உலகம் முழுவதும், கோவிட்-19 வைரஸ்தொற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒரு நயா பைசாகூட செலவழிக்க வேண்டியதில்லை ஆனால், இந்தியாவில் அவ்வாறில்லை. உலகம் முழுவதிலும், வரலாற்று நினைவுச் சின்னங்கள், அந்தந்த நாட்டைப் பற்றிய வரையறைகளை அளிப்பவை; அவை அந்த நாட்டின் மனசாட்சியோடு பின்னிப் பிணைந்தவை; ஆகவே அவை புனிதமானமாக கருதப்பட்டு, அதன் அசல் வடிவங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் பாதுகாக்கப்படும்; ஆனால் இந்தியாவில் அவ்வாறில்லை. உலகம் முழுவதும்,அடிப்படைச் சேவைகள் அளிக்கும் பொதுச் சொத்துகள் அல்லது மக்களின் கலாச்சார, கல்விச் சேவைகள் போன்றவை கிட்டத்தட்டஇலவசம், ஆனால் இனியும் இந்தியாவில் அவ்வாறில்லை.இந்தியாவின் இத்தகைய விநோதமான விதிவிலக்குகளுக்குப் பின்னணியில், மோடி அரசாங்கத்தின் தனித்துவமான நிகழ்ச்சிநிரலாக ‘அனைத்தையும் சரக்காக மாற்றுவது’ என்பதே உள்ளது. எதுவுமேமிகவும் வழிபாட்டுக்குரியதல்ல,எதுவுமே புனிதமானதல்ல, எதுவுமே சந்தையைவிட உயர்வானதல்ல, எல்லாமே விற்பனைக்கு!
எல்லாமே சரக்குகள் தான்!
மேலே சொன்ன மூன்று உதாரணங்களை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பு தனியார் மருத்துவமனைகள் மக்களுக்கு தடுப்பூசி போட்ட போது, அதற்கு சேவைக் கட்டணமாக ரூ.250 வசூலித்தன,அதுவுமே தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது சிறிய கட்டணமாக இருந்ததால், சமாளிக்கக்கூடியது. தற்போது தனியார் மருத்துவமனைகள் அதிககட்டணமாக கோவிஷீல்டுக்கு ரூ.780ம் கோவாக்சினுக்கு ரூ.1,410ம், ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு ரூ.1145ம்வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவை இப்போது அரசிடமிருந்து இலவசமாக தடுப்பூசிகளை பெறுவதில்லை. அவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்காமல், அரசு தெளிவாக இந்த தடுப்பூசிகளை சரக்குகளாக மாற்ற விரும்புகிறது.
அதைப் போலவே ஜாலியன்வாலாபாக்கை “அழகுபடுத்தும்” திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துயரமான சம்பவம், இந்தியாவின் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான கட்டம். அதுவே நவீன இந்தியா உருவாவதற்கு முக்கியமான பங்காற்றியுள்ளது. அந்த மைதானத்தில் அமைதியாக போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது, தனது துருப்புகளை அவர்கள் துப்பாக்கிகளில் உள்ள குண்டுகள் தீரும் வரை ஜெனரல் டயர் சுடச் சொன்னானே, அந்த இடம் ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமானது; ஆகவே அதில் கையே வைக்காமல் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிட வேண்டும். உதாரணமாக, செனகல் நாட்டின் டாகா கடற்கரைக்கு அப்பாலுள்ள கோரி தீவிலிருந்து பல லட்சக்கணக்கான அடிமைகள் அமெரிக்காவிற்கு சரக்காக கொண்டு செல்லப்பட்டனர், அந்த இடத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பின் நெல்சன் மண்டேலா சென்ற போது, அவர் கண்களில் கண்ணீர்பெருகியது. அந்த கட்டிடங்கள், முகாம்கள், புழுக்கம் எடுக்கும் நிலவறைகள் ஆகியன, நெஞ்சை நொறுக்கும் அந்த கப்பல் பயணங்கள் நடைபெற்ற போது எப்படி இருந்ததோ, அப்படியே கொஞ்சமும் மாற்றப்படாமல், வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்இந்தியாவிலோ, ஜாலியன்வாலாபாக்,“அழகுபடுத்தப்பட்டது”; எதையும் விரைந்து முடிக்கும் அரசால்,அதில் நிச்சயம் யோசனை இல்லை என சொல்ல முடியாது, ஆனால் அது முழுவதும் கற்பனையிலானதும், தவறான இடத்திற்குமானது, வெளிநாட்டுப் பயணிகளை கவர்ந்திழுக்க செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்வதென்றால், ஜாலியன்வாலாபாக் ஒரு சரக்காக மாற்றப்பட்டுள்ளது,அந்த இடம் தேசத்திற்கு புனிதமானது என்பதைவிட அதில் சரக்கின் தன்மைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
வாரணாசி விஸ்வநாத் கோயிலுக்கான பழையஅணுகு சாலைகள், வரலாற்று ரீதியாக குறுகியசந்துகள் வழியாகத்தான் இருக்கும், அவற்றை “அழகுபடுத்துவதற்கு”மிகச்சரியாக இதே மனோநிலைதான் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக அருகில் இருந்த மிகப் பழமையான வீடுகளும், பல சிறிய கோவில்களும் இந்த புராதன நகரத்தில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதன் பின்னால் உள்ள திட்டம் என்னவெனில், விஸ்வநாதர் கோவிலும், அதை சுற்றியுள்ள இடங்களும் அந்த நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எளிதில் செல்லும் வண்ணம்இருக்கவேண்டும் என்பதாகும். அதிலும் குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது; இதிலும் அமல்படுத்தப்பட்டிருக்கும் கருத்து, கோவிலை ஒரு சரக்காக மாற்றியதுதான்.
பணமாக்கல் என்பதன் பொருள்...
இப்பொழுது, வரிசைகட்டி நிற்கும் பொதுச்சொத்துகள், ரயில்வே நிலையங்கள், துறைமுகங்கள், விமானநிலையங்கள் முதல் விளையாட்டரங்கம் வரை, சாலைகள் உட்பட எல்லாமே“பணமாக்கப்படுகிறது.”அவை தனியார் நிறுவனங்களின் கைகளில் அளிக்கப்படும் சரக்குகளாக மாற்றப்பட்டன என்பதே இதன் அர்த்தம். நிதியமைச்சர்,“பணமாக்கல்” நடவடிக்கை தனியார்மய நடவடிக்கையிலிருந்து மாறுபட்டது என சீறிப்பாய்ந்து விவாதிக்கிறார். ஆனால் அது வெற்று வார்த்தை ஜாலங்கள்தான். “பணமாக்கல்” என்பதன் அர்த்தம் ஒருசொத்தை தனியார் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நடத்த அனுமதி கொடுப்பது: அந்தசொத்து அரசாங்கத்திடமே சில காலம் கழித்து திருப்பியளிக்கப்பட்டாலும்(அந்த சமயத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள், அவ்வாறுகுத்தகைக்கு எடுத்தவர், அந்த சொத்துகளில் செய்திருக்கும் முதலீடுகளின் மதிப்பு போன்றவைகள்),அந்த சொத்து பெரும்பாலும் பழைய குத்தகைதாரர்க்கே திருப்பி அளிக்கப்படலாம்அல்லது வேறொருவருக்கு விலைக்கு அளிக்கப்படும் என்றே கருதப்படுகிறது. “பணமதிப்பாக்கல்” என்பது ஒட்டு மொத்தமாக என்றென்றைக்குமாக விற்பதற்கு பதிலாக கொஞ்ச கொஞ்ச காலத்திற்கு ஒரு விலைக்கு விற்பது என்பதாகும்; ஆனால் நடைமுறையில்,அது விற்பனை என்பதைத் தவிர வேறல்ல.
பெருவீதபொருளாதாரத்தின் அகராதிப்படி “பணமாக்கல்”என்பதற்கும், அரசின் செலவுகளை சமாளிப்பதற்கு நிதிக்கணக்கில் பற்றாக்குறையுடன் நடத்துவது என்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. நிதிக் கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டால், அரசு சொத்துகளை(அது அரசு பத்திர வடிவங்களாக, அரசே பின்னர் அதன் முதிர்வு தொகையைத்தர வேண்டிய வகையில்) தனியார் கைகளில் அளிக்கும். அவ்வாறு செய்வதன் வாயிலாக கிடைக்கும் பணத்தை, அது தனது செலவுக்கு பயன்படுத்தும்: “பணமாக்கல்” என்பதில் அது சொத்துக்களை (சாலைகள், ரயில் நிலைய நடைமேடைகள் போன்றவைகளை) தனியார்களின் கைகளில் கொடுத்துவிடும்; அவ்வாறு கொடுப்பதன் வாயிலாகஅதற்கு என்ன கிடைக்கிறதோ அதனை அரசு தனதுசெலவுகளுக்குப் பயன்படுத்தும். பெருவீத பொருளாதார மட்டத்தில் பொருளாதார வேறுபாடு,தனியார் கைகளில் அளிக்கப்படும் சொத்துகளின் தன்மையில் மட்டுமே வேறுபடுகிறது. அதைத்தவிர,இரண்டு வழிகளில், நிதி திரட்டுவதன் பின்விளைவுகள், நடப்புக் கணக்கு பணப்பற்றாக்குறை மூலமாகவும், “பணமாக்கல்” மூலமாகவும் செய்யப்படுவது, மிகச்சரியாக ஒரே மாதிரியானவை.
விளைவு எப்படி இருக்கும்?
ஆனால். விளைவுகளைப் பொறுத்தவரை இந்த இரண்டும் ஒன்றேயல்ல. தனியார் துறை பொது சொத்துகளை இயக்குவது என்பதன் பொருளாதார விளைவுகள், நடப்பு பற்றாக்குறையைவிட மிகமிகமோசமானதாக இருக்கும், ஏனெனில் தனியார் துறை பொதுச் சொத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதன் நோக்கம்,அதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்பதற்காகத்தான். ஆகவே (தன் லாபத்தை அதிகரிக்க)அது பயன்படுத்துவோர் கட்டணத்தை உயர்த்தும்,அந்த சொத்தை இயக்கும் போது தொழிலாளர்ஊதியச் செலவை வெட்டும், இதைப் போன்ற பல செயல்களில் ஈடுபடும். இத்தகைய நடவடிக்கைகள், பொருளாதாரத்தில் சராசரி லாப விகிதத்தை திறம்பட உயர்த்தும், அதன் அர்த்தம், தொழிலாளர்க்கான ஊதியம் என்பதிலிருந்து முதலாளிக்கான லாபம் என்ற மாற்றம் நடைபெறும். ஊதியம் பெறுபவர்களின் நுகர்வுக்கும் வருமானத்திற்குமான இடைவெளி லாபம் ஈட்டுவோரைவிட மிக மிக அதிகமாக இருக்குமாதலால், ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒட்டுமொத்த முதலீட்டிற்கு, நுகர்வு அளவு குறைந்துஅதன் விளைவாக ஒட்டு மொத்த கிராக்கி வீழ்ச்சியடையும். அரசின் செலவுகளை சமாளிக்க இந்தமுறையானது, நிதிப்பற்றாக்குறை அல்லது லாப வரி அல்லது சொத்துவரி போன்றவைகள் மூலம் அரசுசெலவுகளை சமாளிப்பதை போன்று விரிவாக்கத்திற்கு வழிகோலாது. மாறாக, பிரம்மாண்டமான பயன்படுத்தப்படாத திறன்களை சுமந்து கொண்டும், அதேசமயம் வேலையின்மையும் உள்ள பொருளாதாரம், தெள்ளத்தெளிவாக தரம் தாழ்ந்த ஒன்றாகும்.
ஜனநாயக விரோதம்
இந்த பாதிப்புகளைத் தவிர, இதற்குமேலும், இது கொள்கை நிலையில் பெரும் இடப்பெயர்வை குறிக்கிறது, பொருளாதாரம் என்பதற்கும் அப்பால் பார்த்தால் அடிப்படையில் இது ஜனநாயக விரோதமானது. ஒரு நவீன சமூகத்தில், அரசு பலதரப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் வழங்குகிறது. கிட்டத்தட்ட இலவசமாக, மக்களுக்கு அவர்களின் உரிமை என்ற வகையிலும், அவர்கள் குடிமக்கள் என்றதகுதியிலும், பரந்துபட்ட பொதுச்சொத்துகள் இத்தகைய பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்கிறது. அத்தகைய சொத்துகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், சேவைகளும் மக்களால் நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் துய்க்கப்படுகிறது.
இந்த சொத்துக்கள் உண்மையில் யாருக்காக?
நீண்ட நெடுங்காலமாக, பொருளாதாரவாதிகளிடையே மிகவும் பலமான கருத்தாக இருப்பது, இத்தகைய பொருட்களும் சேவைகளும் முடிந்த அளவில் இலவசமாக இருக்க வேண்டும் என்பதுதான். அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சு யார் வேண்டுமானாலும், காசு கொடுக்காமல் அமர்ந்து கொள்ளத்தான்: ஒரு இரயில்வே நடைமேடை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தத்தான், அதற்கான பெயரளவு கட்டணத்தை(பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கி) செலுத்தினால் போதும், ஒரு பொது அருங்காட்சியகம் யார் வேண்டுமானாலும் சென்று பார்ப்பதற்குத்தான்,ஒன்று இலவசமாகவோ அல்லது பெயரளவிற்கு கட்டணம் வசூலிக்கலாம். உண்மைதான், அரசு இந்தக் கொள்கையில் சமரசம் செய்து கொண்டு,பெரும்பாலான பயன்பாட்டு கட்டணத்தை சரமாரியாக உயர்த்தியுள்ளது, இப்போதும்கூட இத்தகைய சேவைக் கட்டணங்கள், பெயரளவிற்கு என்பதைவிட அதிகமாக இருக்கக்கூடாதுஎன்பது கிட்டத்தட்ட ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய பொதுச் சொத்துகளின் மூலமாகக்கிடைக்கும் அந்த பொருட்கள் மற்றும் சேவைக்குகட்டணமில்லாமல் இருப்பது, அல்லது பெயரளவிற்கு கட்டணம் நிர்ணயிப்பது என்பது பயன்பாட்டாளர்கள் அனைவரும் சமம் மற்றும் அவர்கள் குடிமக்கள்என்றளவில் இந்த சொத்துகளின் இணை உரிமையாளர்கள் என்பதை பிரதிபலிப்பதாகவும்,அந்த சொத்துகளை அவர்களின் சார்பில் அரசு உரிமை கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாகவும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான பொதுச்சொத்துகள் பல பொதுத்தளங்களுக்கு பாத்தியப்பட்டது,அதில் ஒன்று உரிமைத் தளம்,அதன் காரணமாக அனைத்து குடிமக்களும் சமமான உரிமையில் அனுபவப் பாத்தியதைகொண்டவர்களாகிறார்கள்.
இதற்கு நேரெதிராக, சந்தை என்பதோ உள்ளார்ந்தே சமமின்மை கொண்டது,அங்கு ஒரு மனிதனின் முக்கியத்துவம், அவரது வாங்கும் சக்தியின் அளவின் அடிப்படையில்தான். ஒரு பொதுச் சொத்து அரசாங்கத்திடமிருந்து தனியார் கைக்குமாற்றப்படும்போது,அதன் அர்த்தம், அந்த சொத்தால்உருவாக்கப்படும் பொருள், பொதுத் தளத்திலிருந்து, அங்கு எல்லோரும் குடிமக்கள் என்றளவில் ஒவ்வொருவரும் சமமாக அனுபவித்தது என்பதிலிருந்து மாறி ஒரு சரக்காகி, அதனை ஒரு சிலர் மட்டுமே (அதிக வாங்கும் சக்தியுடையவர்) அதனை அணுகமுடியும் என்ற நிலை உருவாகிறது. இது பொதுப் பொருட்கள் என்ற தளத்திலிருந்து,சரக்குகள் என்ற தளத்திற்கோ, அல்லது உரிமைகள் என்ற தளத்திலிருந்து வாங்கும் சக்தி என்ற தளத்திற்கோ மாறுகிறது.
இது ஜனநாயகத்தை சுருக்குவதாகும், மிகப்பெரும்பான்மையான மக்கள் அவர்களின் உரிமையாக அனுபவித்து வந்த பொதுச் சொத்துகளிலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதாகும். இத்தகைய ‘பணமாக்கல்’ பிற்போக்கான வருவாய்பங்கீட்டை உள்ளடக்கியது என்பது நன்கு அறியப்பட்ட உண்மையாகும், அதுவே மேலேயும் குறிப்பிடப்பட்டுள்ளது: அவ்வாறான பிற்போக்கான பங்கீட்டுடன், உரிமைகளும் சுருக்கப்படுகின்றன. சாலையைப்பயன்படுத்த இயலாமல் போவது,ரயில்வே பிளாட்பார்மிற்குள் நுழைவது இயலாமல் போவது நடக்கப் போகிறது. இவை தற்காலம் வரை எந்தக் கட்டுப்பாடுமின்றி ஒருவர் அனுபவித்து வந்த உரிமை. ஒவ்வொரு பொருளையும் சரக்காக மாற்றும்போது, அத்துடன் உள்ளார்ந்து இருப்பது, இத்தகைய விலக்குகள் குடியுரிமை என்ற தளத்தை வெட்டிச் சுருக்குகிறது: ஆகவே, தற்போதைய அரசு,சரக்குமய போதையில் இருப்பதால், குடிமக்களுக்கு சமமான ஜனநாயக உரிமைகள் என்பதற்குப் பதிலாக பொருளாதாரத் தீண்டாமை என்பதாக மாறியுள்ளது.
கட்டுரையாளர் : பேரா.பிரபாத் பட்நாயக்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (செப்.12)
தமிழில் : க.ஆனந்தன்