இரட்டிப்பது இருக்கட்டும்! சட்டப்பூர்வம் ஆக்கட்டும்!
2014ஆம் ஆண்டு தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று வேன் என்று நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின், அந்த பரிந்துரைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. என்னவென்றும் கேட்கவில்லை. விவசாய விளைபொருள்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை களில் முக்கியமானது. கட்டுபடியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கடன் நெருக்கடி யில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை தொடர்ந்தது. ஆனாலும் ஐந்தாண்டு ஆட்சியில் மோடி, குறைந்தபட்ச ஆதார விலை (msp) தருவதற்கு எதுவும் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் இரண்டாம் முறையாக பதவியேற்ற பிறகும் எதுவும் செய்யவில்லை. அத்துடன் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒழித்துக் கட்டும் நோக்கில் 3 விவசாயிகள் விரோத சட்டங்களைக் கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி மின்சார திருத்தச் சட்டம் எனும் சட்டத்தையும் கொண்டு வந்ததால் விவசாயிகள் வெகுண்டெழுந்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணி (skm) தலைநகர் தில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. இந்தப் போராட்டம் உலகமே கண்டிராத வகையில் ஓராண்டுக்கு மேலாக நடந்தது. இதனால் வேறு வழியின்றி அந்தச் சட்டங்களை திரும்பப் பெற்றார். ஆனால் அதற்கு முன்னதாக அந்தச் சட்டங்களில் கமா(,), புள்ளி (.) யைக் கூட மாற்ற முடியாது என்றும் ஆணவமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்காக விவசாயிகள் கொடுத்த விலை தான் 700க்கும் மேற்பட்ட உயிர்கள்.
2 மடங்கைவிட அதிகமாம்
2020-2021 விவசாயிகள் போராட்டம் முடி வுக்கு வர விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி கள் எதையும் நிறைவேற்றவில்லை மோடி அரசு. ஆனால் 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று ஜம்ப மடித்தார். இதை நினைவுபடுத்தி நாடாளு மன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌ ஹான், “ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை காரண மாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளது என்பதை என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்” என்று கூறியிருக்கிறார். இந்த பதிலை எம்.பி.க்கள் நம்புவார்களோ, மாட்டார்களோ என்ற ஐயம் அவருக்கே ஏற்பட்டுள்ளது போலும். அதனால் தான், உறுதி யாகக் கூற முடியும் என்று சொல்லாமல், நம்பிக்கையுடன் கூற முடியும் என்றிருக்கிறார். இதிலும் எண்ணிக்கை எதுவும் இல்லை. பல்வேறு விவசாயிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி யிருக்கிறார். எத்தனை பேர் என்பதை அவரால் சொல்ல இயலாததால் தான் அந்தச் சொல்லைக் குறிப்பிட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் கூறும் பதில்கள் உண்மை யாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ, குத்துமதிப்பாக, மழுப்ப லாக, சமாளிப்பாகவே பதில்களைக் கூறுகிறார்கள் என்பதே இவர்களது செயல்பாடுகள் சொல்லும் தரமானதாக இல்லை என்பதை புலப்படுத்தும். இந்தியா ஒரு விவசாய நாடு. மொத்த மக்கள் தொகையில் 54.6 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதைய மக்கள் தொகை 140 கோடி என்றா லும் முறையாக கணக்கெடுப்பு இல்லையே. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 121 கோடி பேர். இதில் 66கோடியே 6 லட்சத்து 66 ஆயிரம் பேர் விவசாயம் சார்ந்தோர். இதில் அந்த “பல்வேறு விவசாயிகள்” என்றால் அது எத்தனை சதவீதம்?
22 சதவீத விவசாயிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்...
2 ஹெக்டேருக்கும் (சுமார் 5 ஏக்கர்) குறை வான நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயி கள். இவர்கள் 78 சதவீதம் பேர். இவர்களிடம் இருக்கும் நிலம் 33 சதவீதம் தான். ஆனால் இவர்களின் உணவு தானிய உற்பத்தியோ 41சத வீதம் ஆகும். இவர்களது உற்பத்தித் திறன் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான பண்ணைகளை விட சற்று அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால் இவர் களில் 22 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்கிறது 2022 ஆம் ஆண்டின் உலக வங்கியின் மதிப்பீடு. சரி. அப்படியென்றால் மீதம் உள்ளவர்கள் எல்லாம் வசதியான, பணக்கார விவசாயிகளா? அவர்களுக்குத் தான் வருமானம் இரட்டிப்புக்கு மேலாக ஆகி இருக்கிறதா? அதுதான் இல்லை. அரசு ஆவணங்களில் தேடித் தேடிப் பார்த்தா லும் எதுவும் கிடைப்பதில்லை. ஒரே ஒரு தகவல் கிடைத்தது. அது ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் 11.3.2025இல் வெளியிட்ட செய்திக் குறிப்பு. அதுவும் இந்திய வேளாண் ஆய்வுக் கவுன்சில் (ICAR) வெளியிட்ட புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் வெற்றிக் கதைகள் பற்றியது. அதில் 75 ஆயிரம் விவசாயிகள் 2 மடங்குக்கு மேல் வருமானம் ஈட்டியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதைக் கூட ஒன்றிய வேளாண் அமைச்சரால் நாடாளுமன்றத்தில் கூற முடியவில்லை. அவர்களுக்கு நாடாளுமன்றம் ஒரு பொருட்டல்ல. ஆனால் அது ஜனநாயகத்தின் கோவில் என்று கதையளப்பார்கள். நபார்டு வங்கி 30 மாநிலங்களில் உள்ள 710 மாவட்டங்களில் 1 லட்சம் விவசாயக் குடும்பங் களை உள்ளடக்கிய கணக்கெடுப்பை நடத்திய தாகவும் அதில் விவசாயக் குடும்பங்களின் வரு மானம் கிட்டத்தட்ட 57சதவீதம் அதிகரித்துள்ள தாகவும் ஓர் அறிக்கை கூறுகிறது. இது 10.12.2024 தகவல். அந்த அதிகரிப்பு, 2016-17ஆம் ஆண்டில் 8,059 ரூபாயாக இருந்த மாத வரு மானம் 2021-22 ஆம் ஆண்டில் 12,698 ஆக 5 ஆண்டு காலத்தில் மாறியது என்றும் கூறுகிறது. இதிலும் எத்தனை குடும்பங்களில் இந்த அதிகரிப்பு என்று விவரம் கிடையாது. அறிக்கை குறிப்பிடும் கணக்கெடுப்பு நடத்திய லட்சம் குடும் பங்களும் என்றாலும் கூட மொத்த விவசாயக் குடும்பங்களில் இது எத்தனை சதவீதம்?
2 ஆயிரத்துக்கு மேல் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் வெளியேற்றம்
இந்திய விவசாயத்தின் உண்மை நிலைமை என்ன? 1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பு - முதல் 20 ஆண்டுகளில் மட்டும், இந்திய விவசாயி களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.5 கோடி குறைந்துள்ளது. அதாவது சராசரியாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட முழு நேர விவசாயிகள் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும்/நாள் ஒன்றுக்கு /விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்கிறது 25.12.2024இல் வெளியான ஆய்வு தகவல். முதல் 20 ஆண்டுகளில் இந்த நிலை என்றால், பிந்தைய 15 ஆண்டுகளில் -குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த 2014 - முதல் இப்போது வரை என்னவாக இருக்கும்? இந்த வெளியேறும் வேகம் அதிகரித்தபடி தானே இருக்கும்? இன்னொரு தகவல் பார்ப்போம். 2001 - 2011 வரை மொத்தம் 85 லட்சம் விவசாயிகள் விவ சாயத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 1.30 லட்சம் பேர். இந்த பஞ்சாப் மாநிலம் தான் பணக்கார விவ சாயிகள் அதிகம் உள்ள மாநிலம் என்று கூறப்படு கிறது. அதிக மாத வருமானம் உள்ள பஞ்சாப் (ரூ.26,701) முதலிடத்திலும் ஹரியானா இரண்டா மிடத்திலும் (ரூ.22,841), கேரளா 3ஆம் இடத்தி லும் (ரூ.17,915) உள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம். மிகக் குறைந்த வருமானம் உள்ள மாநிலங்கள் ஜார்க்கண்ட் (ரூ.4,895), ஒடிசா (ரூ.5112), மேற்கு வங்கம் (ரூ.6,762).
இந்திய பணக்கார விவசாயி குஜராத் பெண்மணி
இது ஒரு புறம் எனில், ஐசிஇ(ICE) 360 டிகிரி எனும் ஒரு கணக்கெடுப்பு, பணக்கார விவசாயி கள் என வகைப்படுத்தப்பட்ட சுமார் 50 லட்சம் வசதி யான குடும்பங்கள் உள்ளன எனக் கூறுகிறது. அந்த குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.25 லட்சத்துக்கு மேல் என்றும் அதில் மூன்றில் 2 பங்கு விவசாயம் மூலமும் மீதி பண்ணை யல்லாத வகையிலான வரவு என்றும் கூறுகிறது. இந்த மாதிரியான பெரும்பண்ணை விவசாயி களில் அமிதாப்பச்சன் போன்றோரும் உண்டு. மோடி ஆட்சியில் கார்ப்பரேட் கனவான்கள் விவசாயத்தில் புகுந்திட ஏராளமான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயம் என்ற பெயரில் அவர்களுக்கே அரசின் பெரும்பாலான நிதி வசதிகள் கிடைக்கின்றன.பண்ணை விவ சாயம், குளிர்பதனக் கிடங்கு அமைப்பு, சந்தைப் படுத்துதல் என்று நிலமும் நிதியும் அவர்களை நோக்கியே பாய்கிறது மோடி ஆட்சியில். இது கார்ப்பரேட் ஆதரவு வலதுசாரி காவி இந்துத்துவா கூட்டின் விளைவு ஆகும். இந்தியாவிலேயே பெரும் பணக்கார விவ சாயி ஒரு பெண் என்பதும் அவர் குஜராத் மாநி லத்தைச் சேர்ந்த நிதுபென்படேல் என்பதும் குறிப் பிடத்தக்கது. அவர் 2024ஆம் ஆண்டுக்கான மில்லியனர் விவசாயி ஆப் இந்தியா (MFOI)விருது பெற்றுள்ளார். இவர் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மோடி ஆட்சிக்கு முன் 100 பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் இருந்த னர். தற்போது 200பெரும் பணக்காரர்கள் உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் (108) குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவ னத்தில் கொள்ள வேண்டியதாகும். இந்தியா வளர்ந்திருக்கிறது தானே! இந்தியா வளர்ந்திருக் கிறது; ஆனால் ஏழை - பணக்காரர் இடைவெளி மிக மிக அதிகமாகி இருக்கிறது. மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் போல். மேடேற முடியாத விவசாயிகள் இதே நிலை விவசாயிகள் மத்தியிலும் பிரதி பலிக்கத் தானே செய்யும். விவசாயம் நஷ்டமான தொழிலாகவே இருக்கிறது. அந்தப் பள்ளத்தி லிருந்து விவசாயிகள் மேலேற முடியாமல் தவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அமைச்சர் சிவராஜ்சிங் சௌஹான் கூறுவது போல் இவர்களால் ஏன் அந்த ‘பல்வேறு விவ சாயிகள்’ பட்டியலில் சேர முடியவில்லை. விவ சாயத்தை ஏன் லாபகரமாக்க முடியவில்லை? பெரும்பாலான விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுகள் வருமானத்தைவிட வேகமாக அதி கரிக்கின்றன. விவசாய உள்ளீடுகளின் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவு குறித்து தல்வாய் குழு கவலை தெரிவித்துள்ளது. மேலும் நவீன விவ சாய நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான குறைந்த விகிதம் உற்பத்திச் செயல்முறையை மிகவும் திறமையற்றதாக ஆக்கியுள்ளது. உதாரணமாக பண்ணை இயந்திரமயமாக்கல் விகிதம் சுமார் 25 சதவீதம் மட்டுமே என்கிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நியாயமான விலையில் விற்க முடியாமல் தவிக் கின்றனர். இதனால் தங்கள் பொருள்களுக்கு குறைந்த விலையைப் பெறுவதால் அவர்களின் லாபம் குறைகிறது என்றும் கூறுகிறது.
விலை நிர்ணயத்தின் அவசியம்
இந்த இடத்தில் தான் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை அமல் முக்கியமானதாகிறது. உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்யப் படுதல் அவசியமாகிறது. இதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது தான் இந்திய விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. தில்லி முற்றுகைப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கை. ஆனால் அதைச் செய்வதற்கு மோடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஏற்கெனவே இருக்கிற கொள்முதல் நிலையங்கள்,ஒழுங்கு முறை விற்ப னைக் கூடங்களையும் மூடிவிட்டு - விவசா யிகளே, நேரடியாக சந்தைப்படுத்தும் ஆன்லைன் விற்பனையில் ஈடுபட வேண்டும் எனச் சொல்கிறது. அதற்கு விவசாயிகள் விரும்பும் விலைக்கே விற்கலாம் என்றும் காரணம் கூறு கிறது. உண்மையில் அரசு விலையை நிர்ணயம் செய்யாத நிலையில், ஒரு விவசாயியால் - இந்த விலைக்குத் தான் வாங்க வேண்டும் என்று கூறிக் கொண்டு எத்தனை நாள் காத்திருக்க முடியும்? இது தான் சந்தைப்படுத்துதல் என்று மோடி அரசு முகாரிபாடுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு கைலாகு கொடுக்கிறது. பணக்கார விவசாயிகள் தாக்குப்பிடிக்கலாம். பொருள்களை சேமிப்புக் கூடங்களில் வைத்துக் காத்திருக்கலாம். ஆனால் சின்னஞ்சிறு விவசாயி கள் என்ன செய்வார்கள்? 5 ஏக்கருக்கும் குறை வாக வைத்திருக்கும் விவசாயிகளே 78 சதவீதம் பேர் என்கிற போது அவர்கள் ஏற்கெனவே கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு நொந்துபோய் இருக்கும் நிலையில் தான் தங்கள் உயிரை வெறுத்து தவறான முடிவுகளுக்குச் செல்கிறார்கள்.
அவர்களின் நெஞ்சில் நிறைந்திருப்பது
ஆனால் விவசாயிகள் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கும் கூடுதலாக 50 சதவீத லாபத்தை வைத்து தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அமைச்சர் சௌஹான் நாடாளுமன்றத்தில் நாநடுங்காமல் கூறுகிறார். அதாவது சுவாமி நாதனின் பரிந்துரையை நிறைவேற்றி யிருப்பதாகவும் கதைக்கிறார். அப்படி எனில் அதனைச் சட்டப்பூர்வமாக ஆக்குவதில் ஏன் பாஜக அரசு தயங்குகிறது. இவர்களின் மனதில் சாதாரண ஏழை எளிய விவசாயிகளுக்குத்தான் இடம் இல்லையே! அவர்களது நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருப்பதெல்லாம் கார்ப்பரேட் கனவான்கள் தானே! அவர்களது பாணியில் சொன்னால், அனுமனைப் போல நெஞ்சத்தைத் திறந்து காட்டச் சொன்னால் அதில் இடம் பெற்றிருப்பது அம்பானி, அதானி வகையறாக்கள் தானே! அவர்களின் 16 லட்சம் கோடிகள் கடனை தள்ளுபடி செய்வார்கள். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மாட்டார்களே!
அப்படி விவசாயிகளின் கடன்தான் எத்தனை கோடி?
13.58 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ.14,354 கோடி கடன் பெற்றுள்ள னர். 4.41 லட்சம் பேர் பிராந்திய கிராமப்புற வங்கி களில் ரூ.10,615 கோடி கடன் பெற்றுள்ளனர். மொத்தத்தில் விவசாயிகள் 40.22 லட்சம் பேர் பெற்ற ரூ.96,855 கோடி கடன் நிலுவையில் உள்ளது. வெறும் 40,50 பெரு முதலாளிகள் கடனை விட 40 லட்சம் விவசாயிகளின் கடன் தொகை குறைவு தானே. இதை தள்ளுபடி செய்தால் இந்த விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்களே! இதனால் இந்திய விவசாயமும் பாதுகாக்கப்படுமே!
அர்த்தமுடையதாகுமா - நூற்றாண்டு விழா
வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு துவங்குகிறது. அதில் பிரதமர் மோடி, வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். அந்த நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதன் தபால் தலை, ரூ.1000 நாணயம் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார் என்றும் உணவு மற்றும் அமைதிக்கான சர்வதேச விருதையும் வழங்குகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சமயத்திலாவது விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை சட்டப்பூர்வமாக்கும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டால் அந்த விழா அர்த்தமுடையதாக அமையும். இல்லாவிடில் விவசாயிகளின் நலனுக்கான பரிந்துரைகளை நல்கிய எம்.எஸ்.சுவாமிநாதனை புகழ்வது பொருளற்றதாகி விடும். பரிந்துரைத்தவரைப் புகழ்ந்துரைப்பதும் பரிந்துரைகளை புதைப்பது மாகிவிடும். மோடியின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் ஆகஸ்ட் 7 இல் விவசாயி களுக்கு நல்ல காலம் பிறக்குமா?