‘மலரட்டும் மாநில சுயாட்சி! உருவாகட்டும் இந்தியக் கூட்டாட்சி!!’ அதிகாரமிக்கதாக மாநில அரசுகளை மாற்ற அரசியலமைப்பில் திருத்தம் கோருவோம்!
குரியன் ஜோசப் ஆணைய பரிந்துரையை முன்மொழிந்து முதல்வர் பேச்சு
சென்னை, பிப். 18 - நீதிபதி குரியன் ஜோசப் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படை யில், “இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்!” என்ற முன்மொழிவை, தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத் தில் வெளியிட்டார். ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு, கடந்த பிப்ரவரி 16 அன்று தமது 574 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியது. இரண்டே நாட்களில் அதன் முதற்பகுதி நகலை, புதன்கிழ மையன்று சட்டப்பேரவை உறுப்பினர் களுக்கு வழங்கி, அதுகுறித்து முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை யாற்றினார். இப்போது தான் ‘பூனைக்கு மணி கட்டியுள்ளோம்’ அப்போது தான், “அனைத்து அதி காரங்களையும் தன்வசம் வைத்துள்ள ஒன்றிய அரசு, மாநில அரசுகளை மதிப்பதில்லை. இன்னும் எத்தனை நாட்கள்தான் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருக்க வேண்டும். இதற்கு தீர்வு காணும் வகையில் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பூனைக்கு மணி கட்டியுள்ளோம்” என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது: “கூட்டாட்சி கொண்டதாக இந்திய அரசியலமைப்பை மாற்றுவது ஒன்றிய அரசை பலவீனப்படுத்தாது என்று அறிக்கை கூறுகிறது. ஆளு நர்கள் மூலமாக மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுப்பது, ஜி.எஸ்.டி., இந்தித் திணிப்பு, கல்வி நிதி மறுப்பு ஆகிய அனைத்துக்கும் ஒரே மருந்து மாநில சுயாட்சிதான். மோதிக்கொள்ள போட்டியாளர்கள் அல்ல! நாடாளுமன்றத்தில் மாநிலங் களவையிலும், மக்களவையிலும், இந்த கொள்கைக்கு ஆதரவு தெரி விக்கும் ஜனநாயக சக்திகள் அதிகமாக இருக்கிறார்கள். எண்ணிக்கையாலும், எண்ணங்களாலும் அதிகமாக இருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும். ஒன்றிய அரசும் மாநில அரசும் போட்டியாளர்கள் அல்ல. இருவரும் பொது அமைப்பின் பங்குதாரர்கள். மாநிலங்கள் வளர்ந்தால்தான் ஒன்றிய அரசு வளரும். ஆனால், மாநில அரசின் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களைக்கூட அடுத்தடுத்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் பணிகளே இன்றைய ஒன்றிய அரசால் விரைவாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டாட்சித் தத்துவமே இந்தியாவின் அடிப்படை அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. இது தனிப்பட்ட அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல, இந்திய மக்களின் வாழ்வியல் கோரிக்கை. மற்ற மாநில அரசுகளின் உள்ளத்திலும் இதுதான் இருக்கின்றன. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சி தான் அடிப்படை. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதிகாரமும் வாய்ப்புகளும் பரவலாக வேண்டும்! ‘கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி’ என்று 1994-இல் எஸ். ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப் பட்டுள்ளது. எனவே, நாம் முயன்றால் மீண்டும் திருத்த முடியும். இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் முயற்சியைத் தொடங்க வேண்டும். அதிகாரமும் வாய்ப்பு களும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக் கூடாது, பரவலாக வேண்டும். முன்னாள் முதலமைச்சர் அண்ணா, தனது இறுதி உயில் போல எழுதியது தான் மாநில சுயாட்சிக் கொள்கை. அவரது மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக வடி வமைத்துத் தந்தார் முன்னாள் முத லமைச்சர் கலைஞர். போராடும் வாய்ப்பை காலம் நமக்கு தந்திருக்கிறது ஒரு மாநிலமாக, அந்தக் கனவை முழுமையாக நிறைவேற்ற நம்மிடம் அதிகாரம் இல்லை. ஏனெனில், மாநில உரிமைகளை வழங்கும் ஒன்றிய அரசு அமையவில்லை. இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டுதான் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்கட்டமைப்பில் முன்னேறி வருகிறோம். நில உரிமை, நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைக்கு இன்னும் கடுமையாக போராடும் சூழல்தான் உள்ளது. எனவே, எல்லா அதிகாரங்களை யும் கொண்டவையாக மாநில அரசு களை மாற்றும் வகையில் அரசி யலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட முன்னெடுப்பு களை தொடங்கக் கூடிய நாள் இன்று. ‘கொட்டக் கொட்டக் குனியக் கூடியவர்கள் அல்ல நாம்’ என்று கூறி யவுடன், சட்டமன்றத்தில் எழுந்த மேஜை தட்டும் ஒலி வெறும் கடுப்பின் வெளிப்பாடு அல்ல, அது தமிழ்நாட்டின் தந்திரம் நிறைந்த சுதந்திரவுணர்வு, அதன் ஐக்கிய ஜனநாயக உயிர்வளம் ஆகியவற்றின் சங்கேதம்!. எனவே, நாம் தான் இதைச் செய்ய வேண்டும். நம்மைவிட்டால் இதைச் செய்ய யாருமில்லை. இது வர லாறு வழங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு; மலர்க மாநில சுயாட்சி! உருவாகட்டும் இந்தியக் கூட்டாட்சி!.” இவ்வாறு முதலமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.
