கடந்த மார்ச் 24, 2020ல் ஒரு நான்குமணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், அதைத் தொடர்ந்து மக்களின் துயரம். உலக அளவில் கவனத்தை ஈர்த்த புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உட்பட உலகின் பல நாடுகளும் தங்களுடைய குடிமக்களுக்கு ஊரடங்கு காலக்கட்டத்தில் நிவாரணங்களை அளித்த போது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியினர்க்கு செய்த சிறு நிவாரணம் தவிர்த்து எதுவும் செய்யாத நிலை. இதன் காரணமாக ஏற்பட்டவறுமை, பசி, பொருளாதாரச் சீரழிவு; ஊரடங்குமுடிந்து பல மாதங்கள் கடந்த பிறகும் அவர்களால் மீண்டு எழவே முடியவில்லை.
‘ஹங்கர் வாட்ச்’ (Hunger Watch) நிறுவனம் இப்படி துன்புற்ற 4000 பேரிடம் தன்னுடைய பல்வேறு மக்கள் தொடர்பு குழுக்களை பயன்படுத்தி நேரடியாக பேசியதில் கிடைத்த விவரங்களை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. அதில் பல்வேறு விஷயங்கள் தெரிய வந்தன.
$ மார்ச் மாதத்தை விட தங்களது குடும்பங்களின் உணவு நுகர்வு, குறிப்பாக அரிசிமற்றும் கோதுமையின் நுகர்வு அளவுகுறைந்து போயுள்ளது என்று பெரும்பான்மையினர் கூறியுள்ளனர். பருப்பு, பச்சை காய்கறிகள், இறைச்சி, முட்டை போன்றவற்றின் நுகர்வு மிகவும் குறைந்து போயுள்ளது என்று கூறியுள்ளனர்.
$ அதிலும் 62 சதம் பேர் எங்கள் குடும்ப வருமானம் 2020 மார்ச் மாதம் இருந்ததை விட குறைந்து போயுள்ளது என்று கூறியுள்ளனர். காரணம் ஏராளமானவர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறியுள்ளனர் என்பது தான். இதனால் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது.
$ நகர்ப்புறத்தில் கிராமப்புறத்தை விட நுகர்வு குறைந்து போயுள்ளது. பொதுவாக வறுமையும், ஊட்டச்சத்துக் குறைபாடும் கிராமங்களில்தான் அதிகம் இருக்கும். ஆனால்,
இங்கு
1. ரேஷன் கார்டு இல்லாத காரணத்தால் நகர்ப்புற ஏழைகளால் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை வாங்க முடியவில்லை.
2. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கப்படாத காரணத்தால் வேலை யின்மையின் அதிகரிப்புக்கும் நகர்ப்புற நுகர்வு குறைந்து போயுள்ளதற்கும் காரணமாகும். இப்படி கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கில் எந்தவிதமான ஆதரவு நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் ஏற்பட்ட வேலையின்மையின் காரணமான வருமான இழப்பும் துன்பமும் துயரமும் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால், ஊரடங்கிற்குப் பிறகும் அது தொடர்கிறது என்பது நாம் கவனிக்கத்தக்கது. ஊரடங்கு முடிந்தால் உற்பத்தி துவங்கி விடும்; உற்பத்தி துவங்கிவிட்டால் பழைய நிலைமைக்கு பொருளாதாரம் வந்துவிடும் என்றெல்லாம் நம்பினார்கள். ஆனால், இந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. காரணம் உழைக்கும் மக்களின் வருமானத்தை “0” ஆக்காமல் ஊரடங்கு காலக்கட்டத்தில் காப்பாற்றி யிருந்தால், அவர்கள் கடன் வாங்கியிருக்க மாட்டார்கள்.
நுகர்வும் குறைந்திருக்காது. ஊரடங்கு காலக்கட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீட்டினை அரசு செய்திருக்க வேண்டும். அப்படி அவர்களது வருமானம் உறுதி செய்யப்பட்டிருந்தால், ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களுக்கான கிராக்கி இருந்திருக்கும். நுகர்வு இருந்திருக்கும். நல்லதொரு பொருளாதார சுழற்சி இருந்திருக்கும். ஆனால், இந்தஏற்பாடு எதையும் அரசு செய்யாத நிலையில்மக்கள் வாங்கிய கடனை திருப்பி அடைக்கத்தான் தங்களுடைய சொற்ப வருமானத்தையும் பயன்படுத்துவார்கள். எத்தனை காலத்திற்குஅவர்கள் கடனை அடைக்க வேண்டியிருக் கிறதோ, அத்தனை காலமும் உற்பத்தி அதிகரித்தாலும் பொருளாதாரம் மீட்சியடையாது. எனவே, போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதுஒன்றுதான் ஒரே வழி. மோடி அரசாங்கம்இதை செய்யத் தயாராக இல்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா காலக்கட்டத்துக்கு முன்பு துவங்கி முடிக்கப்படாமல் உள்ள உள்நாட்டு கட்டமைப்புத் திட்டங்களை மீண்டும் துவங்கினால் பொருளாதாரம் மீட்சியடையும் என்கிறார். உண்மையில், ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை விடப் பல மடங்கு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கினால் ஒழிய பொருளாதாரம் மீட்சி அடைய வாய்ப்பில்லை. ஆனால், அதுவும் மிகப் பெருமளவு பலனைத் தராது.
பொருளாதார மீட்சியை தூண்ட வேண்டும் என்று நினைத்தால், நேரடி பண உதவி (directcash transfers) அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்செய்ய வேண்டும். ஊரடங்கு முடிந்தாலும் இந்த நேரடி பணப் பட்டுவாடாவை அவசியம் செய்யவேண்டும். அதனுடைய அளவு எப்படி இருக்கவேண்டுமென்றால், கடனையும் அடைத்துவிட்டு நுகர்வையும் குறைக்காமல் இருக்கும் அளவு இருக்க வெண்டும். இந்த நேரடி பண மாற்ற உதவி தான் இறக்குமதி வரி இல்லாத உள்நாட்டுப் பொருட்களுக்கான கிராக்கியை ஏற்படுத்தி, உற்பத்தியும் பெருகும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
அதேபோல இந்த அரசு கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் அரசின் உணவு தானியக் கிடங்குகளில் இருந்து மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்குவதை அரசின் செலவினம் தானே என்று புரிந்து கொள்ளக்கூடாது. அது பொருளாதாரத்தையும் தூண்டாது.
ஆனால், அதே நேரத்தில் நேரடி பண உதவி செய்யும்போது பொருளாதார மீட்சியினை நாம் எதிர்பார்க்கலாம். வேலையில்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அரசிற்கு எழுதியுள்ளன. அப்படி மூன்று மாதத்திற்கு வழங்கினால் கூட, அரசின் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதத்திற்கும் குறைவாகவே அதிகரிக்கும். ஆனால் நிதி பாதுகாப்பு என்ற பெயரைக் கூறிக் கொண்டு நிதி பழமைவாதத்தை கடைபிடிக்கும் இந்த அரசாங்கத்திற்கு எந்த அளவு தைரியமில்லையோ, அல்லது அரசியல் உறுதிப்பாடில்லையோ அந்த அளவிற்கு மனமும் இல்லை.
கட்டுரையாளர் : பேரா.பிரபாத் பட்நாயக்
தமிழில் - ஆர்.எஸ்.செண்பகம்
நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி