தொழிற்சங்கம் இல்லாத பிரம்மாண்ட நிறுவனங்களின் நிலை என்ன என்பது குறித்து பெரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இப்படியான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து சுமார் 20 ஆண்டுகள்தான் ஆகின்றன என்பதால் வேலைவாய்ப்பு வழங்குபவை என்கிற அடிப்படையில் அதிகப்படியான அழுத்தம்கொடுத்து அந்நிறுவனங்களின் பிரச்சனைகள் பார்க்கப்படுவதில்லை.
ஆனால், அந்த ஹனிமூன் காலம் முடிவடைந்துவிட்டது என்பதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும். ஏனெனில், இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்துமே ஒரு நிறுவனத்தில் இருக்கும் நாற்காலிகளையும், மேசைகளையும் எப்படி “ரிசோர்சஸ்” என்று சொல்கின்றனவோ, அப்படித்தான் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களையும் “ரிசோர்சஸ்” என்றே அழைக்கின்றன. எவ்வித குறைந்தபட்ச மனிதநேயமும் இல்லாத நிலையை நோக்கித்தான் அவை சென்றுகொண்டிருக்கின்றன.
அதற்கு இரண்டு உதாரணங்களை இங்கே குறிப்பிடவிரும்புகிறேன்.
முதலாவது உதாரணம் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
2009 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதியன்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜூ ஒரு கடிதத்தை எழுதிவிட்டு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதில், சுமார் 7000 கோடி ரூபாய் வரையிலும் தவறான கணக்கெழுதி அரசையும், முதலீட்டாளர்களையும், ஊழியர்களையும் ஏமாற்றியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் அப்போது பணிபுரிந்துவந்த 53000 தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. அந்த ஒவ்வொரு தொழிலாளரையும் நம்பி அவர்களது குடும்பத்தில் 3 மூன்று பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை சொல்லமுடியாத துயரத்தில் ஒரே நாளில் சென்றது.
பின்னர் வழக்கு விசாரணை துவங்கியதும், மேலும் பல குழப்பங்கள் வெளியாகியது. நிறுவனத்தின் பணத்தை எடுத்து சொந்தமாக சொத்துக்கள் நிறைய வாங்கியதால் நிறுவனத்தின் இலாபம் குறைந்ததாகவும், அதனால் அதிக இலாபம் அடைந்ததாக பொய் கணக்கு எழுதியதாகவும் அதற்கு பல ஆடிட்டிங் நிறுவனங்கள் உதவியதாகவும் வாக்குமூலங்கள் கொடுக்கப்பட்டன. இதற்கெல்லாம் உச்சமாக, அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தது 53000 தொழிலாளர்களே இல்லையென்றும், 44000 பேர்தான் என்றும், இல்லாத தொழிலாளர்களுக்கும் ஊதியம் கொடுத்ததாகவும் கணக்கெழுதி ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது. இது ஏதோ ஒரு தனி நபரால் செய்திருக்கவே முடியாது. ஒட்டுமொத்த நிர்வாகமும் சேர்ந்து பல ஆண்டுகளாக செய்துவந்திருக்கிற ஒரு திருட்டுத்தனமாகவே இருந்திருக்கிறது.
2009 ஆம் ஆண்டு துவங்கிய வழக்கிற்கு, 2015 ஆம் ஆண்டில்தான் தீர்ப்பு வந்தது. ராமலிங்க ராஜுவுக்கும் அவரது சகோதரருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சிறை சென்ற ஒரே மாதத்தில் பிணைபெற்று வெளியே வந்துவிட்டார் ராமலிங்கராஜு.
ஆனால், எந்தத் தவறுமே செய்யாத சத்யம் நிறுவனத் தொழிலாளர்களின் நிலை? அது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருந்தது. 44000 தொழிலாளர்கள் இருந்தும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக்கேட்க அவர்களால் முடியவில்லை. அவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒருமித்தக் குரலில் எவரிடமும் நியாயம் கேட்பதற்கு அவர்களால் முடியவில்லை. ஒரு தொழிற்சங்கம் இருந்திருந்தால், அந்தத் தொழிலாளர்களின் பிரச்சனை பேசப்பட்டிருக்கும். ஊடகங்களும் அரசும் நீதிமன்றமும் ராமலிங்க ராஜூவின் வழக்கு குறித்தும் அவரது சொத்து குறித்தும் பேசியதே தவிர ஊழியகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை.
அந்த காலகட்டத்தில்தான் ஐடி துறையில் பணிபுரிந்துகொண்டிருந்த சில நண்பர்கள் இணைந்து ‘ஃப்ரீ சாஃப்ட்வேர்’, ‘மலைவாழ் குழந்தைகளுக்கு கணிப்பொறி பயிற்றுவிப்பது’ உள்ளிட்ட சில சமூகப் பணிகளை செய்துகொண்டிருந்தோம். ஆங்காங்கே எங்களுக்குத் தெரிந்த சில சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசுகையில், மிகுந்த அழுத்தத்தில் இருப்பது தெரிந்தது. யாரிடம் பேசினாலும் அழுகையுடன் துவங்கி அழுகையுடன்தான் முடித்தார்கள். 2009 காலகட்டமென்பது ஜேபி.மோர்கன், கோல்ட்மேன் சேக்ஸ், லேமன் ப்ரதர்ஸ் உள்ளிட்ட பல அமெரிக்க வங்கிகள் மக்களின் பணத்தை சூறையாடிவிட்டு தொழிலாளர்களையும் மக்களையும் அரசையும் ஏமாற்றியதால், ஒட்டுமொத்த உலகமே நடுங்கிப் போயிருந்த காலகட்டமாகும். அதன் பாதிப்பாக இந்தியாவில் இருந்த ஐடி நிறுவனங்களிலும் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்காத காலகட்டம்.
இப்படியான ஒரு சூழலில் 44000 தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியானது. தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் பேசமுடிந்தால் அவர்களுக்கென்று சில கோரிக்கைகளை உருவாக்கி, அவர்களைக் காப்பாற்றமுடியும் என்று நினைத்தோம். ஆனால், எந்த வகையிலும் ஒருங்கிணைந்திருக்காத ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியர்களை எப்படி ஒருங்கிணைத்து அவர்களை ஒரு சக்தியாக மாற்றுவது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. சத்யம் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் மின்னஞ்சல் முகவரிகள் எங்களுக்கு ஒரு பெரிய பட்டியலாகக் கிடைத்தன. நாங்களே ஒரு கடிதத்தை எழுதினோம். நிறுவனத்தை ஒழித்துக்கட்டுவதோ அல்லது வேலையை இழக்கவைப்பதோ எங்களது நோக்கமில்லை என்றும், ஊழியர்களின் பணியைப் பாதுகாப்பதும், ஊதியத்தை தொடர்ச்சியாக உறுதிசெய்வதும் அரசு மற்றும் நிர்வாகத்தின் கடமை என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தினோம். அவற்றை ஒரு கோரிக்கை மனுவாக உருவாக்கி, நிறுவனத்தின் நிர்வாகத்திடமும் அரசிடம் ஊழியர்களிடம் கையெழுத்து பெற்று வழங்கவேண்டும் என்றும் கோரினோம். ஊழியர்கள் ஒரு அமைப்பாக உருவாகினால் அவர்களது பணியைப் பாதுகாக்க முடியும் என்று சொல்லி, ஒரு தேதியையும் இடத்தையும் குறிப்பிட்டு இதுகுறித்து விவாதிக்கலாம் என்றும் அக்கடிதத்தில் எழுதியிருந்தோம்.
இது 2009 காலகட்டமென்பதால், பெரியளவுக்கு இணைய வசதியெல்லாம் எங்களிடம் தனிப்பட்ட முறையில் இல்லை. அதனால் ஒரு ப்ரவுசிங் மையத்திற்கு சென்றுதான் அனுப்பவேண்டி இருந்தது. மின்னஞ்சல் அனுப்பத் துவங்கினோம். ஒரே மெயிலில் எல்லோருடைய மின்னஞ்சலையும் குறிப்பிட முடியவில்லை. அதனால் சுமார் 50 பேரின் மின்னஞ்சல் முகவரியினை ஒரு மெயிலில் அனுப்பினோம். ஆனால் சில மெயில்கள் அனுப்பியதுமே, எங்களுக்கு மெயில் ரிஜக்டட் என்பதாக ரிப்ளை வரத்துவங்கிவிட்டது. அதாவது ஒரே ஐபி முகவரி இருந்ததால், சத்யம் நிறுவனத்தின் மெயில் சர்வர் எங்களை நிராகரிக்கத் துவங்கிவிட்டது. அதன்பின்னர், சென்னை முழுக்க ஆளுக்கொரு ப்ரவுசிங் சென்டர் சென்று, அங்கிருந்து ஒவ்வொருவரும் மின்னஞ்சல் முகவரிகளைப் பிரித்துக்கொண்டு அனுப்பினோம்.
நாங்கள் ஏற்பாடு செய்து கூட்டத்தின் நாளும் வந்தது. ஆனால் பெரியளவிற்கு யாருமே வரவில்லை. சுமார் 30-40 பேர்வரைதான் வந்திருப்பார்கள். கூட்டம் துவங்கியதும் எல்லோரும் சொல்லிவைத்தாற்போல ராமலிங்க ராஜூவையும் நிறுவனத்தையும் புகழ்ந்து தள்ளினார்கள். சத்யம் நிறுவனத்தில் ஊழியர்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் என்றும், அதனால்தான் கூட்டத்திற்கு பெரிதாக யாரும் வரவில்லை என்றும் கூறினார்கள். இந்த செய்தியை சொல்லவாவது சிலர் வரவேண்டுமே என்பதற்காகத்தான் அந்த ஒருசிலரும் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாமே மிகச்சரியாக இருப்பது போன்ற தோற்றமே எங்களுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. நன்றாக பயிற்சி செய்துகொண்டுவிட்டு வந்து பேசியதைப் போலவே இருந்தது. ஆனால், ஆதாரமில்லாமல் எங்களால் அந்த சந்தேகத்தை அங்கே எழுப்பமுடியவில்லை.
நிறுவனத்தை இல்லாமல் செய்வது எங்கள் நோக்கமில்லை என்றும், சக மனிதர்களின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கேள்விப்பட்டதால்தான் இப்படியான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம் என்றும், சத்யம் கம்ப்யூட்டர்சின் ஊழியர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென்றால் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்து, சிறிது நேரம் பேசிவிட்டு கூட்டத்தை முடித்துக்கொண்டோம்.
வந்திருந்த ஒவ்வொருவராக கிளம்பினர். இறுதியாக ஒருவர் “சரிங்க பாப்போம்” என்று சொல்லி கைகொடுத்தார். அப்போது ஒரு சிறிய பேப்பரையும் எங்கள் கைக்குள் திணித்தார். யாருக்கும் தெரியாமல் கொடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை எடுத்துப் படிக்காமல் அப்படியே ஒளித்துவைத்துக்கொண்டோம்.
எல்லோரும் கிளம்பியபின்னர் அந்த பேப்பரில் பார்த்தால் ஒரு அலைபேசி எண் இருந்தது. அந்த எண்ணை அழைத்தோம். அந்த எண்ணில் இருப்பவருடன் பேசும்போதுதான் எங்களுடைய அனைத்துக் குழப்பங்களுக்கும் தெளிவும் பதிலும் கிடைத்தது. நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களில் ஒருசில மின்னஞ்சல்கள்தான் முதலில் தொழிலாளர்களுக்கு சென்று சேர்ந்திருக்கின்றன. அதன்பிறகு நிர்வாகம் அதனைக் கண்டுபிடித்து, தொழிற்நுட்பக் குழுவை வைத்து, அந்த மின்னஞ்சல்களை தொழிலாளர்களுக்கு அனுப்பாமல் தடுத்திருக்கிறது. அதனை சாமர்த்தியமாக அவர்கள் செய்ததால், மின்னஞ்சல் அனுப்பிய எங்களுக்கும் எவ்விதத் தகவலும் வரவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் சத்யம் நிறுவனத்தின் நிர்வாகிகள்தான் என்பதும் அப்போதுதான் தெரியவந்தது. முதலில் மின்னஞ்சல் பெற்று மிகச்சில தொழிலாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். நிகழ்வில் பல நிர்வாகிகளைப் பார்த்ததும், வேறுவழியின்றி நிர்வாகத்திற்கு ஆதரவாகவே அவர்களும் பேசினர் என்றார் நாங்கள் அலைபேசியில் அழைத்துப் பேசியவர். அவர் மட்டும் எப்படி தைரியமாக அலைபேசி எண்ணைக் கொடுத்து எங்களிடம் பேசினார் என்று நாங்கள் கேட்பதற்குள்ளாகவே, “நான் ஏற்கனவே திட்டமிட்டபடி மேல்படிப்புக்காக அமெரிக்கா போறேன். நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன். அதான் தைரியமா சொல்றேன். இங்க சத்யம் நிறுவனத்துக்குள்ள நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. ஆதரவு கொடுத்துப் பேசக் கூட ஆளில்லாம எல்லாரும் தவிக்கிறாங்க. அதான் உங்ககிட்ட சொல்லனும்னு தோனிச்சி” என்றார் அந்த நபர்.
அதன்பிறகு அதில் பெரிதாக எதையும் செய்யமுடியவில்லை எங்களால். ஒரு ஐடி நிறுவனத்தில் இப்படியான ஒரு முயற்சியை தமிழ்நாட்டில் முதன்முதலாக மேற்கொண்டது நாங்களாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் எங்களுக்கான வழிகாட்டலோ அனுபவமோ அப்போது இருக்கவில்லை.
அதன்பின்னர், சிலப்பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின், சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனத்துடன் இணைத்தார்கள். ஓராண்டுக்குப் பின்னர் சத்யம் கம்ப்யூட்டர்சில் இருந்து சுமார் 17000 பேர் எங்களிடம் இல்லை என்று அறிவித்தது மகிந்திரா நிறுவனம். அந்த 17000 பேர் என்னவானார்கள் என்பதுகூட யாருக்கும் தெரியாது. அவர்கள் குறித்த தகவல்கள் எல்லாம் எங்கேயும் இல்லை. சத்யம் நிறுவனத்தில் இருக்கும்போதே அவர்களில் பெரும்பாலானோர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் சில சத்யம் ஊழியர்கள் தெரிவித்தனர். மீதமுள்ளோரில் சிலர் மகிந்திரா நிறுவனத்தில் சேர்ந்ததும் பணிநீக்கம் செய்ததகாவும், ஒருசிலர் தாமாகவே வெளியேறியதாகவும் சொல்லப்பட்டது. வேறு நிறுவனத்தில் வேலைகிடைத்து சென்றோர் எவ்வளவு பேர் என்கிற விவரம்கூட எங்குமில்லை. அந்த சூழலில் சத்யம் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பித்தால் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று எழுதப்படாத வழக்கத்தை முதல் ஓராண்டாக எல்லா நிறுவனங்களும் பின்பற்றின என்பது பல நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த எங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த ஓராண்டுக்குப் பிறகு, சத்யம் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்ட வந்தவர்களுக்கு மட்டும் மற்ற புதிய ஊழியர்களைவிடவும் சம்பளம் குறைவாகத்தான் தருவோம் என்று பல நிறுவனங்களின் உயரதிகாரிகள் கண்டிப்பாக சொல்லிவிட்டுத்தான் சேர்த்தார்கள்.
இதுமட்டுமின்றி, சத்யம் நிறுவனப் பிரச்சனையால் அதிகமாக வேலை இழந்து அதன்பின்னர் எப்போதும் வேலைக்குப் போகமுடியாமல் போனது நிறைய பெண்கள்தான். எங்கு வேலை கிடைத்தாலும் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், ஆண்கள் வேறு மாநிலத்திற்கெல்லாம் செல்லமுடிந்தது. ஆனால் குடும்பத்தையும் குழந்தைகளையும் ஒரு மாநிலத்தில் வைத்துக்கொண்டு இன்னொரு மாநிலத்திற்கு செல்லமுடியாத சூழலில் வேலையை நிரந்தரமாக விடவேண்டிய நிலைக்குப் பெண்கள் சென்றனர். அவர்கள் பற்றியெல்லாம் முறையான எவ்விதப் புள்ளிவிவரங்களும் நம்மிடம் இல்லை.
இப்போது சிந்தித்துப் பாருங்கள். அந்த இடத்தில் ஒரு தொழிற்சங்கம் இருந்திருந்தால், தொழிலாளர்களின் பிரச்சனையையும் சேர்த்து அரசிடமும் நிர்வாகத்திடமும் நீதிமன்றத்திடம் பேசியிருக்கமுடியும். இத்தனை ஆயிரம் ஊழியர்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டிய முதலாளிகளுக்கு பத்து இலட்ச ரூபாயில் பிணை கிடைத்துவிட்டது. ஆனால், எந்தத் தவறும் செய்யாத தொழிலாளர்களுக்கு அனுதினமும் மன அழுத்ததும் பண அழுத்தமும் கூடிய போராட்ட வாழ்க்கைதான் மிஞ்சியது.
இரண்டாவது உதாரணம் : டிசிஸ்
2014 ஆம் ஆண்டில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் திடீர் திடீரென்று ஊழியர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று தகவல் கசிந்தது. வதந்திபோலத் துவங்கிய செய்தி, ஊடகங்களில் கசியத் துவங்கியது. பின்னர் பார்த்தால், நமக்குத் தெரிந்தவர்களிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக பணி நீக்கம் செய்யப்படுவதைப் பார்த்தபிறகுதான் பிரச்சனையின் வீரியம் புரிந்தது. எந்தவித முன்னறிவிப்போ முன்னெச்சரிக்கையோ கொடுக்காமல் வேலைபார்த்துக்கொண்டிருந்த ஊழியர்கள் ஹெச்.ஆர். அறைக்கு அழைக்கப்பட்டு, அவர்களாகவே வேலையை ராஜினாமா செய்வதாக எழுதித்தரச்சொல்லி மிரட்டப்பட்ட தகவல்கள் எல்லாம் வரத்துவங்கின. அதற்கான ஆடியோ ஆதாரங்களும் வெளிவந்தன. அதன்பிறகுதான், டிசிஎஸ் நிறுவனம் உண்மையிலேயே ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வீட்டுக்கனுப்புகிறது என்பது புரிந்தது. சிலருக்கு காரணம் சொன்னார்கள், பலருக்கு காரணமே சொல்லவில்லை.
வேலையைவிட்டு அனுப்பியதற்கு டிசிஎஸ் நிர்வாகம் சொன்ன காரணமும் வெற்றுக்காரணங்கள்தன. பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்று வழக்கம்போல கூறினார்கள். டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் அப்ரைசல்கள் எப்படி நடக்கும் என்பது அங்குள்ளவர்களுக்குத் தெரியும். பெண்களாக இருந்தால், பிரசவ விடுப்புக்குப் போயிருந்தால், அவர்கள் விடுப்பில் இருந்த ஆண்டில் வேலைபார்த்த நாட்களை மட்டுமே வைத்து அப்ரைசல் நடத்தாமல், அதிகமாக வேலை பார்க்காத ஆண்டாகக் கணக்கிட்டு மோசமான ரேட்டிங் கொடுப்பார்கள். அதேபோல, ஒரு ஆண்டில் வெளிநாட்டிற்கு ஒருசில மாதங்கள் சென்றுவரும் வாய்ப்பு யாருக்கேனும் கிடைத்துவிட்டால், திரும்பிவந்ததும் “அதான் ஃபாரின் ஆன்சைட் எல்லாம் குடுத்தோம்ல. அதனால குடுக்குற ரேட்டிங்கை வச்சிக்கோ” என்பார்கள். என்னவோ ஓசியில் அயல்நாட்டு சுற்றுலா அனுப்பியது போன்ற தோற்றத்தைக் கொடுப்பார்கள். ஆனால் ஒருவர் டிசிஎஸ் நிறுவனத்திற்காக அயல்நாட்டில் வேலைபார்த்தால், அதற்கேற்ற பணத்தை அவர்களது கஸ்டமர்களிடம் டிசிஎஸ் அதிகமாகவே வாங்கிவிடும். ஆக, ஒரு தொழிலாளி என்பவர் எங்கிருந்தாலும் நிறுவனத்தின் இலாபத்திற்காகத்தான் உழைத்துக்கொண்டிருப்பார்.
இப்படியாக வெளியேற்றப்பட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எத்தனை ஆயிரம் பேரின் வேலை பறிக்கப்பட்டது என்பதுகூட யாருக்கும் சொல்லப்படவில்லை. 10000 பேர் வரை இருக்கலாம் என்று செய்திகள் வந்தவண்னம் இருந்தன. ஆனால், அது 30000 வரையிலும் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதுதான் உள்ளிருந்து வந்த தகவல்கள் மூலம் நம்மால் புரிந்துகொள்ளமுடிந்தது. இறுதியாக டிசிஎஸ் நிறுவனம் எதற்காக அத்தனை ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றியது தெரியுமா? அதற்கு முந்தைய ஆண்டின் இலாபத்தைவிடவும் அந்த ஆண்டின் இலாபம் கொஞ்சம் குறைவாக இருந்தபடியால், அதை சரிகட்டவே நிறையபேரை வெளியேற்றியிருக்கிறார்கள். நிறுவனத்திற்கு இழப்புகூட இல்லை. இலாபத்தில் கொஞ்சம் குறைந்தாலே, அதுவரை அந்த நிறுவனத்தின் இலாபத்திற்காக உழைத்த இரத்தமும் சதையும் கொண்ட தொழிலாளர்களை தூக்கிவீசுகின்றன இந்த நிறுவனங்கள். ஆங்காங்கே வெளியில் இருந்த தோழர்கள் டிசிஎஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் சில இடங்களில் போராட்டம் நடத்தினர். சில பிரச்சார துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தனர். ஆனால், உள்ளே இருக்கிற தொழிலாளர்களுடன் பேசமுடியாத காரணத்தால் வேறு எதுவும் நடக்கவில்லை.
சத்யம் நிறுவனத்தைப் போலவே இங்கேயும் வேலையில் இருந்து துரத்தப்பட்ட பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அப்படியே தப்பித்து வேறு வேலைக்குச் சென்றவர்களுக்கும் பழைய ஊதியமெல்லாம் எட்டாக்கனியாக மாறியது.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் யாரும் கீபோர்டில் கைவைக்கமாட்டோம் என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே போராடியிருக்கமுடியும். தொழிலாளர்களை வீட்டுக்கனுப்பாமல் இருந்தால் எவ்வித இழப்பும் ஏற்பட்டிருக்காத முதலாளிகளின் முடிவை மாற்ற வைத்திருக்கமுடியும். ஆனால், ஏன் செய்யமுடியவில்லை? ஏனெனில் இலட்சக்கணக்கான ஊழியர்களை வேலைபார்த்தும், அவர்களை ஒருங்கிணைக்க அங்கே ஒரு தொழிற்சங்கம் போன்ற எவ்வித அமைப்பும் இல்லை. இந்தியா முழுக்க இருக்கும் ஐடி மற்றும் சாஃப்ட்வேர் நிறுவன முதலாளிகளெல்லாம் இணைந்து நாஸ்காம் என்கிற ஒரு முதலாளிகள் சங்கத்தை நடத்துகிறார்கள். கூட்டாக இணைந்து இருப்பதன் பலன் என்னவென்பது முதலாளிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கும் அது தெரியவரும்போதுதான், ஒடுக்குமுறை ஒழியும்.
நாம் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது தொழிலாளர்களுக்குப் புரியும்போதுதான் அவர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமையும், அந்த ஒற்றுமையினால் ஒரு தொழிற்சங்கமும், அந்த தொழிற்சங்கத்தினால் பல நன்மைகளும் வந்துசேரும்.
- இ.பா.சிந்தன்