தோழர் நன்மாறன் ஒரு கலங்கரை விளக்கம்
தோழர் நன்மாறன் என்றால் தமிழ்! எளிமை! மேடைக் கலைவாணர்! நன்மாறன் என்றால் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தளபதி களில் ஒருவர்! மார்க்சியத்தின் மகத்து வத்தை மகோன்னதமான பல வடிவங் களில் வார்த்தெடுக்க முடிந்ததைப் போலவே, நன்மாறன் என்ற ஆளுமை யையும் தமிழ், எளிமை, மார்க்சியப் புதல்வர் என வார்த்தைகளால் புகழ்ந்து கொண்டே செல்லலாம். தமிழ்நாட்டு அரசியல் சூழலில் தமிழுக்கும், மதச்சார்பின்மைக்கும் ஊறு விளைவிக்கும் சக்திகளுக்கு, நயமான தமிழில் நொடிக்கு நொடி பதில்தர வல்லமை படைத்தவர் அவர். ஊடகம் மூலம் மட்டுமே அரசி யலை வளர்க்க நினைக்கும் டாம்பீக அரசியல்வாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்தியவர். அவர் ஒரு தமிழ் நாயகன், சோச லிஸ்ட் வாலிபர் முன்னணியின் ஸ்தாப கர்களில் ஒருவர், மாநிலத் தலைவர், மேடைப் பேச்சாளர், சிபிஐ(எம்)-இன் மாநிலக்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பொறுப்புகள் வகித்தபோதும், அவரிடம் சிறுதுளி அகந்தைகூடக் காணப்படவில்லை. பொதுமக்களில் ஒருவரைப் போலவே பழகுவார். மேடையேறும்போதும் சாதாரண உடையுடன் இருப்பார். ஐந்தே நிமிடங்களில் அவரது பேச்சு அனைவரையும் கட்டிப்போட்டுவிடும். அவரது பேச்சில், “உடலின் நோய்க்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதைப் போல, சமுதாய சீர்கேட்டைக் களைந்து இந்தியா நல்ல சமுதாயமாக மாற வேண்டுமானால், நீங்கள் அனைவரும் சமுதாயத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்களாக மாற வேண்டும்” என்று பொதுவுடைமைத் தத்துவத்தை இலகுவாக மாணவர்களின் நெஞ்சில் ஏற்றி விடுவார். மதுரையில் பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி யவர். லஞ்சம் வாங்கினார், சொத்து சேர்த்தார், ஆடம்பர காரில் பயணித்தார் என்ற விமர்சனங்கள் இவரை ஒருபோதும் நெருங்கியது கிடையாது. பொதுவுடமை இயக்கம் தரும் குறைந்தபட்ச மாத அலவன்ஸைக் கொண்டு குடும்பம் நடத்தினார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசு வழங்கிய ஊதி யத்தையும் கட்சிக்கே கொடுத்துவிடு வார். உலகமயம், தாராளமயம், தனி யார்மயம் என்ற தாக்குதலுக்கு அவர் இலக்கானது இல்லை. அவர் பயின்ற மார்க்சியம் என்ற கேடயம் எத்தகைய பேராசைகளையும் நெருங்கவிடாது. ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மேம்பட்ட வாழ்க்கையே இவரின் உயிர்மூச்சு. சுருங்கக் கூறின், தோழர் நன்மாறன் அவர்கள் இடதுசாரி இயக்கத்தின் கலங்கரை விளக்கம்! ம.ஹரிஹரன், கோவை
