கியூபாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ 1959ல் கியூபாவில் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோபாடிஸ்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். பிடல்காஸ்ட்ரோ 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலளராக 1965ல் பதவியேற்ற இவர் 49ஆண்டுகள் கியூபாவை ஆண்டார். பிறகு பிப்-8 ,2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்திலேயே நீண்டகாலம் தலைமை பொறுப்பில் இருந்ததலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில் காஸ்ட்ரோ 1979ல் இருந்து 1983 மற்றும் 2006முதல் 2008 வரை அணிசேரா இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்துள்ளார்.
காஸ்ட்ரோ மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றார். லெனின் கொள்கைகளை உள்வாங்கினார். மார்க்சிய - லெனினியவாதியாக பரிணமித்தார். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவை மிரளவைத்தார். எத்தனையோ கொலை முயற்சிகளில் உயிர் தப்பினார். புரட்சியின் போது காஸ்ட்ரோ , சேகுவேரா, ரால் காஸ்ட்ரோமூவரும் பதுங்குக் குழியில் பதுங்கியிருந்தனர்.
காஸ்ட்ரோவின் வலது கையில் துப்பாக்கி இருந்தது, இடதுகையில் கம்யூனிஸ்ட் அறிக்கை இருந்தது,அதைப்படித்துக் கொண்டிருந்தார். ஒரு நண்பர் கேட்டார், தோழரே ஆகாயத்தில் அணுகுண்டுகளுடன் விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. ஒரு குண்டை எறிந்தால் நாம் அனைவரும் கருகி சாம்பலாகிவிடுவோம், இப்போது கம்யூனிஸ்ட் அறிக்கை படிப்பதால் என்ன பயன் என்று கேட்டார். காஸ்ட்ரோ சிரித்தவாறே பதில்சொன்னார், நான் நினைத்தால் 10பேரை இந்த ரிவால் வாரைக் கொண்டு சுட்டுக் கொன்று விடுவேன், ஆனால் இந்த தத்துவத்தை கியூபா மக்கள் அனைவரும் படித்தால், அதை உணர்ந்தால் அமெரிக்கா அல்ல, எந்த நாட்டாலும் நம்மை வெல்ல முடியாது. மேலும் புரட்சி என்பது ரோஜாக்கள்நிறைந்த படுக்கை அல்ல என்றார்.
எனவே ஒவ்வொரு புரட்சியாளனும் புரட்சியை நடத்தவேண்டும் என்றால் புரட்சிகரமான நூல்களை படிக்கவேண்டும். இப் புவிக்கோளத்தின் மக்களை பாதுகாக்கவேண்டும். ஒரு உண்மையான சமூக மாற்றத்தை நாம் மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும். சோஷலிஸத்தை நோக்கி உடனடியாகப் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் நாமே நம் மக்களை அழித்தவர்களாவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நமது பூமி அச்சத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் உலகத்தை சோஷலிஸத்தை நோக்கி கொண்டு செல்லப் போகிறோமா அல்லது காட்டுமிராண்டித்தனத்தின் கைகளில்சிக்க விடப்போகிறோமா? இதுதான் நம் முன்னால் உள்ள கேள்வி? காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்.
பிடல்காஸ்ட்ரோ பேசும் போது ஒன்றைக் கூறுவார், நாளை என்பது மிகவும் தாமதமானது, என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போதே செய்வோம். தவறினால் நமது பூவுலகம் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்படும். சமூகங்கள் பிரித்தாளப்படும். பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனி வெளியேற்றும் கரியமில வாயுக்கழிவுகளால் பூமிநாளுக்கு நாள் சூடேறும். துருவப்பகுதியிலுள்ள பனி மலைகள் உருகி நீராகும், கடல் மட்டம் உயரும். சூறாவளிகளும் புயல்களும் ஏற்படும்.போராட்டப் பாதையே நமது பாதை. பெருமளவிலானமக்களைத் திரட்டிப் போராட வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகளாவிய போராட்டத்தை நடத்த வேண்டும். எந்த ஓய்வும் வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் நமது போராட்டம் கனன்று கொண்டே இருக்க வேண்டும். என்றுதான் அவர் கூறுவார்.
மேலும் ஒரு நேர்காணலில் அவர் கூறும்போது, நான் நம்பிக்கையோடு ஒரு ஒளியை காண்கிறேன். புதிதுபுதிதாக மக்கள் இயக்கங்கள் பேரலைகளாக எழுந்துவரும் என உறுதியாக நம்புகிறேன். உலகம் முழுவதும்மக்கள் போராட்டங்கள் பேரலைகளாக எழுந்தன.அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னேறுவோம், தொடர்ந்து முன்னேறுவோம். தற்காப்பு என்று பேசினால் மட்டும் போதாது. தற்காப்பு என்பதுதுணிந்து தாக்குவதுதான். மக்கள் இயக்கங்களை திரட்டுவோம் அவற்றை ஒருங்கிணைப்போம். ஒவ்வொரு தெருமுனையிலும் நின்று கொண்டு கர்ஜனை செய்யுங்கள். வீதிகளில் ஊர்வலம் செல்லுங்கள். சுவர்களில் எல்லாம் எழுதுங்கள். ஏகாதிபத்தியத்தால் ஆபத்து என்று திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். உரத்து முழக்கம் எழுப்புங்கள். வெற்றியை நோக்கி நடை போடுங்கள். வெற்றி நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதை வரவேற்று நாம் முன்னேறுவோம். தோழர் பிடல்காஸ்ட்ரோ ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஒருமுறை அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் செயலால் அவருக்கு வெளிநாட்டு அதிகாரிகள், தூதர்கள் தங்கும் ஹோட்டலில் இடம் கிடைக்காமல் போனது. இந்நிலையில் பாலியல் தொழில் குடிலுக்கு பெயர் போன ஒரு மலிவான ஹோட்டலில் தங்கினார். மறுநாள் அமெரிக்க பத்திரிகைகள் காஸ்ட்ரோ தங்கியிருக்கும் ஹோட்டலை பாருங்கள் என்று அவதூறு செய்து செய்தி வெளியிட்டு இருந்தன. அடுத்தநாளே காஸ்ட்ரோ செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்த சந்திப்பில்காஸ்ட்ரோ செய்தியாளர்களை பார்த்து சொன்னார்.இந்த ஹோட்டலில் தங்குவதே இவ்வளவு அவமானகரமானது என்றால் இப்படி ஒரு தொழிலை அனுமதித்து இத்தகைய தொழிலில் ஈடுபடும் நிலையில் தன் மக்களைவைத்திருப்பது எவ்வளவு பெரிய கேவலம்? எனது விருந்தாளியாக கியூபாவுக்கு வந்து பாருங்கள். இதுபோன்ற தொழிலை 100 சதவீதம் இல்லாமல்செய்துள்ளோம் என்றார்.இதிலிருந்து என்னதெரிகிறது என்றால், சாதி மத இன நிற பொருளாதார ஆதிக்கங்களை நிலைநாட்ட விரும்பும் எந்த மேலாதிக்க தேசமானாலும் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இத்தகைய இழிசெயல்களில் இருந்து மாறாது என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
====ஐ.வி.நாகராஜன்===