articles

img

சோற்றை உண்ணும் பிராணிகளின் மூளைக்கு எப்போது உறைக்கும்

உழவர்படை..

புதிய தாராளவாதக் கொள்கை பல இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. விவசாயத்தை விட்டே விரட்டி யிருக்கிறது. எஞ்சியிருக்கும் விவசாயிகளைப் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமை களாக மாற்ற முனைந்திருக்கும் மோடி அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் விவசாயிகள். வழக்கம் போல இந்தப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துகிறார்கள் பா.ஜ.க ஃபாசிஸ்டுகள்.

“விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ்தான் தூண்டி விடுகிறது” என்று குற்றம் சாட்டினார் அரியானா பா.ஜ.க முதல்வர் கட்டார். “இது காங்கிரசுக்கு வழங்கப்படும் தகுதிக்கு மீறிய கவுரவமாயிற்றே, இதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக் கொள்ள மாட்டார்களே” என்று கேலி செய்தார் ஒரு பத்திரிகையாளர்.

“பஞ்சாப்காரர்கள் மட்டும்தான் போராடுகிறார்கள், இதிலிருந்தே இந்தப் போராட்டத்தின் அரசியல் உள் நோக்கம் தெரியவில்லையா?” என்றார் அர்னாப் கோஸ்வாமி. அரியானா, ராஜஸ்தான், உ.பி, இமாச்சல் பிரதேஷ், ம.பி விவசாயிகள் தமது ஆதார் அட்டையை கேமராவுக்கு காட்டுகிறார்கள்.

போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு சீக்கிய மூதாட்டியின் படத்தைப் போட்டு, “பார்த்தீர்களா, இந்தப் பாட்டிதான் டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தை அலங்கரித்த சி.ஏ.ஏ எதிர்ப்புப் 'போராளி', பில்கிஸ் பானு. 100 ரூபாய் கொடுத்தால் எங்கே வேண்டுமானாலும் வருவாள்” என்று டிவிட்டரில் பதிவிட்டார் கங்கணா ரணாவத். அந்த மூதாட்டி பில்கிஸ் பானு அல்ல என்பது ஆதாரப் பூர்வமாக அம்பலமானவுடன் சத்தம் போடாமல் அந்த ட்வீட்டை அகற்றினார் கங்கணா ரணாவத்.

“நாங்க இந்திரா காந்தியையே பார்த்தவங்கடா, எங்களுக்கு மோடி எம்மாத்திரம்?” என்ற பொருள்பட ஒரு விவசாயி பேசியதைப் போட்டு, இது காலிஸ்தானிகளின் போராட்டம் என்று பிரச்சாரம் செய்து பார்த்துத் தோற்றது ஜீ டி.வி.

போராட்டத்தில் பங்கேற்கும் AISA அமைப்பின் மாணவர்களைக் காட்டி "பார்த்தீர்களா, JNU வின் துக்டே துக்டே கும்பல்” என்றார்கள். போராட்டத்தை ஆதரிக்கும் PFI அமைப்பினரைக் காட்டி, போராட்டத்தின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்றார்கள்.

சங்கிகள் எல்லாவிதமான பொய்ப் பிரச்சாரங்களையும் செய்து பார்த்து விட்டனர். எதுவும் எடுபடவில்லை.

டில்லி செல்லும் நெடுஞ்சாலை முழுவதும் தடுப்பரண்கள், கம்பி வேலிகள், பதுங்கு குழிகள், தடியடி, தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், எல்லைப் பாதுகாப்புப் படையைக் குவித்துப் பார்த்தனர். அந்த மாபெரும் மக்கள் திரள், தடுப்பரண்களைத் தூக்கி வீசி விட்டு முன்னேறியது.

“டில்லியில் புராரி மைதானத்தை ஒதுக்கியிருக்கிறோம், அங்கே வரச் சம்மதித்தால், டிசம்பர் 3 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்றது மோடி அரசு.

“புராரி என்பது சிறை. மூன்று சட்டங்களையும் ரத்து செய். ஜந்தர் மந்தருக்கு வருவோம். இல்லையேல், டில்லிக்குச் செல்லும் 5 சாலைகளை யும் மறிப்போம்” என்று எச்சரித்திருக்கிறார்கள் விவசாயிகள்.

உறைய வைக்கும் டிசம்பர் குளிரிலும், முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும் காட்டி வரும் உறுதி, காவி காலிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமிர்ப் பேச்சு பேசிய சங்கிகள் பின் வாங்குகிறார்கள். “விவசாயிகள் போராட்டத்துக்கு அரசியல் பின்னணி உள்ளதுன்னு நான் சொல்லவே இல்லையே” என்று ஜகா வாங்கி யிருக்கிறார் அமித் ஷா.

“நாங்கள் விவசாயிகளை ஏமாற்ற வில்லை. இந்த கங்கையின் கரையில் நின்று சொல்கிறேன். எங்களுடைய நோக்கம் இந்த கங்கையைப் போலப் புனிதமானது” என்று வழக்கம் போல பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார் மோடி.

“இவன் யார்டா … நிலவரம் புரியாம வழக்கம் போல பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டிருக்கான்” என்று பஞ்சாபின் கொட்டை போட்ட காங்கிரஸ் தலைகள் கவலைப் படுகிறார்கள். “ இந்தப் போராட்டம் விரைவிலேயே கை மீறிப் போய் விடும். எல்லாக் கட்சிகளும் மதிப்பிழந்து விட்ட பஞ்சாபில் இந்தப் போராட்டத்திலிருந்து புதிய ஆபத்தான தலைமைகள் உருவாகும்” என்று அவர்கள் அலறுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரித்து உங்களுக்கு நீங்களே குழி பறித்துக் கொள்ளாதீர்கள் என்று ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கி துக்ளக் குருமூர்த்தி எழுதினாரே, அதனை இந்த இடத்தில் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

அவர்களுடைய அச்சம் அடிப்படை அற்றதல்ல. இந்தப் போராட்டம் நீண்ட நாள் தொடருமானால், கோரிக்கை யின் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு, இந்தப் போராட்டத்தின் ஊடாக விவசாயிகள் மத்தியிலும், பஞ்சாப் சமூகத்திலும் ஏற்படக்கூடிய மாற்றம் என்பது அரசியல் ரீதியில் ஆபத்தானது என்பதே அவர்களது கவலை.

“கொள்முதலுக்கும், குறைந்த பட்ச விலைக்கும் சட்டப்பூர்வ உத்தரவாதம் அளித்து ஒரு அவசரச் சட்டத்தை இயற்றி, இந்தப் போராட்டத் தீயை உடனே அணைக்காவிட்டால், முதலுக்கே மோசமாகி விடும்” என்பது ஆளும் வர்க்க அறிவுத்துறையினரின் கவலை. மோடி அரசு கொண்டு வந்திருக்கும் இந்த மூன்று சட்டங்களையும் தீவிரமாக ஆதரிப்பவரான பத்திரிகையாளர் சேகர் குப்தா, முட்டாள்களே, சீக்கியர் களின் வாலை முறுக்காதீர்கள் என்று மோடியையும் அமித் ஷாவையும் எச்சரித்திருக்கிறார்.

போர்க்குணம் என்பது சீக்கிய விவசாயிகளின் சிறப்பியல்பு. அந்தப் போர்க்குணத்துக்கு ஒரு அரசியல் உள்ளடக்கம் உண்டு. வெகு நீண்ட வரலாற்றுப் பின்புலமும் உண்டு.

இன்று போராடும் விவசாயிகளின் 'தேசிய கீதமாக' பஞ்சாப் முழுவதும் ஒரு பாடல் பாடப்படுகிறது. காலனிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன் பிறந்த அந்தப் பாடல், இன்று கார்ப்பரேட் தாசனான மோடி அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில், வீரியத்துடன் மறு பிறப்பு எடுத்திருக்கிறது.

“தலைப்பாகை பத்திரம் உழவனே, உன் தலைப்பாகை பத்திரம் (பக்ரி சம்பால் ஜட்டா, பக்ரி சம்பால் ஓயே) “ என்பதுதான் அந்தப் பாடலின் முதல் வரி.

“இந்த கேடு கெட்ட அரசு, நம் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

ஏன் அதற்குப் பணிய வேண்டும்?

கைகளை இணைப்போம் எதிர்த்து நிற்போம்

கையொலி எழுப்புவோம் – அதிரட்டும்”

“சுயமரியாதையை இழக்காதே உழவனே

தலைப்பாகையை மண்ணில் வைக்காதே

அடிமைத்தளையை நொறுக்கு

தலைவிதியை மாற்று

தலைப்பாகை பத்திரம் சீக்கியனே, தலைப்பாகை பத்திரம்!”

இந்தப் பாடல் வரிகளுக்குள் பொதிந்திருக்கிறது பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட வரலாறு .

1907 – காலனியாதிக்க எதிர்ப்பு விவசாயிகள் கலகம்

1879: செனாப் ஆற்றிலிருந்து ஒரு பெரிய கால்வாயை வெட்டி, புதிதாகப் பல லட்சம் ஏக்கர் விளை நிலங்களை உருவாக்கி, தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ள பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டது. நிலத்தைப் பண்படுத்தி விளை நிலமாக மாற்றுகின்ற ஒவ்வொரு விவசாயிக்கும் நிலம் சொந்தமாக்கப்படும் என்று ஆசை காட்டியது.

இந்த வாக்குறுதியை நம்பி பல்லாயிரக்கணக்கான சீக்கிய விவசாயிகள், இன்று பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் மேற்கு பஞ்சாபை சேர்ந்த பைசலாபாத் (அன்று லியால்பூர்) பகுதிக்குக் குடி பெயர்ந்தனர். புதிதாக 20 இலட்சம் ஏக்கர் நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டு வந்து பொன் விளையும் பூமியாக மாற்றினர்.

ஆனால், பிரிட்டிஷ் அரசு, வாக்களித்தபடி யாருக்கும் நிலம் கொடுக்கவில்லை. “நிலமெல்லாம் பிரிட்டிஷ் அரசுக்குத்தான் சொந்தம், நீங்களெல்லாம் வெறும் குத்தகை விவசாயிகள்தான். நிலத்தில் குடிசை கூடப் போடக்கூடாது, மரம் வெட்டக் கூடாது. மீறுபவர்களின் குத்தகையை ரத்து செய்து வெளியேற்றுவோம். ஒரு குத்தகை விவசாயி இறந்து போனால், அவருடைய மூத்த மகனுக்குத்தான் குத்தகை உரிமை. மூத்த மகன் இறந்து விட்டால், இளையவனுக்கு அந்த உரிமை கிடையாது. அரசு வேறு குத்தகை தாரரை நியமிக்கும்” என்று புதிதாகச் சட்டம் இயற்றியது.

இந்த நம்பிக்கைத் துரோகத்துக்கும் அநீதிக்கும் எதிராக விவசாயிகள் குமுறினர். அந்தக் குமுறலை மாபெரும் எழுச்சியாக மாற்றியவர் அஜித் சிங் சந்து.

வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப், தற்போதைய போராட்டத்தின் வரலாற்றுப் பின்புலமாக அஜித் சிங்கின் போராட்டம் இருப்பதை நினைவு கூர்ந்திருக்கிறார். 'Punjab: Journey through fault lines' என்ற நூலில் இந்த வரலாற்று நிகழ்வுகளை விவரித்திருக்கிறார் அமன்தீப் சந்து. பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட வரலாறு குறித்து சங்கீத் தூர், 'வயர்' தளத்திலும், ஹர்மீத் ஷா சிங், 'இந்தியா டுடே'யிலும் எழுதி இருக்கின்றனர்.

1907 இல் லியால்பூரில் விவசாயி களையும் முன்னாள் இராணுவத்தினரையும் அணி திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர் அஜித் சிங். கலகம் வெடித்தது. இந்தப் போராட்டத்தின் போது பங்கே லால் என்ற பத்திரிகை ஆசிரியர், மக்கள் மத்தியில் பாடிய பாடல்தான், “தலைப்பாகை பத்திரம் உழவனே, உன் தலைப்பாகை பத்திரம்” என்ற பாடல். அந்தப் பாடலின் உணர்ச்சி, அதையே விவசாயிகள் போராட்டத்தின் மைய முழக்கமாக மாற்றியது.

ராவல் பிண்டி, லியால்பூர், குர்தாஸ்பூர், லாகூர் போன்ற நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எல்லா இடங்களிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கலகம் வெடித்தது. அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள் சூறையாடப்பட்டன. தொலைபேசி – தந்திக் கம்பிகள் அறுத்து எறியப்பட்டன.

1907 இல் அஜித் சிங்கும் லாலா லஜபதி ராயும் கைது செய்யப்பட்டு பர்மாவிலுள்ள மண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர். போராட்டமோ சீக்கிய ராணுவத்தினர் மத்தியிலும் பரவியது. ராணுவம் விவசாயிகளைச் சுட மறுத்துக் கலகம் செய்தது.

கலகம் தீயாய்ப் பரவுவதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு பணிந்தது. சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்தது. விவசாயிகளுக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. அஜித் சிங்கும் லஜபதி ராயும் விடுவிக்கப்பட்டனர். அஜித் சிங் போராட்ட நாயகனாக விவசாயிகளால் கொண்டாடப்பட்டார்.

பகத் சிங்கை உருவாக்கிய அஜித் சிங்!

அஜித் சிங்

அஜித் சிங் விவசாயிகள் போராட்டத்தின் தலைவர் மட்டுமல்ல, அவர் விடுதலை இயக்கத்தின் முன்னோடி. 1857 சுதந்திரப் போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டில் மீண்டும் அதே போன்ற ஒரு எழுச்சியை உருவாக்கி பிரிட்டிஷாரை விரட்ட வேண்டும் என்பது அவரது நோக்கம்.

இதற்காகப் பல சமஸ்தான மன்னர்களை ரகசியமாகச் சந்தித்து மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்குமாறு வலியுறுத்திப் பார்த்தார். நடக்கவில்லை. காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று அங்கிருந்த அதிருப்தியாளர்களைத் திரட்டி, பாரத மாதா சங்கம் (உருதுவில் மகபூபானே வதன்) என்றொரு அமைப்பை உருவாக்கினார்.

அஜித் சிங்கை வெளியே விட்டு வைப்பது ஆபத்து என்று பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்திருந்தது. அவரது பத்திரிகை மீது ஒரு வழக்குப் போட்டு, அவரை மீண்டும் கைது செய்ய முனைந்தது பிரிட்டிஷ் அரசு. அஜித் சிங் ஈரானுக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் சென்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது, இத்தாலிய இராணுவத்தினரிடம் பிடிபட்ட, பிரிட்டிஷ் இந்தியச் சிப்பாய்கள் 10,000 பேரைத் திரட்டி சுதந்திர இந்திய ராணுவத்தை அமைத்தார். 40 ஆண்டுகள் வெளி நாடுகளிலேயே கழித்த அஜித் சிங், மத அடிப்படையில் நாடு துண்டாடப்படுவதையும், மதக் கலவரங்களையும் கண்டு மனமுடைந்த மனிதராக, 15 ஆகஸ்டு, 1947 அன்று காலையில் மரணம் அடைந்தார்.

அஜித் சிங் வேறு யாருமல்ல, மாவீரன் பகத் சிங்கின் சொந்த சிறிய தந்தை. அவர்தான் சிறுவன் பகத் சிங்கின் லட்சிய நாயகன். இன்று பஞ்சாப் விவசாயிகள் பகத் சிங்கின் படத்தை ஏந்திச் செல்வதற்கும், போராட்டத்தில் இந்தப் பாடல் பாடப்படுவதற்கும், “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கம் எழுப்பப்படுவதற்குமான பின்புலம் இதுதான்.

நிலம் + சுயமரியாதை = தலைப்பாகை !

சீக்கியர்கள் அணிந்திருக்கும் தலைப்பாகைக்குப் பெயர் பக்ரி அல்லது பாக்.

தோளில் துண்டு போடும் உரிமையும், முண்டாசு கட்டும் உரிமையும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குக் கிடையாது என்ற பார்ப்பனியக் கொடுங்கோன்மைதான் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் 'பாரதக் கலாசாரம்'

விவசாயிகளின் மதமாகத் தோற்றமெடுத்த சீக்கிய மதம், இதனைக் கேள்விக்குள்ளாக்கியது. தலைப்பாகை அணிவதை, அடி பணிய மறுப்பதன் அடையாளமாக மாற்றினார் குரு கோவிந்த் சிங் (17 ஆம் நூற்றாண்டு). “ஒவ்வொரு சீக்கியனும் தலைப்பாகை அணிய வேண்டும்” என்பது கட்டாயமான மதக் கோட்பாடானது இப்படித்தான்.

சுயமரியாதைக்கு எதிரான அடிமைத் தனங்கள் அனைத்தையும் பார்ப்பன மதம் தனது மதக் கோட்பாடாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வோ, சீக்கிய மதக் கோட்பாடாகப் பரிணமித்தது. சுய மரியாதை வேண்டுமென்றால் விவசாயிக்கு நிலம் வேண்டும். நிலம் வேண்டுமென்றால் கலகம் செய்ய வேண்டும். கலகத்தையும் அங்கீகரித்தது சீக்கியம்.

கடவுள் செயல் என்ற பெயரிலோ, விதி என்ற பெயரிலோ அநீதிக்குத் தலை வணங்காதே என்கிறது சீக்கியம். குரு கோவிந்த் சிங்குக்குப் பின் அவரது சீடரான பண்டா சிங் பகதூர், நிலச்சுவான்தார்களுக்கு எதிராகப் போராடி, யமுனைக்கும் சட்லஜ் நதிக்கும் இடையிலான விளை நிலங்களின் மீது விவசாயி களின் உரிமையை நிலை நாட்டி இருக்கிறார். இது நடந்தது 1710 ஆம் ஆண்டு.

நிலப்பிரபுத்துவ – சாதி ஆதிக்கத்துக்கு எதிராக, 'நிலத்தின் மீதான உரிமை – உழவனின் சுயமரியாதை' ஆகியவற்றின் ஒன்றிணைந்த வடிவமாகத் 'தலைப்பாகை' மாறியது இப்படித்தான். எனவேதான், ஒரு விவசாயி தலைப்பாகையைத் தரையில் வைக்கிறான் என்றால், அவன் அநீதியையும் அடிமை நிலையையும் ஏற்கிறான் என்று பொருளானது.

(1965 இல் வெளியான 'ஷாகித்' (தியாகி) என்ற திரைப்படத்தில் வரும் பாடல் காட்சி இது. ஒரு ஏழை விவசாயி, தனது தலைப்பாகையைக் கழற்றி நிலப்பிரபுவின் காலடியிலும் ஆங்கிலேய அதிகாரியின் காலடியிலும் வைக்க முனைகிறார். அவரைத் தடுத்து இந்தப் பாடலைப் பாடும் அஜித் சிங்கை போலீஸ் இழுத்துச் செல்கிறது. கண் கலங்க இந்தக் காட்சியைப் பார்த்து நிற்கிறான் சிறுவன் பகத் சிங்)

'சீக்கியர் வரலாறு' என்ற நூலில் குஷ்வந்த் சிங் குறிப்பிடும் ஒரு உண்மை இங்கே கவனிக்கத்தக்கது. வரலாற்றில் அடிக்கடி அந்நியப் படையெடுப்புகளுக்கு ஆளான பகுதி பஞ்சாப். “போர்களின் போது, போரிடும் சாதியினர் என்று சொல்லப்படும் சத்திரியர்கள் பின் வாங்கி ஓடியிருக்கிறார்கள். ஆனால் ஜாட் (உழவன்) சொந்த மண்ணை விட்டு எப்போதும் ஓடியதில்லை. ஜாட் என்பவன் ஒரே நேரத்தில் உழவனாகவும் போர் வீரனாகவும் இருந்திருக்கிறான்” என்கிறார் குஷ்வந்த் சிங். இது அந்த மண்ணின் வரலாறு.

“இடுப்பில் செருகியிருந்த உடை வாளால் அவன் நிலத்தை உழுதான். மண்ணும், பெண்ணும் ஆக்கிரமிக்கப்படும்போது, அந்த உடை வாளைக் கொண்டே அவன் போரிட்டான்” என்று குறிப்பிடுகிறார் குஷ்வந்த் சிங். இது கவிதையாய் மிளிரும் ஒரு வரலாற்று உண்மை.

“பக்ரி (தலைப்பாகை) சம்பால் (பத்திரம்) ஜட்டா (உழவனே)” என்ற பாடல் வரியில், ஜாட் என்ற சொல்லுக்கு உழவன் என்பதுதான் பொருள். ஆனால் வரலாற்றுப் போக்கில், ஜாட் என்பது ஒரு ஆதிக்க சாதியாகி விட்டது. சாதியை மறுத்துப் பிறந்த சீக்கிய மதமும் சாதிக்குப் பலியாகி விட்டது. இதே ஜாட் சாதியினரைத்தான் முசாஃபர் நகர் கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக பா.ஜ.க தூண்டிவிட்டது. இவையனைத்தும் கசப்பான உண்மைகள்.

'சாதி ஆதிக்கம் – இந்து மத வெறி - விவசாய நெருக்கடி' ஆகியவற்றுக்கு இடையிலான உள் உறவைப் புரிந்து கொள்வது, காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவற்றில் ஒன்றுக்கெதிராக ஒன்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் தந்திரத்தைத்தான் சங்கப் பரிவாரம் கையாண்டு வருகிறது.

'வயிறா மானமா, சோறா சுய மரியாதையா' – என்று கம்யூனிஸ்டு இயக்கத்தினரும் திராவிட இயக்கத்தினரும் நடத்திய விவாதங்களை நாம் அறிவோம். வர்க்கத்தையும் சாதியையும் எதிர் நிலைப்படுத்திக் காணும் தவறான பார்வையின் விளைவு அது.

சீக்கியனின் தலைப்பாகை சோற்றையும் சுய மரியாதையையும் சேர்த்துக் கட்டியிருக்கிறது. 'தலைப்பாகை பத்திரம்' என்ற எச்சரிக்கை மிகவும் பொருள் பொதிந்தது.

அது விவசாயிகளுக்கானது மட்டுமல்ல. ஏனென்றால், சுய மரியாதையைத் துறக்கத் துணிந்தவர்களும் கூட, சோற்றைத் துறக்க முடியாதே!

சோறு என்பது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. புதுமைப் பித்தனுடைய சொற்களில் கூறுவதாயின், 'சோற்றை உண்ணும் பிராணிகள்' அனைவரின் வயிற்றுக்கும் இது தெரியும்.

ஆனால் மூளைக்குத்தான் இன்னும் உறைக்கவில்லை.

- மருதையன்

நன்றி:உழவே தலை

 

;