articles

img

மானம் காப்போரின் வாழ்வு காப்போம்! -

‘‘சின்ன சின்ன இழை, பின்னிப் பின்னி வரும், சித்திரக் கைத்தறிச் சேலை யடி, நம்ம தென்னாட்டில் எந்நாளும், கொண்டாடும் வேலையடி’’ என்று நம் மானம் காக்க உழைக்கும் தொழிலாளர்களை பட்டுக் கோட்டை கொண்டாடினார். நம் மானம் காக்கும் அந்த தொழிலாளர்களின் வாழ்வு காக்க-அவர் களை அமைப்பாய் திரட்ட ஓர் மாநாடு கூடுகிறது.  உழைப்பு ஒன்றினால் மட்டுமே இவ்வுலகம் சித்திரச் சோலைகளாக மாற்றப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தங்களது உழைப்பை கொடுக்கும் தொழிலாளர்கள், தங்களுடைய தேவைக்காக பண்டமாற்று முறையிலேயே உழைப்பின் பலனை பெற்று வந்தனர் . உழைப்பாளிகளுக்கு பண்ட மாற்றத்தின் மூலமாக சம்பு ( நெல்- தானி யம்), அளம் (உப்பு) பண்டைக்காலத்தில் வழங்கப் பட்டது. பணப் பரிவர்த்தனை ஏற்பட்ட பின்பாக  சம்பளமாக மாறியது. பிழைப்பு சாதனங்களில் உணவு, உடை, இருப்பிடம், திருமணம், பொழுது போக்கு, மருத்துவம், சமூக உறவுகளின் தேவை ஆகியன அடங்கும்.

ஊதியமும் - உயர்வும்

ஊதியம் என்பது சராசரி ஊதியம், குறைந்த பட்ச ஊதியம், உழைப்புக்கேற்ற ஊதியம், தேவைக்கு ஏற்ற ஊதியம் என பல வகையாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் தங்களது ஒற்றுமையை, கூட்டுப்பேர சக்தியை உணர்ந்த பிறகு ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் தங்களது ஊதியத்தை உயர்த்திப் பெற்றனர். 1900 ஆண்டு காலகட்டத்தில் தொழிலாளர்கள் உழைப்பு அபரி மிதமாக கொட்டிக்கிடந்த நிலையில் அரசும் நிறுவனங்களும் தங்கள் இஷ்டப்படி கூலியை தீர்மானித்தனர். காரல் மார்க்ஸின் வருகை, அவர் எழுதிய மூலதனம், தொழிலாளர்களுக்கு சங்கத்தின் அருமையை போதித்தது. ரஷ்யப் புரட்சி, மன்னராட்சி முடிவு, மக்களாட்சி தோற்றம் ஆகிய காரணங்களினால் தொழிலாளர்களுக்கு மரியாதை கிடைத்தது. தொழிற்சங்கங்கள் உருவாயின. உலகத் தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது. தொழிலாளர்கள் உரிமை பெற்றனர். இந்தியாவில் தொழிலாளர்கள் அமைப்பா கத் திரள அடிப்படையாக அமைந்தது ஆங்கிலே யரின் நடவடிக்கைகளே. பிரிட்டிஷார் இந்தியா வில் கிடைக்கின்ற கனிம வளங்களை தங்களது நாட்டிற்கு கொண்டு செல்லவும், தங்களது நாட்டு உற்பத்திகளை சந்தைப்படுத்தவும் இந்திய மக்களின் உழைப்பை குறைந்த கூலியில் பெறவும் ஏற்படுத்தப்பட்ட ரயில்வே மற்றும் பஞ்சாலைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அமைப்பாக திரண்டனர். இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைமையில் இருந்த பாலகங்காதர திலகர், தேசப் பிதா மகாத்மா காந்தி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை,  சிங்காரவேலர், சர்க்கரை செட்டியார் என பலரும் தொழிலாளர்களை திரட்டி, தொழிற்சங்கங்களை அமைத்து  போராட்டக் களத்தில் முன்நின்றனர். 

பஞ்சப்படி

இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட பஞ்சம் காரணமாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி கொடுக்கும் நடைமுறை ஏற்பட்டது. அதுவே பின்னாளில் அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி, நிரந்தர பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ திட்ட நிதி என சம்பளத்தில் பல வகைகளாக பரிணமித்தது.  அடிப்படைச் சம்பளம் என்பது பஞ்சப்படியுடன் இணைத்து தீர்மானிக்கப்படுகிறது.  இந்தியா வில் பஞ்சப்படி 1936 இல் உருவானது. அதன் பின்பாக 1960, 1982, 2001, 2016 என பஞ்சப்படி அடிப்படை ஆண்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள் ளது.  பஞ்சாலைத் தொழிலாளர்கள் 1936 ஆம் ஆண்டு  பஞ்சப்படி அடிப்படையிலேயே தங்களது ஊதியத்தை பெற்று வருகின்றனர். 

வேலை நிறுத்தமும் - ஒப்பந்தங்களும்

சுதந்திரத்திற்கு முன் 1946 ஜூலை 6 ஆம் தேதி அமைக்கப்பட்ட ராவ்பகதூர் வெங்கட் ராமையர் விசாரணை நீதிமன்றத்தின் மூலம் பஞ்சாலைகளில்  பணிபுரிந்த அன்ஸ்கில்டு தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டது மாதம் ரூபாய் 26 ஆகும்.  1956 ஆண்டு  கோவை ஒப்பந்தத்தின் மூலம்  ரூ 4 உயர்வு ஏற்பட்டு மாதம் ரூ.30 கிடைத்தது.   1960 ஆம் ஆண்டு அடிப்படைச் சம்பளத்தில் ரூ. 8 உயர்த்தப்பட்டு மாதம் ரூ 38 கிடைத்தது.  1962 ஆம் ஆண்டு அடிப்படைச் சம்ப ளத்தில் ரூ. 2 உயர்த்தப்பட்டு மாதம் ரூ. 40 கிடைத்தது. 1969 இல் போடப்பட்ட இரண்டாவது ஊதிய குழுவினால் ரூ.  15 உயர்த்தப்பட்டது. அதன் படி மாதம் ரூ. 55 சம்பளமாக கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நிர்வாகங்கள் அதனை அம லாக்க மறுத்தன. இதையடுத்து 1971 இல் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 12.12.1971 முதல் 11.3.1972 வரை மூன்று மாத கால வேலை நிறுத்தம் செய்தன. அதன் பின்னரே வி.பி.அருணகிரி தலைமையில் முத்தரப்புக் கமிட்டி அமைக் கப்பட்டு 1974 இல்  அடிப்படை ஊதியத்தில் ரூ. 5 உயர்த்தப்பட்டது. அதன் பின் 1979 இல் மீண்டும் கோரிக்கை எழுந்தது. ஆனால் நிர்வா கங்கள் கண்டுகொள்ள வில்லை . மீண்டும் வேலை நிறுத்தம் 25.05.1979 இல் துவங்கி 23.07.1979 வரை 59 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதன் பின்னர் போடப்பட்ட ஒப்பந்தத்தில்  ரூ. 45 உயர்த்தப்பட்டு அடிப்படைச் சம்பளம் ரூ. 100 ஆக உயர்ந்தது.  1987 ஆம் ஆண்டு  நீதிபதி கே.வரதன் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பஞ்சாலை கள் ஏ,பி,சி,டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப் பட்டு ரூ. 26 உயர்த்தப்பட்டு அடிப்படைச் சம்பளம் ரூ.126 ஆக உயர்ந்தது.  1994 நடராஜன் அவார்டு மூலம் ரூ.60 உயர்வு ஏற்பட்டு அடிப்படைச் சம்பளம் பஞ்சப்படி 340 புள்ளிக்கு ரூ 186 ஆக உயர்ந்தது. 340 புள்ளிக்குமேல் 4800 புள்ளி வரை நிலையான பஞ்சப்படியாக ரூ 892.50 அறிவிக்கப்பட்டது. இதன் பின்னணியிலும் நீண்ட நெடிய போராட்ட வரலாறு உண்டு.  1-8 -2010 ஆம் தேதி ஊதிய மாற்றத்திற்காக வழங்கப்பட்ட வேலைநிறுத்த நோட்டீஸ் 20- 8 -2021 முதல் 23-8-2001 வரை நடைபெற்ற மூன்று நாள் வேலைநிறுத்தம், மாநில அரசு தலையிடுவதாக அறிவித்தது, தொழிலாளர் ஆணையர் முன் நடந்த பேச்சுவார்த்தை சமரச முறிவுக்குப்பின், தமிழக அரசு தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு “10 பி” அடிப்படையில் அர சாணை எண் 690 நாள் 11- 9- 2020 மூலம் தொழில் தீர்ப்பாயத்திற்கு விடப்பட்ட தொழில் தாவா தீர்வு அடையாமல் உள்ளது .

ஊதியச் சுரண்டல் 

பஞ்சாலைகளில் ஊழியர்களின் ஊதியச் சுரண்டலுக்கு அப்ரண்டீஸ் சட்டத்தை நிர்வா கங்கள் பயன்படுத்தின. 3 ஆண்டுகள் திருமணத் திட்டம் என அமலாக்கப்பட்டது. ஆசை வார்த்தை காட்டி, விடுதி அமைப்புடன் கொத்தடிமை முறையை கொண்டு வந்தனர். அவைகளை எதிர்த்த போராட்டங்கள் தொடர்ந்தன. நிர்வா கங்களின் அடக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து விடுபட விடுதியிலிருந்து தொழிலாளர் கள் சுவர் ஏறி குறித்து வெளியேறிய சம்பவங்க ளும் தொடர்கதையாக நிகழ்ந்தன. உயர் நீதிமன்ற வழிகாட்டுதல், அன்றைய பஞ்சாலை சம்மேளன பொதுச்செயலாளர் தோழர் பி.எம். குமார் மற்றும் பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஆர்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடவடிக்கை காரணமாக பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் அரசாணை மூலம் அறிவிக்கப் பட்டது. பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 2022 ஏப்ரல் முதல் ரூபாய் 493/- வழங்கவேண்டும்.  பஞ்சாலைகளில் பயிற்சியாளர்கள் இல்லை என்று சொல்லும் நிர்வாகங்கள் நிரந்தரத் தன்மை யோடு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு கொடுக்கின்ற ஊதியம் ரூபாய் 250 லிருந்து 400 வரை மட்டுமே. நகர்ப்புறங்களில் இருந்து பஞ்சாலைகள் கிராமப்புறங்களுக்கு இடம்பெயர் ந்துள்ளன. பெண்கள், இளம் சிறார்கள், வெளி மாநில தொழிலாளிகள் என உழைப்புச் சுரண்டல் அதிகரித்துள்ளது. பஞ்சாலைகளில் நடக்கும் சட்ட மீறல்கள் தொழிலாளர்கள் படும் துன்பங்கள் வலைதளங்கள் மூலமாக அவ்வப்பொழுது வெளிவருகின்றன. 

கொரோனா நெருக்கடியும் - நடவடிக்கைகளும் 

தமிழகத்தில் ஒன்றிய அரசின் 7 பஞ்சாலைக ளும், மாநில அரசின்  6 பஞ்சாலைகளும், தனி யார் பஞ்சாலைகள் 1500 க்கு மேல் உள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட்டுறவு பஞ்சாலைகள் தவிர இதர பஞ்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள்  பெரும் பாதிப்பை சந்தித்தனர். அரசின் கூட்டுறவு பஞ்சா லைகளில் மட்டுமே தொழிலாளர்கள் ஊதியம் முழுமையாக பெற்றனர். தற்பொழுது நடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மாதம் ஒன்று க்கு சம்பள உயர்வு ரூபாய் 2500/- ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தனியார் பஞ்சாலைக ளில் தொழிலாளர் ஒற்றுமை - சங்க செயல்பாடு இருந்தால் ஓரளவு நிவாரணம் பெறமுடிகிறது. ஊதிய ஒப்பந்தமும் ஏற்படுகிறது. ஒன்றிய அரசு நடத்தி வந்த பஞ்சாலைகள் 2020 ஏப்ரல் 23 முதல் மூடப்பட்டுள்ளது. அதில் பணிபுரிந்த  தொழிலாளர்கள் வீதியில் உள்ளனர். இந்த காலத்தில் இந்தியா முழுவதும் தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகத்தில் உள்ள 23 பஞ்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதில் தமிழ்நாடு 7, மகாராஷ்டிரம் 5, கேரளா 5,குஜ ராத், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்க ளில் தலா ஒரு ஆலை வீதம் மூடப்பட்டிருக்கிறது. 

ஒன்றிணைவோம் வென்றிடுவோம்

 தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் ஆலை யின் சொத்துக்களை விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்குடன் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் உள்ளது. தேசிய பஞ்சாலைகள்  இருக்கக்கூடிய மாநிலங்களில் தொழிலாளர்களையும் தொழிற் சங்கங்களையும்  ஒருங்கிணைத்து போராட்டக் களம் காண வேண்டும். அதன் ஒரு பகுதியாக “இந்தியாவை காப்போம்’, ‘என்டிசிஐ காப்போம்“ இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது நமது கடமை. இன்று  ஜவுளித் தொழிலில் பகுதியாக உள்ள கைத்தறி, விசைத் தறி, ஆயத்த ஆடை உற்பத்தி என அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோதக் கொள்கைகளால் பாதிக்கப்பட் டுள்ளனர். தொழிற்சங்கம் சேர்ந்த இடங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது .ஓரளவு நிவாரணம் பெறுகின்றனர். தொழிலாளர் நிலை பற்றி விவா திக்கவும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு திட்டமிடவும் பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலில் உள்ள தொழிற்சங்கங்கள் தொழிலா ளர் சம்மேளனங்கள் நடவடிக்கையின் மூலமாக அமைப்பு மாநாடு 2022 மே 17 ஆம் தேதி கோவை யில் நடைபெறுகிறது.

 

;