articles

img

இதெல்லாம் தேசிய அவமானம் இல்லையா? தி இந்து தமிழ் ஏட்டிற்கு சில கேள்விகள்....

‘தேசிய அவமானம்’ என்றதலைப்பில் இந்து தமிழ்திசை நாளேடு தலையங்கம் (2.2.2021) எழுதியுள்ளது. குடியரசு நாளில் தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறைநடந்ததாகக் கூறி அதுவொரு தேசிய அவமானம் என்கிறது அந்த ஏடு. அமெரிக்காவில் நடந்த தேர்தலில்  தோல்வியடைந்த டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை ஆக்கிரமித்ததை இத்துடன் ஒப்புமை காட்டியுள்ளது அந்த ஏடு.ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள்தான் ‘கேப்பிடல்’ நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்கினர் என்று கூட குறிப்பிடாமல் வன்முறையாளர்கள் என்று முடித்துக் கொள்கிறது. 

தில்லியிலும் நாட்டின் பலபகுதிகளிலும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கானது. ஆனால் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப் கும்பல் மக்களின் தீர்ப்பை ஏற்காமல் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை ஆக்கிரமிக்க முயன்றது. பாசிச குணம் கொண்ட டிரம்ப்பின் ஆதரவாளர்களின் செயலையும், தேசபக்த விவசாயிகளின் போராட்டத்தையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்துவது தவறு. வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தித்தான் விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால் இந்த சட்டங்களை நிறைவேற்றும் போது நாடாளுமன்ற நெறிமுறைகளையே மத்திய பாஜக கூட்டணி அரசு காலில்போட்டு மிதித்தது. கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக நாடாளுமன்ற நெறிமுறைகள் மீறப்பட்டது தேசிய அவமானம் இல்லையா?

நம்முடைய நாட்டின் தேசியக் கொடி அவமதிக்கப்படுவதை தேசபக்தியுள்ள எந்தவொரு இந்தியரும் ஏற்றுக் கொள்ள மாட்டார். குடியரசு நாளில் தேசியக்கொடிக்கு அருகில் ஒரு குறிப்ப்பிட்ட மதத்துடன் தொடர்புடைய கொடி பறக்கவிடப்பட்டது ஏற்புடையது அல்ல. ஆனால் இந்த செயலை செய்தவருக்கும், ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு இடையிலான தொடர்பு குறித்தும் வெளிவரும் செய்திகளை தி இந்து தமிழ் ஏடு கருத்தில் கொள்ளாதது ஏன்? குடியரசு நாளில் போராட்டத்தில் ஊடுருவி திட்டமிட்டே வன்முறையை உருவாக்க முயன்ற ஆர்எஸ்எஸ் ஆசாமிகளை விவசாயிகளே பிடித்துக் கொடுத்தனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் இந்துத்துவா அமைப்பினர் ஊடுருவி வன்முறையை தூண்டிவிட்டதும் பல இடங்களில் அவர்களே கலவரத்தை நடத்தியதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே தன்மையிலான ஊடுருவல்தான் விவசாயிகள் போராட்டத்திலும் நடந்துள்ளது. இது குறித்து முழுமையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட்டால் முழு உண்மையும் வெளியாகும். அதற்கு மத்திய அரசு தயாராகயில்லை. 

தேசியக் கொடிக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கொடியை ஏற்றுவது தவறு என்று கொந்தளிக்கும் இந்து தமிழ் ஏடு அதே குடியரசு நாள் அணிவகுப்பில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்படவுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வழிபாட்டுத் தலத்தின் மாதிரி ஒரு வாகனத்தில் எடுத்து வரப்பட்டது குறித்து ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லையே ஏன்? மதச்சார்பற்ற ஒரு நாட்டின் ராணுவ அணிவகுப்பில் கடுமையான சச்சரவுக்கு மத்தியில் கட்டப்படும் வழிபாட்டுத் தலத்தின் மாதிரியை அரசே இதுதான் இந்திய நாட்டின் பெருமிதம் என்று முன்னிறுத்துவது நியாயமா?

விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். அந்த போராட்டங்களில் எந்த வன்முறையும் இல்லை. போராட்டக்காரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தித்தான் ஒவ்வொரு நாளும் போராட்டக்களத்தில் நிற்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் விவசாயிகளின் பிரதிநிதிகளோடு குறைந்தபட்சம் நேரடியாக பேசக்கூட மறுக்கிறாரே இது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் செயலா?காவல்துறையினர் காயமுற்றதை சுட்டிக்காட்டி வன்முறையின் அளவை மதிப்பிடுகிறது தலையங்கம். ஆனால் போராட்டக்களத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். அதுகுறித்து அரசுக்கு எந்த கவலையும் இல்லை. இதை எப்படி அளப்பது, விவசாயிகள் பேரணியை கலைப்பதற்கு கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. கொடூரமான தடியடி நடத்தப்பட்டது. ஏராளமான விவசாயிகள் படுகாயமடைந்தனர். ஒரு விவசாயியை கீழே தள்ளி காவலர் ஒருவர் கழுத்தை மிதிக்கும் காட்சி அமெரிக்காவில் ஜார்ஜ் பிளைட்டுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு நிகரானது.  

தீவிர நிலைபாடு உதவாது என்று விவசாயிகள் சங்கத்திற்கு அறிவுரை கூறும் இந்து ஏடு மேலாதிக்கப் போக்கு உதவாது என்று அரசுக்கும் புத்தி சொல்கிறது. இந்த சட்டத்தின் பின்னால் இருப்பது மேலாதிக்கப் போக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் வெந்நீரை ஊற்றும் கொடும் செயல். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விவசாயத்தை கை மாற்றும் கயமை. இதை எதிர்த்து போராடுவது என்பது தீவிர நிலைபாடு அல்ல. தவிர்க்க முடியாத வாழ்விற்கான போராட்டம்.பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இழுத்தடிப்பதை தவிர வேறு எதையும் மத்திய அரசு செய்துவில்லை. அலையவிட்டு களைப்படையச் செய்யவிடலாம் என்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் விவசாயிகளின் போராட்ட உறுதி மேலும் மேலும் பாறை போல உறுதியாகிறதே தவிர தளர்வடையவில்லை. எனவே சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே இரும்புக் கம்பிகளை கொண்டு தரை அமைத்து அவர்களை அமரவிடாமல் செய்வது தேசிய அவமானம் இல்லையா? மொத்தத்தில் ஒரு தரப்பை தீச் சொல் கொண்டு சுடும் இந்த தலையங்கம் மறு தரப்பான அரசுத் தரப்பை பூ கொண்டு மெல்ல எறிகிறது. போராட்டக்காரர்களுக்கு மட்டும் வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துவதும் அரசின் அடக்குமுறையையும், பிடிவாதத்தையும் சட்டப்பூர்வமானது போல புனைந்துரைப்பதும் நியாயமாகாது.

கட்டுரையாளர் : மதுரை சொக்கன்