பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பன்னாட்டு நிறுவனம், பாரம்பரியத் தொழிலாளர்களும் பங்கேற்பு
சென்னை, ஜூலை 9 - ஜூலை 9 அகில இந்திய பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் 25 கோடி பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மத்திய பொதுத்துறை நிறுவனங்களான பிஎச்இஎல் திருச்சி, சேலம் உருக்காலை மற்றும் சென்னை துறைமுகத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எச்விஎப் (HVF) ஆவடியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஒரு மணி நேரம் காலதாமதமாக வேலைக்கு சென்றுள்ளனர். போக்குவரத்து மின்சாரத்துறை நுகர் பொருள் வாணிபக் கழகம், டாஸ்மாக் உள்ளாட்சி அமைப்புகளில் வேலைநிறுத்தம் பரவலாக நடைபெற்றுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களிலும் வெற்றிகரமான வேலைநிறுத்தம்
பன்னாட்டு நிறுவனத் துறையில் பணிகள் பாதிக்கப்பட்டன - தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிம்ப்சன் குழுமம், ஜெனரல் எலக்ட்ரிக் யூனிட்கள் 1 & 2, ராணே இன்ஜினியரிங் குழுமம், எண்ணூர் பவுண்டரிஸ், ஸ்ரீபெரும்புதூர் பவுண்டரிஸ் ஆகியவற்றின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் பன்னாட்டு நிறுவனங்களில் இளம் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் உற்சாகமாக இருந்தது. ஜே.கே. டயர்ஸ், அப்பல்லோ டயர்ஸ், சாம்சங், யமஹா, தாய் ஸ்மித், யுனைடெட் இண்டஸ்ட்ரீஸ், கெஸ்டாம்ப், பிரிட்டானியா பிஸ்கட், லியர், பிபிஜி ஆசிய பெயிண்ட்ஸ், டிஒய் ஆட்டோ, எல்&டி இசிசி, நோபல் டெக் போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் சுமார் 9500 இளம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் சாலை மறியல்
செங்கல்பட்டில் EL Forge, Kwality, Numak Engg, CONCOR, Cooper Sand, HLL ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக அறிவித்தனர், மேலும் சுமார் 1100 பேர் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், மோண்டன் ஹைட்ராலிக் மற்றும் ஹோண்டா உள்ளிட்ட பல பன்னாட்டு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
பாரம்பரியத் தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்பு '
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் வேலைநிறுத்தம் காரணமாக சில பகுதிகள் வெறிச்சோடி இருந்தன. ‘அங்கன்வாடி’, ‘ஆஷா’ மற்றும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மற்றும் தஞ்சையில் உள்ள பாத்திர உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்பட்டன. தேயிலை, ரப்பர் தோட்டங்கள், பஞ்சாலை, விசைத்தறி, கைத்தறி ஆகிய பாரம்பரிய தொழில்களிலும் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
150 இடங்களில் முறைசாரா தொழிலாளர்கள் மறியல்
தமிழ்நாட்டில் 150-க்கும் மேற்பட்ட மையங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுமைப்பணித் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் போன்ற லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசம் காக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேடுத்த தொழிலாளர்களுக்கும், ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் சிஐடியு மாநிலக்குழு தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்து மறியல் போராட்டம் நடத்திய அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் ஆசிரியர் சங்க அமைப்புகளுக்கு சிஐடியு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.