articles

img

பி.ராமச்சந்திரன் : அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு, எளிமை – ஓர் உன்னத கம்யூனிஸ்ட் இலக்கணம்!

பி.ராமச்சந்திரன்  அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு  எளிமை   ஓர் உன்னத கம்யூனிஸ்ட் இலக்கணம்

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கம் பல வீரமிக்க ஆளுமைகளை அளித்துள்ளது. அவர்களில் தனக்கே உரிய தனித்த பண்புகளுடன் சிறந்து விளங்கியவர், நம்மால் திருச்சியில் ஆர்.சி. எனவும் தமிழகம் முழுவதும் பி.ஆர்.சி. எனவும் அழைக்கப்பட்ட தோழர் பி. ராமச்சந்திரன் ஆவார். மாணவர் இயக்கத்தில் இருந்து கட்சியில் இணைந்து, கிளை மட்டத்திலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரை பல பொறுப்புகளை வகித்த அவரது 65 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் பயணத்தில், 26 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி மாவட்டத்தின் செயலாளராகப் பணியாற்றினார். இன்றைய திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் என ஐந்து வருவாய் மாவட்டங்களாகப் பரந்திருக்கும் பகுதியில், கட்சியின் ஆணிவேராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. அவரது வாழ்க்கை, இன்றைய இளைய தலைமுறைக்கு ஏராளமான படிப்பினைகளை வழங்குகிறது. மொத்தத்தில், எளிமையான கம்யூனிஸ்ட் வாழ்க்கை, மார்க்சிய சித்தாந்தத்தில் தெளிவு, கட்சிக் கட்டுப்பாட்டில் உறுதி, அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு – இவற்றுக்கு இலக்கணம் தோழர் ராமச்சந்திரன்.

திருப்புமுனை தந்த களப்பணி

கேரள மாநிலத்தின் இடதுசாரி அரசியலின் எழுச்சிப் பாசறையாக விளங்கிய கண்ணூர் மாவட்டத்தில், தலச்சேரி பகுதியில் பிறந்த தோழர் ஆர்.சி., சிறுவயதிலேயே சாதி ஆதிக்க சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் கோபம் கொண்டார். தலச்சேரியில் பள்ளி மாணவராகப் படிக்கையிலேயே, இடதுசாரி காங்கிரஸ் தலைவருடனும் கம்யூனிஸ்ட் தோழர்களுடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1941-ல் தனது 16 வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். மேற்படிப்புக்காகச் சென்னைக்கு வந்தவர், சென்னை மாணவர் இயக்கமான எம்.எஸ்.ஓ.வுடனும், கட்சியோடும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அப்போது அவர் படித்த கிறிஸ்துவக் கல்லூரியில், லத்திப் ஆப்கானி என்ற ஆப்கானிய தோழருடன் இணைந்து கட்சி கிளையை உருவாக்கினார். தோழர்கள் ஆர். உமாநாத், வி.பி. சிந்தன், மோகன் குமார மங்கலம் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. சென்னையில் இயங்கிவந்த தோழர் ஆர்.சி., ஒரு கட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் சென்று தோழர் பி. இராமமூர்த்தியைச் சந்திக்க வேண்டும் எனத் தகவல் வந்தது. அங்கே சந்தித்த பி.ஆர்., “திருச்சியில் கட்சி கடும் சிரமத்தில் உள்ளது. அங்கு செயல்பட்ட தலைவர்கள் எல்லாம் சதி வழக்கில் சிறையில் இருக்கிறார்கள், நீங்கள் அங்கு சென்று மாவட்டக் கட்சி அமைப்புப் பணியில் ஈடுபட வேண்டும்” என மாநிலக்குழுவின் விருப்பத்தைத் தெரிவித்தார். கட்சியின் கட்டளையை ஏற்ற ராமச்சந்திரனுக்கு, பி.ஆர். அவர்கள் 25 ரூபாய் பணத்தைக் கொடுத்து, திருச்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூறி அனுப்பி வைத்தார். இதுவே அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

திருச்சியில் செங்கொடியை மீட்டெடுத்த சிற்பி

மாநிலக் குழுவின் முடிவின்படி திருச்சிக்கு வந்த ஆர்.சி.க்கு, சென்னையில் அவருடன் இணைந்து பணியாற்றிய ரயில்வே ஊழியர் தோழர் டி.எஸ். ராமகிருஷ்ணன் பெரிதும் உதவினார். ஆர்.சி. களப்பணிக்கு வந்தபோது, அன்றைய முன்னணி தலைவர்களான உமாநாத், நம்பியார், கே.டி. இராஜு உள்ளிட்டோர் சதி வழக்குகளில் சிறையில் இருந்ததால், கட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் வழிகாட்டுதல் இல்லாமல் செயலற்று இருந்தன. பொன்மலையில் சீல் வைக்கப்பட்ட சங்க அலுவலகத்தின் சாவியை, நீதிமன்ற உத்தரவு பெற்று சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த தோழர் பாப்பா உமாநாத் திறந்து செயல்படத் துவங்கினார். அவருடன் ஆர்.சி. இணைந்து, திருச்சி நகரில் முடங்கி இருந்த தொழிற்சங்கப் பணிகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தார். செம்பட்டியில் தோல் பதனிடும் தொழிலாளர்கள் சங்கம், உறையூரில் சுருட்டுத் தொழிலாளர் சங்கம், கைத்தறி நெசவாளர் சங்கம், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கம் ஆகியவை மீண்டும் இயங்கத் துவங்கின. அன்றைய திருச்சி மாவட்டம் இன்றைய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய பரந்த பகுதியாக இருந்தது. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், அறிமுகம் இல்லாத புதிய பகுதியில், கட்சி கிளை பட்டியலை வைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று தோழர்களைச் சந்தித்து நம்பிக்கையூட்டி, கட்சிச் செயல்பாட்டைப் புனரமைத்தார். திருச்சி, புதுக்கோட்டை பஞ்சு ஆலைகள், கோத்தாரி சர்க்கரை ஆலை, டால்மியா சிமென்ட், கரூரில் கைநெசவுத் தொழிலாளர்கள், புகளூர் சர்க்கரை ஆலை எனப் பல ஆலைகளிலும் தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் அவர் தனித்துவமான பங்கினை வகித்தார். விவசாயிகள் போராட்டத்தில், குத்தகைதாரர் நில வெளியேற்றத்திற்கு எதிராகச் செங்கொடி சங்கத்தின் கடும் போராட்டங்களின் விளைவாக குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இப்போராட்டங்களில் எல்லாம் தோழர் ஆர்.சி. விவசாய இயக்கங்களுக்கு வழிகாட்டி உதவினார். இதன் விளைவாக, 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட பல் மருத்துவர் சிற்றம்பலம் (ஸ்ரீரங்கம்), மற்றும் தோழர் எம்.கல்யாணசுந்தரம் (திருச்சி மேற்கு) ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 1953-ல் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் தோழர் ஆர்.சி. திருச்சி மாவட்டக் குழு செயலாளராகத் தேர்வானார்.

சித்தாந்த போரில் உறுதி

தோழர் ஆர்.சி. திருச்சியில் செயல்பட்ட காலமே, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கடுமையான சித்தாந்தப் போராட்டக் காலம். வலதுசாரி திருத்தல்வாதத்துக்கு எதிராக உறுதியாக நின்று, மார்க்சிய வெளிச்சத்தில் புரட்சிப் பாதையை வடிவமைக்கப் போராடிய மார்க்சிஸ்ட் தோழர்களோடு இணைந்து, திருச்சி மாவட்டத்தில் அப்போராட்டங்களை முன் நின்று நடத்தினார். தோழர் ஏ.கே. கோபாலன் பங்கேற்ற தாராநல்லூர் கூட்டம் அதில் முக்கியமானது. இப்போராட்டத்தின் காரணமாக அன்றைய மாவட்ட தலைமை இவருக்கு அலவன்ஸ் வழங்குவதில் நெருக்கடி கொடுத்தது. கட்சியின் பிளவுக்குப் பிறகு, சிபிஐ (மார்க்சிஸ்ட்) கட்சியை மாவட்டத்தில் வலுப்படுத்த அவர் கடுமையாக உழைத்தார். கரூர் மில், புதுக்கோட்டை பஞ்சாலைகள், கோத்தாரி சர்க்கரை ஆலை போன்ற தொழிற்சங்க அமைப்புகளைப் பின்புலமாகக்கொண்டு, கட்சியையும், கிராமப்புற அமைப்புகளையும் வெகு சீக்கிரமே வலுப்படுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியை பலம் பொருந்திய கட்சியாக மாற்றியதில் அவரது பங்குஅளப்பரியது.

‘பெல்’ தொழிற்சங்கத்தின் சிற்பி

பி.எச்.இ.எல். (BHEL) தொழிற்சங்க இயக்கத்தில் தோழர்ஆர்.சி.யின் பங்களிப்பு மகத்தானது. ஏ.ஐ.டி.யூ.சி.யுடன் ஒன்றிணைந்த பொழுதும், சி.ஐ.டி.யூ. அமைப்பு தனியாக உருவான பொழுதும், தோழர் உமாநாத் அவர்களுடன் இணைந்து அங்கு தொழிற்சங்க இயக்கத்தையும், கட்சியையும் உருவாக்குவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தினார். அவசரகால நிலைக்குப் பின்னர், தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்புத் தேர்தலில் சி.ஐ.டி.யூ. மகத்தான வெற்றி பெற்று முதன்மை இடத்தை வென்றது. பி.எச்.இ.எல். ஆலையைச் சீமென்ஸ் நிறுவனத்துக்குத் தாரைவார்க்க ஜனதா அரசாங்கம் முயன்ற பொழுது, தோழர் பி.ஆர். அதனை அம்பலப்படுத்தி ஒரு நூலை வெளியிட்டார். அதனைத் தமிழ்படுத்தி ஆலைத் தொழிலாளர்களிடையே பெரும் விழிப்புணர்வு உருவாக்கினார்.

கட்சி வகுப்புகளின் ஆசான்

தோழர் பி.ஆர்.சி. என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கட்சி வகுப்புகள் ஆகும். அரசியல் வகுப்புகளை எடுப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாடு மிகச் சிறப்பானது. புத்தக வாசிப்பு என்பது அவருக்கு மூச்சுக்காற்றைப் போன்றது. தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொள்வதில் அவருக்கு நிகர் அவர் தான்.

தோழர் ஜானகி ராமச்சந்திரன்:  அரசியல் துணையின் வலிமை

தோழர் ஆர்.சி.யின் பணிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறப்பாக இருக்கக் காரணம், அவரது இணையர் தோழர் ஜானகி ராமச்சந்திரன் என்றால் மிகையல்ல. அவரது அரசியல் பணிக்கு உறுதுணையாகவும், குடும்பப் பொறுப்பைத் தாங்கிப் பிடிப்பதிலும், ஒரு கம்யூனிஸ்ட் போராளிக்கு எத்தகைய வாழ்க்கைத்துணை பொருத்தமானது என்பதற்கு தோழர் ஜானகி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். அவர், கோதாவரி பாருலேகரின் வோர்லி ஆதிவாசிகள் மக்கள் போராட்டத்தை மையமாகக் கொண்ட “மனிதர்கள் விழித்தெழுந்த போது” என்ற நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்தவர். தோழர் ஆர்.சி. தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளவே மாட்டார். ஒரு வெற்றிகரமான திரைப்படத்திற்கு இயக்குநர் எப்படித் திரைக்குப் பின்னால் நின்று பணியாற்றுவாரோ, அப்படி இயக்கங்களை உருவாக்குவதிலும், போராட்டங்களை வடிவமைப்பதிலும், விவரங்களை தொகுப்பதிலும் அவரது பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. அவரது எளிமையான வாழ்க்கை, ஊழியர்களை அடையாளம் கண்டு, பொறுப்புகளைக் கொடுத்து வளர்ப்பது என்ற அவரது செயல்பாடு கட்சிக்கு பல தலைவர்களைக் கொண்டு வந்தது. அவரது முன்மாதிரி இன்றைக்குப் பெருமளவு தேவைப்படுகிறது.