articles

img

‘கெட்ட வங்கி’யும் வராக் கடன்களும்! - நெல்லை க.சிவசங்கர்

பொதுத்துறை வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வராக்கடன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘கடன் மேலாண்மை வங்கி’ (Bad Bank) என்பது உருவாக்கப்படும் என்றும், இது வங்கி களின் வராக்கடன் பிரச்சனைகளில் மிகப்பெரிய முன் னேற்றத்தைக் கொண்டு வரும் என்றும் சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த கடன் மேலாண்மை வங்கியின் மூலம் வராக்கடன் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்பதற்கு எவ்வித சான்றுக ளும் இல்லை என்பதே உண்மை.

கடன் வசூல் நிறுவனங்களின் மோசமான செயல்பாடுகள்

வராக் கடன்களை வசூல் செய்வதற்கு சர்ஃபேசி சட்டம், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள்(ARC) மற்றும் வங்கி திவால் சட்டம்(IBC) போன்றவை ஏற் கனவே நடைமுறையில் இருக்கும் போது புதிதாக ‘கடன் மேலாண்மை வங்கி’ (Bad Bank) என்ற அமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவை என்ன என்பதே நாட்டின் பொருளாதார வல்லுநர்களின் கேள்வி யாக உள்ளது. மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வங்கி திவால் சட்டம் தனது கடன் தீர்ப்பா யங்கள் மூலம் எடுத்துக்கொண்ட வழக்குகளில் வங்கி களுக்கு கிடைக்க வேண்டிய தொகையில் சுமார் 50 சதவீதத்திற்கும் குறைவான தொகை மட்டுமே வசூல் செய்து கொடுக்கப்பட்டது என்பதும் மீதமுள்ள தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் குறிப்பாக வீடியோகான், ருசி சோயா மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற சில பெரிய நிறுவனங்களின் வராக் கடன் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை தள்ளுபடி செய்யப்பட்டு மக்களின் பணம் பெரு முதலாளிகளின் பைகளுக்கு மடைமாற்றப்பட்டது. இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 7807 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்த நிலையில் வங்கி திவால் சட்டத்தின் படி 385 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டு 95 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை இந்தியாவில் இதுவரை வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் கடன் வசூல் நிறுவனங்களான சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள்(ARC), கடன் தீர்ப்பாயங்கள், வங்கி திவால் சட்டம்(IBC) போன்ற வற்றின் மூலம் வசூல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்க ளின் சராசரி 23.2 சதவீதம் மட்டுமே என்று சொல்கிறது. எனில் இதே நோக்கத்திற்காக புதிதாக உருவாகியி ருக்கும் இந்த கடன் மேலாண்மை வங்கி, பழைய நடை முறைகளில் இருந்து எவ்வாறு மேம்பட்டது என்பது அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எந்தத் தகவலும் இதில் தெரிவிக்கப்படவில்லை  என்பதே உண்மை.

கடன் மேலாண்மை வங்கி(Bad Bank)

கடன் மேலாண்மை வங்கித் திட்டத்தின் படி ஒரு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (National Asset Reconstruction Company Limited) மற்றும் இந்திய கடன் தீர்வு நிறுவனம் (India Debt Resol ution Company Limited) ஆகிய இரு நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்படும். தேசிய சொத்து மறு சீரமைப்பு நிறுவனம்(NARC), பொதுத்துறை வங்கிக ளில் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கியி ருக்கும் 500 கோடி ரூபாய்க்கு அதிகமான வராக் கடன் களை வங்கிகளிடமிருந்து அவற்றின் மதிப்பை விட குறைவான அடிப்படை மதிப்பிற்கு பெறும் வகையில் ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்படும். அச்சொத்துக்களின் மதிப்பில் 15 சதவீதத் தொகையை உடனடி பணமாக வும், மீதமுள்ள 85 சதவீதத் தொகையை அரசு உத்தர வாதத்துடன் கூடிய பாதுகாப்புப் பத்திரங்களாகவும் (Security Receipts) வங்கிகளுக்கு வழங்கப்படும். இந்த பத்திரங்களின் மீதான அரசின் உத்தரவாதம் 30600 கோடி ரூபாய் மதிப்பிற்கு முதல் ஐந்து ஆண்டுகளு க்கு மட்டும் இருக்கும் என்றும், இந்நிறுவனத்தின் பெரும் பாலான பங்குகள் பொதுத்துறை வங்கிகளின் வச மிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு பெறப்படும் அச்சொத்துக்கள் இந்திய கடன் தீர்வு நிறுவனம்(IDRC) மூலம் சந்தை யில் விற்கப்பட்டு வருமானம் திரட்டி 85 சதவீதத்திற்கு உரிய தொகை வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும், இந்த கடன் தீர்வு நிறுவனத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 49 சதவீதத்திற்கு உள்ளாக கட்டுப்படுத்தப்பட்டு ஒரு தனியார் நிறுவனமாக இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளிடம் இருந்து பெற்ற சொத்துக்களை விற்கும் போது அதன் ஒப்பந்தத் தொகையை விட குறை வாக விலை போகும் பட்சத்தில் உருவாகும் இழப்பீடு களை 30600 கோடி ரூபாய் மதிப்புடைய அரசு உத்தர வாத பத்திரத்தின் மூலம் ஈடு செய்து வங்கிகளுக்கு வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக பொதுத்துறை வங்கிகளில் உள்ள சுமார் 90000 கோடி ரூபாய் மதிப்பிலான வராக் கடன்களை வசூல் செய்யும் உரிமை இந்த தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது வரை இந்தியன் வங்கி 13.27 சதவீத பங்குக ளையும், ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி உள்ளிட்டவை 12 சதவீதத்திற்கு சற்று  அதிகமான பங்குகளையும் வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து பெறும் சொத்துக்கள் அனைத்தும் ஏற்கனவே வங்கிகளால் பலமுறை முயன்று சரியான விலைக்கு விற்க முடியாமல் உள்ள மிகவும் நலிவடைந்த ஒன்றாகவே இருக்கும் என்பதால் அச்சொத்துக்கள், வங்கிகள் தற்போது அதன் மீது கொண்டுள்ள மதிப்பில் இருந்து மிகக் குறைவான விலைக்கே வாங்கப்படும். இவையே சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களின் கடந்த கால வர லாறாக உள்ளது. பொதுவாகவே இது போன்ற சொத் துக்களின் சந்தை மதிப்பு, வங்கிகள் அவற்றின் மீது கொண்டிருக்கும் மதிப்பில் 25 சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே 90000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வங்கிகளிடம் இருந்து பெறும் இந்நிறுவனத்தால் நேரடியாகவே மிகப்பெரிய  வருமான இழப்பு அவ் வங்கிகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதே வகையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வராக் கடன்களை வசூலிக்கும் உரிமம் இந்த நிறு வனத்திற்கு அளிக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து உயரும் வராக்கடன்கள்

இந்திய வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவ னங்களின் வராக்கடன் விகிதங்கள் தொடர்ந்து அதி கரித்து வருகின்றன. இதனால் வங்கிகள் தங்களு டைய லாபத்தின் ஒரு பெரும் பகுதியை வராக்கடன் களுக்கான முன்பணமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய  நிர்பந்தம் உருவாகிறது. இதனால் லாபம் ஈட்டக் கூடிய ஒரு வங்கி நட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. மேலும் இதனால் வங்கியின் மூலம் வழங்கப்படும் புதிய கடன்கள் குறைந்து தேவைப்படும் மக்களுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்காமல் போகிறது. கடன்களின் அளவு குறையும் போது அந்த வங்கியின் வராக்கடன் விகிதங்கள் மேலும் அதிகரிக்கின்றன.

ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட கே.வி.காமத் அறிக்கை கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு 15.52 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான கார்ப்பரேட் கடன்கள் வராக்கடன்களாக மாற வாய்ப்பிருப்பதாகத் தெரி விக்கிறது. மேலும் கொரோனா பரவலுக்கு முன்னரே இதன் அளவு 22.20 லட்சம் கோடி ரூபாயாக  கணிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக 37.72 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான கடன்கள் வராக்கடன்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இது ஒட்டுமொத்த வங்கித் துறையின் மொத்த கடன் தொகையில் சுமார் 72 சதவீதம் என்பதில் இருந்து இதன் பேராபத்தைப் புரிந்து கொள்ளலாம்.

2021 ஆம் வருடம் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வராக்கடன் மதிப்பு 8.35 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அவற்றில் 78% கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான வராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருமையோடு கூறிக் கொள்ளும் ஒன்றிய அரசு, இதே காலகட்டத்தில் சுமார் 10.83 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த இடத்திலும் பதிவு செய்வது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

தனியார்மயமாக்கலின்  முன் ஏற்பாடுகள்

இந்நிலையில் புதிதாக உருவாக்கப்படும் கடன் மேலாண்மை வங்கி இவற்றை வசூல் செய்வதற்கான தெளிவான வரைமுறைகள் குறித்து எதுவும் பேசாமல் வெறுமனே அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் உள்ள கார்ப்பரேட் கடன்களையும் மொத்தமாக ஒன்று திரட்டும் பணியை மட்டுமே செய்கிறது. இதன் மூலம்  வராக் கடன்கள் அரசால் நிர்வாகிக்கப்படும் பொ துத்துறை வங்கிகளில் இருந்து அதே அரசால் நிர்வகிக் கப்படும் இன்னொரு துறையான கடன் மேலாண்மை வங்கிக்கு மாற்றம் பெறுமே தவிர அக்கடன்கள் முழு மையாக வசூலிக்கப்பட எந்த உத்தரவாதமும் இல்லை  என்பதே நிதர்சனம். மேலும் பொதுத்துறை வங்கிகளின் இந்த பெரும்  அளவிலான வராக் கடன்களை புதிதாக உருவாக்கப் படும் கடன் மேலாண்மை வங்கிக்கு மடை மாற்றுவதன் மூலம் வங்கிக் கணக்கு புத்தகத்திலிருந்து வெளியேற்றி  அவற்றை ‘சுத்தமான’ கணக்காக காட்டிக் கொள்ள முடியும். பிறகு தனியார் முதலாளிகளைக் கவர்ந்து அவர்களிடம் பொதுத்துறை வங்கிகளை எளிதாக விற்க முடியும் என்று திட்டமிடுகிறது மோடி அரசாங்கம். இதன் மூலம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பொதுத்துறை வங்கியில் தான் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத் தாமல் அந்த வங்கியையும் கைப்பற்றிக்கொள்ளக் கூடிய வகையிலான கூட்டுக் களவாணி முதலாளித்து வத்திற்கே இந்த அரசாங்கம் துணை போகிறது என்பது தெளிவாகிறது. மேலும் வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கும் நிறுவனத்தை(NARC) பொதுத்துறை நிறுவன மாக உருவாக்கி விட்டு, அவற்றை விற்பனை செய்யும் நிறுவனத்தை(IDRC) மட்டும் தனியார் நிறுவனமாக உருவாக்கியிருப்பது அரசின் கார்ப்பரேட் விசுவா சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே உள்ளது. எனவே இந்த கடன் மேலாண்மை வங்கி என்பது கார்ப்பரேட் பெறுநிறுவனங்கள், பொதுத்துறை வங்கிக ளில் வாங்கியுள்ள வராக்கடன்களைத் தள்ளுபடி செய்வ தற்கான புதிய ஏற்பாடே அன்றி வேறல்ல.

வலுவான சட்டங்களே  இன்றைய தேவை

கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் போது அதன் உரிமையாளர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையிலும், அவர்களின் தனிப்பட்ட சொத் துக்களை பறிமுதல் செய்யும் வகையிலும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். மேலும் வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் போது நூறு சதவீத சொத்து அடமானம் பெறும் வகையில்  தனது கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி மாற்றிய மைக்க வேண்டும். அப்போது மட்டுமே கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் வாங்கிய கடன்களை முழு மையான அளவிற்கு வசூல் செய்து பொதுத்துறை வங்கிகளில் உள்ள பொதுமக்களின் பணத்தை சரியான முறையில் பாதுகாக்க முடியும். அதுவரை இது போன்று எத்தனை சொத்து மறு சீரமைப்பு நிறுவனங்கள் வந்தாலும் அவை கார்ப்பரேட் நிறுவங்களுக்கே சாதகமாக அமையுமே தவிர அவற்றால் பொதுத்துறை வங்கிகளுக்கோ அல்லது மக்களுக்கோ எந்த ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை.

 

;