இந்தியாவும் காரல் மார்க்சும்! அறிவியல்பூர்வ வரலாறும் அரசியல் அறியாமையும்!
“காரல் மார்க்சுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வியே ஒரு வரலாற்று அறியாமை. ஒரு மாமேதையை அவர் வாழ்ந்த நிலப்பரப்பை வைத்து மட்டுமே மதிப்பிடுவது, அறிவியலின் உலகளாவிய தன்மையை மறுப்பதாகும். தமிழ்நாட்டின் தொன்மை, மொழி மற்றும் இங்கு நிலவிய நிலவரி முறைகள் குறித்து 170 ஆண்டுகளுக்கு முன்பே லண்டனில் அமர்ந்து ஆய்வு செய்தவர் மார்க்ஸ். இன்று தமிழிசை சௌந்தரராஜன் போன்ற - அறியாமையில் உளறும் - சிலர், “தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரானவர்” என்று முத்திரை குத்த முயலும் அதே மார்க்ஸ்தான், தமிழகத்தின் ‘ரயத்துவாரி’ முறையையும், பாண்டிய-சோழர்களின் நிர்வாகச் சிறப்பையும் தனது குறிப்பேடுகளில் ஆவணப்படுத்தியவர். உலக வரலாற்றைச் செதுக்கிய ஒரு சிந்தனையாளருக்கு, அறிவுக்கடலான கன்னிமாரா நூலக வளாகத்தில் சிலை எழுப்பியிருப்பது என்பது தமிழ் மண்ணின் அறிவுத்தேடலுக்குச் செய்யப்பட்டுள்ள மரியாதை. அந்த வரலாற்றுத் தொடர்புகளை விளக்கும் விரிவான கட்டுரை:
இந்தியா குறித்து மார்க்ஸ் எழுதிய ஆவணங்கள் வெளி உலகத்திற்கு நீண்ட நாட்களாகத் தெரியாமல் இருந்தன. 1853-ஆம் ஆண்டிலிருந்தே மார்க்ஸ் இந்தியா குறித்து எழுதியிருந்தாலும், இந்தியாவில் 1937-இல் மகத்தான எழுத்தா ளர் முல்க் ராஜ் ஆனந்த் அவர்களும், 1943-இல் மாபெரும் மார்க்சிய அறிஞர் ரஜனி பாமி தத் அவர்களும் இந்த ஆவணங்களை வெளியிட்டனர். 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் பற்றிய மார்க்சின் பல அற்புதமான கட்டுரைகளை 1953-ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் உள்ள மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்-லெனின் ஆய்வகம் வெளியிட்டது. மிகச் சமீபத்தில்தான் இந்திய வரலாறு குறித்து மார்க்ஸ் எடுத்த ஏராளமான குறிப்பு கள் வெளியிடப்பட்டன. இந்தப் படைப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்தால், இந்தியா குறித்து ஒரு தெளிவான மதிப்பீடு மார்க்ஸி டம் இருந்தது என்பதும், புதிய தகவல்கள் கிடைக்கும்பொழுது தனது கருத்துகளை மாற்றவோ அல்லது செழுமைப்படுத்திக் கொள்ளவோ அவர் தவறவில்லை என்பதும் தெளிவாகிறது. மார்க்ஸின் கருத்துகள் என்று சொல்லும்பொழுது, அது ஏங்கெல்ஸின் கருத்தும் சேர்ந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முழு விடுதலைக்கு முதல் குரல் கொடுத்த உலக மேதை பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவின் முழு விடுதலைக்கு முதலில் எழுந்த குரல் காரல் மார்க்ஸ் உடையது என்பது வியப்பிற்குரிய ஒன்று. பிரிட்டிஷார் தமது சுயநலனுக்காக இந்தியாவில் பஞ்சாலைகள், ரயில்வே, தொலைத்தொடர்பு, இரும்பாலைகள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி னர். அதுவரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை மட்டுமே கொண்டிருந்த இந்திய சமூகம், தனது வரலாற்றில் முதன்முறையா கக் கனரகத் தொழில் உற்பத்தியைக் கண்டது. பிரிட்டிஷாரின் இந்தச் செயல் முற்றிலும் லாபத்தைக் குவிப்பதற்காகவே என்பதை ஆணித்தரமாக மார்க்ஸ் கூறினார். இந்தியா வில் விளையும் பருத்தி மற்றும் பல மூலப்பொருட்களை அடிமாட்டு விலைக்குக் கொள்முதல் செய்து பிரிட்டனுக்குக் கொண்டு செல்லவும், பிரிட்டனில் உற்பத்தி செய்யப் படும் துணி மற்றும் ஏனைய பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வரவும் ரயில்வேக்கள் பிரிட்டிஷாருக்குத் தேவைப் பட்டன. இதன் காரணமாக இரும்பாலைகளும் ஏனைய தொழில்களும் உருவாவது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. தங்கள் சுயநலனுக்காகக் கொண்டுவரப் பட்டாலும், இந்தியா முதன்முதலில் கனரகத் தொழில் உற்பத்தியையும், அதன் விளைவாக நவீன தொழிலாளி வர்க்கமும் தோன்றும் ஒரு முக்கிய நிகழ்வைப் பிரிட்டிஷார் துவக்கி வைத்தனர் என்பதை மார்க்ஸ் பதிவு செய்தார். இந்திய மண்ணில் முதல்முறையாக நவீன தொழிலாளி வர்க்கம் உருவாவதும் அதன் பின்விளைவுகளும் இந்திய சமூகத்தின் முக்கிய வளர்ச்சிப் போக்காக அமையும் என மார்க்ஸ் ஆழமாகக் குறிப்பிட்டார். “இங்கிலாந்து முதலாளித்துவம் இந்திய மக்களை சமூகத் துயரங்களிலிருந்து விடுதலை செய்யாது! ஆனால், அந்த விடுத லைக்கான புறச்சூழல்களைத் தனது சுயநல னுக்காக உருவாக்கும்! மக்களை ரத்தம் சிந்த வைக்காமல், துன்பங்களில் தள்ளாமல், வாழ்வாதாரத்தைத் தாழ்த்தாமல் என்றைக்கா வது முன்னேற்றத்தை முதலாளித்துவம் உரு வாக்கியுள்ளதா?” என பொருள் பொதிந்த வினாவை மார்க்ஸ் எழுப்புகிறார். எனினும் இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்கள் இந்திய மக்களுக்குப் பயன்பட வேண்டுமா னால் கீழ்க்கண்ட இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என அவர் கருதினார்: H பிரிட்டனில் முதலாளித்துவ ஆட்சி தூக்கி எறியப்பட்டுத் தொழிலாளி வர்க்க ஆட்சி அமைய வேண்டும். H அல்லது, இந்தியர்கள் தமது வலிமையைப் பெருக்கிப் பிரிட்டிஷ் அடிமை ஆட்சியை முழுமையாகத் தூக்கி எறிய வேண்டும். மார்க்ஸின் மதிப்பீடு மலைக்க வைக்கும் ஒன்று! இதனை அவர் எழுதியது 1853-இல்! மகத்தான சிப்பாய்-விவசாயிகள் கிளர்ச்சி நடப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு; இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு! மார்க்ஸ் சொன்ன முதல் நிகழ்வு நடக்கவில்லை, ஆனால் அவர் சொன்ன இரண்டாவது நிகழ்வு 1947-இல் சாத்தியமானது. மார்க்ஸ் சாடிய சாதிய அமைப்பு முறை நவீன காலத்தில் சாதியத்தை முதலில் கேள்விக்குள்ளாக்கியது காரல் மார்க்ஸ்தான் எனச் சமூக ஆய்வாளர் பேரா. ஆனந்த் டெல்டும்டே குறிப்பிடுகிறார். சாதியத்திற்கு எதிராகக் களம் கண்ட மகத்தான போராளி ஜோதிபா பூலே அவர்களுக்கு முன்பாகவே மார்க்ஸ் சாதியத்தை விமர்சித்தார். இந்திய சமூகத்தின் பிற்போக்குத் தன்மைக்குச் சாதியம் ஒரு முக்கிய காரணி என்பதை 1852-53 ஆண்டுகளிலேயே மார்க்ஸ் பதிவு செய்துள்ளார். இந்திய சமூகத்தை ஆய்வு செய்த அவர், காலனியாதிக்கத்திற்கு முன்பு உற்பத்தி முறையின் அடிப்படை என்பது கிராம வாழ்வாக இருந்தது எனவும், கிராமத்திற்குள் மாற்றவே முடியாத வேலைப்பிரிவினை இருந்தது எனவும், இதற்கு அடிப்படை சாதிய முறை என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கி றார். ஒரு சாதியில் பிறந்த மனிதர் அந்தச் சாதி யுடன் உடைக்க முடியாத சமூகச் சங்கிலி யுடன் பிணைக்கப்பட்டிருக்கிறார் எனவும், அதிலிருந்து அவருக்கு விடுதலை சாத்திய மற்ற ஒன்றாக உள்ளது எனவும் கூறுகிறார். இந்தியா உட்படக் கிழக்கத்திய தேசங்களின் வரலாறு ஏன் மதங்களின் வரலாறாகக் காட்சியளிக்கின்றன எனும் கேள்வியையும் எழுப்புகிறார். மார்க்ஸ் இந்தக் கேள்வியை எழுப்பி 170 ஆண்டுகளுக்குப் பின்னரும், மதங்களும் சாதிகளும் இன்றும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டுள்ளன எனும் கொடுமையை யார்தான் புறம் தள்ள முடியும்? இந்தியா பற்றிய குறிப்புகள் (கி.பி. 664 - 1858) சுமார் 190 பக்கங்கள் மார்க்ஸ் எடுத்த குறிப்புகளில் சில முக்கியமானவை: H மத நல்லிணக்கம் மற்றும் போர்கள்: கி.பி. 600 முதல் 1100 வரை போர்கள் முஸ்லிம் மற்றும் இந்து மன்னர்களுக்கு இடையே நடந்த சமமான அளவுக்கு, முஸ்லிம் மன்னர்களிடையேயும் நடந்தது. H கஜனி முகமது: இந்தியா மீது 12 முறை படையெடுத்தவர், பலமுறை இந்து மன்னர்க ளுக்கு ஆதரவாகவும் போர் செய்துள்ளார். H பாபர்: 1526-இல் முதல் பானிபட் போரில் பாபர் - இப்ராகிம் லோடி மோதினர். லோடிக்கு ஆதரவாக 40,000 இந்துக்கள் போரிட்ட னர். பாபர் முதன்முதலில் துப்பாக்கி மருந்தைப் (Gun powder) பயன்படுத்தினார். H அக்பரின் நிர்வாகம்: அக்பர் சிறந்த பொதுப்பணிகளைச் செய்தார்; மதத்தில் தீவிர நாட்டம் இல்லை; ராமாயணமும் மகா பாரதமும் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. ஜிஸ்யா வரி ஒழிக்கப்பட்டது; உடன்கட்டை ஏறுதலைக் (சதி) கைவிடக் கோரி இந்துக் களிடம் வலியுறுத்தினார். Hபொருளாதாரம்: அக்பரின் நிதி அமைச்சர் தோடர்மால் திட்டமிடப்பட்ட வரி வசூல் முறை யைக் கொண்டு வந்தார் (மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு). தில்லி உலகிலேயே அழ கான நகரமாக ஆக்கப்பட்டது. Hசிப்பாய் கலகங்கள்: 1764-இல் பாட்னா வில் நடந்த முதல் சிப்பாய் கலகத்தில் சிப்பாய்கள் பீரங்கி வாயில் வைத்துக் கட்டப் பட்டுச் சுடப்பட்டனர். 1766-இல் 50,000 அதிகாரிகள் ராபர்ட் கிளைவை எதிர்த்துப் ‘பாட்டா’ (Batta) தொகை குறைப்பை எதிர்த்து ராஜினாமா செய்தனர். தமிழ்நாடு குறித்த குறிப்புகள் மார்க்ஸின் குறிப்பேடுகளில் தமிழ்நாடு ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. H தக்காண (Deccan) பிரதேசத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா என 5 மொழிகள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். H மிகவும் பழமையான ஆட்சி மற்றும் மொழி தமிழ் என்று மார்க்ஸ் பதிவு செய்துள்ளார். H பாண்டியர்கள் (மதுரை), சோழர்கள் (காஞ்சி புரம் - ஒரு நிர்வாக மையமாக), சேரர்கள் (திருவிதாங்கூர், கோயம்புத்தூர், மலபார்) குறித்து எழுதியுள்ளார். H மாலிக்காபூர் கன்னியாகுமரி வரை படையெ டுத்ததையும், அங்கு ஒரு மசூதியைக் கட்டிய தையும் முதல் முஸ்லிம் படையெடுப்பாகக் குறிப்பிடுகிறார். H1806 வேலூர் கலகம்: இதில் திப்பு சுல்தானின் புதல்வர்கள் பங்கேற்றதை மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். H மெட்ராஸ் ரயத்துவாரி (Ryotwari) முறை: விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு வரி; விளைச்சல் தவறினால் முழு கிராமமும் வரி கட்ட வேண்டும்; விவசாயி வேண்டுமென்றே விளைச்சலைப் பாதித்தால் தண்டனை உண்டு. துரதிர்ஷ்டவசமாக, இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி விரிவான நூல்களை உரு வாக்க மார்க்ஸால் இயலவில்லை. எனினும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துகள் இந்திய சமூகத்தை ஆய்வு செய்ய இன்ற ளவும் மிகச்சிறந்த வழிகாட்டுதல்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், பிப்ரவரி 6, 2026 அன்று சென்னை கன்னிமாரா நூலகத்தில் காரல் மார்க்ஸ் சிலை திறக்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது வெறும் சிலை அல்ல; இது அறிவியலுக்கும், உண்மைக்குமான அங்கீகாரம்!
