articles

img

ஈரானின் பதிலடி என்பது ஈரானுக்கான பதிலடி மட்டுமல்ல - ஆர்.கருமலையான்

ஈரானின் பதிலடி என்பது ஈரானுக்கான பதிலடி மட்டுமல்ல

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு கிரிமினல் ஆக்கிரமிப்புப் போரை நடத்தி வருகின்றன. இது ஏகாதிபத்திய-சியோனிசக் கூட்டு, சேர்ந்து நடத்தியுள்ள ஒருதலைப்பட்சமான, நியாயமற்றத் தாக்குதலாகும். இது சமகால முதலா ளித்துவத்தின் மிகத் தீவிரமான ஆக்கிரமிப்பு கூறுகளிலி ருந்து வெளிப்படுகிறது. ஈரான் மீதான தாக்குதலும், அந் நாட்டின் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளபதிக ளின் படுகொலைகளும் சர்வதேச சட்டங்களைத் தவிடு பொடியாக்கியுள்ளன. ஏற்கெனவே காசாவில் பாலஸ்தீ னர்களுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி நடத்திய இனப்படுகொலையின் மனித எச்சங்களின் கீழ் சர்வதேச சட்டமும் பலதரப்பு அமைப்புகளும் புதைக்கப்பட்டுவிட்டன. அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற பல பத்தாண்டுகளாக ஈரான் மீது குறிவைத்துள்ளது. ஈரானின் இறையாண்மைமிக்க அரசாங்கத்தைக் கவி ழ்க்கும் இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பு, உலகளா விய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஆளும் வர்க் கத்தின் உந்துதலோடு நெருங்கிய தொடர்புடையது.

மனிதகுலத்தின் இரு பெரும் எதிரிகளான அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச (யூத இன வெறி பிடித்த) இஸ்ரேலும், உலகெங்கிலும் உள்ள  உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வேட்டை யாடி வருகின்றன. ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்பு அமைச்சர், இராணு வத் தளபதி மற்றும் சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலி லரிஜானி உள்ளிட்ட முக்கிய பல அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை அவர்கள் படுகொலை செய்துள்ளனர். இத்தகைய கொடூரமான படுகொலைகள் சர்வதேச அளவில் ஊடகங்களின் சீற்றத்தைத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் ஈரானைப் பிரித்தாளும் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்திய மேலா திக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடனமாடுகின்றன.

ஒருதலைப்பட்சப் போரின்  சுருக்கமான வரலாறு

ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவ டிக்கை ஜனவரி 2020-இல் அமெரிக்காவால் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட தில் இருந்து தொடங்குகிறது. அவர் ஈரானின் முதல் தற்காப்பு வளையமான ‘எதிர்ப்பு அச்சின்’ (Axis of Resistance) சிற்பியாக இருந்தார். சுலைமானியின் படு கொலை இந்த அச்சுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் இனப்படுகொலை ஹமாஸை பலவீனப்படுத்தியது; லெபனானில் நடந்த போர் ஹிஸ்புல்லாவை சீர்குலைத்தது (செப்டம்பர் 2024-இல் சையது ஹசன் நஸ்ரல்லாவின் படு கொலை உட்பட). ஜனவரி 2025-இல் சிரியாவின் ஜனாதிபதியாக அகமது அல்-ஷாரா பதவியேற்றது அங்கிருந்து அனைத்து பாலஸ்தீன ஆதரவுக் குழுக்களையும் அகற்ற வழிவகுத்தது. இந்த முதல் தற்காப்பு வளையத்தை ஒப்பீட்டளவில் உடைத்த பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஜூன் 2025-இல் ஈரான் மீது தாக்குதல் நடத்தின.

ஜூன் 2025-இல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஈரானின் திறனை அழித்துவிட்டதாக அமெ ரிக்காவும் இஸ்ரேலும் கூறின. அப்படியானால், அமெரிக்கா ஏன் ஈரானுடன் ஒப்பந்தம் செய்து தடை களைத் திரும்பப் பெறவில்லை? ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் 2024-இல் ஒரு ‘சீர்திருத்த’ நிகழ்ச்சி நிரலுடன் ஆட்சிக்கு வந்து, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) போன்ற மேற்கத்திய கட்டுப்பாட்டு நிறுவனங்க ளுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராகவே இருந்தார். ஆனால், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் தனது ஆய்வு சார் ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதற்குப் பிறகு ஈரானிய நாணயமான ரியால் மதிப் பைச் சீர்குலைத்து அந்நாட்டின் பொருளாதார நெருக்க டியை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானியக் குடியரசைத் தூக்கியெறியும் - எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சி மாற்றத்தை நோக்கித் தள்ளுகின்றன.

டிரம்ப் / நேதன்யாகு குறித்த  தவறான கருத்துக்கள்

ஈரானின் மினாப்பில் உள்ள பெண்கள் பள்ளி மீது குண்டுவீசி 175 குழந்தைகள் கொல்லப்பட்டதை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகப் பார்க்கக் கூடாது. பாசிசம் முற்றிலும் மாறுபட்ட தர்க்கத்தின் மூலம் செயல்படுகிறது. பாசிசத்தின் தர்க்கத்திற்கு, மனிதாபிமானப் பாசாங்குகள் தேவையில்லை. பணிய மறுத்தால் இதுதான் கதி என்பதை ஈரானிய மக்க ளுக்குச் சொல்வதே இந்தப் பள்ளிப் படுகொலை யின் நோக்கம். சந்தேகத்தைப் போக்க, மூன்றாவது நாளில் அமெரிக்கா/இஸ்ரேல் ஒன்பது மருத்துவ மனைகள் மீது குண்டுவீசின.

ஈரான் மீதான ஆக்கிரமிப்பு என்பது இஸ்ரேலும் நேதன்யாகுவும் அமெரிக்காவையும் டிரம்ப்பையும் கையாளுவதன் விளைவு என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. இது தவறானது; திசைதிருப்பக் கூடியது. வெனிசுலாவின் ஜனாதிபதி மதுரோவைக் கடத்துவதும், கியூபாவை அடிபணிய வைக்க முயல்வ தும் அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைக்கு உட் பட்டதே தவிர இஸ்ரேலின் தூண்டுதலால் அல்ல. மேலும், இந்த ஆக்கிரமிப்பை டிரம்ப் என்ற தனிநப ரின் ‘பைத்தியக்காரத்தனம்’ என்றும் கூற முடியாது. உண்மையில், அமெரிக்க அரசின் அனைத்து நிறுவ னங்களும் இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்து கின்றன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ  ரூபியோ பிப்ரவரி 14 அன்று மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஆற்றிய உரையில், மேற்கத்திய ஆதிக் கத்தின் சகாப்தத்தை புதுப்பிக்க ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்தார். மார்ச் 1 அன்று இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்தன; ஜப்பான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அரசியல் ஆதரவை வழங்கி யுள்ளன. நாம் பகுப்பாய்வைத் தனிநபர்களுடன் மட்டுப் படுத்தக் கூடாது, மாறாக அமைப்பின் தர்க்கத்திற் குள் கொண்டு செல்ல வேண்டும்.

மேலாதிக்கத்தை நிலைநிறுத்த  பல வடிவங்களில் ஆக்கிரமிப்பு

உண்மையில், இந்த ஆக்கிரமிப்பு என்பது வீழ்ச்சி யடைந்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடுகளைத் தாக்குவதன் மூலம் தனது இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை உலகளவில் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட உந்துதலின் ஒரு பகுதியாகும். சில இடங்க ளில் இது இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கர வாதத்தின் வடிவத்தை எடுக்கிறது; மற்ற இடங்களில் அது ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை ‘வர்த்தக ஒப்பந்தங்கள்’ என்ற போர்வையில் திணிக்கும் வடிவத்தை எடுக்கிறது.

வெனிசுலா போன்ற நாடுகள் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கட்டளைகளை மீறும்போது இராணுவ ரீதியாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. மோடியின் இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவை முழுமை யாகச் சரணடைந்து ஆதரித்தாலும் பொருளாதார ரீதியாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஈரானை குண்டு வீசித் தாக்கும் அதே ஏகாதிபத்திய சக்தியின் மற்றொரு அம்சத்தால் இந்திய மக்களும் பாதிக்கப்படுகின்றனர். வித்தியாசம் என்னவென்றால் இந்திய மக்கள் தங்கள் சொந்த ஆட்சியாளர்களை மறுபுறம் காண்கிறார்கள். இந்தியப் பெருவணிகங்களால் உற்சாகமாக வர வேற்கப்பட்ட இந்திய-அமெரிக்க ‘வர்த்தக ஒப்பந்தம்’ ஒரு வர்த்தக ஒப்பந்தமே அல்ல, மாறாக இந்தியா வின் மீது திணிக்கப்பட்ட காலனித்துவ பாணியிலான அடிமைச் சாசனம் ஆகும்.

அமெரிக்க டாலரின் உலகளாவிய மேலாதிக்கம் கடந்த சில ஆண்டுகளாக மெதுவாக அரிக்கப்பட்டு வரு கிறது. டாலர் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்து வதற்கு, மேற்கு ஆசியாவின் மீதான அமெரிக்க  அரசியல் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்து வது முக்கியமானது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சர்வ தேசப் பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரமற்ற காலத்தைக் கடந்து செல்லத் தயாராக உள்ளது. போரின் நான்கா வது நாளில் “என்ன வேண்டுமானாலும் செய்வோம்”  என்றார் டிரம்ப். சர்வதேச அளவில் பங்கு விலைகள் சரிந்துள்ளன; ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது; எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன; துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வளைகுடா நாடு களில் இருந்து வரும் எண்ணெய்யைப் பெரிதும் நம்பி யிருக்கும் ஆசியப் பொருளாதாரங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த இடையூறுகளை அமெரிக்கா விரும்பக்கூடும்.

எண்ணெய் மற்றும் எண்ணெய்ப் பொருட்களின் விலை உயர்வு என்பது போரினால் தூண்டப்பட்ட விநி யோக மாற்றங்களால் மட்டுமல்ல. இது உலகளாவிய நிதியத்திற்கு உட்பட்ட பெரிய ஊக வணிகப் பன்னாட்டு  நிறுவனங்களின் பங்களிப்பால் தீவிரமடைகிறது. முத லாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் இன்று இந்த முகவர்களின் தயவில் உள்ளன, அவர்கள் கூடுதல் லாபத்தைப் பிரித்தெடுக்க ஒவ்வொரு வாய்ப்பை யும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த மிகப்பெரும் முயற்சி இறுதியாகத் தோல்வியடையும் என்பது உண்மைதான், ஆனால் இத்தகைய புறநிலைத் தடைகள் ஏகாதிபத்தியவாதிகளை அதிகாரத்தைக் கைப்பற்றவோ அல்லது தக்கவைத்துக் கொள்ளவோ முயல்வதைத் தடுத்ததில்லை. அமெரிக்கா நீண்ட கால உத்தி ரீதியாக ஒரு காகிதப் புலி என்று சொல்லி விட முடியாது; ஏனெனில் அது நடைமுறை சூழ்ச்சிக ளை வகுப்பதில் ஒரு உண்மையான புலி. மேற்கத்திய ஏகாதிபத்தியக் கூட்டமைப்பின் இந்த கூட்டு முயற்சிக்கு எதிர்ப்பின் அச்சாக ஈரான் இருந்து வருவதால்தான் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறப்பு இலக்காக உள்ளது. ஈரானில் இருந்து எதிர்ப்பு அகற்றப்பட்டால் அது லத்தீன் அமெரிக்கா வில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளை பலப் படுத்தும்; மாறாக ஈரானின் எதிர்ப்பு வெற்றி பெற்றால் அந்த வெற்றி ஹவானாவிலும் காரகஸிலும் உணரப்படும். எனவே, ஈரானால் நடத்தப்படும் எதிர்ப்பு என்பது ஈரானின் எதிர்ப்பு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகளாவிய தெற்கின் (Global South) எதிர்ப்பாகும்.

இந்தியாவின் மீதான தாக்கம் மற்றும் இந்திய அரசின் நிலைப்பாடு

இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் தலை வரின் படுகொலையையோ அல்லது அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையோ இந்திய அரசு விமர்சிக்கத் தவறிவிட்டது. இந்தியாவுக்கும் டெஹ்ரானுக்கும் இடையிலான சுமுகமான உறவுகள் மிகவும் முக்கியமானதாக இருந்தபோதிலும் இந்த நிலை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மத்திய பட் ஜெட்டில் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் ஈரானின் சபஹார் துறைமுக முதலீடுகள் நிறுத்தப் பட்டன.

இப்போது இந்தியப் பிரதமர் ஈரானின் தற்காப்புத்  தாக்குதல்களைக் கண்டித்துள்ளார். அதற்குப் பதிலாக அவர் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆட்சியாளர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களுக்குத் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அரசு நடுநிலையைக் கைவிட்டு அமெ ரிக்க-இஸ்ரேல் பக்கம் சாய்ந்துள்ளது. இது அமெ ரிக்காவிடம் இந்தியா முழுமையாகச் சரணடைந்த தைக் காட்டுகிறது.

தற்போதைய போரினால் இந்தியா மீதான தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் பாதி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. எண்ணெய் என்பது போக்குவரத்து, உரம், நீர்ப்பாசனம் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்திற்குமான உலகளாவிய உள்ளீடு என்பதால், நீண்டகால மோதல் நீடித்தால் இந்தியப் பொருளாதாரத்தின் எந்த அம்சமும் பாது காப்பாக இருக்காது. மேலும் சுமார் 1 கோடி இந்தி யர்கள் வளைகுடா பிராந்தியத்தில் வேலை செய்கி றார்கள். மேலும், ஒவ்வொரு பேரல் எண்ணெய்க்கும் இந்தியாவுக்கு அதிக டாலர்கள் தேவைப்படும், ஆனால் குறைவான டாலர்களே உள்ளே வரும். எனவே ரூபாயின் மாற்று விகிதம் மேலும் வீழ்ச்சியடையும்.

இந்தியப் பெருவணிகம் அமெரிக்க ஏகாதிபத்தி யத்துடன் தனது சக்கரத்தை இணைத்துக் கொண்டுள் ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்பாக இந்திய அர சாங்கத்தின் நிலைப்பாட்டிற்குப் பின்னால் இதே பரி சீலனைகள் உள்ளன. ஈரான் மீதான தற்போதைய போர் இந்திய மக்களுக்கும் பெருவணிகங்களுக்கும் இடையிலான நேரடி வர்க்க முரண்பாட்டை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது.

இராணுவ-தொழில்துறை கூட்டுடன் தொடர்பு டைய முதலாளித்துவவாதிகள் எப்போதும் போரை விரும்புகிறார்கள். ஏனெனில் அது பாதுகாப்புச் செலவு களை அதிகரிக்கிறது; அவர்களின் லாபத்தை அதி கப்படுத்துகிறது. இராணுவத் தலையீட்டின் மூலம் பிரித்தெடுக்கப்படும் உபரி மற்றும் பெறப்படும் சந்தையைப் பொறுத்தே முதலாளித்துவ அமைப்பின் விரிவாக்கமும் ஸ்திரத்தன்மையும் உள்ளது. சமீப காலமாக அமெரிக்காவின் இத்தகைய ஆக்கிரமிப்பு முயற்சிகள் உலக வளங்களைக் கைப்பற்றுவதில் தீவிரமடைந்துள்ளன. வெனிசுலாவிலும் ஈரானிலும் ஆட்சி மாற்றத்தின் மூலம் வளங்களைக் கட்டுப்பா ட்டுக்குள் கொண்டுவர இது முயல்கிறது. இந்த அடிப்ப டையில்தான் இராணுவமயமாக்கப்பட்ட மூலதனக் குவிப்பு என்பது முதலாளித்துவத்தின் செயல்பாட்டில்  ஒருங்கிணைந்த ஒன்றாக உள்ளது.