ஆர்.என்.ரவி தனது பதவிப் பிரமாணத்தை மீறினார்; அவரை உடனடியாக தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்காக அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றினால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது உரையை நிகழ்த்தும்போது, ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை மூன்று முறை உச்சரிக்குமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு ஆளுநர் என்ற முறையில் சிறப்பு விருந்தினராக ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட மத போதகராக அவர் அழைக்கப்படவில்லை. அவரை மதப் பிரசங்கம் செய்ய அழைக்கவில்லை.
ஆர்.என்.ரவி 12.04.2025 அன்று உரை நிகழ்த்தியக் கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரியாகும். மைய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மானியத் தொகையைக் கொண்டு இக்கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் நிர்வாகம் இதுவரை உயர்ந்த தரங்களைப் பராமரித்து வருகிறது மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அம்சமான மதச்சார்பற்ற விழுமியங்களை இன்றுவரை உயர்த்திப் பிடித்துள்ளது.
கல்லூரி விழாவில் உரையாற்றிய ஆர்.என்.ரவி ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரித்து அதையே மூன்று முறை உச்சரிக்குமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஆளுநரின் வருகையின் போது அவருக்கு கீழ்ப்படிதலுடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரிக்குமாறு ஆளுநர் திடீரென கோரியதைக் கண்டு உண்மையில் அதிர்ச்சியடைந்தனர். ஆளுநரை மதிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட அவர்கள், ஆளுநர் கேட்டுக் கொண்டப்படி செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஆளுநருக்கு கீழ்ப்படிவதற்குப் பதிலாக, ஆளுநர் தனது பதவிப் பிரமாணத்தை மீறியதற்காக மாணவர்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தால், கல்லூரி நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் தேவையற்ற தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கும். கல்லூரியின் பெயரைக் காப்பாற்றும் பொருட்டு, மாணவர்கள் வேறு வழியின்றி ஆளுநர் கூறியதைத் திரும்பக் கூறினர்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டம் குறித்த அறிவைப் பொறுத்தவரை ஆர்.என்.ரவி ஏதும் அறிந்திடாதவர். அவரது அறியாமை மற்றும் ஆணவம் காரணமாக, அவர் தொடர்ந்து தவறான கருத்துக்களைப் பரப்புகிறார், இது அமைதியைக் குலைக்கும் உள்நோக்கம் கொண்டது. ஒரு மக்கள் குழுவை மற்றொரு குழுவினருக்கு எதிராகத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தின் பாடத்திட்டத்தில் அனைத்து மதங்களின் கவிதைகளும், உரைநடைகளும் இடம் பெற்றுள்ளன. கற்றல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மாணவர்கள் தமிழ் இலக்கியத்தின் வளமான பன்முகத்தன்மையை அனுபவிக்கிறார்கள். தமிழ்க் கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஏறக்குறைய அனைத்து மதங்களைப் பற்றியும் கவிதைகள் மற்றும் உரைநடைகளை எழுதியுள்ளனர், மேலும் ஒவ்வொரு மதத்தின் இலக்கியமும் மாணவர்களால் ஒரு கல்வியியல் செயல்பாடாக பாடத்திட்டதாதின் ஒரு பகுதியாக கற்கின்றனர். தமிழ்நாடு மாநில பாடத்திட்டதில் எந்தவொரு இலக்கியப் படைபாபிற்கும் அல்லது எந்த மதத்திற்கும் எதிராக பாகுபாடு கிடையாது.
தமிழ் மொழியின் புகழ்பெற்ற கவிஞர் கம்பர். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” எனும் பழம் தொடர் கம்பரின் சிறப்பை வெளிப்படுத்தும்.
நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தனது இறுதி மூச்சு வரை கம்பர் கழகத்திற்கு தலைமை தாங்கினார். கம்பரின் ராமாயணம் குறித்த தனது உரையைத் தொடர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் ஜீவானந்தத்திற்கு கம்பர் கழகக் கருத்தரங்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. மொழிப் பாடத்திட்டத்தின் அனைத்து நிலைகளிலும் ஆரம்பத்திலிருந்தே கம்ப ராமாயணம் தமிழ்ப் பாடத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
மதச்சார்பற்ற சூழலில் மாணவர்கள் சமயம் சார்ந்த இலக்கியங்களை எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது குறித்த எந்த அடிப்படை அறிவும் இல்லாமல், ஆர்.என்.ரவி ஆளுநர் என்ற பதவியைப் பயன்படுத்தி தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்.
கல்வி என்பது ஒரு மதச்சார்பற்ற செயல்பாடு. கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர் அரசின் முகவர்களாக செயல்படுவதுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் கூறுகளின்படி கல்வி அளிக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. வகுப்பறை செயல்பாடுகள் மற்றும் கல்வியியல் சார்ந்த செயல்பாடுகளில் மாணவர்களுக்கு எந்த மத போதனைகளும் வழங்கப்படக்கூடாது. குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரிக்குமாறு யாரும் மாணவர்களுக்கு அறிவுறுத்தக்கூடாது.
இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அதாவது அரசாங்கம் தன்னை எந்த மதத்துடனும் அடையாளப் படுத்திக் கொள்ளாது. தாங்கள் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் மக்கள் அனைவருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. எந்த மதத்தையும் பின்பற்றாமல் பகுத்தறிவுவாதியாக இருப்பதற்கான சுதந்திரமும் மக்களுக்கு உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 51 ஏ ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையை வகுத்துத் தந்துள்ளது.
(a) அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அதன் கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை மதித்தல்;
(h) அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஆய்வு மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்த்தல்;
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 159 இன் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஆர்.என்.ரவி, தனது உறுதிமொழியில், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை தன்னால் இயன்றவரை பேணிப் பாதுகாப்பேன் என்றும், மாநில மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணிப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள் ஆர்.என்.ரவி ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை தான் கூறி அதை மாணவர்களை மூன்று முறை உச்சரிக்கச் செய்ததன் மூலமும், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்.
ஆர்.என்.ரவி தனது பதவிப் பிரமாணத்தை மீறினார். அவர் அரசமைப்புச் சட்டப்படி நடக்கத் தவறிவிட்டார் மற்றும் அதன் கொள்கைகளையும், நிறுவனங்களையும் மதிக்கத் தவறிவிட்டார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 159ஐ வேண்டுமென்றே மீறியதற்காக ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
ஆளுநர் பதவியிலிருந்து திரு.ஆர்.என்.ரவி நீக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக்கொள்கிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை