செயற்கை நுண்ணறிவும் சோசலிசத்திற்கான தேவையும்!
சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகின் பெரும் பணக்காரர் களும் அதிகார வர்க்கத்தினரும் தங்களது வருடாந்திரக் கூட்டத்திற்காகக் கூடியிருந்தனர். அந்த மாநாட்டில் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பம் குறித்த பெரும் உற்சாகம் தென்பட்டது. தற்போதைய நிலையில் செயற்கை நுண்ணறிவு என்பது பெருமளவு லாபகரமாக மாறவில்லை என்றாலும், விரைவில் லாபகரமான நிலை வரும் என்று முதலாளிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நம்புகின்றனர். இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தால் ஏற்படப்போகும் வேலையின்மை குறித்த கேள்விகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்தாலும், அவை அலட்சியமாகவே புறந்தள்ளப்பட்டன. செயற்கை நுண்ணறிவைப் பராமரிக்கும் பணி களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அது வேலையிழப்பைச் சரிசெய்யும் என்றும் சிலர் வாதிட்டனர். இது முற்றிலும் யதார்த்த த்திற்குப் புறம்பான வாதமாகும். வலதுசாரித் தொழிலதிபரான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு, வேலைகளைப் பறிக்கும் என்பதை ஒப்புக்கொண்டாலும், அதற்கு ஒரு தீர்வைப் பரிந்து ரைக்கிறார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துபவர்கள் மீது வரி விதித்து, அந்த நிதியைக் கொண்டு வேலையிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என்பது அவரது கருத்து. முதலாளித்துவத்தின் முரண்பாடான தர்க்கம் செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்பு களை அழிக்கும் என்பது இன்று விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகிவிட்டது. எலான் மஸ்க் போன்றவர்களே இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்த விவாதங்களில் கவனிக்கத் தவறிய முக்கியமான அம்சம் என்னவென்றால், சிக்கல் தொழில்நுட்பத்தில் இல்லை, மாறாக அது கையாளப்படும் முதலாளித்துவப் பொருளாதார முறையில்தான் இருக்கிறது. எலான் மஸ்க் முன் வைக்கும் வரி விதிப்பு முறையையே எடுத்துக் கொள்வோம். ஒரு வேலையைச் செய்ய நூறு பேர் தேவைப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்; செயற்கை நுண்ணறிவின் வருகைக்குப் பின் அதில் ஐம்பது பேருக்கு வேலை பறிபோகிறது. அந்த ஐம்பது பேருக்கு அவர்கள் முன்பு வாங்கிய அதே ஊதியத்தை இழப்பீடாக வழங்கினால் மட்டுமே அது ஒரு சமூகத் தீர்வாகும். ஆனால் அப்படி ஊதியத்திற்கு இணையான இழப்பீட்டை வழங்கினால், அங்கே உழைப்புச் செலவு குறையாது. உழைப்புச் செலவு குறையவில்லை என்றால், முதலாளித்துவ லாப நோக்கில் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே தேவை யற்றதாகிவிடும். ஒருவேளை உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் லாபம் ஈட்டப்பட்டாலும், அந்த உற்பத்தி அதிகரிப்பு என்பது மறைமுகமாக வேறு சில வேலை வாய்ப்புகளைப் பறிப்பதாகவே அமையும். அதாவது, உற்பத்தி அதிகரித்த சூழலில் உருவாகி யிருக்க வேண்டிய புதிய வேலைவாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன. இது ஏற்கெனவே பணியில் இருப்பவர்களின் வேலையைப் பறிக்காமல் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த வேலை வாய்ப்புத் திறனைக் குறைக்கிறது. இதனால் ஏற்படப்போகும் சமூகப் பாதிப்புகளுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கப்போவதில்லை. இயந்திரங்களும் உழைப்பாளர் துயரமும் சுருக்கமாகச் சொன்னால், முதலாளித்து வத்தின் தர்க்கம் என்பது எத்தகைய இழப்பீட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், தொழில்நுட்ப முன் னேற்றத்தை உழைக்கும் மக்களின் துயரத்தின் மீதே கட்டமைக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த ‘லுடைட்ஸ்’ (Luddites) அமைப்பினர், இயந்திரங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதாகக் கருதி அவற்றை உடைத்தனர். இன்றைய நவீன காலத்தில் நாம் அவர்களைப் போல இயந்திரங்களை உடைக்க வேண்டியதில்லை என்றாலும், உழைக்கும் மக்கள் தொழில்நுட்ப மாற்றத்தைக் கண்டு அச்சமடை வதற்குப் பின்னால் ஒரு வலுவான தர்க்கம் இருப்பதை மறுக்க முடியாது. ஏனெனில், முத லாளித்துவத்தின் கீழ் இயந்திரங்கள் என்பவை தொழிலாளர்களின் நேரடித் துயரத்திற்குக் காரணமாக அமைகின்றன. சோசலிசத் தீர்வின் மேன்மை இதற்கு நேர்மாறாக, ஒரு சோசலிசப் பொருளா தார அமைப்பில் இதே செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டால் என்னவாகும் என்பதை ச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அங்கே வேலை யின்மை என்பது ஒரு பிரச்சனையாகவே இருக்காது. மாறாக, ஒவ்வொரு தொழிலாளியின் ஓய்வு நேரத்தை அதிகரிப்பதன் மூலம் அந்தத் தொழில் நுட்பம் வரவேற்கப்படும். உழைக்கும் மக்களின் மொத்த ஊதியத்திலோ அல்லது ஒரு தொழி லாளியின் ஊதிய விகிதத்திலோ எந்தக் குறைவும் செய்யாமல், வேலையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் வேலையின்மை தீர்க்கப்படும். சோசலிச சமூகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது எவருக்கும் துயரத்தைத் தருவதில்லை; மாறாக அது அனைவரது வாழ்வையும் மேம்படுத்துகிறது. சலிப்பூட்டும் கடின உழைப்பிலிருந்து மனிதர் களை விடுவித்து, அவர்களின் உள்ளூர் படைப் பாற்றலை வளர்த்தெடுக்க அது வழிவகுக்கிறது. மேலே சொன்ன அதே உதாரணத்தைச் சோச லிசச் சூழலில் பொருத்திப் பார்த்தால், நூறு பேர் செய்த வேலையை ஐம்பது பேர் செய்ய முடியும் என்ற நிலை வரும்போது, ஐம்பது பேரை வேலை யை விட்டு நீக்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த நூறு பேருமே தொடர்ந்து பணியாற்று வார்கள்; ஆனால் அவர்களது வேலை நேரம் பாதி யாகக் குறைக்கப்படும். அதேநேரம் அவர்கள் முன்பு பெற்ற அதே ஊதியத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் உற்பத்தியில் உபரி மதிப்பு மாறாமல் இருக்கும், அதேவேளையில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் குறைந்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இத்தகைய ஒரு மாற்றத்தை முதலாளித்துவ சமூகத்தில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. லாப நோக்கும் தொழில்நுட்பமும் முதலாளித்துவத்தில் பொருளாதாரத் தீர்மா னங்கள் அனைத்தும் கூடுதல் லாபத்தை நோக்கியே எடுக்கப்படுகின்றன. அங்கே ஒரு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றா லே, அது தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்காகத்தான் இருக்கும். வேலைவாய்ப்புகள் குறையும்போது தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியும் குறை யும், இது ஊதிய உயர்வையும் தடுக்கும். எனவே, தனியார் உரிமையைத் தவிர்த்துவிட்டு, அரசு நிறுவனங்களாகவே இருந்தாலும் அவை லாப நோக்கில் இயங்கினால் அது சோசலிசமாகாது. இதற்கு யூகோஸ்லாவியாவின் பொருளாதார வர லாறு ஒரு சான்றாகும். லாப நோக்கில் இயங்கும் எந்தவொரு அமைப்பும் வேலையின்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கவே செய்யும். சோசலிசம் மட்டுமே தீர்வு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்ற ங்களின் பலன்களை மனிதகுலம் முழுமையாக அறுவடை செய்ய வேண்டுமானால், அதற்கு சோசலிசம் மட்டுமே ஒரே வழி என்பது இந்த விவாதத்தின் மூலம் உறுதியாகிறது. மனித குலத்தை முன்னேற்றும் வல்லமை கொண்ட கண்டுபிடிப்புகள், முதலாளித்துவத்தின் கீழ் உழைக்கும் மக்களுக்குத் துயரத்தையே கொண்டு வருகின்றன என்றால், அது அந்தப் பொருளாதார முறையின் தோல்வியாகும். முதலாளித்துவத்தின் இத்தகைய விசித்திரமான பண்பை கார்ல் மார்க்ஸ் மிக அழகாகக் குறிப்பிட்டிருப்பார்: “கொல்லப் பட்டவர்களின் மண்டையோடுகளில் இருந்தே தேவாமிர்தத்தைப் பருகும் ஒரு கொடிய விக்கிர கத்தைப் போன்றது முதலாளித்துவம்”. மனிதகுலம் இன்று பெரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் வாசலில் நிற்கிறது. இந்தத் தருணத்தில் சோசலிசத்திற்கான தேவை முன்னெப்போதையும் விட மிக அதிகமாக இருக் கிறது. சோசலிசம் என்பது வெறும் சமத்துவத்திற் கான சமூகம் மட்டுமல்ல; அது மனிதனின் புத்தா க்கச் சிந்தனைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் உண்மையான நியாயத்தைச் செய்யும் சமூகமாகும். தொழில்நுட்பம் மனிதனை அடிமை யாக்காமல், மனிதனை விடுவிக்கும் கருவியாக மாற வேண்டுமானால், சமூக மாற்றம் அவசியமாகிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி , பிப்.1, 2026 தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.
