இந்து ராஷ்ட்ரமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சத்தீஸ்கர்
எங்கள் குழுவினர் துர்க் மத்திய சிறையில் கன்னியாஸ்திரிகள், சகோதரி பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகியோரைச் சந்தித்த போது, சத்தீஸ்கரில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வரும் அட்டூழியங்களை மிகவும் தைரியத்துடனும், கண்ணியத்துடனும் எங்களிடம் கூறினார்கள். அவர்களுடன் கைது செய்யப்பட்ட பழங்குடி இளைஞர் சுக்மான் மாண்டவி என்ன ஆனாரோ என்று அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங் களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் எந்த வசதி களும் இல்லாத இடங்களில் கன்னியாஸ்திரிகள் பல பத்தாண்டுகளாகத் தன்னலமற்ற முறையில் சேவை களைச் செய்து வருகின்றார்கள். அவர்கள் தங்கள் நிறுவனங்களால் அமைக்கப்பட்ட மருத்துவமனை களில் ஏழைகளின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சேவை செய்து வருகின்றனர். அவர்களின் உதவிக் காக வரும் மக்களிடம் மதம் அல்லது சாதியை ஒரு போதும் கேட்பதில்லை. இந்த நீடித்த பணிக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். மாறாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்
கன்னியாஸ்திரிகள் மீதான குற்றச்சாட்டுகள் அப்பட்டமாக பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என்று நன்கு தெரிந்தும் அவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் மீது ஜோடிக்கப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு போலியானது. ஏனெனில் கன்னியாஸ்திரிகளுடன் இருந்து செயல்பட்டுவந்த பழங்குடியினர் பல ஆண்டுகளாகவே கிறிஸ்த வர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் கட்டாய மதமாற்றம் என்ற பிரச்சனைக்கு வேலை என்ன? இரண்டாவதாக, ஆள் கடத்தல் என்கிற பிரச்சனை யிலும், சம்பந்தப்பட்டுள்ள மூன்று பழங்குடியினப் பெண்களும் பெரியவர்கள் என்பது அவர்களின் ஆதார் அட்டைகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கன்னியாஸ்திரிகளுடன் சென்றதாகக் கூறி யுள்ளார்கள். அவர்களின் பெற்றோரும் அத்தகைய அறிக்கைகளை அளித்துள்ளார்கள். எனவே, ஆள் கடத்தல் குற்றச்சாட்டும் பொய். இருப்பினும், இவர் களுக்கு ஜாமீன் அளிப்பதைக் கடினமாக்கும் விதத்தில் பாஜக அரசு இவ்வழக்கை தேசியப் புல னாய்வு முகமைக்கு அனுப்பி இருக்கிறது. உண்மை யில் இம்மாநிலத்தில் கட்டாய மாற்றம் என்று ஏதா வது இருக்குமானால் அது சத்தீஸ்கரை இந்துத்துவா ராஷ்ட்ரமாக வலுக்கட்டாயமாக மாற்றுவது என்பதேயாகும். சிறையில் கன்னியாஸ்திரிகளைச் சந்தித்தபோது, நான் அவர்களின் கைகளைப் பிடித்தபோது, அவர்கள் இருவருக்கும் காய்ச்சல் இருப்பதைக் கண்டேன். அவர்களுக்கு சில நாள்பட்ட உடல்நலப் பிரச்ச னைகள் இருப்பதும் தெரியவந்தது. இவற்றுக்காக அவர்களுக்கு அவற்றுக்குரிய சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆனால் அவர்கள் சிறையில் கடுமையாகக் குளிர் உள்ள தரைகளில் தங்க வைக்கப்பட்டிருப்பது, அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அவர்களுக்குப் படுக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் முறையான சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லப்பட வேண்டும் என்றும் நாங்கள் சிறை கண்காணிப்பாளரிடம் வாதிட்டோம். அதே வழக்கில் சிறையில் அடைக்கப் பட்ட பழங்குடி இளைஞரான சுக்மான் மாண்டவி யையும் சந்தித்தோம்.
வேலைக்காக பயணித்தவர்கள்...
அவர்கள் எங்களுக்கு முழு நிகழ்வுகளையும் விவரித்தனர். ஆக்ரா, போபால் மற்றும் ஷாதோலில் உள்ள அவர்களின் நிறுவனங்களுக்கு சமையல் வேலைகளுக்கு உதவியாளர்கள் தேவை. முன்னாள் உதவியாளர்களில் ஒருவரான சுக்மதி என்ற பழங்குடியினப் பெண், பல ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர், சத்தீஸ்க ரில் உள்ள தனது கிராமத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக செல்ல வேண்டியிருப்பதால், வேலை யைத் துறந்து வெளியேறினார். அவரிடம் வேறு யாராவது வேலைக்கு வரத் தயாராக இருந்தால் அனுப்பி வை என்று சொல்லியிருக்கிறார்கள். சம்பளம் மாதத்திற்கு 10,000 ரூபாய் என்று சொல்லியிருக் கிறார்கள். சுக்மதி தனது கிராமத்திற்குத் திரும்பினார். இப்போது மூன்று வயது குழந்தையின் தாயான இவர், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் தனக்குத் தெரிந்த சில குடும்பங் களிடம், இந்த விவரங்களைக் கூறியிருக்கிறார். மூன்று இளம் பழங்குடியினப் பெண்கள் லலிதா, கமலேஷ்வரி, மற்றுமொரு சுக்மதி ஆக்ராவிற்கு பயிற்சி பெறவும், பின்னர் ஏதேனும் ஒரு நிறு வனத்திற்குச் செல்லவும் தங்கள் பயணத் திட்டங்களை இறுதி செய்தனர். இந்த இளம் பெண் களில் யாரும் தங்கள் மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ததில்லை. எனவே இயற்கையாகவே அவர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். இதனால் அவர்களின் பெற்றோர் மூத்த சுக்மதியின் சகோ தரர் சுக்மான் மாண்டவியை துர்க் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அங்கு கன்னி யாஸ்திரிகள் அவர்களைச் சந்தித்து ஆக்ராவிற்கு அழைத்துச் செல்வது என்று ஏற்பாடாகியிருந்தது. ரயில் நிலையத்தில் சுக்மான் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கவில்லை. இந்தக் குழுவைப் பார்த்த ஒரு டிக்கெட் பரிசோதகர், டிக்கெட்டுகள் குறித்து கேட்ட போது அவை கன்னியாஸ்திரிகளிடம் இருப்பதாகக் கூறி இருக்கிறார். அந்த சமயத்தில் கன்னியாஸ்திரி களும் வந்துவிட்டார்கள்.
பஜ்ரங்தளத்தினரின் தாக்குதல் அத்துமீறல்
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒருவர், தங்கள் கூட்டத்தைக் கூட்டி, பிரச்சனையைத் திசைதிருப்பி விட்டார். பழங்குடியினப் பெண்கள் கடத்திச் செல்லப் படுவதாகவும், ரயில்வே போலீசார் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் ஆக்ரோஷமான முறை யில் கோஷங்களை எழுப்பினார்கள். அந்தக் கும்பல் அவர்களை, ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக் குள் தள்ளியது. அங்கு அவர்கள் அனைவரும் தாங்க ளாகவே செல்வதாக அறிக்கை அளித்தனர். சுக்மான் அந்தப் பெண்ணின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார், அவர்களும் காவல்துறை யினரிடம் தங்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில் தங்கள் ஒப்புதலையும் தெரிவித்தனர். ஆனால் பஜ்ரங் தளக் கும்பல் இதைப்பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை. ஆர்எஸ்எஸ்-இன் நச்சு நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதில் அது குறியாக இருந்தது. துர்கா வாஹினி இயக்கத்தைச் சேர்ந்த ஜோதி சர்மா என்னும் பெண் தலைமை யிலான பஜ்ரங் தளக் கும்பல் மிகவும் மோசமான வார்த்தைகளில் அவர்களைத் திட்டினார்கள், பின்னர் தாக்கியுள்ளார்கள். அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர், சபிக்கப் பட்டனர், மிரட்டப்பட்டனர், அவமானப்படுத்தப் பட்டனர். மூன்று பழங்குடியினப் பெண்களும் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், ஜோதி சர்மா, தாங்கள் கடத்தப்பட்டதாக வாக்குமூலம் அளிக்கக் கோரி இரண்டு முறை தன்னை அறைந்த தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியே பக்கத்து அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சொன்னதும் காவல்துறையால் எழுதப்பட்டதும் முற்றிலும் வேறுபட்டவைகளாகும்.
திடீரென என்ஐஏவுக்கு மாற்றிய பாஜக அரசு
பாஜக அரசாங்கத்தின் ஆதரவு முழுமையாகத் தங்களுக்கு இருப்பதால்தான் பஜ்ரங் தளக் கும்பல் காவல்துறையினர் முன்பாகவே இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் தெளிவானமுறையில் ஆதாரங்கள் இருந்தும் பஜ்ரங் தளக் கும்பல் மீது அவர்கள் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு எதிராக எவ்வித வழக்கும் தொடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை கோரி, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர் மேல்முறையீட்டுக்காக அமர்வு மன்றத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டபோது, அமர்வு நீதிபதி, இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமையின்கீழ் சிறப்பு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், தனக்கு விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கு, உள்ளூர் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டதாகும். கீழமை நீதிமன்றம் பிணைக்கான வழக்கை விசாரித்திருக்கிறது. அந்த சமயத்தில் அரசுத்தரப்பினர் தேசிய புலனாய்வு முகமை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேல் முறையீட்டில் அமர்வு நீதிபதி இதனை தேசிய புலனாய்வு முகமைக்கு அனுப்புவது தொடர்பாக அறி விக்கை எதையும் காட்டவும் இல்லை. இந்த நிலையில் எப்படி அமர்வு நீதிமன்றம் தேசியப் புலனாய்வு முகமை சம்பந்தமாக அரசுத்தரப்பு கூறி யதை ஏற்றுக்கொண்டது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இது, மற்றுமொரு மாபெரும் அநீதி யாகும். இதுதான் இரட்டை என்ஜின் மோடி அரசாங்கத் தின் முகமாகும்.
வேலை தேடிச் செல்ல ஆர்எஸ்எஸ் அனுமதி வேண்டுமா?
கிறிஸ்தவ சமூகத்தைக் குறிவைத்திருப்பது மட்டு மல்லாமல், இந்த வழக்கு வேறு பல பிரச்ச னைகளையும் நம்முன் கொண்டுவந்திருக்கிறது. நம் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உரிமைகளின்படி எந்தவொரு குடிமகனும் வேலை தேடி நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம். அந்த உரிமையின்மீது இங்கே தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளம் பழங்குடியினப் பெண், வேலை தேடி தன்னு டைய மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்குச் சென்றால், பஜ்ரங் தளம் போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் அனுமதி பெற வேண்டுமா? இந்த வழக்கு, வேலைக்காக தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் இளம் பழங்குடியினப் பெண்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் ஒரு பயங்கரமான முன்னுதாரணத்தை நிறுவுகிறது. கன்னியாஸ்திரிகள் மீதும் பழங்குடியின பெண்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்ட விதம் மற்றுமொரு மிக மோசமான அம்சமாகும். அவர்கள் மிகவும் இழிவான வார்த்தைகளால் காவல்துறையினர் முன்பாகவே வசைபாடப்பட்டிருக்கின்றனர். இது அனைத்துப் பெண்களின் உரிமைகள் மீதான மிக மோசமான பாலியல் தாக்குதலாகும். சகோதரி பிரீத்தி மேரி எங்களிடம் பேசும்போது, பஜ்ரங் தளக் குண்டர்கள் தன்னை நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் “கரையான்” என்றும், “அயலார்” (“foreigner”) என்றும் அழைத்ததாக மனம் உடைந்து கூறினார். “தொலைதூரக் கிராமம் ஒன்றில் ஏழைகளுக்காகவும், தொழுநோயாளிகளுக்காகவும் எவ்விதமான வசதியுமின்றி இத்தனை ஆண்டு காலம் பாடுபட்ட நான் தேச விரோத கரையான் என்று கூறப்பட்டிருக்கிறேனே? ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று என் மதம் என்னைப் பணித்தது. அதற்காக நான் தண்டிக்கப்பட வேண்டுமா?” என்று கண்களில் கண்ணீருடன் எங்களைக் கேட்டார்.
முன்பு வங்க முஸ்லிம்கள் இப்போது கேரள கிறிஸ்தவர்கள்
வங்க மொழி பேசும் முஸ்லிம்களை சட்டவிரோத குடியேறிகள் என்று வழக்கமாகத் திட்டுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் பயன்படுத்தும் “கரை யான்கள்” போன்ற வார்த்தைகளை இப்போது இங்கே கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளுக்கும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இந்துத்துவாவின் கட்டமைப்பிற்குள் பொருந்தாத யாராக இருந்தாலும் இவர்களைப் பொருத்தவரை “வெளிநாட்டவர்” அல்லது “கரையான்கள்” என்று அழைக்கப்படுவார்கள். அவர்களின் உரிமைகள் வெட்டிக் குறைக்கப்படும். இப்போது அவர்கள் பீகாரில் மேலும் ஒருபடி முன்னேறிச் சென்றிருக்கிறார்கள். பீகாரில் லட்சக் கணக்கான வாக்காளர்களை, குறிப்பாக ஏழைகள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களை, வாக்காளர் பட்டியல்களிலிருந்து “சுத்திகரித்து” நீக்கும் வேலை சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் என்ன நடக்கிறது என்பதற்கான புள்ளிகளை ஒன்று சேர்த்துப் பாருங்கள். கன்னியாஸ்திரிகள் மற்றும் பழங்குடி யினக் கிறிஸ்தவர்கள் மீதான கொடூரமான தாக்குதல் மற்றும் கைது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. “இன்று நாம் அமைதியாக இருந்தால், நாளை அவர்கள் நம்மைத் தேடி வரும்போது எதிர்ப்பு தெரிவிக்க யாரும் இருக்க மாட்டார்கள்” என்று பாதிரியார் நீமோலர் கூறியதை நினைவுகூர்ந்திடுவோம்.
பலவீனப்படுத்தும் இரட்டை நிலைபாடு
எங்கள் வருகையின் தொடர்ச்சியாக, ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் குழு சிறைச்சாலைக்கு ஒரு திடீர் வருகை தந்ததாக கேள்விப்பட்டோம். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பதாகை களை ஏந்திச் சென்றதாக பத்திரிகை செய்திகளைப் பார்த்தோம். இது நடக்க வேண்டிய விஷயம்தான். ஆனால், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அக்டோபர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை, கிறிஸ்தவ பழங்குடியினர் மீது தொடர்ச்சியான கொடூர மான தாக்குதல்கள் நடந்தன. நாராயண்பூரில் உள்ள முக்கிய கத்தோலிக்க தேவாலயம் தாக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து மற்றும் அன்னை மேரியின் சிலைகள் உடைக்கப்பட்டன. துர்க்கில் இரண்டு கன்னியாஸ்திரிகளைத் தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்த இதே கும்பல்களே அப்போதும் பொறுப்பேற்றன. பின்னர் நாராயண்பூர் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தாக்கப்பட்ட அனைவரை யும் சந்தித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமேயாகும். நான் அந்தக் குழுவில் இருந்தேன். காங்கிரஸ் முதல்வருக்கு அறிக்கை அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸின் எந்தக் குழுவும் அந்தக் குடும்பங்களைச் சந்தித்ததில்லை. சத்தீஸ்கரில் காங்கிரஸ் காட்டிய இரட்டை நிலைப்பாடு பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தியது.
அப்போதும் இப்போதும்
கன்னியாஸ்திரிகள் மற்றும் பழங்குடியினருடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். அப்போதும் நாங்கள் அப்படிச் செய்தோம். இப்போதும் அப்படிச் செய்கிறோம். என்னுடன் வந்த இந்தக் குழுவில் தோழர்கள் ஆனி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோஸ், கே.மணி, கே. ராதாகிருஷ்ணன், ஏ.ஏ.ரஹிம், பி.பி.சுனீர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தார்கள்.
- தமிழில்:ச.வீரமணி