india

img

மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை - தேசியவாத காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு!

மகாராஷ்டிராவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 766 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று மாநிலங்களவையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி பவ்சியா கான் தெரிவித்துள்ளார்.
இதில் 200 குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் மறுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த ஆண்டுக்கான கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பிறகு ரூ.31,628 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தரைநிலை முற்றிலும் வேறுபட்டுள்ளது என்று கான் சுட்டிக்காட்டினார். மேலும், கூடுதல் நிவாரணத்திற்காக மகாராஷ்டிரா அரசு எந்த முன்மொழிவும் அனுப்பவில்லை என்று ஒன்றிய வேளாண்மை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் லோக்சபையில் தெரிவித்ததாகவும் கூறினார்.
மாநில பேரிடர் மீட்பு நிதி (SDRF) மூலம் விவசாயிகளுக்கு ரூ.4,176 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.3,180 கோடி. இதில் ரூ.82 கோடி மட்டும் 1,13,455 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதை கான் குறிப்பிட்டார். “இந்த எண்கள் விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்கின்றன,” என்றார்.
மாநில அரசின் தரவுகளிலும் பெரிய முரண்பாடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மாநில வேளாண்மை அமைச்சர் 19 மாவட்டங்களில் 14.36 லட்சம் ஹெக்டேர்கள் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தாலும், ஒன்றிய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் 1,10,309 ஹெக்டேர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
“14 லட்சம் எங்கே? ஒரு லட்சம் எங்கே? இது விவசாயிகளுடன் செய்யப்படும் அநீதி,” என்று கான் கடுமையாக விமர்சித்தார்.