தொடர் மழை அரியலூரில் பயிர்கள் பெரும் பாதிப்பு நிவாரணம் வழங்கிட சிபிஎம் வலியுறுத்தல்
அரியலூர், அக்.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம், அரியலூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. அம்பிகா தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு முடிவுகளை விளக்கி தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பேசினார். அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நிலைமைகள் குறித்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் விளக்கிப் பேசினார். குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழூவூர், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் அதிக சேதம் அடைந்துள்ளது. அதேபோல் மக்காசோளம் அதிக அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. செந்துறை பகுதியில் வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பணப்பயிர்கள் இந்தத் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட அந்தப் பயிர்களை தமிழ்நாடு அரசும், அரியலூர் மாவட்ட நிர்வாகமும் உரிய முறையில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. துரைசாமி, ஏ.கந்தசாமி, வி.பரமசிவம், துரைஅருணன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.