திங்கள், செப்டம்பர் 27, 2021

articles

img

ஃபோர்டு கார் கம்பெனியும் 25 ஆயிரம் தொழிலாளர் கதியும்....

கோவிட் பாதிப்பு தீவிரமான நிலையில், கைபேசிகளின் பயன்பாடு பொதுவாக பெரும் அளவில்  அதிகரித்து இருக்கிறது. அதேபோல் கணிசமான நடுத்தர வர்க்கத்தினர் பொது போக்குவரத்தை தவிர்க்கும் வகையில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை அதிகப்படுத்தி இருப்பதாகக் கூறுகின்றனர். கைபேசி உற்பத்தி செய்த நோக்கியா சில ஆண்டுகளுக்கு முன் உற்பத்தியை நிறுத்தியது. சுமார் 30 ஆயிரம் தொழிலாளர் வேலை இழந்தனர். அடுத்த அதிர்ச்சியாக ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிட் கார் நிறுவனம், உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்புச் செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 2021 முதல் ஜூன் 2021 காலத்தில், 14,19 ,430 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன ஃபோர்டு நிறுவனமும் இதில் கனிசமான பங்களிப்பை செய்துள்ளது. 2020 இல் 2.39 சதவீதம் அளவில், இந்தியச் சந்தையில் கார்களை விற்பனை செய்துள்ளது. கார் என்ஜின் 40 சதவீதம் அளவிலும், 25 சதவீதம் கார்களையும் 35 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து வருகிறது. ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்வது என திட்டமிட்டாலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் அளவிலான கார்கள் சந்தையில் விற்பனை ஆகியுள்ளன. 

மேற்படி விவரங்கள் உண்மை என்றால், ஏன் ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனம் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிக்கிறது. சந்தை சொல்லும் விவரங்களும் நாம் உற்பத்தி செய்யும் பொருள்களின் சந்தைப்படுத்தலும் முரண்பட்டு நிற்பது ஏன்? பொதுவாக சந்தையில் போட்டியிட முடியாத அளவிற்கு சிறிய நிறுவனமோ அல்லது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் பலவீனமாகவோ உள்ள நிறுவனம் அல்ல ஃபோர்டு. உலக அளவில் போர்டிஸம் என கூறும் அளவிற்கு உற்பத்தியிலும், சந்தைப்படுத்தலிலும் வெற்றி பெற்ற  நிறுவனம் ஆகும். 

ஃபோர்டு இந்தியா வரலாறு
ஃபோர்டு இந்தியா என அழைத்தாலும், சென்னைஅதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. 1995 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், மறைமலை நகரில் 350 ஏக்கர் நிலப்பரப்பில், பிரமாண்டமான கார் உற்பத்தி நிறுவனமாக உருவானது. 1998 இல் உற்பத்தி துவங்கியது. சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும், கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோட்டில் இருந்த ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனம் மூடப்பட்ட நிலையில், ஃபோர்டு வருகை அமைந்தது. வேலைவாய்ப்பு படிப்படியாக அதிகரித்து, தற்போது 4000 நிரந்தரப் பணியாளர்கள் உள்ளனர். ஒப்பந்தம் மற்றும் கேண்டீன், போக்குவரத்து, உதிரி பாக நிறுவனங்கள் என கணக்கிட்டால் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஃபோர்டு சென்னை நிறுவனத்தை மையப்படுத்திப் பணியாற்றி வருகின்றனர். 
ஒரு குடையின் கீழ் இருந்த உற்பத்தியை, அயல்பணி ஒப்படைப்பு (அவுட்சோர்ஸ்) மூலம் பிரித்து, தனித்தனியாக உதிரிபாக உற்பத்திகளை இணைக்கும்வேலையை பிரதான, பிராண்ட் பெயரை தாங்கும் நிறுவனம் செய்து கொள்ளும் வழக்கத்தை, அமெரிக்காவில் ஹென்றி ஃபோர்டு தான் உருவாக்கினார். அதனால் தான் ஃபோர்டிஸம் என சொல்லப்பட்டது. இதை உலகின் பிற நாடுகளிலும் பின்பற்றத் துவங்கினர். சென்னையில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை துவங்கிய பின்னர், மறைமலை நகர் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான சிறு, குறு ஆலைகள், இந்தியமற்றும் பல்வேறு நாட்டு நிறுவனங்களால் துவக்கப்பட்டன. சென்னையின் புறநகர் வளர்ச்சி, இது போன்றநிறுவனங்கள் மற்றும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களால் உருவானது என்பதை மறுக்க முடியாது. 

இதைத் தொடர்ந்து சனந்த் (குஜராத்) நிறுவனத்தையும் ஃபோர்டு இந்தியா 2014 இல் உருவாக்கியது. சனந்திலும், நாம் மறைமலைநகர் நிறுவனத்தில் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு மற்றும் ஆலைகளின் வளர்ச்சி உருவானது.  மொத்தமாக 2 பில்லியன் டாலர்முதலீடு (சுமார் 14000 கோடிரூபாய் இன்றைய மதிப்பில்) செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்படி14000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, 2022ஏப்ரல் முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு செய்துள்ளது. 

வேலைவாய்ப்பு, விருந்தல்ல வாழ்க்கை !
‘மேக் இன் இந்தியா’ பெயரில் இந்தியாவில் நடந்த விளம்பரங்களும், உலக முதலீட்டாளர் மாநாடு போன்ற பெயரில் நடந்த நிகழ்வுகளும் மக்கள் அறிந்தஒன்று. இதில் அகமதாபாத், சென்னை, மும்பைநகரங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்ததையும், காணமுடிந்தது. இந்நிலையில், குஜராத் மற்றும்தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், உலக அளவில் பெரும் நிறுவனமாக விளங்கி வரும் ஃபோர்டு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்புச் செய்வது, அரசுகளின் கொள்கைக்கு முரணாக உள்ளது. இதை அரசுகளும், அரசியல் மற்றும் சமூக இயக்கங்களும் அலட்சியம் செய்ய முடியாது. ஆலைகளின் வளர்ச்சி என்பது, கடந்த கால விவசாய உற்பத்தியின் மீது நடைபெறுகிறது. இன்றையமறைமலை நகர் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சிப் பகுதிகளாக அறியப்படுகிறது என்றால், அங்கிருந்த, நிலம், நீர்நிலைகள், நிலம் சார்ந்த வேலைவாய்ப்பு ஆகியவற்றை இழந்ததிலிருந்து உருவானது ஆகும். நிலம் சார்ந்த வேலைவாய்ப்பில் கிடைத்த வருவாயை விடவும், ஆலை சார்ந்த வேலைவாய்ப்பு முன்னேற்றத்தை அளித்தது என்றால் மிகை அல்ல. ஒன்றை இழந்து, புதிய ஒன்றைபெற்ற தொழிலாளர்கள் தற்போது நிரந்தரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தான் தற்போதைய ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு தமிழ் மக்களுக்கு பேரதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது. 

நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்பு விருந்தல்ல, முடிந்தது, எழுந்து செல் என்பதற்கு. வேலைவாய்ப்பு என்பது வாழ்வாதாரத்துடன் இணைந்தது. சமூகத்தின் இதர உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான பொருளாதாரச் சங்கிலி. அதை ஒரு நிறுவனம் லாப நஷ்ட கணக்கு மூலம் மூடுவது, என்பது, சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு உதவாது. உலக அரங்கில் வல்லுநர்கள் மற்றும் நாடுகளின் அரசுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் (GDP) குறித்து, ஓய்வின்றி உரையாடுகின்றனர். 

ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைஆராயும் நிலையில், அதிர்ச்சி அதிகரிக்கும். சுமார்4000 நிரந்தரத் தொழிலாளர்கள், அனைத்து விதமானஉயரதிகாரிகளும் சேர்த்து, இவர்களின் சராசரி மாத வருமானம் தோராயமாக ரூ. 60 ஆயிரம் எனக்கொண்டால், 240 கோடி ரூபாய். இதனுடன் இணைந்த உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்கள்சுமார் 20 ஆயிரம் எனக் கொண்டால், அவர்களின் மாத சராசரி வருமானம் தோராயமாக ரூ. 15 ஆயிரம்எனும்போது, ரூபாய் 300 கோடி, ஆக மொத்தத்தில் சுமார் 550 கோடி ரூபாய் சந்தைப் புழக்கத்தில் இருந்துவிடுபடும் அபாயம் உள்ளது. 

இதோடு முடிவதில்லை, மறைமுக வேலை வாய்ப்புகளாக உள்ள தேநீர்க் கடை, ஆட்டோ, மளிகை, ரியல்எஸ்டேட், இதர சேவை நிறுவனங்கள் என சங்கிலித் தொடரான பாதிப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உற்பத்தி முடக்கம், வேலை இழப்புபோன்ற அறிவிப்புகள் ஏற்படுத்தும் பாதிப்பு, பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டது ஆகும். 

என்ன செய்யலாம்?
“நாங்கள் சமூக மற்றும் சுற்றுச்சூழலின் தேவைகளுக்கும் தொழிலுக்கும் இடையே எந்த ஒரு மோதலையும் காணவில்லை. நான் நல்ல மற்றும் மேம்பட்ட நிறுவனங்களுக்கு இடையில் இது மிகச் சிறந்தது என நம்புகிறேன். நல்ல நிறுவனம் அருமையான உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்குகிறது. அதேநேரம் மிகச்சிறந்த நிறுவனம், அருமையான உற்பத்தி மற்றும் சேவைகளுடன், உலகை நல்ல நிலையில் நிறுத்துவதற்கான பணிகளையும் செய்கிறது” என்று ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் தலைமை நிர்வாகி, கூறியதாக ஃபோர்டு நிறுவனத்தின் இணையதளத்தின் முகப்பில் பதிவிட்டு உள்ளனர். உலகை நல்ல நிலையில் நிறுத்தும், ஒரு மிகச்சிறந்த நிறுவனம் நிச்சயம் இந்திய தொழிலாளர்களை நிர்க்கதியில் நிறுத்தும் எனச்சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து முன்னேறும் வாய்ப்பிற்கு, பெரும்தடையாக உற்பத்தி முடக்கம் என்ற அறிவிப்பு இருக்கும் என்பதை உணர வேண்டும். உலகம் முழுவதும் 1.66 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பை வழங்கும் ஃபோர்டு, இந்தியாவில் சில ஆயிரம் வேலை வாய்ப்பை பாதுகாக்க, அதன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்திய உற்பத்தியை தொடர்ந்து நீடிக்க நடவடிக்கை வேண்டும். 

இரண்டாவதாக, ஒன்றிய அரசின் தலையீடு மிக முக்கியமானது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது, செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்,சனந்த் ஆலையாகும். அதேபோல் அவரும் அவருடைய ஆட்சியாளர்களும் தொடர்ந்து முழங்கி வரும் மேக் இன் இந்தியா என்ற அறிவிப்பு, தகர்ந்து தரைமட்டமாவதை உணர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று மாநில அரசு கூறியதாக ஒரு செய்தி வெளிவந்தது கவனிக்கத்தக்கது. புதிதாக வரும் நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளது. தற்போதைய வேலை வாய்ப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு தலையீடு செய்வது அவசியம். 

நான்காவது தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சி திருத்தம் செய்துள்ள தொழிலாளர் சட்டங்கள், மேலே கூறியபடி ஓட நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு கவசமாக உள்ளது. எனவே தான் சட்டத்திருத்தம் என்றஅபத்தத்தை, கொரோனா பொது முடக்கக் காலத்தில்அவசர அவசரமாக செய்தது. ஃபோர்டு அறிவிப்புஅனுபவத்தில் இருந்து, தொழிலாளர் நலச்சட்டங்களை, மேலும் பலம் கொண்டதாக திருத்துவதே அவசியம். நிறைவாக நாடு முழுவதும் வளர்ச்சி என்பது பெரும்கூக்குரலாக இருக்கிறது. பாஜகவும் அதன் கொள்கைகளும் மிகப்பெரிய அளவில் முதலீட்டாளர்களின் சொத்துக்களைப் பாதுகாத்து மேம்படுத்துகிறது. ஆனால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பதில்லை. சென்னை மற்றும் சனந்த் ஆலைகளின் தொழிலாளர்கள் 40 வயதுக்குள் உள்ளவர்கள். இனி இவர்களுக்கு வேலை கிடைக்கப்போவதில்லை. வீடு, வாகனம், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றிற்காக இந்த தொழிலாளர்கள் பெற்ற கடனுக்கு என்ன பதில் சொல்வர்? வேலையின்மை அதிகரிக்கும் நாட்டில் வளர்ச்சியும், ஜி.டி.பி வளர்ச்சியும் எப்படி சாத்தியமாக முடியும்? ஒருவேளை ஃபோர்டு தனது அறிவிப்பை திரும்பப் பெறாவிடில், அரசிடம் ஆலையை ஒப்படைத்து, வேலை வாய்ப்பை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கட்டுரையாளர்: எஸ்.கண்ணன், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர்

;