articles

img

ஏர் இந்தியா விற்பனையும் ஏகலைவன் கட்டை விரலும் - க.சுவாமிநாதன்

ஏர் இந்தியா விற்பனையும் ஏகலைவன் கட்டை விரலும்

டிசம்பர் 4 ஆம் தேதி தலைவர் ஒருவரை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து தில்லி விமானத்தில் வழியனுப்ப வேண்டி இருந்தது. ஆனால் அது ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அது “ஏர் இந்தியா” விமானம். இதை ஒரு நண்பரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் உடனே,”அரசாங்க விமானத்தின் புத்தி இன்னும் போகல” என்றார்.  ஜனவரி 2022 இல் டாடாவுக்கு ஏர் இந்தியா கை மாறி விட்டது. அரசின் பங்குகளே ஒரு சதவீதம் கூட இன்று ஏர் இந்தியாவில் இல்லை. 4 ஆண்டு முடியப் போகிற நிலைமையிலும் அவருக்கு டாடாவை குறை சொல்ல மனமில்லை. அசர வைக்கும் இந்திய உயர் நடுத்தர வர்க்கத்தின் இந்த கார்ப்பரேட் விசுவாசமே ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரப் பாதையைத் தாங்கிப் பிடிக்கும் “சமூக ஒப்புதல்” (Social Consent) ஆகும்.  ஆனால் அடுத்த நாள் வந்த செய்திதான் அதிர வைத்தது. “இண்டிகோ” நிறுவனத்தின் 550 சர்வதேச, உள்நாட்டு விமானங்கள் புதன், வியாழன் கிழமைகளில் (டிசம்பர் 3, 4 தேதிகளில்) தாமதங்களுக்கு உள்ளாகி பெரிய விமான நிலையங்களை எல்லாம் கலங்கடித்துள்ளன. மும்பை (85 விமானங்கள்), பெங்களூரு (73), ஹைதராபாத் (68), சென்னை (31), தில்லி (30) என தாமதமான விமானங்களின் எண்ணிக்கை நிலைமையின் கடுமைக்கு எடுத்துக்காட்டுகள். வெள்ளிக்கிழமை எல்லாம் சரியாகி விடும் என்பதாக இல்லை நிலைமை. உள் நாட்டு விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்தின் (DGCA) அறிவிப்பு சொன்ன தகவல், இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த தாமதங்கள் தொடரும் என்பதே. ஆனால் இரவு பறப்பதற்கு உள்ள விதிகளை பிப்ரவரி 10 வரை தளர்த்துமாறு இண்டிகோ கேட்டுக் கொண்டுள்ளதைப் பார்த்தால் இன்னும் 3 மாதங்களுக்கு தினமும் சிவராத்திரிதான் போலிருக்கிறது. இதன் பொருள் பகலில் பறக்க பதிவு செய்தவர்களும் இன்னும் சில மாதங்களுக்கு நட்சத்திரங்களையும், நிலாவையும் “ரசித்துக்” கொண்டே பறக்கலாம் என்பதே. தவறான கணிப்புகள், திட்டமிடலில் இடைவெளிகள், ஊழியர் பற்றாக்குறை, ஊழியர்களுக்கு ஓய்வு - பணி நேரத்தை நிர்ணயிப்பதற்கான நெறிகளை அமலாக்குவதில் பிரச்சனைகள் ஆகியனவே இவ்வளவு விமானங்களின் தாமதத்திற்கான காரணங்கள் என்று இண்டிகோ நிறுவனம், உள் நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்புக் கொண்டுள்ளது. அமைச்சரையும் சந்தித்து இண்டிகோ அதிகாரிகள் பேசி இருக்கிறார்கள்.  இண்டிகோ தாமதங்கள் பிற விமான நிறுவனங்களின் செயல்பாட்டையும் பாதித்துள்ளது. புனே விமானநிலையத்தில் உள்ள 10 நிறுத்துமிடங்களில் தாமதங்கள் காரணமாக 9 ஐ இண்டிகோ ஆக்கிரமித்துவிட்டதாம். ஒரே ஒரு நிறுத்துமிடம் மட்டுமே பாக்கி இருந்ததால் மற்ற நிறுவனங்களின் விமானங்கள் இறங்க முடியாமல் தவித்துள்ளன. தாமதமான இண்டிகோ விமானங்களை இயக்க பைலட்டுகள் இல்லையாம். ஏர் இந்தியா தாமதம் பற்றி என்னிடம் உரையாடிய நண்பரிடம் மறுநாள் வந்த இந்த செய்தியை காண்பித்தேன். அவர் முகத்தில் ஈயாடவில்லை.  “2005 இல் துவங்கப்பட்ட இண்டிகோ நிறுவனம் சுத்த சுயம் பிரகாச தனியார் நிறுவனம்தானே. 60 சதவீதச் சந்தைப் பங்கை உள் நாட்டு விமான போக்குவரத்தில் வைத்துள்ளது. 10 கோடி பேர் எங்கள் விமானங்களில் ஓராண்டில் பயணிக்கிறார்கள் என்று பீத்தல் வேறு! பிறகு ஏன் இந்த சீர்கேடு... ஏர் இந்தியா விற்பனைக்கு பிறகு அரசு நிறுவனமே இல்லாத தொழில் ஆக மாறி விட்டது. இப்படி இருந்தால்  தனியாருக்கு கடிவாளமே இருக்காதே” என்றேன். அவரிடம் பதில் இல்லை. முகத்தில் அருளும் இல்லை. உண்மையை ஒப்புக் கொள்ள உயர் நடுத்தர வர்க்க மனிதர்கள் அவ்வளவு எளிதாக முன் வருவதில்லை.  “இண்டிகோ” தலைமையகம் குரு கிராமில் உள்ளது. துரோணர், ஏகலைவன்  இருவரையும் இந்த ஊருடன் புராணம் தொடர்புபடுத்துகிறது. அங்கே துரோணருக்கு கோவிலும் இருக்கிறது.  ஏகலைவனின் கட்டை விரல் காவுதான் ஏர் இந்தியாவின் விற்பனையோ!