articles

img

இளைஞர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் மாநாடு - என்.ரெஜீஸ்குமார்

“வேலை அடிப்படை உரிமை!, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியா!!” என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு  மாநில 17ஆவது மாநாடு கள்ளக்குறிச்சியில் இன்று (செப்.11) துவங்குகிறது.

நெருக்கடியின் பிடியில் அடித்தட்டு மக்கள்

 நவதாராளமயக் கொள்கைகளை மோடி அரசு இன்னும் படு வேகமாக அமலாக்குகிறது. இதனால், நாட்டின் உழைக்கும் மக்கள் வேலையின்மை, வருமானமின்மை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்த போதிலும், அதன் பலனை மக்களுக்கு வழங்க மறுப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்படுகிறது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதும் கடுமையான வரிகள் விதிக்கப்படுகின்றன. அனைத்து பொருளாதாரச் சுமைகளும் அடித்தட்டு மக்கள் மீது சுமத்தப்படுகிறது. அதே நேரம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிவிலக்கு, ஊக்கத்தொகை என பல்வேறு பெயர்களில் சலுகைகள் வாரிவாரி வழங்கப்படுகின்றன. மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் மிகவும் பிற்போக்கான அம்சங்களில் ஒன்று, பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல். சுதந்திர இந்தியாவில் தொழில்துறை சுயசார்பு மற்றும் பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் வலுவான பொதுத்துறை கட்டப்பட்டது. பொருளாதார இறையாண்மை இல்லாத அரசியல் சுதந்திரம் பலவீனமானதாகவும் அர்த்தமற்றதாகவும் ஆகும்.  எனவே, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதி மூலதனம் நமது தேசிய சொத்துக்களை, பொதுத்துறை நிறுவனங்களை கையகப்படுத்த அனுமதிப்பது நமது பொருளாதார மற்றும் அரசியல் இறையாண்மையின் மீதான நேரடித் தாக்குதலாகும்.  

தொற்று நோயாக வேலையின்மை

கொரோனா நெருக்கடி தொடங்குவதற்கு முன்பே, வேலையில்லாத் திண்டாட்டம் நம் நாட்டில் ஒரு தொற்றுநோயாகப் பரவியது.  சிஎம்ஐஇ (CMIE) கணக்கெடுப்பின்படி, டிசம்பர் 2021 இல் இந்தியாவில் 5.3 கோடி மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.  உழைக்கும் வயது மக்கள்தொகை 12.1 கோடி அதிகரித்துள்ளது. அதற்கேற்ற வகையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. மாறாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.2 கோடி இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். பல ஆண்டுகால வேலையின்மை இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.  படித்த இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருப்பதையும் சிஎம்ஐஇ அறிக்கை காட்டுகிறது. 58.3 சதவீதம் பட்டதாரிகளும், 62.4 சதவீதம் முதுகலை பட்டதாரிகளும் வேலையில்லாமல் உள்ளனர்.  

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2014 இல் 2,207, 2015 இல் 2,732, 2016 இல் 2,298, 2017 இல் 2,404, 2018 இல் 2,741, 2019 இல் 2,851, 2020 இல் 3548 என 2014 முதல் 2020 வரை 18,781 பேர் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துள்ளனர். அந்த அளவிற்கு வேலையின்மை இந்திய இளைஞர்களை கொடூரமாக பாதித்துள்ளது.

தொடரும் விவசாய நெருக்கடியானது பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை விவசாயத்தில்  நீடிக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பு குறைந்து, இடம்பெயர்தல் அதிகரித்துள்ளது. மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தை வழங்கிய  மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு போதுமான நிதியை ஒதுக்காததால் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி வேலை செய்தவர்களுக்கு கூலி வழங்கப்படாத நிலையும் உள்ளது.  ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களின் பல்வேறு துறைகளின் தரவுகளின்படி  ஒன்றிய அரசு மற்றும் அரசு துறைகளில் 30 லட்சம் பணியிடங்களும், பல்வேறு  மாநில அரசு மற்றும் அரசு துறைகளில்  30 லட்சம் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவது இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வேலையின்மையைக் குறைக்க உதவும். ஆனால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத பணிநியமன தடைகள் நடைமுறையில் உள்ளன. 

சுரண்டலின்  கொடூர உத்தி

மேலும், உற்பத்தித் தொழில்கள், வங்கிகள், காப்பீடு, பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துத் துறைகளிலும் நிரந்தர வேலைகள் என்பதை ஒப்பந்த, தற்காலிக, வெளிமுகமை வேலையாக மாற்றும் மோசமான நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. நிரந்தர வேலை என்பதை ஒழித்துவிட்டு தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது என்பது இளைஞர்களின் உழைப்பை அதிக அளவில் சுரண்டுவதற்கான கொடூரமான உத்தியாகும். இதன் தொடர்ச்சி தான் இந்திய ராணுவத்தில் வீரர்களை தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்யும் ‘அக்னி பாதைத்’ திட்டம். பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்பது இன்னும் நெருக்கடியாக உள்ளது. தனியார் துறையில் கிடைக்கும் கண்ணியமான வேலைகள் எதுவாக இருந்தாலும், இந்த பிரிவு இளைஞர்களுக்கு மறுக்கப்படுகிறது. முறைசாரா துறையில் குறைந்த ஊதியம் மட்டுமே கிடைக்கும் பணிகள் மட்டுமே பட்டியலின, ஆதிவாசி மற்றும் சிறுபான்மையினருக்கு கிடைக்கிறது. அரசுத் துறைகள் தனியார்மயமாக்கப்படும் சூழலில் இப்பிரிவினரின் வேலைவாய்ப்பு இன்னும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும்.

சுருக்கமாகச் சொன்னால், மோடி அரசாங்கம் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பதுடன் இருக்கிற வேலைவாய்ப்புகளையும் அழித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பு என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, “மேக் இன் இந்தியா”, “ஸ்கில் இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, “ஸ்டார்ட் அப் இந்தியா” போன்ற வெற்று முழக்கங்கள் மற்றும் ஏமாற்றுப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறது.  தமிழக அரசு மற்றும் அரசு துறை களில் ஆறு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் அறி வித்தார். அந்தப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.  கல்வி, வேலை, சுகாதாரம் என அனைத்துத் தளத்திலும் தமிழக மக்கள் இன்று சந்திக்கும் சவால்களுக்கு அடிப்படைக் காரணம் இந்திய மற்றும் பன்னாட்டு பெருமுதலாளிகளின் நலனை மட்டுமே இலக்காகக் கொண்டு  அமலாக்கப்படும் நவதாராளமயமாக்கல் கொள்கைகள் தான். இந்த கொள்கைகளை முறியடிப்பதன் மூலம் மட்டுமே தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். 

எனவே, தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர், சிறுபான்மை மக்கள், பால் புதுமையினர் என அனைத்து தரப்பினருமாக இருக்கிற இளைஞர்களின் உரிமைகளை வென்றெடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்வைக்கும் இடதுசாரி, முற்போக்கு  கருத்தியலின்பால் தமிழக இளைஞர்களை திரட்டவேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும், அந்த தீர்வுகளை நோக்கிய போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் கள்ளக்குறிச்சியில் இன்று (செப்டம்பர் 11) துவங்க உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாநில மாநாடு ஆழமாக விவாதிக்கவுள்ளது. 

கட்டுரையாளர்: மாநிலத் தலைவர்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்