articles

img

அந்த துப்பாக்கியில் குண்டுகள் மீதமிருக்கின்றன - ஆர்.பத்ரி

1948 மார்ச் 14 ஆம் தேதி அன்றைய குடி யரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கும்  ஒரு கடிதம் எழுதுகிறார். கடிதத்தின் உள்ளடக்கம் இதோ:

“ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் கலவரம் உண்டாக்கும் நோக்கில் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.  பல ஆட்களுக்கு இஸ்லாமியர் வேடம் போட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி இந்துக்களை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் பணி அவர்களுக்கு கொடுக் கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ சார்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளனர். இந்துக்கள் மற்றும் இஸ்லாமி யர்களுக்கு இடையில் நடக்கும் இது போன்ற கலவரம் பெரியதோர் உள்நாட்டுப் போராக வெடிக்கலாம்”.. 

டாக்டர் ராஜேந்திர பிரசாத் எச்சரித்ததைப் போன்று திட்டமிட்ட கலவரங்களின் மூலம் சமூகத்தில் ஆழமான பிளவை உருவாக்கி தனது சுயநல அரசியலை மேற்கொள்வது தான் அன்றிலிருந்து இன்று வரையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடைபிடிக்கும் உத்தியாகும்.  சுதந்திரப் போரில் எவ்வித பங்களிப்பையும் செய்யாத ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் கூட்டம் எப்படி சுதந்திர பவள விழா கொண்டாட்டங்கள் எனும் பெயரால் தங்கள் மீதான கறையை துடைத்துக் கொள்ள முயன்றார்களோ,  அதைப் போலவே தான் காந்தி படுகொலைக்கு காரணமான இவர்கள் தற்போது மகாத்மா காந்தியை கொண்டாடுவதாகச் சொல்லி கபட நாடகமும் ஆடுகின்றனர். காந்தி படுகொலையைப் பற்றி பேசும் போதெல்லாம் அதற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இவர்கள் கூச்சலிடுவது வாடிக்கையானது தான். ஆனாலும் வரலாற்று உண்மையை யாராலும் மறைத்து விட முடியாது.

விடுதலை பெறும் தருவாயில் இந்தியாவில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளை தொகுத்து ஐரோப்பிய எழுத்தாளர்களான டொமினிக் லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ் ஆகியோர் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ எனும் புத்தகத்தை எழுதியுள்ளனர். அந்த நூலில் பொது உலகிற்கு தெரியாத  பல உண்மைகள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. புனேயில் உள்ள சாவர்க்கர் சதன் எனும் மாளிகையில் ஒரு நாள் முன்னிரவு வேளையில் நாதுராம் கோட்சே உள்ளிட்ட சில இளைஞர்கள் சாவர்க்கரை சந்திக்க வருகிறார்கள். அந்த கட்ட டத்தின் முதல் மாடியில் அந்த சந்திப்பு நிகழ்கிறது. அப்போது, காந்தியை கொலை செய்வதற்கான திட்டம் துல்லியமாக தீட்டப்பட்டு விட்டதாகவும், அதற்கு முன்பாக சாவர்க்கரின் ஆசியைப் பெறவே அவர்கள் அங்கு வந்ததாகவும் “அந்த பைத்தியக்கார கிழவன் சாகட்டும். அவருக்கு மரணத்தைப் பரிசளிக்க காத்தி ருக்கிறோம்” என கோட்சே உள்ளிட்ட காந்தியின் கொலையாளிகள் அங்கு சூளுரைத்துச் சென்றதா கவும் அந்த புத்தகம் விவரிக்கிறது. 

இத்தகைய ஆதாரங்களை நாம் எடுத்து வைத்தால், சாவர்க்கரோ அல்லது கோட்சே உள்ளிட்ட காந்தியின் கொலையாளிகளோ இந்து மகாசபாவை சேர்ந்த வர்கள் தானே தவிர அவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் எவ்வித ஒட்டுமில்லை உறவுமில்லை என அங்கலாய்ப்பார்கள். ஆதாரம் காட்ட முடியுமா  எனவும் கூட  கேட்பார்கள். இந்த இரு அமைப்புக ளுக்கும் உள்ள நெருக்கமான உறவு எத்தகையது என்பதற்கும் கூட வரலாற்றில் ஏராளமான ஆதா ரங்கள் உள்ளன.

1922 இல் இந்து சங்காதன் (இந்துக்கள் ஒற்றுமை) எனும் கோஷத்தை முன்வைத்து இந்து மகாசபா எனும் அமைப்பை சாவர்க்கர் உருவாக்குகிறார். அவர்தான் இந்துத்துவா எனும் சொல்லாடலை முதன்முறையாக முன்வைக்கிறார். அதாவது, இந்திய விடுதலை எனில் அது இந்துக்களின் விடுதலையே ஆகும்; விடுதலை க்குப் பிறகு அமையவுள்ள புதிய இந்தியாவானது பெரும்பான்மை இந்துக்களுக்கான “இந்துராஷ்ட்ரா” (இந்துக்கள் ராஜ்ஜியம்) ஆக அமைய வேண்டும் என்பதே அவர் முன்வைத்த முழக்கத்தின் உள்ளார்ந்த நோக்கமாகும். ஆனால் அப்படியொரு இந்து ராஷ்ட்ரா அமைய வேண்டுமெனில் அதற்கான முயற்சி களிலும், பணிகளிலும் இந்து இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும்; எனவே பல்லாயிரக்கணக்கான இந்து இளைஞர்களை திரட்ட ஒரு பிரத்யேக அமைப்பு அவசியம் என திட்டமிடப்பட்டது. அத் திட்டத்தின் பின்னணியில் தான் இந்து மகாசபாவில் இருந்த ஐந்து பேருக்கு  அதற்கான பணி அளிக்கப் பட்டு அதன் அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்து, 1925 விஜயதசமி நாளன்று துவக்கிய அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். ஆகும். 

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை துவக்கிய அந்த  ஐந்து பேர் யார் ? முதலாமவர் கே.பி.ஹெட்கேவர். அவர்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதலாவது சர்சங்சாலக். அதாவது மூலவர் அல்லது தலைவர் என அர்த்தம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அவர் இடுகிற கட்டளைகளைத்தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இரண்டாமவர் கணேஷ் தாமோதர் சாவர்க்கர். அவரை பாபுராவ் சாவர்க்கர் என்றும் அழைப்பதுண்டு. இவர் யார் எனில் மன்னிப்புக் கடிதங்கள் பல எழுதி புகழ் பெற்ற வி.டி.சாவர்க்க ரின் சகோதரர் ஆவார். மற்றொருவர் பி.எஸ்.முஞ்சே. இவர்தான் பிறகு இத்தாலிக்கு சென்று முசோலினி யின் பாசிசப் படைகளின் சீருடை மற்றும் ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை போலவே ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தேவை என வலியுறுத்தி அதை இங்கே அமலாக்கியவர். மற்ற இருவர் எல்.வி.பஞ்சிபே மற்றும் தோல்கர் ஆகியோர் ஆவர். எனவே இந்து  மகாசபா வேறு, ஆர்.எஸ்.எஸ். வேறு என இவர்கள் வழக்கமாக சொல்வதோ; மகாத்மா படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் தொடர்பில்லை என சொல்வதோ பச்சைப் பொய் ஆகும். இந்து மகாசபா எனும் தாய் பாம்பின் விஷம் நிறைந்த  குட்டியே ஆர்.எஸ்.எஸ் அமைப்பாகும். 

இத்தகைய வரலாற்றையெல்லாம் மறந்து விட்டு ஒரு சில மேதாவிகள், அதுவும் பிற கட்சிகளில் உள்ள வர்கள் கூட அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ்.  ஒரு கலாச்சார அமைப்பு தானே என்றும், காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். சீருடை ஊர்வலம் நடத்தினால் என்ன கெட்டு விடப்போகிறது எனவும் வியாக்யா னம் செய்து கொண்டுள்ளனர்.  உண்மையில் ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு கலாச்சார அமைப்பல்ல. இந்தியாவின் சமூக மற்றும் நல்லிணக்கத்தை குலைக்கும் சித்தாந்தத்தை கொண்டதாகும். கே.பி. ஹெட்கேவருக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக வந்த எம்.எஸ்.கோல்வால்கர் ஞான கங்கை, நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசியம் உள்ளிட்ட புத்தகங்களில் இது குறித்த ஒப்பு தல் வாக்குமூலத்தை தெளிவாகவே அளித்துள்ளார்.     

“சிறுபான்மையினருக்கு இந்தியாவில் இரண்டே வழிகள் தான் உள்ளது. ஒன்று பெரு பான்மை தேசிய இனத்தோடு இணைவது அல்லது தேசிய இனத்தின் பரிவால் அது சம்மதிக்கும்  வரை இருந்து கூறிய உடனே ஓடிப்போவது. இதனால் மட்டுமே ஒரு தேசத்திற்குள் மற்றொரு தேசம் எனும் புற்றுநோய் போன்ற ஆபத்திலிருந்து தேசத்தை காப்பாற்றலாம்.” 

ஆம். இத்தகைய வஞ்சம் நிறைந்த சித்தாந்தத்தை கொண்டதே ஆர்.எஸ்.எஸ். இத்தகைய வகுப்புவாத சித்தாந்தமே அண்ணல் மகாத்மாவின் நெஞ்சில் குண்டுகளாகப் பாய்ந்து அவரின் உயிரைப் பறித்தது. அந்த துப்பாக்கியில் இன்னமும் குண்டுகள் மீதமிருக்கின்றன. அவை மதச்சார்பற்ற இந்தியாவின் ஆன்மாவை கொல்வதற்காக குறிபார்த்துக் கொண்டி ருக்கின்றன. 

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்

 

;