கோவிட் மரணங்களை மறைத்த மோடி அரசு அம்பலப்பட்டது
2021 ஆம் ஆண்டுக்கான குடிமக்கள் பதிவுத் தரவு, அப்போது இறப்புகள் அதிகமாக இருந்ததை இப்போது வெளிப்படுத்தியுள்ளது.
பிணங்கள் மிதந்த கங்கை
SARS-CoV-2 வைரசும் அதன் பல திரிபுகளும் இந்தியாவை தாக்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சுகாதார பராமரிப்பு அமைப்புகள் தடுமாறின, ஆக்ஸிஜன் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. உத்தரப்பிரதேச கங்கையில் பிணங்கள் மிதந்தன என அதன் பேரழிவு தாக்கத்தை இந்தியா தாங்கிக்கொண்டது. குறிப்பாக ‘தி இந்து’ நாளிதழ் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமும் பிற வழிகளிலும் - அதாவது சிவில் பதிவு அமைப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கைகள் - இறப்பின் எண்ணிக்கை அதிர்ச்சி ஊட்டுவதாகவும் அதிகாரப்பூர்வ கணக்கைவிட பல லட்சம் அதிகம் என்பதையும் காட்டியது. மோடி அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ள அதை நிராகரித்தது. இறப்பின் உண்மையான எண்ணிக்கையை குறைத்துக் காட்டவே அரசாங்கம் விரும்பியது. தன்னுடைய வெளியீடுகள்தான் சரியானது என்று தொடர்ந்து நிலை எடுத்து வந்த ஒன்றிய அரசு கடந்த வாரம் இந்திய பதிவாளர் ஜெனரல் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. 2021-ல் கோவிட் மூலம் 3.3 லட்சம் இறப்புகளும் 21.5 லட்சம் அதிகப்படியான இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று அந்த அறிக்கை கூறியது. ஒரு தொற்றுநோய்க் காலத்தில் பதிவான இறப்புகளின் பெரும் பகுதி அதனுடன்தான் தொடர்புடையதாக இருக்க முடியும். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடு சாலை விபத்துக்கள் போன்ற காரணங்களால் ஏற்படும் இறப்புகளைக் குறைத்துள்ளது. ‘தி இந்து’வின் கணக்கீடுகளின்படி இறப்புகளின் எண்ணிக்கை பதிவான எண்ணிக்கையைவிட 6.5 மடங்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் (44.2 மடங்கு), மத்தியப் பிரதேசம் (19.5 மடங்கு), உத்தரப் பிரதேசம் (19.5 மடங்கு), மற்றும் தெலுங்கானா (18.2 மடங்கு) ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது. 2021 ஆம் ஆண்டில் கோவிட்-19 இறப்புகள் கணிசமாகவே குறைத்து பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் இது குறிக்கிறது. பிற உடல்நலக் குறைபாடுகளாலும் அந்த இறப்புகள் ஏற்பட்டன என்று கருதியதாலோ அல்லது அரசு கோவிட் பெருந்தொற்றின் பாதிப்புகளை திறமையாக சமாளித்தது என்று காட்ட முயன்றதாலோ இப்படி நடந்திருக்கலாம்.
ஒன்றிய அரசின் அலட்சியம் 2021
ஆம் ஆண்டின் மாதிரி பதிவு அறிக்கையுடன் சேர்த்து இந்த அறிக்கையை வெளியிட அரசாங்கம் எடுத்துக்கொண்ட நான்கு ஆண்டு கால தாமதம் தொற்றுநோயின் தாக்கத்தை அது மறைத்ததையும் மக்கள்தொகை தரவுகளை வெளியிடுவதில் அதன் அணுகுமுறையில் இருந்த தயக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
தரவுகளை மறைக்கும் மோடி அரசு!
பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களிலோ அல்லது வீடுகளிலோ நிகழும் இறப்புகள் மற்றும் பிறப்புகள் சரியான நேரத்தில் பதிவாகி கணக்கெடுக்கப்படும் இந்தியாவின் சிவில் பதிவு முறை மிகவும் வலுவானதாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில்தான் அரசு இந்த அளவிற்கு இறப்புகளைப் பதிவு செய்ய தயக்கம் காட்டியுள்ளது. ஒப்பீட்டளவில் ஒரு சில மாநிலங்களில் காலதாமதத்தோடுதான் இந்தக் கணக்கெடுப்புகள் நிகழ்கின்றன. ஆனாலும் இப்போது இதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவது ஒரு நல்ல அம்சம். மருத்துவச் சான்றிதழ் மூலம் உறுதி செய்த இறப்புகள் பிரேசில் போன்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு குறைவாகவே உள்ளது. பதிவு மற்றும் சான்றிதழ் விவரங்களைப் பராமரிப்பது பொது சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும். முக்கியத் தரவுகளை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதம் சிவில் பதிவு மேம்பாட்டு ஏற்பாடுகளின் நோக்கத்தைச் சிதைக்கலாம். தாமதப்படுத்தப்பட்ட தரவு மறுக்கப்பட்ட தரவாகும்.
கடலூர் சுகுமாரன்