தள்ளுபடியும் தாமதப்படுவதும் நீதி மறுக்கப்படுவதாகாதா?
உச்ச, உயர்நீதிமன்றங்கள் சில விஷயங்களைத் தானாக வழக்காக எடுத்துக் கொள்வதுண்டு. அதைத் தீவிரமாக விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதும் உண்டு. ஒரு காலத்தில் இது நீதிமன்றத் தீவிரச் செயல்பாடு (Judicial Activism) என்று குறிப்பிடப்பட்டதும் உண்டு. ஆனால் இப்போதோ வழக்குத் தொடரப்பட்டால் அதை ஏற்றுக் கொண்டு விசாரிக்காமல் உயர்நீதிமன்றத்துக்கோ, மாவட்ட நீதிமன்றத்துக்கோ செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவசர அவசியம் கருதி நேரடியாகக் கொண்டு செல்லப்படும் வழக்குகளை இவ்வாறு திருப்பி விடுவதை நீதிமன்றச் செயலின்மை (Judicial Inactivism) என்று சொல்லலாமா? தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்பார்கள். இப்போது நடப்பதைத் தள்ளுபடி நீதி என்பதா? நீதியைத் தள்ளுபடி செய்வது என்பதா?
அதிகரிக்கும் வெறுப்புப் பேச்சுகளும் புல்டோசர் அரசியலும்
2014-இல் ஆர்எஸ்எஸ் ஆசீர்வாதம் பெற்ற நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு அதன் இந்துத்துவா நடைமுறைகள் அதிகரிக்கலாயின. சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், வெறுப்புப் பேச்சுகள் பெருகின. உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் ஆட்சி புல்டோசர் நடைமுறையைப் பயன்படுத்தி முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கும் வேலையில் ஈடுபட்டது. உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் கூட இடிப்பு வேலை தொடர்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜக - பரிவாரங்களின் தலைவர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் கூட வெறுப்பு விஷத்தை உமிழ்ந்தனர். தலைநகர் தில்லியிலும் வடகிழக்கிலும் கூட வெறுப்புணர்வு பேச்சுகளும் நடவடிக்கைகளும் பரவின. மணிப்பூர் பற்றி எரிகிறது. அசாமில் மாநில முதல்வரே, முஸ்லிம்களைத் துப்பாக்கியால் குறிபார்த்துச் சுடுவதாகக் காணொலி போடுகிறார். எதிர்ப்புக் கிளம்பியதால் நீக்குகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் அது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உயர்நீதிமன்றம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தேர்தல் கால வெறுப்புப் பேச்சும் நீதிமன்றத்தின் கையறுநிலையும்
இப்போது மட்டுமல்ல, 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்புப் பேச்சு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறித் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதமர் பதவிக்கும் பொருந்தாத வகையில் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கல்வியாளர் ரூப் ரேகா வர்மா உள்பட 12 பேர், சகோதரத்துவம் மற்றும் அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதிக்கும் பேச்சுகளை வெளியிடும் போது ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிடக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, இந்த மனு குறிப்பிட்ட ஒரு நபருக்கு எதிராக மட்டுமே உள்ளது என்று கூறி விசாரிக்க மறுத்துவிட்டது. ஒருவேளை வழிகாட்டுதல்களை வெளியிட்டாலும் அதை யார் பின்பற்றுவார்? என்று அந்த அமர்வு தனது கையறுநிலையை வெளிப்படுத்தியது. நீதிமன்றத்தால் உத்தரவுதான் பிறப்பிக்க முடியும், ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்துவது சவாலாக உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
ஜனநாயகத்தின் தூணும் நீதிக்கான ஏக்கமும்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு என நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு அற உணர்வு அவசியம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதிமன்றம் அதன் தனித்தன்மையை நிலைநிறுத்திட முயற்சிக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் முறையிட்டால் நியாயம் கிடைக்காது என்ற நிலையிலேயே மக்கள் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். அங்கிருந்தும் அவர்கள் திருப்பிவிடப்படுவார்களேயானால், அவர்களுக்கு எங்கே நீதி கிடைக்கும்? காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு எத்தனை ஆண்டு காலம் உச்சநீதிமன்றத்தில் தவம் கிடந்தது? அசாம் முதல்வர் மீதான வழக்கை தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கோ அல்லது காவல் துறைக்கோ உச்சநீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட முடியாதா? உயர்நீதிமன்றம் போகச் சொல்வது, தேர்தல் காலத்தில் அசாம் மாநில முதல்வரின் வெறுப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளுக்குக் கால அவகாசம் கொடுப்பதாகாதா? இது சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு நீதி கிடைப்பதைத் தாமதப்படுத்தாதா? தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகாதா? ஆயினும் “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” எனும் நம்பிக்கை ஒன்றே நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கும்.