ஐ.நா. சுற்றுச்சூழல் விருது பெற்ற சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் பாராட்டு
சென்னை, டிச. 11 - தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு ஐக்கிய நாடுகளின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற உழைத்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுப்ரியா சாகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்தல், அருகிவரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட அரசின் முயற்சிகள் மென்மேலும் சிறக்க இவ்விருது ஊக்கமாக அமையும்” என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடவு செய்து கின்னஸ் சாதனை படைத்தார். இவரது கணவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
