articles

img

வெனிசுலாவும், அமெரிக்காவும் இரு விடுதலைநாள் கொண்டாட்டங்களின் வேறுபாடுகள்

வெனிசுலாவும், அமெரிக்காவும் இரு விடுதலைநாள் கொண்டாட்டங்களின் வேறுபாடுகள்

ஜூலை 5-ல் வெனிசுலாவும் ஜூலை 4-ல் அமெரிக்காவும் தங்களது விடுதலை நாள்களைக் கொண்டாடின. ஆனால் இந்த இரு கொண்டாட்டங்களுக்கிடையே ஆழமான வேறுபாடுகள் உள்ளன.  வெனிசுலாவின் விடுதலைப் போராட்டம்  தென் அமெரிக்க நாடான வெனிசுலா ஸ்பெயினின் காலனியாக இருந்தது. சைமன் பொலிவார் தலைமையில் ஸ்பெயினை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்றது. 200 ஆண்டுகளுக்கு முன்பு லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி மனித வரலாற்றில் மிக மோசமான கொடுமைகளை அனுபவித்தது.  காலனிய ஆதிக்கம், அடிமைத்தனம், கத்தோலிக்க மதத்திற்குக் கட்டாய மதமாற்றம், கலாச்சாரச் சீரழிவு, தாதுப் பொருட்களைக் கொள்ளையடித்தல் என்ற கொடுமைகளின் பட்டியல் நீண்டது. சுதந்திரப் போராட்ட த்தில் வெனிசுலா தனது பாதி மக்களை இழந்தது.  பொலிவாரின் தத்துவம்  1819-ல் நாடாளுமன்றத்தில் சைமன் பொலிவார் அறிவித்தார்: “மிகப்பெரும் அளவு மகிழ்ச்சி, சமூகப் பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குகிற அரசே சிறப்பானது.”  எண்ணெய் வளமும் புதிய காலனியாக்கமும்  1920-களில் வெனிசுலாவில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்நிய கார்ப்பரேட்டுகளும் அமெரிக்காவின் புவியரசியல் நலன்களும் சேர்ந்து வெனிசுலாவை ஒரு புதிய வகைக் காலனியாக மாற்றின. எண்ணெய் வயல்களின் லாபம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுச் செல்வந்தர்களின் பாக்கெட்டுகளை நிரப்பியது. ஆனால் பெரும்பான்மை வெனிசுலா மக்கள் வறுமையில் வாழ்ந்தனர்.  சாவேஸ் புரட்சியும் மாற்றங்களும்  1998-ல் ஹூயுகோ சாவேஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் நிலைமை மாறியது. பொலிவேரிய பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, நாட்டின் இறையாண்மை, பொருளாதார நீதி, ஜனநாயகக் கோட்பாடுகளை அவர் நிலைநாட்டினார்.  1999-ல் சாவேஸ் பதவியேற்ற பின்னர், வெனிசுலாவின் எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்தைப் பயன்படுத்தி சமூக நலத்திட்டங்கள், நிலச் சீர்திருத்தங்கள், பிராந்திய ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் புதிய தாராளமயக் கொள்கைகளை சாவேஸ் நிராகரித்தார்.  அமெரிக்காவின் தலையீடுகள்  2002-ல் அமெரிக்கா சாவேஸுக்கு எதிராக நடத்திய சதியால் சிறிது காலம் சாவேஸ் பதவி இழந்தார். ஆனால் வெகுஜன எழுச்சி அவரை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. அதன் பின்னரும் பொருளாதாரச் சீர்குலைவுகள், பொய் ப்பிரச்சாரங்கள், இராஜதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்துதல் தொடர்ந்தது.  2013-ல் சாவேஸ் மறைந்த பிறகு நிக்கோலஸ் மதுரோ ஜனாதிபதியாகத் தேர்வானார். அவரது ஆட்சிக்கு எதிராகப் பொருளாதாரத் தாக்குதல்கள், தன்னிச்சையான அச்சுறுத்தும் நடவடிக்கைகள், சர்வதேச ரீதியான வெனிசுலாவின் வங்கிச் சொத்துக்களை முடக்குதல், உணவு மற்றும் மருந்து இறக்குமதி மீதான தடைகள், ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு என - “குண்டுகள் இல்லாத போர் “ வெனிசுலா மீது தொடுக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க விடுதலைநாளின் முரண்பாடுகள்  1776 ஜூலை 4-ல் அமெரிக்கா விடுதலை அடைந்தது. ஆனால் இன்னும் அமெரிக்கா மற்ற நாடுகளின் சுதந்திரம், இறையாண்மையைப் பறிக்க நினைப்பது ஏன்? அமெரிக்காவிலேயே பலரின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பல லட்சம் கோடி டாலரை யுத்தங்கள், ராணுவத் தளங்களுக்குச் செலவிடும் அமெரிக்கா, உள்நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை, வீட்டு வசதி, பொதுக் கல்வியை அளிக்க முடியவில்லை.  உலக நாடுகளுக்கு எல்லாம் சுதந்திரம், மனித உரிமை குறித்துப் பேருரை நிகழ்த்தும் அமெரிக்காவில், ‘பெரிய அழகான மசோதா’ என்ற பெயரில் பில்லியனர்களுக்கு வரிச் சலுகைகளை டிரம்ப் நிர்வாகம் வாரி வழங்கியுள்ளது.  உள்நாட்டு பிரச்சனைகள்  2-3 கோடி குடியேறிகளை அமெரிக்க அரசு நாடுகடத்த உள்ளது. வீடற்றவர்களைக் குற்றவாளிகளாகப் பாவிப்பது, பாலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கங்களை முடக்குவது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. சராசரி ஆயுட்காலம் குறைகிறது, மாணவர்களின் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க மக்கள் உற்சாகமாக விடுதலை நாளை ஜூலை 4-ல் எவ்வாறு கொண்டாடியிருப்பார்கள் என்பது கேள்விக்குரியது.