articles

img

முழு ‘சந்திரமுகியாக’ மாறிக் கொண்டிருக்கும் எடப்பாடியார்! - மதுரை சொக்கன்

முழு ‘சந்திரமுகியாக’  மாறிக் கொண்டிருக்கும் எடப்பாடியார்!

பாஜகவுடன் நிர்ப்பந்தக் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று சொல்லி மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளார். நடிகர் சத்யராஜ் திரைப்படங்களில் பயன்படுத்திய ‘புரட்சித் தமிழர்’ என்ற பட்டத்தை இரவல் வாங்கி, தனக்கு சூட்டிக் கொண்டுள்ளார். இவரது சுற்றுப்பயணத்தை துவக்கி வைக்க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் வந்துள்ளனர். நயினார் நாகேந்திரன் தன்னுடைய கட்சியிலேயே தன்னை யாருக்கும் தெரியவில்லை என்று புலம்பி யுள்ளார். கடலூர் பாஜக நிர்வாகி ஒருவருக்கு போன் செய்து நான் நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என்று இவர் சொல்ல, அவர் பதிலுக்கு ‘வணக்கம்’ கூட சொல்லாமல் தன்னுடைய நைனா பேசுவதாக நினைத்து ‘ஒழுங்காக இரு’ என்று சொல்லி போனை வைத்துவிட்டதாகச் சொல்லி புலம்பியுள்ளார். அவரது கட்சியிலேயே நயினாரின் நிலை இதுதான்.

ஆனால் நயினார் நாகேந்திரனை பார்த்தவுடன் ‘வாங்க, வாங்க உங்களுக்காகத்தான் வெயிட்டிங்’ என்று வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறார் எடப்பா டியார். செல்லும் வழியெங்கும் நிலக்கடலை, கொத்த மல்லித்தழை  விலையை விசாரிக்கிறார். ஐந்து எலு மிச்சம்பழத்தை விலை கொடுத்து வாங்குகிறார். அப்படி மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகுவ தாக காட்டிக் கொள்கிறார், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையே டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட எடப்பாடியார்.

 மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் திருத்தச் சட்டங்க ளை அதிமுக ஆதரித்தது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக இந்தத் திட்டத்தை மோடி அரசு கைவிட்டது. ஆனால் பச்சைத் துண்டை முண்டாசாக கட்டிக் கொண்ட இவர், விவசாயிகளையே மொட்டையடிக்கும் சட்டத் திருத்தத்தை வெட்கமின்றி ஆதரித்தார். ஆனால் இப்போது விவசாயிகளின் நண்பர் போல காட்டிக் கொள்கிறார். சுற்றுப் பயணத்தின் போது விவ சாயிகளிடம் கலந்துரையாடிய இவரிடம், ஒரு விவசாயி அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு, அவிநாசி திட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்ப, ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டோம். ஆனால் நிராகரித்து விட்டார்கள்’ என்று அதற்கு எடப்பாடியார் பதிலளித்தார். இது குறித்து சமூக ஊடகத்தில் அப்படிப்பட்ட பாஜகவுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று விவசாயி கேட்பது போலவும், நாங்கள் கூட் டணி வேண்டாம் என்றுதான் சொன்னோம். ஆனால் அதையும் அவர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று எடப்பாடியார் கூறுவது போலவும் வந்த நையாண்டி தான் நினைவுக்கு வருகிறது. இந்த லட்சணத்தில் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வரப் போவதாக மறு புறத்தில் கூறுகிறார். ‘கேப்பையில் நெய் வடிகிறது, கோப்பையோடு வாருங்கள்’ என்று அழைக்கிறார். 

‘பாஜகவுடனான கூட்டணி இயல்பான, இயற்கை யான கூட்டணி’ என்றும் எடப்பாடி பழனிசாமி நியா யப்படுத்துகிறார். சமீபத்தில் மதுரையில் ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் பாஜக பரிவாரம் நடத்திய மாநாட்டில், ‘திராவிடத்தை வீழ்த்த வேலோடு வாருங்கள்’ என்று போஸ்டர் ஒட்டினார்கள். அது குறித்து இவருக்கு கவலையில்லை. அதிமுக தலை வர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா போன்றவர்களை வீடியோ போட்டு இழிவு படுத்தினார்கள். அது குறித்தும் இவருக்கு கவலை யில்லை. திராவிடம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து வம்பு வளர்த்து வந்த நிலை யில், ‘ஆளுநரின் ஆரிய, திராவிட கருத்து தொடர்பாக உங்கள் கருத்து என்ன?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதற்கெல்லாம் புராணம் படிக்கணும். நான் அந்தளவுக்கு படிச்சவன் இல்லை” என்று பதில் சொன்னவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இப்போது புராணங்களை அனைத்தையும் அலசி ஆராய்ந்து தெளிவு பெற்றுவிட்டார் போலிருக்கிறது.

அதிமுக ஆட்சியிலிருந்த போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓபி எஸ்சும் மிகவும் பலவீனமானவர்கள், ஆற்றல் அற்ற வர்கள் என்றெல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தி ஏகடியம் பேசினார். ஆனால் இப்போது அவர் வீட்டில்தான் அமித் ஷா முன்னிலையில் கூட்டணி பேரமே பேசி முடிக்கப்படுகிறது. இதுதான் இயல்பான கூட்டணி யாம். கூட்டணியை அமித் ஷா அறிவிக்க, ஒரு வார்த்தை கூட பேசாமல் எடப்பாடியார் அமர்ந்திருந்ததும், இயல் பான ஒன்றுதான் போலிருக்கிறது. 

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசிடம் பேசி, ஆயுத தளவாட தொழிற்சாலைகளைக் கொண்டு வருவோம் என்கிறார் எடப்பாடியார். செங்கல்பட்டில் ஏற்கெனவே கட்டியுள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலை யையே ஒன்றிய அரசு திறக்க மறுக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது திறக்கப்படும் என்றே தெரியவில்லை. இவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் நடந்த ‘கஜா’ புயல் போன்ற இயற்கை பேரி டர்களுக்கே நிதி வாங்க முடியவில்லை. சட்டமன் றத்தில் இவர்கள் ஆட்சியில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியும் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெற முடிய வில்லை. அப்போதெல்லாம் முடியாதவர்கள் இப்போது ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களையும், நிதியையும் கொண்டு வந்து குவிப்பதற்காகவே பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்களாம். 

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் அவர்கள் பேசும் குரலில், பொருளில் பேசத் துவங்கிவிட்டார் எடப்பாடியார். இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட்டால் இஷ்டத்திற்கு கொள்ளைய டிக்கலாம் என்பதற்காக இந்த துறையை குதறி வரு கின்றனர் பாஜகவினர். அவர்களுக்கு பக்க வாத்தியம் வாசிக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர். ‘கோவில் நிதிகளை எடுத்து கல்லூரிகள் கட்டுவது சதிச் செயல்’ என்கிறார். இவர் சுற்றுப்பயணத்தை முடிக்கிற போது முழு சந்திரமுகியாகவே மாறி விடுவார் போலிருக்கி றது. தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத் துறை யின் கீழ் கலை, பண்பாடு மற்றும் அறிவியல் கல்லூரி கள் 5, தொழில்நுட்பக் கல்லூரி 1, மேல்நிலைப் பள்ளி கள் 15, நடுநிலைப்பள்ளிகள் 2, தொடக்கப் பள்ளிகள்9, மெட்ரிக்குலேசன் பள்ளி 1, மத்திய அரசு திட்ட மேல் நிலைப்பள்ளி 1, நாதஸ்வரம் மற்றும் இசை பயிற்சி பள்ளி கள் 5, வேதாகம பாட சாலைகள் 2, ஓதுவார் பயிற்சி பள்ளிகள் 2, தேவார பயிற்சி பள்ளிகள் 2, காதுகேளா தோர், பேச இயலாதோர் பள்ளி 1 என 54 கல்வி நிலையங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. 

இதில் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி கள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தான் துவங்கப்பட்டது. அப்படி யென்றால் எம்ஜிஆர் செய்தது சதிச் செயலா? அரசின் சார்பில் அர்ச்சகர் பள்ளிகள் நடத்தப்படுவதால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும். ஆனால் பாஜக இதை ஏற்கவில்லை. பாஜகவின் இதே நிலைபாடை தான் அதிமுகவும் மேற்கொள்ளப் போகிறதா? அனைவருக்கும் கல்வி என்பதையே ஆர்எஸ்எஸ் பரிவாரம் ஏற்பது இல்லை. அதனால் தான் அவர்கள் புதிய கல்விக் கொள்கையையே கொண்டு  வந்துள்ளனர். கல்வி தருவதை சதிச் செயல் என்று இரண்டாம் நாள் பிரச்சாரத்திலேயே பேசத் துவங்கி யுள்ள எடப்பாடி பழனிசாமி போகப் போக முழு சந்திர முகியாகவே மாறி விடுவார் போலிருக்கிறது. இவரை இயக்கும் பாஜகவுக்குத்தான் அது தெரியும்.

‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்பது சொலவடை. பாஜகவினரை மகிழ வைக்க வேண்டு மென்பதற்காக கம்யூனிஸ்ட்டுகள் மீது பாய்ந்துள் ளார் எடப்பாடி பழனிசாமி. கோவை வடவள்ளியில் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கி றதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்ச மாக தேய்ந்து கொண்டே செல்கிறது’ என்று பேசி யுள்ளார். தோழர் க.கனகராஜ் சொல்லியுள்ளது போல இவர் அதிமுகவின் முகவரியையே ‘கேர் ஆப் அமித் ஷா’ என்று மாற்றிவிட்டார். பாஜக அலுவலகத்தின் முட்டுச் சந்தில் போய் மாட்டிக் கொண்டு கம்யூனிஸ்ட்டுகளை தேடுகிறார் இவர். அவர்கள் இன்றைக்கு கூட மறியல் களத்தில் நிற்கிறார்கள். மக்கள் மனதில் நிற்கிறார் கள். அடகுக் கடையில் சிக்கிய நகையை தேய்ப்பது போல அதிமுகவை தேய்த்து சேதாரம் செய்து கொண்டி ருக்கிறது பாஜக. ஆனால், இவரோ கம்யூனிஸ்டுகளின் முகவரியை தேடுகிறார். செங்கொடியின் முகவரி வேர்வை படிந்த உழைப்பாளிகளின் முக வரிகளில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி குறைந்தபட்சம் தன்னுடைய கட்சிக் கொடியில் உள்ள அண்ணாவின் முகத்தை மாற்றிவிட்டு அமித் ஷாவின் முகத்தை வைக்காமல் இருந்தால் சரி. 

ஆட்சிக் காலத்தில் செய்த பல்வேறு ஊழல் வழக்கு களின் கோப்புகள் ஒன்றிய அரசிடம் சிக்கியிருப்ப தாலேயே, இவர் தன்னுடைய கட்சியைக் கொண்டு போய் பாஜகவிடம் சிக்க வைத்திருப்பதாக பேசப் படுகிறது. வழக்கு வளையத்தில் சிக்கியுள்ள மகனை  மீட்பதற்காகவே இவர் தாமரையிடம் தஞ்சமடைந்தி ருப்பதாக கூறப்படுகிறது. ‘மகனை காப்போம், வழக்கி லிருந்து மீட்போம்’ என்பதே இவரது மைன்ட் வாய்சாக இருக்கக்கூடும்.