வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை...
சக்தி சூர்யாவின் முதல் நாவல் ‘நரவேட்டை’. இப்போது ‘சந்தாலி’ இரண்டாவது நாவல். வரலாற்றில் அலைகுடிகளாக ஆக்கப்பட்டு விட்ட சந்தால் பழங்குடி மக்கள் தென் இந்திய மாநிலங்களை நோக்கி பிழைப்பு தேடி இடம்பெயர்வதை மறைந்த போராளி ஸ்டேன் சுவாமிகள்,” மூன்றாவது இடப்பெயர்வு” என்கிறார் . இந்த வரலாற்று செய்திகளோடும் வலிகளோடும் கொங்கு மண்டலம் நோக்கி பிழைப்பு தேடிவரும் வட இந்தியத் தொழிலாளர்கள் நிலையையும் பிசைந்து, சாதி மதம் இனம் கடந்த காதலையும் சமவிகிதத்தில் கலந்து புனைவாக்கி நம் கையில் கொடுத்திருக்கும் சக்தி சூர்யாவிற்கு வாழ்த்துகள் . முதல் அத்தியாயத்தில் நாகஜோதி எனும் பணக்காரப் பெண்ணின் ஒருதலை இச்சையால் பாதிக்கப்பட்டு, திருடன் என்கிற முத்திரையோடு பிழைப்புதேடி வந்த ஓர் வட இந்திய இளைஞன் செங்கா ஓடத் தொடங்கியதும் அதே தடத்தில்தான் நாவல் பயணிக்கும் என நீங்கள் நினைத்தால் அது பிழையாகிவிடும் . அந்த காட்சிக்கும் அடுத்தடுத்து வருவதற்கும் சம்மந்தம் இல்லை . செங்காவை சபலமற்றவனாகக் காட்ட அந்த முதல் காட்சி தேவைப்பட்டதோ? அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய சமூகத்தின் பொது புத்தியை சுட்ட இக்காட்சி அமைக்கப்பட்டதோ? ஈர்ப்பாக அமைந்துவிட்ட நுழைவாயில் . சந்தாலிகளின் உருவமற்ற கடவுள்கள் மாறன் புரூ, போங்கா, தோட்டக் காவியா, அவர்களின் சாமியாடி ஓஜா, பபேல் கோபுரம் என பண்பாட்டுக் காட்சிகள், ஓல்சிக் மொழி எனும் சந்தாலி மொழி மெல்ல வழக்கற்றுப் போகும் நிலை, கன்யாட்டுகள், பட்நாயக்குகளின் நிலப்பிரபுத்துவ சாதிய ஆதிக்கம், சந்தால் மக்களின் கையறு நிலை நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது . கதை நாயகன் செங்கா இந்த சமூகத்திலிருந்து வந்தவன் .ஆனால் தான் ஒரிசாவிலிருந்து வந்தவன் என்றே சொல்லிக் கொள்வான் .இது ஓர் கதைக் களம் . செங்கா கோவையில் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றும் சூழல், அங்கு பல ஊர்களில் இருந்து வந்து சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பணிபுரியும் பெண்கள், இங்கு இவன் சந்திக்கும் மனிதர்கள், முதலாளித்துவ சுரண்டல் எல்லாம் இன்னொரு கதைக் களமாகிறது .ஆக இந்நாவல் இரண்டு கதைக் களத்தில் பயணிக்கிறது . இரண்டும் நெடுந்தொலைவிலுள்ள கதைக் களங்கள் . பண்பாட்டுச் சூழலும் சமூக உளவியலும் வெவ்வேறானவை . ஆனால் வாழ பிழைப்பு தேடி ஓடுவது ஒன்றே இணைப்புச் சங்கிலி . கடைசிவரை அந்த வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை . சந்தால் பழங்குடி செங்காவின் தந்தை கிஷ்கு கோரா, தாய் செர்மா, தங்கை சித்ரமுகா, பாட்டி பாதல் முர்மு, சித்ரமுகாவின் காதலன் உயர்சாதியான கன்யாட் சமூகத்தைச் சார்ந்த ரித்விக், கன்யாட், பட்நாயக் போன்ற ஆதிக்க சமூக ஒடுக்குமுறைகள் எனக் கதை சுழலும் . செங்காவி நண்பன் இஸ்மாயில், ஸ்பின்னிங் மில்லில் உடன் வேலை செய்யும் மஞ்சு, செங்கா மஞ்சு இடையே அரும்பும் காதல், சிஐடியு சங்கம் தோழர் செல்வராஜ், அவரோடு செங்காவின் தொடர்பு, விரியும் புதிய பார்வை என கதை வளர்கிறது . செல்லா நோட்டு, ஜல்லிக்கட்டு போராட்டம், கொரோனா கொடும் தாக்குதல், சொந்த ஊரை நோக்கி நெடிய கொடிய நடை பயணம் என சமூக அரசியலும் வலுவாக வினையாற்ற கதை மேலும் விரிகிறது. இஸ்மாயில், செங்கா, மஞ்சு இடையே சாதி, மதம், இனம் அனைத்தையும் தாண்டிய அன்பும் அரவணைப்பும்; கொரோனா இடப்பெயர்வும் யதார்த்த இந்தியாவைச் சித்தரிக்கிறது. நாவல் முடிவதற்குள் ஒரு வன்புணர்வுக் கொலை, ஒரு ஆவேசக் கொலை, நான்கு கொரோனா சாவுகள், ஒருவர் சிறைக் கொட்டடியில், ஒருவர் மனநிலை பிறழ்ந்து அலைய, காதலி மஞ்சுவை பிணமாக மடியில் சுமந்தபடி பயணம் தொடருமா எனும் கேள்விக்குறியோடு செங்கா என திரைப்படக் காட்சிபோல் அடுத்தடுத்து நகரும் சோகக்காட்சிகள் . இடப்பெயர்வின் வலியும், மனிதம் கசியும் வாழ்வும் பாடுபொருளாகி புதிய மானுடப் பார்வையை விதைக்க முனைகிறது. உழைக்கும் பாட்டாளிக்கு சாதி இல்லை, மதம் இல்லை, நாடு இல்லை என ஓங்கிச் சொல்கிறது இந்நாவல் எனில் மிகை அல்ல . “சக்தி சூர்யாவின் நடை மென்மையும் இனிமையும் வாய்ந்த தென்றல் போன்ற அழகியலையும், புயலைப் போன்ற வேகத்தையும், கொடும் பாலையைப் போன்ற துயரத்தை விவரிக்கும் ஆழத்தையும் கொண்டிருப்பது தனிச் சிறப்பானது.”என சிறந்த எழுத்தாளர் இரா.முருகவேலே பாராட்டியபின் நான் சொல்ல என்ன இருக்கிறது ? அதுபோல் சிறந்த எழுத்தாளர் கமலாலயன் சொல்கிறார், “கடைசி ஐம்பது பக்கங்களைப் படிக்கும் போது எழுந்த உணர்வுகளின் அழுத்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை .” ஆம். நாவலை படிக்கும் ஒவ்வொருவரும் இதை உணர்வீர்கள் . ‘நரவேட்டை’நாவலின் களமும் காட்சிகளும் உயிர்த்துடிப்பான நிகழ்வுகளின் வழி நகர்வதே அதன் வெற்றிக்கு அடித்தளம் . ஆனால், ‘ சந்தாலி’ நாவல் சமூக அறிவின் வழி நெய்யப்பட்ட புனைவு . ஆகவே அதற்குரிய பலம் பலவீனம் இரண்டும் உள்ளடக்கியது . புலம்பெயர் தொழிலாளர்களை எப்படிப் பார்க்கப் பழக வேண்டும் என்பதற்கு இந்நாவலைப் படியுங்கள் .! சந்தாலி (நாவல்), சக்தி சூர்யா, பாரதி புத்தகாலயம், thamizhbooks.com - 8778073949, பக்கங்கள் : 304, விலை :ரூ.310 /
அழகு தமிழில், எளிய நடையில் மொழியாக்கம்
தோழர் அறம் என்று எல்லோரும் அன்புடன் அழைக்கப்பட்ட அறம் வளர்த்த நாதன் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் நீண்ட நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர். ஆங்கிலத்தில் மார்க்சியச் சிந்தனைகளைத் தாங்கிவரும் சிறந்த கட்டுரைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து தீக்கதிர் இதழுக்கு கொடுப்பதைத் தன்னுடைய கடமையாகக் கருதியவர். அவரது 23 கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து நூல் வடிவில் தோழர் ஆர்.எஸ்.மணி கொண்டு வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. நூலில் ’முதல் பாகம்’ என்று குறிப்பிட்டிருப்பது அடுத்த பாகம் விரைவில் வரவிருப்பதை உணர்த்துகிறது. மொழிபெயர்ப்பு சிரமமான கலை. இரு மொழிகளிலும் வல்லமை கொண்டிருக்க வேண்டும். அறம் அவர்களின் கட்டுரைத் தொகுப்பே இதற்குச் சாட்சியாகும். ஆங்கிலம் அறியாத பொதுவுடமை இயக்கத் தோழர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை அழகு தமிழில், எளிய நடையில் மொழியாக்கம் செய்து தந்துள்ளார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஃபிரண்ட் லைன், தி இந்து போன்ற ஆங்கில ஏடுகளில் வெளி கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் உள்ள 23 கட்டுரைகளில் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கட்டுரைகள் ஒன்பதும், தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கட்டுரைகள் ஆறும், அஸ்கர் அலி எஞ்சினியர் கட்டுரைகள் மூன்றும், ஏ.ஜி.நூரானி கட்டுரைகள் இரண்டும், தாமஸ் ஆப்ரஹாம், ஜான் செரியன், மிருதுள்டே ஆகியோரின் கட்டுரைகள் தலா ஒன்றும் இடம்பெற்றுள்ளன. ‘ஒரு புதிய நாகரிகத்தை நோக்கி’ என்ற தொகுப்பின் முதல் கட்டுரையின் தலைப்பே கவித்துவமாக அமைந்துள்ளது. தோழர் இஎம்எஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடைபெறும் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனங்களின் தேவை பற்றி இரண்டு கட்டுரைகளில் விளக்குகிறார். தோழர் சுர்ஜித் காஷ்மீர் குறித்து 1995 பிப்ரவரியில் எழுதிய இரண்டு கட்டுரைகள் இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. தோழர் சுர்ஜித், கட்சியின் பதினைந்தாம் மாநாட்டின் பெருமைகளை மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்திட மக்கள் ஜனநாயக முன்னணி தேவை என்பதை இரண்டு கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார். அஸ்கர் அலி எஞ்சினியர் தனது கட்டுரையில் இந்தியாவில் நடக்கும் மதக் கலவரங்கள் பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் நடத்தி அதற்கான காரணங்களைப் பட்டியல் இடுகிறார். 1989ஆம் ஆண்டு பீஹார் மாநிலத்தின் பகல்பூர் நகரில் நடந்த மதக் கலவரத்தின் பின்னணியையும், கொடூர விளைவுகளையும் அஸ்கர் அலி எஞ்சினியர் இரண்டு கட்டுரைகளில் விளக்கியுள்ளார். மதவெறியர்களின் குணத்தை ஏ.ஜி.நூரானி தனது கட்டுரையில் புலியின் குணத்துக்கு ஒப்பிடுகிறார். புலிகளைப் போலவே மதவெறியர்களும் இரத்தவெறி பிடித்து அலைகிறார்கள் என்கிறார். உலகை உலுக்கிய சோவியத் புரட்சிக்குப் பின்னர் நடந்த மகத்தான சாதனை இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரை தோற்கடித்ததாகும். இதனைச் சாதித்த ஸ்டாலின், அன்றைய ராணுவத் தளபதி ஜுகாவ் இருவரும் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்கள் என்கிறார் மிருதுள்டே தன்னுடைய கட்டுரையில். தொகுப்பில் இருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் சிறப்பானவையே. இந்த நூல் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டியதாகும். நூலினை திண்டுக்கல், வாமடை வெளியீடு பிழைகள் ஏதுமின்றி பாங்குடன் கொணர்ந்துள்ளது பாராட்டுதலுக்குரியது.