articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் : சங்கமும் கட்சியும் இரண்டு கண்களாக தோழர் டி.என்.நம்பிராஜன்....

தமிழகத்தில் தொழிற்சங்க அரங்கில்களப்பணியாற்றிய பல அருமையான தோழர்களில் ஒருவர் டி.என். நம்பிராஜன். 1945ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை மின்வாரியத்தில் பணியாற்றியவர். ஓரளவுக்கு வசதியான குடும்பம்.

பள்ளிப்படிப்பை முடித்து நெல்லை இந்து கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முடித்தார். தந்தைக்கு பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நட்பு இருந்தது. அவர் இத்தகைய தலைவர்களைச் சந்திக்கச் செல்கிறபோதெல்லாம் இவரும் சென்று அவர்களைப் பார்த்திருக்கிறார். அக்காலத்தில் நெல்லையில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறார். கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு பரிசும் பெற்றவர். அத்திறனைப் பொது நோக்கத்திற்குப் பயன்படுத்தும் எண்ணத்தோடு வளர்ந்தார். 

1962ம் ஆண்டு விக்கிரமசிங்கபுரம் நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தோழர் ப. ஜீவானந்தம் உரையாற்றியதைக் கேட்ட நம்பிராஜனுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக மாறிய நம்பிராஜன், 1962ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அம்பாசமுத்திரம் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக தோழர் ஏ. நல்லசிவன் போட்டியிட்டதையும், அவருக்காகத் தோழர்களோடு இணைந்து  தேர்தல் பணியாற்றியதையும் இப்போதும் பெருமையாக கருதுகிறார். கட்சியின் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் எஸ். பாலவிநாயகம். அவரோடு இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தோழர்கள் நல்லசிவன், பாலவிநாயகம் இருவரும் தொடர்ந்து நம்பிராஜன் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகள் பற்றிக் கேட்டதற்கெல்லாம் விளக்கமளித்திருக்கிறார்கள். இப்படியான வளமான பின்னணியில் தோழர் நம்பிராஜன் 1966ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். 

பட்டப்படிப்பு முடிந்த பிறகு நெல்லையில் டி.வி.எஸ். நிறுவனத்தில் கணக்காளராக வேலையில் சேர்ந்தார். சில ஆண்டுகளில் அவர் நிறுவனத்தின் திருவனந்தபுரம் கிளைக்கு மாற்றப்பட்டார். அங்கே சென்றதுகட்சியோடு மேலும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. கட்சியின் வழிகாட்டலில் வங்கி அரங்கத்தில் செயல்பட்டார். வங்கி ஊழியர்களிடையே சங்கப் பணிகளையும் கட்சிப் பணிகளையும் மேற்கொண்டார். அப்போது பொருளாதார வல்லுநர் மேத்யூ குரியன் மற்றும் இதர பல கட்சித்தோழர்களோடு தொடர்பு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் இயங்கி வந்த சமூக விஞ்ஞான கழகத்திலும் இணைந்து செயல்பட்டார். வங்கி ஊழியர் சங்க மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டார். அவ்வப்போது சிஐடியு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். 

1973ம் ஆண்டு எர்ணாகுளத்தில் சிஐடியுஇரண்டாவது  அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் நம்பிராஜன் பங்கேற்றார். முழுமையாக தொழிலாளர் இயக்கப் பணிகளில் ஈடுபடும் மனநிலை வளர்ந்து வந்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டிருந்த மின்சாரத் தொழிலாளர்களின் தலைவரான தோழர் இ. பாலானந்தன் கேட்டுக்கொண்டதை ஏற்று 1976ம் ஆண்டு டி.வி.எஸ். நிறுவன வேலையிலிருந்து விலகி,தில்லிக்குச் சென்று சிஐடியு அகில இந்திய மையத்தில் அலுவலகச் செயலாளராக பணியாற்றத் தொடங்கினார். அப்போது சிஐடியுஅகில இந்திய தலைவர் தோழர் பி.டி. ரணதிவே, பொதுச் செயலாளர் பி. ராமமூர்த்தி ஆகியோருடனும், எம்.கே. பாந்தே போன்ற தலைவர்களோடும் இணைந்து அகில இந்திய மையத்திலிருந்து செயல்பட்ட அனுபவங்களில் பெருமைகொள்கிறார் டி.என்.என். என்று அழைக்கப்படும் தோழர் நம்பிராஜன் அந்த நாட்களில் தோழர் இ.எம்.எஸ்.உள்ளிட்ட கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததைப் பூரிப்புடன் நினைவுகூர்கிறார். 

சென்னையில் வசித்து வந்த தோழர் நம்பிராஜனின் பெற்றோர் இருவரும் வயதுமுதிர்ச்சியால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. 1987ல் நம்பிராஜன் சென்னைக்குத்திரும்பினார். சென்னைக்கு வந்துவிட்டபோதும் சிஐடியு ஜெனரல் கவுன்சில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு தொடர்ந்து பங்கேற்று வந்தார். சென்னையில் தோழர் ஏ. நல்லசிவனைச் சந்தித்தார். கட்சியில் கலந்தாலோசிக்கப்பட்டு அவர் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தில் பணியாற்றக் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதில் 20 ஆண்டு காலம் முழுநேர ஊழியரா கப்  பணியாற்றிருக்கிறார். 1970களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது துறைமுக தொழிலாளர் சங்கம். தோழர் வி.பி.சிந்தன்தலைவராகவும், தோழர் வே. மீனாட்சிசுந்தரம் பொதுச்செயலாளராகவும், தோழர்ஹரிபட் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு சங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 

பல ஆண்டுகளுக்குப்  பிறகு, சங்கத்திற்கு வழிநடத்திட ஆங்கிலப் புலமையுள்ள ஒரு தோழர் வேண்டும் என்ற  கோரிக்கை வந்தது. அதற்குப் பொருத்தமானவராக இருந்த  நம்பிராஜன் முழுநேர ஊழியராகத் தொடக்கத்தில் பொதுச்செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். சிஐடியு-வோடு இணைக்கப்பட்ட இந்தச் சங்கம் துறைமுகத் தொழிலாளர்களின் ஒரு முன்னணி அமைப்பாகத் திகழ்வதற்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது என்றால் மிகையில்லை. தோழர் நம்பிராஜன் தனது கருத்துக்களாலும் செயல்களாலும் எவரையும் கவரக்கூடிய திறன் படைத்தவர். தொழிற்சங்கத்திற்கு எதிரான, இடதுசாரிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்போரையும் தனது வாதத் திறமையால்  தன் பக்கம்ஈர்த்துவிடும் வல்லமை பெற்றவர். இப்போதும் துறைமுக சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் தோழர் டிஎன்என் மீது அளப்பரிய மரியாதை கொண்டிருக்கிறார்கள்.1991 ஜூன் மாதம் சென்னை நகரத்தைக் கடுமையான புயல் மழை உலுக்கியெடுத்தது. அப்போது காசிமேடு பகுதியிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 60 வயது  துரைக்கண்ணு, 30 வயது பழனிக்கரசு என்ற இரண்டுமீனவர்கள் புயலின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு, கடலிலேயே சுமார் 35 நாட்கள் சிரமப்பட்டார்கள். பிறகு அவர்களுடைய படகு வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகப் பகுதியில் கரை ஒதுங்கியது. அவர்களைத் தீவிரவாதிகள் எனக் கருதி இருவரையும் வங்கதேச அரசு கைது செய்து காக்ஸ் பஜார் என்ற இடத்தில் சிறையில் அடைத்துவிட்டது.  113 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தனர். 

துரைக்கண்ணுவின் மருமகனான தோழர் ராஜசேகர் சங்கத்தின் ஒரு நிர்வாகியாகஇருந்தார். அவர் வாயிலாக இப்பிரச்சனையைத் தெரிந்துகொண்ட  நம்பிராஜன் விரைந்து செயல்பட்டார். வெளிநாட்டிலிருந்து எந்தத் தகவலும் பெற முடியாதிருந்த அன்றைய சூழலில் அந்தச் சிறையிலிருந்து யாரோ ஒருவர் மலையாளத்தில் எழுதிய கடிதம் ஒன்று 15 நாட்களாகச் சுற்றி ஒரு வழியாக செப்டம்பர் 9ம் தேதி குடும்பத்தின் கையில்கிடைத்தது. அது ஒன்றை ஆதாரமாகப் பற்றிக்கொண்ட நம்பிராஜன், தனக்கே உரித்தானவழிமுறையில் தனக்கிருந்த தில்லித் தொடர்புகள், தலைவர்கள், தோழர்கள், தொழிற்சங்கம், கட்சி சார்ந்த இயக்கத் தொடர்புகள் பலவற்றையும் பயன்படுத்தினார். நவம்பர் 5ம் தேதி அந்தக் குடும்பத்தாருடன் கல்கத்தாசென்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தில்லியில் சந்தித்து வங்கதேச அதிகாரிகளுடன் பேச வைத்தார். நவம்பர் 14 அன்று துரைக்கண்ணு, பழனிக்கரசு இருவரையும் வெற்றிகரமாக மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தார். இதற்கிடையில் பழனிக்கரசு இறந்துவிட்டதாக நினைத்துக் கண்ணீருடன் அவருக்கு இறுதி சடங்கையும் செய்து முடித்திருந்தகுடும்பத்தினர் அப்போது ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினர்.

தினத்தந்தி, தினமணி, மாலைமுரசு, தீக்கதிர், தினகரன், தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், நக்கீரன் உள்ளிட்ட அனைத்துப் பிரபலமான பத்திரிகைகளிலும் அன்றைய தலைப்புச் செய்தி இதுவே. மத்திய, மாநிலஅரசுகள், கடலோர காவற்படை, மீன்வளத்துறை போன்ற அரசு அதிகாரப்பூர்வ அமைப்புகளால் முடியாத பணியை, தனது திறமை, அத்துடன் இணைந்திருந்த இயக்க பலத்தின் பின்னணி, தொடர்புகள் இவற்றைப் பயன்படுத்தி, இரண்டு காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்து மீட்டுத் தங்களிடம் ஒப்படைத்த, தோழர் நம்பிராஜனையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், துறைமுக சிஐடியு சங்கத்தையும் இன்றளவும் அக்குடும்பத்தினர் நன்றிப்பெருக்குடன் நினைவு கூர்கின்றனர்.

சென்னையிலுள்ள பல தொழிற்சாலைகளில் ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற முறையில் பல சங்கங்கள் இருந்தன. அவற்றில் பல சங்கங்களுக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் நம்பிராஜன். அவ்வாறு ஒரு சங்கம் செயல்பட்ட விம்கோ நிறுவனத்தினை மூடிவிட அதன் நிர்வாகம் முயன்றது. பல வடிவங்களில் இயக்கமும்பேச்சுவார்த்தைகளும் நடத்தி நிர்வாகத்தின் முடிவைத் தடுத்து நிறுத்தி நிறுவனத்தையும், தொழிலாளர்களின் வேலையையும் பாதுகாத்த பெருமை தோழர் நம்பிராஜனுக்கு உண்டு. ஆனால், பின்னர் அந்தச் சங்கத்திற்கு வேறொருவர் தலைவராக வந்த பிறகு அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. தோழர் நம்பிராஜன் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் சங்கத்தின் தலைவராக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார்.  கார்போரண்டம்,எண்ணூர் பவுண்டரி, எம்எப்எல், என்ஃபீல்ட்போன்ற நிறுவனங்களில் உள்ள சங்கங்களின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். அந்த நிறுவனங்களில் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய பல சிறப்பான ஒப்பந்தங்களைப் போடச் செய்திருக்கிறார். ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற முறையில் தொழிலாளி வர்க்கத்தின் நலனை, தொழிலாளி வர்க்க அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் பல சாதக, பாதக அம்சங்கள்உள்ளன. இத்தகைய சங்கங்களின் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய கலையைப் பயின்றவர் தோழர் நம்பிராஜன். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினராகவும், மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டிருக்கிற நம்பிராஜன், சிஐடியு மாவட்டத் தலைவராகவும், மாநில நிர்வாகியாகவும் பணியாற்றியிருக்கிறார். 2005ம் ஆண்டு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உரிய சிகிச்சை பெற ஏற்பாடுசெய்ததை  நெகிழ்வோடு குறிப்பிடுகிறார்.தற்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு  டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டிய நிலையில் தொடர்ந்து கட்சி உறுப்பினராக  உள்ளார்.  தோழர் நம்பிராஜனின் சகோதரி சந்திரா,ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பணியிலிருந்த போது பெபி (BEFI) அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். அவருடைய மைத்துனர் ஹரிகரன் சிண்டிகேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் பெபி (BEFI) சங்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.கிராமத்தில் பிறந்து, பட்டப்படிப்பு முடித்து, பெரிய தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று, பின்னர் தொழிலாளர்களோடு இயங்குவதற்காக வேலையை உதறிவிட்டு, முழுநேர ஊழியராக பொறுப்பேற்றது சாதாரணமானதல்ல. சிஐடியு  அகில இந்திய மையத்திலும், சென்னை மாநகர தொழிற்சங்க அரங்கங்களிலும் செயல்பட்டு, கட்சிப்பணியில் அயராது ஈடுபட்டு அதுவே தனதுஇல்லறமென வாழ்கிற அவர், திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரச்சனைகளைக் கையிலெடுப்பதில் அசாத்தியமான முன்முயற்சி உள்ளவரான இவரது மற்றொரு அடையாளம் பரந்த புத்தக வாசிப்பாளர். வாழ்நாள் முழுவதும் சேகரித்த மதிப்பு மிக்க நூல்களையெல்லாம் எந்தவொரு தோழரும் படித்துப் பயன்பெற கட்சி நூலகத்திற்கு அளித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் தன்னுடைய சகோதரியின் அரவணைப்பில்  வசித்து வருகிறார். தொழிற்சங்க, கட்சி இயக்கங்களில் 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தோழர் டி.என்.நம்பிராஜன் ஒரு முன்னுதாரணமாக நிறைவேற்றி வந்துள்ள களப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.

===ஜி.ராமகிருஷ்ணன்===