articles

img

வ.உ.சியின் உண்மையான அடையாளம் - கே.ஜி.பாஸ்கரன்

இந்திய தொழிற்சங்க வரலாற்றிலும், விடு தலைப் போராட்ட வரலாற்றிலும் வ.உ.சிதம் பரனாரின் பங்கு மிக முக்கியமானது. 1857 முதல்  சுதந்திரப் போரைத் தொடர்ந்து, இந்தியா பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்தது. பருத்தி உள்ளிட்ட கச்சாப் பொருட்களை இங்கிலாந்துக்கு கொண்டு சென்று, இங்கிலாந்தில் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனைக்கான பெரும் சந்தையாக இந்தியாவை மாற்றினார்கள். 1853ல் இந்தியாவில் ரயில் பாதையை அமைத்தார்கள். கச்சாப் பொருட் களையும், விற்பனை பொருட்களையும் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் தான் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதில் முழுக்க முழுக்க அவர்களது சொந்த நலனே அடங்கிஇருந்தது. 

மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல...

இந்தியாவில் போக்குவரத்து வசதிக்காக பிரிட்டி சாரின் ரயில் பாதை அமைக்கும் முயற்சி அத்தோடு  முடிந்து விடாது. இரும்பு உற்பத்தியும், அதனைத் தொடர்ந்து தொழில் உற்பத்தியும் நிகழும் என  தோழர் காரல்மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். தோழர் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல இந்தியாவில் ஆங்கிலே யர்கள் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க துவங்கி னார்கள். இந்தியா கைத்தறி மற்றும் பட்டு ஆடை உற்பத்தியில் சிறந்து விளங்கியது. பிரிட்டிஷார் இந்திய பருத்திகளை மிக குறைந்த விலைக்கு  வாங்கி இங்கிலாந்துக்கு கொண்டு சென்றனர். பருத்தி ஆடைகளை இந்திய சந்தைக்கு கொண்டுவந்தனர். பருத்தி ஆடைகளால் இந்தியாவை மூழ்கடித்தனர் என மார்க்ஸ் குறிப்பிட்டார். பின்னர் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டனர்.  

பருத்தியை விலைக்கு வாங்க வந்த பிராங்க் ஹார்வி என்ற ஆங்கிலேயன், நெல்லை மாவட்டம் பாப நாசத்தில் இருந்த நீர்வீழ்ச்சியை கண்டான். அதி லிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து, பஞ்சாலை ஒன்றை உருவாக்க திட்டமிட்டான். 1883ல் விக்கிரம சிங்கபுரத்தில் பஞ்சாலை உருவானது. நீண்ட காலம் அதன் பெயர் வாட்டர் மில் என்றே சொல் வழக்கில் இருந்தது. 1888ல்  தூத்துக்குடியில் நிலக்கரி மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து பஞ்சாலை உரு வாக்கப்பட்டது. இதனை கோரல் மில் என்று சொல்வா ர்கள். கோரல் என்றால் பவளம் என்று பொருள். விக்கிர மசிங்கபுரத்தில் முதலில் மிட்டாய் கொடுத்தே ஆட் களை வேலை வாங்கினார்கள். பின் நாட்களில் கூலியும் அதோடு மிட்டாய் காசும் கொடுத்து வந்தார்கள். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களுக்கும் மிக  குறைந்த கூலியே கொடுத்தார்கள். வெள்ளைக்காரர் களுக்கு 400 முதல் 500 வரை கூலி வழங்கினார்கள். இந்திய தொழிலாளிகளுக்கு 3 முதல் 5 வரை மட்டுமே கூலி வழங்கினார்கள். இதே போன்ற நிலைமை தான் இந்தியா முழுவதும் நிலவியது. 

சுதேசிக் கப்பல்

1905ல் வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்டது. வங்கப் பிரிவினைக்கு எதிராக வங்க மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது. பெரும் போராட்டங்களை முன் எடுத்தார்கள். சுதேசி இயக்கம் உருவானது. அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பு எனும் எழுச்சி ஏற்பட்டது. வெள்ளையர்களுக்கு எதிராக சொந்த தொழில் துவங்க வேண்டும் எனும் முயற்சி எடுக்கப்பட்டது. இந்தியாவின் பல இடங்களில் சுதேசி கப்பல் கம்பெனி உருவானது. கல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஒரு கப்பல் கம்பெனியை துவக்கினார். அதைப் போலவே 1906ல் வஉசி முயற்சியால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் லிமிடெட்  எனும் நிறுவனம் பதிவு  செய்யப்பட்டது. 1907ல் காலியா, லாவோ எனும் இரண்டு கப்பல்களை  விலைக்கு வாங்கினர். தூத்துக் குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிச்செல்லும் போக்குவரத்து துவங்கியது. இந்த நிறுவனத்தை உருவாக்குவதில், கப்பல்களை வாங்குவதில் பெரும் பங்கு வஉசி அவர்களுக்கே உரியது.  இது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உரு வாக்கியது. மக்களின் பேராதரவைப் பெற்றது. பங்குகள் மூலமாகவே கப்பல்கள் வாங்கப்பட்டது. பாரதியார் கூறினார், “வஉசி தனது சொந்த நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்துள்ளார்”. இந்தியா பத்திரிக்கையில் கப்பல்களின் படங்களை வரைந்து ஒரு தலையங்கத்தை எழுதி வெளியிட்டார் பாரதியார். வெள்ளையர் எதிர்ப்பு இயக்கத்தின் அடையாளமாக மாறியது சுதேசி இயக்கமும், சுதேசி கப்பல் கம்பெனியும். 

வத்தலகுண்டுவைச் சார்ந்த, தேசியவாதி சுப்பிரமணிய சிவா 1908 பிப்ரவரி 2 அன்று வஉசியை சந்தித்தார். ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் இருவரும் இணைந்து ஏராளமான பொதுக்கூட்டங் களை நடத்தினார்கள்.  தூத்துக்குடி கோரல் மில்  தொழிலாளர்களின் அவல நிலையை பொதுக்கூட்டங் களில் எடுத்து வைத்து, வேலைநிறுத்தம் செய்ய  வேண்டும் என அறைகூவல் விடுத்தனர். இங்கிரு க்கும் கோரல் மில் 15 நாட்கள்  மூடப்படுமானால், இங்கிலாந்தில் இருக்கும் ஆலைகள் எல்லாம் இழுத்து மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து 1908 பிப்ரவரி 8 அன்று கோரல் மில் தொழிலாளர்கள், கூலி உயர்வு, வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை ஆகிய மூன்று கோரிக்கை களை முன்வைத்து போராட்டத்தை துவக்கினர்.  நாடு முழுவதும் வேலை நேரம் எதுவுமின்றி கடும் சுரண்டலுக்கு தொழிலாளர்கள் ஆட்பட்டு இருந்த னர். 1884ல் பம்பாயில் நடந்த தொழிலாளர்கள் கூட்ட த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னெவெனில், “ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும், அரை மணி நேரம் உணவு இடைவேளை வேண்டும், காலை 6.30 மணிக்கு துவங்கும் வேலை நேரத்தை சூரிய அஸ்தமனத்தோடு முடிக்க வேண்டும்”. எனவே வேலை நேரமே இல்லாமல் தொழிலாளர்கள் நாள் முழு வதும் வேலை வாங்கப்பட்டனர். 1862ல் கல்கத்தா ஹெளரா ரயில்வே தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை கேட்டு போராட்டம் நடத்தி இருந்தனர். 

கோரல் மில் தொழிலாளர் எழுச்சி

சிக்காகோ தொழிலாளர்களின் போராட்டங் களுக்கு 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் எட்டு மணி நேர வேலை எனும் முழக்கம் எழுப்பப் பட்டு உள்ளது. இந்திய மண்ணில் தொழிற்சங்க உரிமைகளோ, வேலை நேரமோ இல்லை. இந்த பின்னணியில் தான் கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம் துவங்கியது. இந்த போராட்டத்தை வஉசி யும், சுப்பிரமணிய சிவாவும் தலைமையேற்று வழி நடத்தினார்கள். கோரல் மில்லில் ரேகை பார்த்து வேலைக்கு வருவதும், போவதும் இருந்தது. காலை யில் வேலைக்கு வரும் போதும் ரேகை தெரியக் கூடாது. அதாவது அதிகாலையே வேலைக்கு வர வேண்டும். வேலையை முடித்து கிளம்பும் போதும் ரேகை தெரியக்கூடாது. சூரியன் மறைந்து காரிருள் சூழ்ந்திருக்க வேண்டும். இது தான் வேலை நேரம். இதை எதிர்த்தே போராட்டம் வெடித்துக் கிளம்பி யது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஊர்வ லங்களாலும், பொதுக்கூட்டங்களாலும் தூத்துக்குடி திணறியது. கூலி, விடுமுறை முழக்கத்தோடு வந்தே  மாதரம் முழக்கமும் சேர்ந்தே ஒலித்தது. பொருளா தார நலனுக்கான போராட்டமாக மட்டுமின்றி அது அரசியல் போராட்டமாகவும் பரிணமித்தது. இதில்  வஉசி, சிவாவின் பங்கு மகத்தானது. சிவம் பேசி னால் சவமும் எழுந்து நிற்கும் என்று சொல்வார்கள்.  ஒரு கூட்டத்தில் பேசும் போது, “நாங்க நடத்துற போராட்டங் களால், வெள்ளைக்காரன் மூட்டை முடிச்சுகளோடு  நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என வஉசி பேசினார். உடனே சிவா எழுந்து, “மூட்டை முடிச்சு களோடு அல்ல, அவை எல்லாம் நமது சொத்து,  வெள்ளைக்காரன் வீசுன கையும், வெறுங்கையுமாகத் தான் வெளியேற வேண்டும்” என்றார். ஆவேச மிக்க இந்த உரைகளால் மக்களின் போராட்டம் தீவிர மாகியது. மாவட்ட கலெக்டராக இருந்த விஞ்ச், சப் கலெக்டராக இருந்த ஆஷ் இந்த போராட்டங்களை ஒடுக்க கடுமையாக முயற்சித்தனர். வெளி ஊர்களில் இருந்தும் போலீஸ் தூத்துக்குடியில் இறக்கி விடப்பட்டும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. 

தெருவெங்கும் வந்தே மாதரம்

மாகாண அரசுக்கு அறிக்கைகள் பறந்தன. தூத்துக்குடி தெருவெங்கும் வந்தே மாதரம் ஒலித்துக்  கொண்டே இருக்கிறது. போலீசாரை மறித்துக் கொண்டு சிறுவர்கள் கூட வந்தே மாதரம் என முழக்க மிடுகிறார்கள், போலீசாரையும் வந்தே மாதரம் சொல்லச் சொல்கிறார்கள் என அறிக்கைகள் சென்றன. இவ்வாறு தூத்துக்குடி நகரம் சுதந்திர நெருப்பில் தகித்துக் கொண்டிருந்தது. 1806 வேலூர் எழுச்சிக்கு பிறகு தென் இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சி யை நாடு பார்த்தது. வந்தே மாதரம் என்று சொன்னா லே தண்டனை என இருந்த அடக்குமுறை காலமது. பீகாரில் வந்தே மாதரம் சொன்ன சுசில்சென் எனும் பள்ளிச் சிறுவனை நடுரோட்டில் நிறுத்தி கசையடி  கொடுக்க கிங்க்ஸ்போர்டு எனும் நீதிபதி தீர்ப்பு சொன்னான். ஆனால் தூத்துக்குடி நகரமெங்கும் வந்தே மாதரம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. 1908 மார்ச் 6 கோரல் மில் நிர்வாகம் பேச்சுவார்த்தை  நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  ஐம்பது சத  கூலி உயர்வு, வார விடுமுறை என ஒப்பந்தம் போடப் பட்டு, மார்ச் 7 அன்று தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். இந்த போராட்டம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதாக வந்தே மாதரம் பத்திரிக்கையில் அரவிந்தர் தலையங்கம் எழுதினார். திட்டமிட்டு, தள ராத முயற்சியோடு, அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட போராட்டம் என அவர் குறிப்பிட்டார். 1905 கல்கத்தா அச்சக தொழிலாளர்களது போராட்டத்தை தவிர வேறு எந்த போராட்டமும் வெற்றி பெறாத சூழலில் தூத்துக்குடி தொழிலாளர் போராட்டம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. 

36 வயதில்...

தொழிற்சங்க உரிமையே இல்லாத ஒரு காலத்தில், மக்கள் ஆதரவோடு இப்போராட்டம் வெற்றி பெற்றது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபின்சந்திரபால்  போன்றவர்கள் தேசிய  விடுதலை போராட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தி யத்திற்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர்கள். விபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாட நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்த வஉசியும், சிவாவும் திட்டமிட்ட னர். பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மார்ச் 12 அன்று கலெக்டர் அலுவலகத்தில் வஉசியும், சிவாவும் ஆஜராக வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. வஉசி, சுப்பிரமணியசிவா, பத்மநாப அய்யங் கார் உள்ளிட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ராஜதுரோக வழக்கு பதிவு செய்யப் பட்டது. கைதான போது வஉசிக்கு வயது 36. 

தொழிலாளர் போராட்டங்களையும், விடுதலைப் போராட்டங்களையும் ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே வஉசி கைது செய்யப்பட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பேசியதற்காக இருபது ஆண்டுகள், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக் கலம் கொடுத்தார் என்பதற்காக இருபது ஆண்டுகள். இரண்டையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வஉசியை தூக்கிலிட்டு அவரது உடலை எரித்தாலும், அவரது எலும்புகள் வெள்ளை சர்க்காருக்கு எதிராக ராஜ துவேச கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் என  தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார். 

சதி வழக்குகள்

இதுவே முதல் நெல்லை சதி வழக்கு. அதன்பின் கம்யூனிஸ்ட்டுகள் மீது 1940களிலும், 1948களிலும் இரு சதி வழக்குகள் புனையப்பட்டது. வஉசி கைதை எதிர்த்து பிரமாண்டமான மக்கள் எழுச்சி  ஏற்பட்டது. இதனை நெல்லை எழுச்சி என வர லாறு பதிவு செய்துள்ளது. நெல்லை இந்துக்கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்து ஊர்வல மொன்றை நடத்தினர். அதில் மக்களும் இணைந்து கொண்டனர். நெல்லை நகரத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்டது.  மண்ணெண்ணெய் கிடங்கு க்கு தீ வைக்கப்பட்டது. கரூரில் இருந்து போலீஸ் படை வந்தது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். செய்தி அறிந்து சென்னையில் இருந்து பாரதியார் நெல்லை விரைந்தார். தூத்துக்குடியிலும் எழுச்சி மூண்டது. மார்ச் 7 அன்று வேலைக்கு திரும்பிய கோரல் மில் தொழிலாளர்கள் வஉசியை விடுதலை செய்யக்கோரி மார்ச் 13 அன்று வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இந்திய தொழிலாளர்கள் நடத்திய முதல் அரசியல் போராட்டம் இதுவே. மும்பையில் திலகரை விடுதலை செய்யக்கோரி நடந்த போராட்டத்தை வரலாறு  பதிவு செய்துள்ளது. லெனினே மும்பை போராட்ட த்தை குறிப்பிட்டுள்ளார்; இந்திய தொழிலாளர்கள் அரசியல் முதிர்ச்சி அடைந்து வருகின்றனர் என்று. ஆனால் அந்த போராட்டம் நடந்தது ஜூலை மாதம்.  நெல்லை, தூத்துக்குடியில் நடந்த எழுச்சி மார்ச் மாதமே துவங்கி விட்டது.

1912ல் விடுதலை

தூத்துக்குடி போராட்டத்தில் நகரசுத்தி தொழிலா ளர்களும், பெட்ரோல் நிறுவன ஊழியர்களும், சவரத் தொழிலாளர்களும், குதிரை வண்டி ஓட்டக்கூடிய வர்களும் இணைந்து கொண்டனர். போராட்டம் திருவனந்தபுரம் வரையிலும் நீண்டு சென்றது. தச்சநல்லூர் மக்கள் போராட்டத்தில் பங்கேற்று தெரு விளக்குகளை உடைத்தார்கள் என நகராட்சி நிர்வாகம் தண்டத்தீர்வை விதித்தது. கோவை சிறையில் வஉசி  செக்கிழுத்தார். கடும் சித்ரவதைக்கு வஉசி ஆளாக்கப் படுவதாக, வஉசி மனைவி விக்டோரியாவுக்கு கடிதம் எழுதினார். 1912ல் வஉசி விடுதலை செய்யப்பட்டார். 1913 லிருந்து 1920 வரையிலும் அவர் சென்னையில் வாழ்ந்தார். அவர் தூத்துக்குடி நகரத்திற்குள் நுழையக்  கூடாது, வழக்கறிஞர் தொழிலை நடத்தக் கூடாது என  தலை விதிக்கப்பட்டது.  சென்னையில் மளிகை கடை ஒன்றை நடத்தினார். ஆனாலும் தொழிற்சங்க நட வடிக்கைகளை ஒரு போதும் அவர் கைவிடவில்லை.

தொழிற்சங்கத் தலைவராக...

சென்னையில் திருவிக, சிங்காரவேலர், சக்கரை செட்டியாரோடு இணைந்து தொழிற்சங்க பணி களில் ஈடுபட்டார். சென்னை தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கத்தை  உருவாக்குவதி லும், செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினார்.  தபால் ஊழியர் சங்கத்தை வஉசி உருவாக்கியதாக அவரது மகன் சுப்பிரமணியம் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ரயில்வே தொழி லாளர்களை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்காற்றி னார். சென்னை, மதுரை, நாகப்பட்டின ரயில்வே தொழிலாளர் கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார். நாகப்பட்டினம் கூட்டத்தில், தபால், தந்தி, ரயில்வே, போலீஸ் இதனை வைத்து தான் வெள்ளையன் ஆட்சி  நடக்கிறது. இதில் உள்ள தொழிலாளர்களை அமைப்பு  ரீதியாக திரட்டி, போராட்ட களத்தில் இறக்கினால் வெள்ளையர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து  விடலாம் என பேசினார். ரயில்வே தொழிலாளர்களி டம் அவர், உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமாயின் அது தொழிற் சங்கத்தின் மூலமாகத்தான் நடக்குமே தவிர அரசாங்கத் தால் ஒரு போதும் நடக்காது என கூறினார்.

1920ல் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். தொழிலாளர்கள் பிரச்சனையை மையமாக வைத்து கொண்டு வரப்பட்ட தீர்மானம். குறைந்தபட்ச கூலி,  வேலை நேரம், தொழிற்சங்க உரிமை குறித்தெல் லாம் அத்தீர்மானம் விவரித்தது. அச்சமயம் தொழிற் சங்க உரிமைகள் மறுக்கப்பட்ட காலம். 1919ல் பி அண்ட் சி மில்லில் ஒரு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சிங்காரவேலர், திருவிக, சக்கரைச் செட்டியார் ஆகியோர் முன் நின்று நடத்தினர். வேலை நிறுத்தம் காரணமாக நிர்வாகத்திற்கு ஏழு லட்சம் நட்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு தலைவர்களே காரணம், எனவே அவர்கள் அந்த நட்டத்தை தர வேண்டும் என நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நீதிமன்றம் நட்டத்தை தர வேண்டும் என  சொன்ன போது, சக்கரைச் செட்டியார் நீதிமன்றத்தில் எழுந்து, எனக்கு வாரத்திற்கு பத்து ரூபாய் தான் சம்பளம், கட்டியிருக்கும் இந்த வேட்டி சட்டை தவிர,  வீட்டில் ஒரு வேட்டி சட்டை இருக்கிறது. இந்த வேட்டி  சட்டையை நீங்கள் ஜப்தி செய்தாலும் கோவணத்தோடு வேலைநிறுத்தம் செய்வேன் என ஆவேசமாக கூறினார். இந்த வழக்கு சம்பந்தமாக லண்டனில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. 

நூற்றுக்கணக்கில் வேலைநிறுத்தங்கள்

1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டிற்கு வஉசி தலைமைதாங்கினார். 1933ல் காந்திகாரைக்குடி வந்த போது வரவேற்புநிகழ்ச்சிக்கு வஉசி தலைமையேற்றார். 1920 முதல் 24 வரை கோயம்புத்தூரில் ஒரு லேபர் ஸ்டோரில்  பணிபுரிந்தார். அப்போதும் தொழிற்சங்க பணியாற்றி னார். 1924 முதல் 32 வரை கோவில்பட்டியில் வசித்தார். 32 முதல் 36 வரை தூத்துக்குடியில் வாழ்ந்தார்.வாழ்நாள்  முழுவதும் தொழிற்சங்க பணிகளை மேற்கொண்டார். காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தை கொண்டு வரும் போது அவர், காங்கிரஸ் கட்சி தொழிற்சங்க இயக்கங் களை பலப்படுத்த வேண்டும், வேலைநிறுத்த போராட்டங் களை ஊக்கப்படுத்த வேண்டும், தொழிலாளர் போராட்டங்களின் மூலமாகத்தான் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த முடியும் எனும் கருத்தை முன்வைத்தார். இந்திய விடுதலைப்  போராட்ட த்தின் வரலாறும் அப்படியாகத் தான் இருந்தது.

வ.உ.சியின் உண்மையான அடையாளம்

1943ல் 600 வேலைநிறுத்த போராட்டங்கள் நடைபெற் றது. அதில் 5 லட்சம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். 1945ல் 848 வேலைநிறுத்த போராட்டங்கள் நடை பெற்றது. ஏழு லட்சம் தொழிலாளர்கள் இதில் பங்கெடுத்தனர். 1947ல் 1500 வேலைநிறுத்த போராட்டங்கள் நடைபெற்றது. இதில் 20 லட்சம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். 1946ல் கப்பற்படை எழுச்சி துவங்கியது. கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக நாடு முழுவதும் தொழிலாளர்கள் அணி திரண்டனர். 1947ல் நாடு விடுதலை அடைந்தது. விடுதலைப் போரில் தொழிற்சங்க இயக்கத்தின் பங்கு  முக்கியமானது. தொழிற்சங்க இயக்கத்தில் வஉசி பங்கு  முக்கியமானது. செக்கு, கப்பல் என அவரது அடை யாளம் சுருக்கப்படுகிறது. அவரது உண்மையான அடை யாளம் தொழிற்சங்கவாதி என்பது தான். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் வஉசி மட்டுமே. காரணம் அவர் தொழிலாளர்களை அணிதிரட்டி னார் என்பதே. அவரது தியாக சுவடுகளை பின்பற்று வோம். சமூக மாற்றத்திற்கு தொழிலாளர்களை அணி திரட்டுவோம்.

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்









 

;