கொலீஜியம்: நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை எங்கே?
நீதிபதிகள் நியமனங்களில் தொடர்ந்து எழுந்து வரும் சர்ச்சையில், கடந்த வாரம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் புதிதாக இணைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 25 அன்று, இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்ட கொலீஜியம், நீதிபதி அதுல் ஸ்ரீதரன் உட்பட 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்யப் பரிந்துரைத்தது. அதில், ஸ்ரீதரனை மத்தியப் பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 14, 2025 அன்று, ஒன்றிய அரசின் வேண்டுகோளின் பேரில், ஸ்ரீதரனை சத்தீஸ்கருக்கு இடமாற்றம் செய்வதற்கான தனது பரிந்துரையை கொலீஜியம் திரும்பப் பெற்றது. அதற்குப் பதிலாக, அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு செய்தது. அரசு மறுஆய்வு கோரியதைத் தொடர்ந்தே பரிந்துரை மாற்றியமைக்கப்பட்டதாகக் கொலீஜியம் வெளிப்படையாகக் கூறியது.
ஆனால், அரசாங்கம் மறுபரிசீலனை செய்யக் கோரியதற்கான காரணங்கள் வெளிப்படை யாகத் தெரிவிக்கப்படா தது விமர்சனத்துக்குள்ளானது. நீதிபதி ஸ்ரீதரன் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியாகவும், உயர்நீதிமன்றக் கொலீஜியத்தின் உறுப்பின ராகவும் இருந்தார். அவர் சத்தீஸ்கருக்கு மாற்றப் பட்டிருந்தால், அங்கும் மூத்த நீதிபதிகளில் ஒருவ ராகத் தொடர்ந்து கொலீஜியம் உறுப்பினராக இருந்திருப்பார். ஆனால், தற்போது அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தன் மூலம், அவர் அந்த நீதிமன்றத் தின் மூத்த நீதிபதிகள் வரிசையில் 7-வது இடத்தில் மட்டுமே இருப்பார். நீதிபதிகளைப் பரிந்துரை செய்யும் கொலீஜியத்தின் உறுப்பினராக வரவிடாமல் அவரது இடமாறுதல்கள் நடைபெறுகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. அரசுக்கு எதிரான தீர்ப்புகளின் விளைவா? தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக் காலத்தில், ஸ்ரீதரன் இட மாற்றம் செய்யப்பட்ட போது, அவரது மகள் சட்டப் பயிற்சியைத் தொடங்கவிருந்ததால் அவர் கோரியதின் பேரி லேயே இடமாற்றம் செய்ய ப்பட்டதாகக் காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இம்முறை மூத்த நீதிபதியாக இருந்தவரைப் பணிமூப்பு வரிசையில் 7-வது இடத்துக்கு இடமாற்றம் செய்ததற்கு வெளிப்படையாகக் காரணம் சொல்ல ப்படாதது, இடமாற்றத்தில் ஒன்றிய அரசின் தலையீடு இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
இதற்கு நீதிபதி ஸ்ரீதரன் கடந்த காலத்தில் வழங்கிய சில தீர்ப்புகளும் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்தபோது, ஒரு ராணுவப் பெண் அதிகாரி குறித்து ஆளும் கட்சியின் அமைச்சர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை சுட்டிக்காட்டி, அமைச்சருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தில் இருந்த காலத்தில், தனிமனித சுதந்திரத்தை நிலைநிறுத்தி, பொதுப்பாதுகாப்புச் சட்டம் (PSA) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ் தடுப்புக் காவலில் வைப்பது சம்பந்தப்பட்ட வழக்குகளில் அரசை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பினார். இந்தச் சூழலில்தான், அவர் மத்தியப் பிரதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டு, ஐந்து மாதங்களுக்குள் மீண்டும் அலகாபாத்திற்கு இடமாற்றப்படுவது சந்தேகத்தை எழுப்புகிறது. பஞ்சோலியின் பதவி உயர்வு இதற்கு மாறாக, குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி விபுல் எம். பஞ்சோலிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்ட சம்பவத்தில் கொலீஜியம் தலைகீழாகச் செயல்பட்டது. நீதிபதி பஞ்சோலியின் பதவி உயர்வுக்குக் கொலீஜியத்தில் இருந்த நீதிபதி நாகரத்னா மட்டும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அவர், நீதிபதி பஞ்சோலியின் நியமனம் நீதி நிர்வாகத்திற்கு “எதிர்மறையானதாக” இருக்கும் என்றும், அது கொலீஜியம் அமைப்பின் நம்பகத்தன்மையைக் குறைத்து மதிப்பிடும் என்றும் வாதிட்டார்.
பணிமூப்பின் அடிப்படையில் நாட்டில் பல மூத்த நீதிபதிகள் இருக்கும் நிலையில், பஞ்சோலியின் நியமனம் 21 தலைமை நீதிபதிகள் உட்பட 56 உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணிமூப்பை மீறி நியமிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். வெளிப்படைத்தன்மையே அவசியம் முன்னாள் தலைமை நீதிபதிகள் பதவிக் காலத்தில், நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்கள் குறித்துப் பரிந்துரை செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய காரணிகள் வரையறுக்கப்பட்டன. அவை: பணிமூப்பு, தகுதி மற்றும் நேர்மை, உயர்நீதிமன்றப் பிரதிநிதித்துவம், மற்றும் சமூகப் பன்முகத்தன்மை ஆகியன. ஆனால், நீதிபதி பஞ்சோலி உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டபோது இந்தக் காரணிகள் பின்பற்றப்பட்டனவா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. '
இந்த இரு வெவ்வேறு நிகழ்வுகள், நீதிபதிகள் நியமனங்கள் மற்றும் இடமாறுதல்களில் கொலீஜியம் வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறதா? என்கிற கேள்வியை முன்வைக்கிறது. நீதித்துறை நியமனங்களில் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவதன் மூலமே, ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான நீதித்துறையின் மீது மக்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இதில் அரசியல் ரீதியான தலையீடுகள் நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
