உயர் கல்வியில் தீவிரமடையும் இந்துத்துவாமயம்
இந்தியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர விரும்பும் எவரொருவரும், 2024-25 வரை இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ‘உதவிப் பேராசிரியர்’ மற்றும் ‘ஜூனி யர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்’ பதவிகளுக்கு இந்திய குடிமக்களின் தகுதியைத் தீர் மானிக்க நடத்தப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசியத் தகுதித் தேர்வில் (UGC-NET (Nati onal Eligibility Test) பங்கேற்க வேண்டும். 2024ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு - ஆராய்ச்சி திட்டங்களின் தரத்தை “தரப்படுத்துதல்” மற்றும் “மேம்படுத்துதல்” என்ற போர்வையில் - தேசியத் தகுதித் தேர்வு மதிப்பெண்களை முனைவர் என்னும் பிஎச்டி (PhD) பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஒரு முக்கிய அளவுகோலாக மாற்றியது.
மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சி பறிப்பு
மாநில அரசுகளின் உயர்கல்வித் துறைகளால் நிர்வகிக்கப்பட்டு, பொது நிதியுதவியுடன் இயங்கும் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி கள், தங்கள் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி களில் பிஎச்டி மாணவர்களைச் சேர்ப்பதற்கு, தங்க ளின் சொந்த அளவுகோல்களையும் நடைமுறை களையும் பின்பற்றி வந்தன. நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களைவிட மாநில அரசுகள் நடத்திடும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மிக அதிகமாகும். எனினும், இப்போது புதிதாக வெளியிடப் பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணை, மாநில அளவிலான நிறுவனங்களும் படிப் படியாக தேசியத் தகுதித் தேர்வு மதிப்பெண்களை தங்கள் சேர்க்கை செயல்முறைகளில் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளது. இத்த கைய தீவிர மையப்படுத்தல் ஏழை மற்றும் பின் தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை, குறிப்பாக தலித்/பழங்குடியின மாணவர்களை, ஆராய்ச்சிப் படிப்பைத் தொடருவதைக் கட்டுப் படுத்திடும்.
சேதுபந்த வித்வான் யோஜனா - இரட்டை நிலைப்பாடு
ஒரு பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில், ஒன்றிய அரசாங்கம் பிஎச்டி சேர்க்கைக்குக்கூட தேசியத் தகுதித் தேர்வை கட்டாயமாக்குகிறது. மறுபக்கத்தில் ஐ.ஐ.டி.கள் போன்ற கல்வி நிறுவனங்களில் பெருமளவில் விதி விலக்குகளை வாரி வழங்கியிருக்கிறது. சேதுபந்த வித்வான் யோஜனா (Setubandha Vidwan Yojana) என்னும் திட்டத்தின்கீழ் பாரம்பரிய குருகுலங்களில் சமஸ்கிருதம் படித்த மாணவர்களு க்கு கூட்டு நுழைவுத் தேர்வு (JEE-Joint Entrance Examination) மதிப்பெண்கள் தேவையில்லை என்று கூறியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மேற்கண்ட குருகுலங்களில் இருந்து வரும் மாண வர்களுக்கு அனைத்து விதமான நிதிஉதவியும் தாராளமாக வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதாவது, முறையான கல்விப் பட்டங்களைப் பெறாத மாணவர்கள் கூட, அங்கீகரிக்கப்பட்ட தகுதி களைப் பெறவும், முதன்மையான ஐ.ஐ.டி.களில் ஆராய்ச்சிப்படிப்புக்காக தாராளமாக கல்வி உத வித்தொகைகளைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது, இது ‘மாணவர் மேம்பாட்டுத் திட்டம்’ எனக் கூறப் பட்டுள்ளது.
திட்டத்தின் விரிவான அம்சங்கள்
ஜூலை 29 தேதியிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் வந்துள்ள தகவல்களின்படி, இந்தத் திட்டம், “கல்வி அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ‘இந்திய அறிவு அமைப்பு’ (Indian Knowle dge System) என்னும் பிரிவால் செயல்படுத்தப்படு கிறது. இது ஆயுர்வேதம் முதல் அறிவாற்றல் அறி வியல் (cognitive science) வரை, கட்டடக்கலை முதல் அரசியல் கோட்பாடு வரை, இலக்கணம் முதல் உத்தி சார் ஆய்வுகள் (strategic studies) வரை, நிகழ்த்துக் கலைகள் (performing arts) முதல் கணிதம், இயற்பியல் மற்றும் சுகாதார அறிவியல் வரை, என சுமார் 18 இடைநிலைத் துறைகளுக்கு மாதத்திற்கு 65 ஆயிரம் ரூபாய் வரை ஆய்வுதவித் தொகை (fellowship) வழங்குகிறது.
தரநிலைகளில் முரண்பாடு
ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருவதற்கான அடிப்ப டைத் தகுதி, 10+2+3+2 ஆண்டுகள் பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் உயர்கல்வி ஆகும். மேலும் இந்த 17 ஆண்டு கால கடுமையான அறிவியல் படிப்புக ளுக்கு மேல், ஆராய்ச்சியில் தரத்தை தரப்படுத்துவ தற்கு தேசியத் தகுதித் தேர்வின் மதிப்பெண்களை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. இவ்வாறு கட்டாயமாக்கிய இதே ஒன்றிய அரசாங் கம்தான் இப்போது, அங்கீகரிக்கப்பட்ட குரு குலத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் படித்து, சாஸ்திரங்கள் அல்லது பாரம்பரிய அறிவில் சிறந்து விளங்கினாலே, அவர்களும் ஆராய்ச்சிப் படிப்புக ளில் சேர அவை போதுமானது என்று கூறுகிறது.
சாதிய அரசியலின் புதிய முகம்
பிஎச்டி சேர்க்கைக்கு தேசியத் தகுதித் தேர்வைக் கட்டாயப்படுத்தியிருப்பதன் மூலம் படிப்பைத் தொடர முடியாமல் யார் வெளியேறுவார்கள்? சேது பந்த வித்வான் யோஜனா என்னும் வியக்க வைக்கும் விசித்திரமான திட்டத்தின் மூலம் யார் பயன் அடைவார்கள்? சாதி, வர்ணாஸ்ரம அமைப்பு முறையின் கீழ் பிளவுபட்டுள்ள சமூகத்தில் ஒன்றிய அரசாங்கத்தின் இவ்விருவகை அணுகுமுறையானது உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டத்திற்கே பங்களிப்பினைச் செய்துள்ளது. தேசியத் தகுதித் தேர்வு கொண்டுவந்ததன் மூலம் சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த அடிமட்ட அடுக்கில் சிக்கித் தவிப்ப வர்களிலிருந்து வரும் மாணவர்கள், ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வது என்பது மிகவும் கடினமாகும். அதா வது இந்த தேசியத் தகுதித் தேர்வு ஏழை மற்றும் விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை வடிகட்டிவிடும். அதே சமயத்தில், சமூகத்தின் உயர்மட்டப் பிரிவு களைச் சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகளை தேசியத் தகுதித் தேர்வு அதிகரிக்கிறது. சேதுபந்த வித்வான் யோ ஜனா, வேத சாஸ்திரங்களின் மீது அதிகாரம் கொண்ட தாகக் கூறும் ஒரு குறிப்பிட்ட - சமஸ்கிருதம் தெரிந்த பிரிவினருக்கு, ஐ.ஐ.டி.களில் அவர்கள் விரும்பும் ஆராய்ச்சிப் படிப்புக்கான வாய்ப்புகளை தங்கத் தட்டில் வைத்து வழங்கி இருக்கிறது. அந்தப் பிரிவு யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.
குருகுலக் கற்றல் முறையின் வரலாற்றுப் பின்னணி
குருகுலக் கற்றல் முறை என்பது வேத காலத்தில், அதாவது கி.மு.1500 வாக்கில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு பண்டைய கற்றல் முறையாகும். இது வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்டது. மனப்பாடம் செய்வது, பாராயணம் செய்வது போன்ற வற்றில் கவனம் செலுத்தும் முறையாகும். இது பிராம ணரல்லாதவர்களை கல்வி கற்பதிலிருந்து வெளிப்படையாக விலக்கி வைத்தது. சாதி மற்றும் வர்ணாஸ்ரம அமைப்பின் கொடுமைகளுக்கு ஏகலைவன் -துரோணாச்சாரியார் கதை நம்முன் உள்ள ஒரு வலுவான சான்றாகும்.
குருகுலக் கல்வி மற்றும் அறிவியல் தரத்தின் சீரழிவு
குருகுலப் படிப்பிற்கு மொழி, இலக்கணம், சில அறிவியல் மற்றும் கணிதம் போன்றவற்றை உள்ள டக்கிய பல்வேறு பாடங்கள் இருப்பதாகக் கூறப் பட்டாலும், இவற்றுடன் மந்திரங்களை மனப்பாடம் செய்தல், மந்திரங்களை உச்சரித்தல் போன்றவை யும் குருகுலங்களில் கற்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த மந்திரங்களை மனப்பாடம் செய்து குரு குலத்தில் ‘கற்பவர்களை’ ஐ.ஐ.டி.களின் ஆராய்ச்சிப் பகுதிகளுக்குள் அனுமதிப்பது என்பதன் பொருள், கல்வி மற்றும் ஆராய்ச்சியில், குறிப்பாக பொறியி யல் மற்றும் தொழில்நுட்பத்தில், ஐ.ஐ.டி.கள் இது வரை அடைந்துள்ள உலகளாவிய தரத்தை இழக்கச் செய்வதற்கே இட்டுச்செல்லும். இது இந்தியாவின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித மூலதனத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திடும். இது நாட்டின் தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்திடும்.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை
நமது இந்திய அரசமைப்புச்சட்டம், ஒவ்வொரு குடிமகனின் அறிவியல் மனப்பான்மையையும் வளர்ப்பதை அடிப்படைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 51A(h)-ஆவது பிரிவு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் “அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கட்டளையிடுகிறது. இந்த ஆணை பகுத்தறிவு சிந்தனை, விமர்சன ரீதியான விசாரணை (critical inquiry) மற்றும் அறிவியல் முறைகள் மூலம் அறிவியல் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் இந்திய அறிவு அமைப்பு
எனினும், ஆர்.எஸ்.எஸ்./பாஜக தன்னுடைய 2020 தேசியக் கல்விக் கொள்கை மூலமாக தற்போதுள்ள அறிவியல் அமைப்பு முறையை அரித்து வீழ்த்தி விட்டு, இந்திய அறிவு அமைப்புகள் மூலம் தங்கள் மனுவாத சமூகத்தை, பகுத்தறிவற்ற மற்றும் சமத்து வமற்ற சமூகத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் நூறாண்டு கால கனவாகும். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பல்க லைக்கழகம், தெற்காசியாவின் முதல் மகளிர் பல்க லைக்கழகம் என்று தன்னைக் கூறிக் கொள்கிறது. இது 1916இல் நிறுவப்பட்டது. இது 2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி “இந்திய அறிவு முறை யின் ஆரம்பம்” என்ற இளங்கலைப் பாடத்திற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. வேத தர்மம் மற்றும் ஷத் தரிசனம் (இந்து மதத்திற்குள் இந்திய தத்து வத்தின் ஆறு மரபுவழி பள்ளிகள்), வாஸ்து-வித்யா ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் பொதிந்துள்ள கற்றல் பாடங்கள் ஆகும்.
எதிர்காலத்தின் அபாயகரமான திசை
நமது கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவ னங்களில் ‘இந்திய அறிவு அமைப்புகளை’ அனு மதிப்போமானால், எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கின்றன என்பதை இவை காட்டுகின்றன. உயர்கல்வி பாடத்திட்டத்தில் “இந்திய அறிவு அமைப்புகளை” இணைப்பதற்கான வழிகாட்டுதல் கள் 2023 ஜூனில் வெளியிடப்பட்டன. இளநிலை அல்லது முதுநிலை திட்டத்தில் சேரும் ஒவ்வொரு மாணவரும் மொத்த கிரெடிட்டுகளில் குறைந்தது 5 சதவீதம் ‘இந்திய அறிவு அமைப்புகளில் உள்ள கிரெடிட் படிப்புகளை எடுக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்திருக்கிறது. இதன் பொருள் என்ன? இளநிலை/முதுநிலை திட்டத்தில் சேரும் ஒவ்வொரு மாணவரும் ‘இந்திய அறிவு அமைப்பு’ என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவத்தைக் கற்க வேண்டும். அதன் அணியில் சேர்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதாகும். இவ்வாறு 2014 முதல் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட வெறித்தனமாக ஈடுபட்டு வரு கிறது.
மனுஸ்மிருதி மற்றும் இந்து ராஷ்டிரத்தின் கனவு
ஆர்.எஸ்.எஸ்.க்கு சித்தாந்த அடித்தளங்களை அமைத்த எம்.எஸ். கோல்வால்கர், மனு (அ) தர்மத்தை உருவாக்கிய மனுவை ‘உலகின் முதல் மற்றும் மிகச்சிறந்த சட்டத்தை உருவாக்கியவர்’ என்று பாராட்டியபின்னர், உலகில் உள்ள அனை வரும் இந்துயிசத்திற்கு மாறி, இந்த மண்ணில் பிறந்த மூத்த குடியினரான பிராமணர்களின் புனித காலில் விழுந்து தங்கள் கடமைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறார். டாக்டர் அம்பேத்கராலும், அரசியல் நிர்ணயசபை யாலும் நிராகரிக்கப்பட்ட மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசமைப்புச்சட்டமாக அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலி யுறுத்துகிறது. அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார் பற்ற தன்மையால் வருத்தமடைந்த எம்.எஸ். கோல் வால்கர், இந்திய அரசமைப்புச்சட்டம் “பாரதமற்றது” (“unbharat”) என்று பகிரங்கமாகவே புலம்பினார். இப்போது, தேசியக் கல்விக் கொள்கை மூலமாக ஆர்.எஸ்.எஸ்./பாஜக அரசாங்கம், மனுஸ்மிருதி யின் அடிப்படையிலான ஓர் இந்து ராஷ்டிரமாக, அதா வது நவீன தாராளமயத்தின் தேவைகளுக்கு ஏற்ற மற்றும் அதற்கு வளைந்துகொடுக்கக்கூடிய ஒரு வர்ணாஸ்ரம சமூக அமைப்பை உருவாக்கிட இந்தி யாவை இழுத்துச்சென்று கொண்டிருக்கிறது.
எதிர்த்துப் போராடுவது காலத்தின் கட்டாயம்
ஒரு நாட்டின் கல்விக் கொள்கை அதன் இளை ஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர் காலத்தையும் தீர்மானிக்கிறது. மேலும், கல்வி என்பது இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பொதுப் பட்டியலில் (concurrent list) உள்ள ஒன்றா கும். எனினும் ஒன்றிய பாஜக அரசாங்கம் தேசியக் கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவா திக்கவோ அல்லது மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளவோ இல்லை. இந்தியாவில் உள்ள ஜனநாயக மற்றும் மதச்சார் பற்ற சக்திகள் ஆர்.எஸ்.எஸ்.சின் இத்தகைய சூழ்ச்சித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இடை விடாது நடத்திட தங்கள் முழு பலத்தையும் திரட்ட வேண்டும்.