக்கச் சந்தையில் தங்கள் பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதால், விற்பனை யின்றி தவிக்கின்றனர். காஞ்சிபுரம் பட்டு ஏற்றுமதி யாளர்கள் தெரிவிப்பது போல, ஒரு பட்டுப் புடவை யின் விலை அமெரிக்காவில் 1000 டாலரைத் தொடுவ தால், அமெரிக்க நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரத்தைப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர்.

9 நிதி நெருக்கடியும்  கடன் பொறிகளும்

இந்தத் தொழில் சரிவு ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி யின் தரவுகள் தமிழகத்தின் சிறு தொழில்களின் நிதி நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகின்றன. சிறு,குறு, நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்களின் கடன் திருப்பிச் செலுத்தாத விகிதம் (Default rate) 75 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் தங்கள் அன்றாடச் செலவுக ளுக்காக நுண்கடன் (Microfinance) நிறுவனங்களை நாடுகிறார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட கடன் கணக்கு களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 17.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொழிலாளர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கிவிட்டதைக் காட்டுகி றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ‘கந்து வட்டி’ கொடுமை மீண்டும் அதீதமாக தலைதூக்கத் தொ டங்கியுள்ளது. பல தொழிலாளர் குடும்பங்கள், அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் தவிக்கின்றன.

10 அரசாங்கத்தின் பதில்கள்: ஒரு சிறு துளி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய அவசரக் கடி தங்கள் இந்த நெருக்கடியின் தீவிரத்தைப் புரிய வைக்கின்றன. “இது வெறும் பொருளாதாரப் பின்ன டைவு அல்ல, ஒரு மனிதாபிமான சவால்” என்று அவர் எச்சரித்துள்ளார். தமிழக அரசு சிறு, குறு, நடுத்தரத்  தொழில் (MSME) மேம்பாட்டிற்காக ₹1,918 கோடியை ஒதுக்கியுள்ளது. மின் கட்டண உயர்வை மாநில அரசே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இருப்பினும், ஒன்றிய அரசின் ₹45,060 கோடி நிதித் தொகுப்பு என்பது பெரும்பாலும் கடன் உத்தரவா தமாகவே உள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் தொழி லாளர்களுக்குத் தேவைப்படுவது உடனடி நிதியுதவி மற்றும் சுங்கவரியைக் குறைப்பதற்கான வலுவான ராஜீய நடவடிக்கை மற்றும் புதிய மாற்றுச் சந்தை களை உடனே தேடுவதுதான்.

11 சமூக விளைவுகளும் எதிர்காலமும் இந்த நெருக்கடி

தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பில் பல தாக்கங்களை ஏற்படுத்த தொ டங்கியுள்ளது. வேலையிழந்த பல தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுகின்றனர். வருமானம் இல்லாததால், தரமான மருத்துவச் சிகிச்சையைப் பெற முடியாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன. தொழில் நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் திரும்புவது, கிரா மப்புறப் பொருளாதாரத்திலும் அழுத்தத்தை ஏற் படுத்தும் அபாயம் உள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளன. ஜவுளி ஏற்றுமதி 10 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்றும், ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறை 70 சதவீதம் வரை சரிவைச் சந் திக்கும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் எச்ச ரிக்கின்றனர். தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சியில் இந்தச் சுங்கவரி 0.9 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும்.

12 மாற்று சந்தைக்கான தேடல்

இந்தியா சந்திக்கும் சுங்கவரி அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம். வங்கதேசம் (20%), வியட்நாம் (20%), பாகிஸ்தான் (19%). இந்த வரி வேறுபாடு இந்தி யப் பொருட்களை உலகச் சந்தையில் “போட்டியிடமுடியாதவை” ஆக்கிவிட்டது. ஒருமுறை இழந்த சந்தையை மீண்டும் பிடிப்பது என்பது கிட்டத்தட்டச் சாத்தியமற்றது. இங்கிலாந்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஓரளவு கைகொடுக்கும் என ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறுவது அமெரிக்கச் சந்தையின் புரம்மாண்டத்தை அது ஈடு செய்யாது. தமிழகத்தின் தொழில் நகரங்கள் இன்று அமைதி யாக இருக்கலாம். ஆனால், அந்த அமைதி ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பின் முன்னறிவிப்பு.   இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடித் தாக்கு தல். தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் ஒட்டு மொத்த தொழில் துறை மீதும் ஏவப்பட்டுள்ள இந்தத்  தாக்குதலை ஒன்றிய மோடி அரசு உரிய முறையில் திட்டமிட்டு எதிர்கொள்ள வேண்டும்; 2026 பட்ஜெட்டில் தொழில் துறையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாட்டின் பத்து தொழில் நகரங்களில் ஜனவரி 22 (இன்று) இடதுசாரிக் கட்சிகள் நடத்தவுள்ள போராட்டம் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது.