articles

img

புத்தாண்டை நன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.... பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்....

2020ஆம் ஆண்டைக் குறிப்பிட, லத்தீன் சொற்றொடரான ‘அன்னஸ் ஹாரிபிலிஸ்’ என்பது விரிவானமுறையிலும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் பயன்படுத்தப்பட்டது. இதன் பொருள் ‘பயங்கரமான ஆண்டு’ என்பதேயாகும். முன்னெப்போதும் இல்லாத ஆண்டாக இந்த ஆண்டு விளங்கியதே இயல்பாகஇதற்குக் காரணமாகும். உலகம் கொரோனா வைரஸ் தொற்று என்னும் கொடிய நோயை இந்த ஆண்டுதான் கண்டது. இதற்குமுன் இத்தகையதொரு நோய் என்பது 1918-19இல்தான் உலக அளவில் “ஸ்பானிஷ் ஃப்ளூ” என்ற பெயரில் வந்தது.  

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டின் இறுதியில் சுமார் 8 கோடியே 10 லட்சம் பேரை(81 மில்லியன்) கவ்விப்பிடித்துள்ளது. இதில் 18 லட்சம்பேர் (1.8 மில்லியன்) பேர் இறந்துவிட்டார்கள். இது,மிகப்பெரிய அளவில் மக்களுக்குத் துன்ப துயரங்களை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்தி, அவர்களில் பலர் ஜீவித்திருப்பதையே பிரச்சனையாக்கியிருக்கிறது.உலகம் முழுவதும் இந்நோய் மிகப்பெரிய அளவில் வெடித்ததும், அதனைத் தொடர்ந்து சமூக முடக்கம் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டு, தொழிற்சாலைகள் பல மூடப்பட்டன. பல தொழில்பிரிவுகளில் வேலை இழப்புகள் ஏற்பட்டன. பல லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்தார்கள்.இத்தகைய பொருளாதார மந்தத்திற்கு மத்தியிலும், பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களானார்கள்.  நிதிக் கழகங்களின் லாபங்கள், பல்கிப் பெருகிய அதே சமயத்தில், பல லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து, அவர்களின் குடும்பங்கள் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாயின.    

முரட்டுத்தனமான அரசால் மிகப்பெரும் துன்பம்
இத்தகைய நிலைமைக்கு இந்தியாவும் தப்பவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பீடித்த நாடுகளில் உலக அளவில் இந்தியா, அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக மாறியிருக்கிறது. இவ்வாறு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டிவிட்டது. சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இத்தொற்றால் இறந்துவிட்டார்கள். மோடி அரசாங்கத்தின் திட்டமிடப்படாத மற்றும் அவசர கதியில் பிறப்பிக்கப்பட்ட சமூக முடக்கம் பொருளாதாரத்தை ஆழமான நெருக்கடியில் ஆழ்த்தியது. பொருளாதாரத்தை அழித்த செயல், பல லட்சக்கணக்கான புலம் பெயர்ந்தோர் தொலைதூரத்தில் உள்ள தங்கள் சொந்த கிராமங்களுக்கு, பசி-பட்டினியுடனும், நோய்களுடனும் பல்லாயிரம் மைல்கள் நடந்தே செல்ல வேண்டியகொடூரமான நிலையை ஏற்படுத்தியது.  இது முரட்டுத்தனமான மோடி அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் துன்ப துயரமாகும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி வீதம், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மைனஸ் 23.9 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது. அடுத்து, ஜூலை-செப்டம்பர்காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதத்திற்கு வீழ்ச்சிஅடைந்தது. இவற்றின் விளைவாக, பல லட்சக்கணக்கானவர்கள் வேலையற்றவர்களானார்கள். முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருந்தோரின் நிலை இதைவிட மிகவும் மோசமாகும். வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் 24 சதவீதமாக உயர்ந்தது. இடையில் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டபோதிலும்,  இப்போது டிசம்பரில் இது 8.5 சதவீதத்திற்கு உயர்ந்திருக்கிறது.

பட்டினிக் கொடுமைக்குள்...
கொரோனா வைரஸ் தொற்றும், எதேச்சதிகார ஆட்சியும் மக்களின் வாழ்க்கையில் கடும் நாசத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் பஞ்ச நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 2020 உலகப் பட்டினி அட்டவணையின்படி, இந்தியா உலகில் உள்ள 107 நாடுகளில் 94ஆவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. நாட்டிலுள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் 7 கோடி (70 லட்சம்) டன்கள் உணவு தானியங்கள் இருப்பு உள்ள நிலையிலேயே மக்கள் இவ்வாறு பட்டினிக் கொடுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உலகில் உள்ள எதேச்சதிகார ஆட்சியினரைப் போன்றே, மோடியும், கோவிட் 19 கொரோனா வைரஸ்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு தன் எதேச்சதிகார ஆட்சியை மேலும் தீவிரமாக்கியிருக்கிறார். இதில் மிகவும் கொடுமையான அம்சம் என்னவெனில், கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக்கொண்டு இதில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்து வசூலிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் நிதியிலிருந்து, இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமானநிவாரணம் அளித்திட மறுப்பதாகும். இது தொடர்பாக எதார்த்தத்தில் அரசாங்கம் இதுவரை செலவு செய்திருப்பது என்பது, 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம் கிடையாது. அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் குறைவான தொகையேயாகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கிட வேண்டும் என்று நவீன தாராளமயப் பொருளாதாரவாதிகளே அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளபோதிலும், அதையும் கேட்கக்கூட அரசாங்கம் மறுத்து வருகிறது.  

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து அரசாங்கம்அறிவித்த ஊக்குவிப்பு நிதித்தொகுப்புகள், கார்ப்பரேட்டுகள் லாபத்தை வீங்கச் செய்வதற்கே உதவியிருக்கின்றன. 2019 டிசம்பரின் இறுதியில் 80 பில்லியனர்களாக இருந்த எண்ணிக்கை இப்போது 90 ஆக உயர்ந்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.43 டிரில்லியன் அளவிற்கு, அதாவது 37.2 சதவீதம், உயர்ந்திருக்கிறது. அதானியின் சொத்து மதிப்பு 3.02 டிரில்லியன் அளவிற்கு, அதாவது 113 சதவீதம் உயர்ந்திருக்கிறது.நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவிழக்கச்செய்யும் வேலையும், சட்டங்களை அவசரச்சட்டங்கள் மூலமாகக் கொண்டுவரும் வேலையும் தீவிரப்படுத்தப்பட்டன. மூன்றுவேளாண் சட்டங்களும், மூன்று தொழிலாளர் சட்டங்களும் (ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமும்) விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளில் கடும் தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளன. இச்சட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனம் பயன்பெறக்கூடிய விதத்திலுமே கொண்டுவரப்பட்டுள்ளன.  

கனிம வளங்கள் திருத்தச் சட்டம்  நிலக்கரி மற்றும் இதர கனிம வளங்களைத் தனியார் சூறையாடுவதற்கு வசதி செய்து தரும் விதத்தில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. சுற்றுச் சூழல் தாக்கம் மதிப்பீட்டு விதிகள்  வரைவு, இதற்குமுன் இருந்து வரும் பல சட்டங்களையும் ஓரங்கட்டும் விதத்திலும், உள்ளூர் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் விதத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வனப் பகுதிகளில் வேலைபார்க்கும் பழங்குடியினரை இது கடுமையாகப் பாதிக்கும்.

ஜனநாயக உரிமைகள் மீது நடந்த கடும் தாக்குதல்கள்
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஜனநாயக உரிமைகள்மீது கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு மிகவும் விரிவான அளவில் பயன்படுத்தப்பட்டன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வடகிழக்கு தில்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற மதவெறிக் கலவரத்தில் பொய்யாக சேர்க்கப்பட்டு, அவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.  

‘புனித ஜிகாத்’ அவசரச் சட்டங்கள், மதக் கலப்பு மணம் செய்துகொண்டவர்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காக, உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றன. காஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் அப்பட்டமான முறையில் மீறப்படுவது தொடர்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் இன்னமும் சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு இணையவழித் தொடர்பு பறிக்கப்பட்டிருக்கிறது.கூட்டாட்சித் தத்துவம் ஓரங்கட்டப்பட்டு, அனைத்தும் மத்தியத்துவப்படுத்தப்பட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் உரிமைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அல்லது ஓரங்கட்டப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி பற்றாக்குறைக்கான இழப்பீடு முழுமையாக வழங்க மறுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசுப் பட்டியலிலிருந்த விவசாயத்துறை பறிக்கப்பட்டு, மத்திய வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை மட்டந்தட்டும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களுக்கு உதவுவதற்கு அரசமைப்புச்சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.அமெரிக்காவுடன் ராணுவப் பிணைப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் இந்துத்துவா சக்திகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே உறவுகள் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவின் தலைமையிலான நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இருள் மேகங்களுக்கிடையே ஒளிக்கீற்றுகள்
2020 இவ்வாறு பயங்கரமான ஆண்டாக இருந்தபோதிலும், இருள் மேகங்களுக்கிடையே தென்படும் ஒளிக்கீற்றுகள் போல நல்ல அம்சங்களும் தெரிந்தன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் அதன் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும்  வீரஞ்செறிந்த போராட்டங்கள் நாடு முழுதும் வெடித்தன.2019 டிசம்பரில் துவங்கிய இக்கிளர்ச்சிப் போராட்டங்கள், 2020இன் முதல் மூன்று மாதங்கள் வரையிலும் நாடு முழுதும் நீடித்தது. இந்துத்துவா சக்திகளின் நிகழ்ச்சிநிரலுக்கு எதிரான முதல் மாபெரும் மக்கள் இயக்கம் இதுவாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டமும், தேசியக் குடிமக்கள் பதிவேடும் முஸ்லீம்களைக் குறிவைத்து அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவதைக்குறிக்கோளாகக் கொண்டவைகளாகும்.  கொரோனா வைரஸ் தொற்றும் அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட சமூக முடக்கமும் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற இவ்வியக்கத்திற்கு திடீரென்று முடிவினை ஏற்படுத்தி
விட்டது.

ஆண்டின் கடைசி இரு மாதங்கள் இரண்டாவது மாபெரும் மக்கள் இயக்கத்தைப் பார்த்தது. இந்தத் தடவை விவசாயிகள், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். ‘தில்லிக்குச் செல்வோம்’ என்னும் இயக்கம் நவம்பர் 26 அன்று துவங்கியது. அன்றையதினம் தொழிலாளர்கள் மேற்கொண்ட நாட்டின் மாபெரும் அகில இந்திய வேலை நிறுத்தமும் நடைபெற்றது. விவசாயிகளின் போராட்டம் புத்தாண்டிலும் தொடர்கிறது.இவ்விரு இயக்கங்களும் மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுக்கு மரண அடி கொடுத்து, தடுத்து ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்தவைகளாகும்.புத்தாண்டு இவ்வாறு ஓர் நன்னம்பிக்கையுடன் தொடங்குகிறது.  ஆண்டின் மத்திய வாக்கிற்குள் கொரோனாவைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மிக விரிவான அளவில் மக்களுக்குப்  போடப்படுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது. அதேபோன்று மக்கள் விரோத பிற்போக்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கட்டி எழுப்புவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்திடும் என்று நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 30,2020,

 தமிழில்: ச.வீரமணி

;