ஓய்வூதிய மறுசீராய்வு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்! பிஎஸ்என்எல் ஓய்வூதியர் மாநாடு வலியுறுத்தல்
கோயம்புத்தூர், டிச. 19 - ஓய்வூதியச் சட்டங்கள் மறுசீராய்வு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு வலியுறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய ஐந்தாவது மாநாடு. இரண்டு நாட்கள் கோவையில் நடைபெற்றது. பேரூர் மாதம்பட்டி சாலையில், எஸ்.சி. பட்டாச்சாரியா ஜி.ஜி. பட்டீல் நினைவரங்கில் (லோட்டஸ் மஹால்) நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு, அகில இந்திய தலைவர் எம்.ஆர். தாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.ஜி.ஜெயராஜ் வேலை அறிக்கையும் பொருளாளர் எம்.ஜி.எஸ் குரூப் நிதி அறிக்கையும் முன்வைத்தனர். இதில், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதி யதாரர்களுக்கு 1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேம்பட்ட மருத்துவச் சலுகைகள் வழங்க வேண்டும். மகாராஷ்டிரா மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதியச் சட்டங்கள் மறுசீராய்வு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில், அகில இந்திய தலைவராக எம்.ஆர்.தாஸ், பொதுச் செயலாளராக ஆர். முரளிதரன் நாயர், பொருளாளராக எம்.ஜி.எஸ். குரூப் மற்றும் துணைத் தலை வர்கள் துணைச் செயலாளர்கள் என 25 பேர் கொண்ட நிர்வாக குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகக்குழு ஆலோசகர்களாக வி.ஏ.என். நம்பூதிரி, கே.டி. பட்டாச்சாரியா, கே.ஜி. ஜெயராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து ஏ. குடியரசு (கோவை) அகில இந்திய துணைச் செயலாளராகவும், எஸ். மோகன் தாஸ் (தூத்துக்குடி) அகில இந்திய துணைத் தலைவராகவும், அகில இந்திய அமைப்பு செயலாளர்களாக என். குப்புசாமி (ஈரோடு), பெர்லின் கனகராஜ் (சென்னை) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
