பெண்ணுரிமை மற்றும் சிறுபான்மையின அடையாளத்தின் மீதான அதிகாரத் தாக்குதல்!
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ஒரு இஸ்லாமியப் பெண் மருத்துவர் அணிந்திருந்த தலை ஆடையை (ஹிஜாப்) அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பொதுமேடையில் அகற்றிய சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒரு தனிப்பட்ட செயலாகவோ அல்லது தற்செய லாக நடந்த மரியாதைக்குறைவாகவோ மட்டும் பார்த்துவிட முடியாது. இது இந்திய அரசியலும் சமூகமும் இன்று எத்தகைய ஆபத்தான திசையில் நகர்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லும் ஓர் அரசியல் அடையாளச் செயலாகும். உடைச் சுதந்திரமும் ஆட்சியாளர்களின் அதிகாரமும் ஒரு பெண் எந்த உடையை அணிய வேண்டும், எந்த மத அடையாளத்துடன் பொதுவெளியில் நிற்க வேண்டும்
என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கோ அல்லது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மனித உரிமைகளுக்கோ சொந்தமானது. ஆனால், பீகார் முதலமைச்சரின் செயல், அந்த அதிகாரம் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கும் ஆணாதிக்க சிந்தனைக்கும் உட்பட்டது என்ற ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. இது பெண்களின் உடல் மற்றும் உடைச் சுதந்திரத்தையும், சிறுபான்மையினரின் மத அடையாளத்தையும் ஒரே நேரத்தில் அவமதிக்கும் செயலாகும். கடினமாகப் பயின்று சமூக சேவை செய்து வரும் ஒரு பெண் மருத்துவரை, பொதுவெளியில் இழிவுபடுத்துவது என்பது, “பெண்ணாக இருப்பதும், சிறுபான்மை யினராக இருப்பதும் இரட்டை அடக்குமுறைக்கு வழிவகுக்கும்” என்பதை நிரூபிக்கிறது. மதச்சார்பற்ற அரசியலிலிருந்து மத வெறுப்பு அரசியலை நோக்கி… கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அரசியலின் முக்கிய அடையாளமான மதச்சார்பற்ற தன்மை திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு வருகிறது. இந்துத்துவ அரசியலை மையக் கருத்தாக மாற்றும் முயற்சிகளில் இஸ்லாமியச் சமூகமே அதிகமாகக் குறிவைக்கப்படுகிறது. கல்வி நிலையங்களில் தலை ஆடைக்குத் தடை விதிப்பது, இறைச்சி சார்ந்த விவாதங்கள், காதலுக்கு எதிரான வன்முறைகள் என அனைத்தும் ஒரே விதமான பிரிவினை அரசியலையே வெளிப்படுத்துகின்றன. உழைக்கும் மக்களின் உண்மையான பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை, விவசாயச் சீரழிவு, கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளின் பலவீனம்
ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஊடகங்கள் வழியாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் நச்சுச் சிந்தனைகள், மக்களின் மனதில் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கும் உளவியலை உருவாக்கி வருகின்றன. ஆணாதிக்கமும் மதவெறியும் இணையும் தருணம் இந்துத்துவ அரசியல் மத அடையாளத்தை ஆயுதமாக்குவதுடன், ஆணாதிக்கத்தை யும் பாதுகாக்கிறது. இஸ்லாமியப் பெண்களை மதக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கிறோம் என்ற போர்வையில், அவர்களது உடல் மற்றும் உடை சுதந்திரத்தை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளே இவை. பீகார் சம்பவம், ஒரு பெண்ணின் உடலைக் கட்டுப்படுத்தும்
அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு உண்டு என்று மறைமுகமாகப் பெண்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். அரசமைப்பின் பன்முகத்தன்மை, நீதிமன்றங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நடுநிலைத்தன்மை ஆகியவை சீர்குலைக்கப்படும் சூழலில், ஒரு மாநில முதலமைச்சரே இத்தகைய செயலில் ஈடுபடத் துணிகிறார் என்றால், அது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். பாதுகாக்கப்பட வேண்டிய ஜனநாயக மரபுகள் இது ஒரு மாநிலத்தைப் பற்றிய செய்தி அல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்குமான எச்சரிக்கை. பெண்ணின் உடல் மீது ஆண் அதிகாரத்தையும் அரசியல் அதிகாரத்தை யும் திணிக்கும் இந்த அடக்குமுறைக்கு எதிராகச் சமூக இயக்கங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது. ஒரு பெண்ணின் உடைச் சுதந்திரம் என்பது அவரது அடிப்படை உரிமை. சிறுபான்மையினரின் மத அடையாளம் என்பது அவர்களின் வாழ்வுரிமையின் ஒரு பகுதி. மதவெறியும் ஆணாதிக்கமும் கைகோர்த்துள்ள இந்த அரசியல் சூழலுக்கு எதிராக, மாதர் சங்கங்கள், மனித உரிமை இயக்கங்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் இணைந்து சமூக நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.
