தரைக்கடை வியாபாரிகள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும் சிஐடியு வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, அக். 27- திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக 70-க்கும் மேற்பட்டோர் தரைக்கடை நடத்தி பிழைத்து வருகின்றனர். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மத்திய பேருந்து நிலையத்துக்கு வெளியூர் பேருந்துகள் வந்து செல்லாத நிலையில், தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை மாநகராட்சி அலுவலர்கள், மத்திய பேருந்து நிலையம் வ.உ.சி சாலை பகுதியில் அமைந்துள்ள தரைக்கடைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் தலையீட்டின் பேரில், கடைகளை அகற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, சிஐடியு திருச்சி மாவட்டச் செயலாளர் எஸ். ரெங்கராஜன் கூறுகையில், “மத்திய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் சாலையோரம் கடை நடத்தி வரும் வியாபாரிகள், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், அந்த கடைகளை அப்புறப்படுத்த விரும்பும் திருச்சி மாநகராட்சியின் நடவடிக்கையை சிஐடியு மாவட்டக் குழு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு முன்பு, பலருக்கும் மாமூல் வழங்கி வந்த தரைக்கடை வியாபாரிகள், கடந்த 2 மாதமாக வியாபாரம் நலிவுற்று, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மாமூல் வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தரைக்கடை வியாபாரிகளுக்கு நெருக்கடி தரும்விதமாக மாநகராட்சி அலுவலர்கள் கடைகளை அப்புறப்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு உடனடியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் கடை நடத்த இடம், வழங்கிட வேண்டும்’’ என்றார்.