articles

img

மோடி அரசின் சட்டங்கள் விவசாயிகளைக் கொன்றுவிடும்....போராடும் விவசாயிகள் குமுறல்...

புதுதில்லியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீரியத்துடன் போராடிக்கொண்டிருக்கும் பஞ்சாப் விவசாயிகளில் 22 மாவட்டங்களி லிருந்து வந்துள்ள சிலரிடம் ‘தி இந்து’
நாளிதழ் செய்தியாளர் பேட்டி கண்டார். அவர்கள் தங்கள் மனக்குமுறலையும் மன உளைச்சலை யும் செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவை வருமாறு:22 வயது ஜக்மீத் சிங், பட்டியாலாவில் உள்ள தன் நிலத்தில் கோதுமையும், நெல்லும் பயிரிட்டு வருகிறார். இவர் செய்தியாளரிடம் “நானும் என்னைப்போன்ற இதர விவசாயிகளும் நாங்கள் உற்பத்தி செய்திடும் விளைபொருள்களை கார்ப்பரேட்டுகளிடம் விற்பதற்கு அரசாங்கத்தை அனுமதித்திட மாட்டோம்” என்றார்.

மோடி ஒன்றும் அனைவரின் முதலாளி அல்ல
அமிர்தசரசைச் சேர்ந்த காஷ்மீர் சிங் (72), “புதிய வேளாண் சட்டங்கள் கருப்புச் சட்டங்கள்” என்றும், “அவை விவசாயிகளைக் கொன்றுவிடும்” என்றும் கூறினார்.ரூப்நகரைச் சேர்ந்த ஹர்பன் சிங் (60), “இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், அதன்பின்னர் எங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நாங்கள் எந்த நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது” என்றார்.ஃபட்டேகாரைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங் (34), “சீக்கியர்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்த வர்கள். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக இறுதி வரை போராடுவார்கள்” என்றார்.   

ஜலந்தரைச் சேர்ந்த ரண்வீர் சிங் (56), “பிரதமர் நரேந்திர மோடி ஒரு பொது ஊழியர் மட்டுமே”என்றும் “அவர் ஒன்றும் அனைவரின் முதலாளி அல்ல” என்றும், “எனவே அவர் ஒரு பொது ஊழியரைப் போல நடந்துகொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.
கார்ப்பரேட்டுகளை நம்பமுடியாது 

லூதியானாவைச் சேர்ந்த ஜக்தேவ் சிங்(37), “நாங்கள் கார்ப்பரேட்டுகளை நம்ப முடியாது” என்றும்,“அவர்கள் குறித்து எங்களுக்கு ஏற்கனவே அனுபவங்கள் உண்டு” என்றும் தெரிவித்தார். அவர் மேலும், “ஒரு பன்னாட்டு முதலாளி  எங்களிடம் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டார். உற்பத்தி செய்தபின்னர், உற்பத்தியான உருளைக் கிழங்கு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியபின்னர் அவர்கள் எங்களுக்கு அதற்கான பணத்தைக் கொடுத்தார்கள்,” என்றார்.

மோகாவைச் சேர்ந்த பால்கரன் சிங் (40), “இப்போது நாங்கள் கமிஷன் ஏஜண்டுகளிடம் ஒருசிலலட்சம் ரூபாய் கடனாகப் பெறமுடி யும். அவர்களையெல்லாம்  அப்புறப்படுத்திவிட்டீர்கள் என்றால் எங்களுக்குப் பாதுகாப்பு என்பதே கிடையாது” என்றார்.  குர்தாஸ்பூரைச் சேர்ந்த விக்ரம்சிங் (46), “புதிய வேளாண்சட்டங்கள் எங்களை ஒப்பந்தவிவசாயம் செய்திட நிர்ப்பந்திக் கின்றன” என்றும், “விளைந்த விவசாயப்பொருள்களை எங்களிடம் ஒப்பந்தம் செய்துகொண்டவர் விரும்பவில்லை என்றால், அவர் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டுச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன” என்றும் கூறினார்.கபூர்தாலாவைச் சேர்ந்த அவதார் சிங் (55) என்பவர், இந்தப்புதிய வேளாண் சட்டங்கள் அனைத்துத்தரப்பினரையும் தாக்கிடும் என்றும், விவசாயிகளை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் பாதிக்கும் என்றும் கூறினார்.

அடிமாட்டு விலைக்கு...
தரன்தரனிலிருந்து வந்துள்ள குர்பிந்தர் சிங் (35), “புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், பின்னர் குறைந்தபட்ச ஆதார விலை என்பது கிடையாது. எனவே விவசாய விளைபொருள்கள் அனைத்தையுமே நாங்கள் அடி
மாட்டு விலைக்குத்தான் விற்கவேண்டிய அவல நிலை உருவாகும். ஏனெனில் நாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை இனி அரசாங்கம் கொள்முதல் செய்யப் போவதில்லை” என்றார்.“கார்ப்பரேட்டுகள் எங்கள் நிலங்களை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு பின்னர் அதற்கான தொகையை எங்களுக்குத் தரவில்லை என்றால் நாங்கள் என்னசெய்ய முடியும்? ஏனெனில் இதற் காக நாங்கள் நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது,” என்று மொஹாலியைச் சேர்ந்த மன்பிரீட் (38) கேள்வி எழுப்பினார்.    

 படிண்டாவைச் சேர்ந்த ஜக்ஸ்வீர் சிங் (29), “பஞ்சாப் விவசாயிகள் ஏற்கனவே கடன் வலைக்குள் தள்ளப்ப்பட்டுவிட்டார்கள். இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் அவற்றை அதிகரித்திடவே இட்டுச்செல்லும். இதன்மூலம் அவர்கள் பாதுகாப்பின்மை மேலும் அதிகமாகும்,” என்றார். அவர் மேலும், இந்தச் சட்டங்கள் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்திடும் என்றார்.முக்த்சர் என்னுமிடத்தைச் சேர்ந்த அர்ஸ்பிரீட் சிங் (32), “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை, தனியார் மண்டி வியாபாரி களைச் சார்ந்திருக்கக்கூடிய நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது” என்றும், “விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்க வேண்டுமானால் அவர்களை, தனியார் மண்டி வியாபாரிகளிடம், மண்டியிட வேண்டிய நிலையை உருவாக்கி இருக்கிறது” என்னும் கூறினார்.ஹோஷியாபூரைச் சேர்ந்தஹர்மன்ஜித் சிங் (34), “நான்என் நிலத்தில் உற்பத்தி செய்யப் பட்ட கரும்புகளை ஒரு தனியார் ஆலை முதலாளியிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்தேன், இன்றளவும் அதற்கான தொகையை என்னால் பெறமுடிய வில்லை. இந்தச் சட்டம் வந்துவிட்டால் இந்த நிலைதான் அனை வருக்கும் வரும்,” என்றார்.

பாதுகாப்புகளை பறித்துவிடும்
மன்சாவைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் (65), “இப்போது நான் என் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றால், நான் இடைத்தரகர்களிடம் கடன் பெற முடியும். ஆனால் இந்தச்சட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் நீக்கப்பட்டுவிட்டால், எங்களுக்குக் கடன் கொடுப்பார் யாருமில்லை. வங்கிகளிடமிருந்தெல்லாம் அவ்வளவு எளிதாகக் கடன் பெற முடியாது,” என்றார்.பர்னாலாவைச் சேர்ந்த குர்ஜாந்த் சிங் (50), “நாங்கள் எங்கள் விளைபொருள்களைத் தனியார் மண்டிகளில் விற்கத் தயாரில்லை,” என்றார்.சங்ரூரைச் சேர்ந்த ரெஷ்மா கவுர் (60), “இந்தச் சட்டங்கள் எங்களுக்கிருந்துவந்த பாதுகாப்பு கள் அனைத்தையும் பறித்துக் கொண்டுவிடும்,” என்றார். அவர் மேலும், “எங்களுக்கு தனியார் சந்தை குறித்து எதுவும் தெரியாது,” என்றும் கூறினார்.ஃபசில்காவிலிருந்து வந்துள்ளகுர்விந்தர் சிங் (45), “இந்தச் சட்டங்களை விவசாயிகள் ஏற்கவில்லை என்கிறபோது, பின் ஏன் இவற்றை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

பெரோஸ்பூரிலிருந்து வந்துள்ளநச்சத்தார் சிங் (42), “விவசாயி களுக்குத் தாங்கள் விளைவித்த விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார  விலை கிடைக்கவில்லை என்றால், அவர்கள் அழிந்துவிடுவார்கள்,” என்றார்.ஃபரித்கோட்டைச் சேர்ந்த பல்டேஜ் சிங் (45), “ஒப்பந்த விவசாயத்திற்கு நான் எப்போதும் எதிரி” என்றார்.நவான்சாஹரைச் சேர்ந்த வீரேந்தர் மான் (42), “தாங்கள் விளைவிக்கும் விளைபொருள் களை யார் வாங்குவார் என்று தெரியாத நிலையில், நிச்சயமற்ற தன்மை உருவாகிவிடுகிறது,” என்றார்.பதான்கோட்டைச் சேர்ந்த குல்தீப் சிங் (24), “அரசாங்கம் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும், இதில் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதிபடக் கூறினார்.

==ச.வீ.==