articles

img

மண்டிகள் ஒழிந்து போனால்... ....ஜி.ராமகிருஷ்ணன்....

“நாட்டின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியம். அத்தகைய சீர்திருத்தங்களை முழுமையான அளவில் மேற்கொள்வதில்தான் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது”- என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

வளர்ச்சி வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பிரச்சனை, வளர்ச்சி யாருக்கு என்பதில்தான். அதானிகளுக்கும் அம்பானிகளுக்குமா? அல்லது ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கா?
லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று போராடி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 செவ்வாயன்று நாடு முழுவதும் மிகப்பிரம்மாண்டமான முறையில் பாரத் பந்த் போராட்டம் நடந்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற அன்றுதான் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும்வரை போராடுவோம் என்று விவசாயிகள் ஆவேசத்துடன் முழங்கி வரும் நிலையில், அவற்றை ரத்து செய்ய முடியாதுஎன்று மத்திய அரசு பிடிவாதமாகக் கூறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஏற்கெனவேஇருக்கக்கூடிய சட்டங்களில் “சீர்திருத்தம்” தேவை என்றும் கூறியுள்ளது.1990ஆம் ஆண்டிலிருந்து நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. 1990களில் நரசிம்மராவ் துவங்கி, பின்னர் வாஜ்பாய் தொடர்ந்து, இப்போது ஆறாண்டு காலமாக நரேந்திர மோடி ஆட்சியில் நவீன தாராளமயக் கொள்கைகள் மிகத் தீவிரமாக அமலாக்கப்பட்டு வருகின்றன. நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த 30 ஆண்டுகளில் கார்ப்பரேட் பெருமுதலாளிகள் வளர்ந்திருக்கிறார்களே தவிர, ஏழை எளிய, நடுத்தர மக்கள், சிறுகுறுவிவசாயிகள் உள்ளிட்ட பாட்டாளி மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று சட்டங்களில் ஒன்று விவசாய விளை பொருட்கள் விற்பனை சம்பந்தமான, “விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் ஊக்குவித்தல் மற்றும் உதவுதல் சட்டம் 2020” என்பதாகும். மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே பீகாரில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தக்கூடிய நிதிஷ்குமார் செய்த காரியத்தால் ஏற்பட்ட விளைவுகளை அறிந்து கொண்டால், இப்போதைய சட்டம் இன்னும் எத்தனை கொடியது என்பதை உணரலாம்.

பீகாரின் கொடிய அனுபவம்
பீகாரில் 2005ஆம் ஆண்டு நிதிஷ்குமார் ஆட் சிக்கு வந்தார். அவர் அதிகாரத்திற்கு வந்த சில மாதங்களில் “சீர்திருத்தங்கள்” என்ற பெயரில் அங்கு ‘மண்டி’ என்று சொல்லப்படுகிற விவசாய விளைபொருள்களுக்கான மொத்த விற்பனைமார்க்கெட்டுகளை (வேளாண் பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்) தடாலடியாக மூடினார். அதுவரையிலும் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருந்து வந்த மண்டி எனும் கட்டமைப்பு 2006ஆம் ஆண்டு முதல் முற்றாக ஒழிக்கப்பட்டது. இது பீகார் மாநில விவசாயிகள் மீது பெரும்தாக்குதலாக அமைந்தது. மண்டிகள் மூடப்பட்டதால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை தனியார் ஏஜெண்டுகளிடம் - தனியார் மொத்த வியாபாரிகளிடம் அவர்கள் தருகிற அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் கமிட்டி (ஏபிஎம்சி) சட்டம் என்ற சட்டத்தை ஒழித்துக்கட்டியதன் மூலம் மண்டிகளை முற்றாக அழித்தொழித்த பின்னர் கடந்த 14 ஆண்டுகாலமாக  பீகார் விவசாயிகள் துயரத்தின்பிடியில் சிக்கியிருக்கிறார்கள் என்று பொருளாதார வல்லுநரும்பாட்னாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஏ.என்.சின்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின்முன்னாள் இயக்குநருமான டி.எம்.திவாகர் விவரிக்கிறார். மண்டிகள் ஒழிக்கப்பட்டதன் விளைவாக 94 சதவீத பீகார் விவசாயிகளின் வருவாய் வாய்ப்புகள் முற்றாக அடைக்கப்பட்டுவிட்டன.

அவர்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடையாது. உதாரணத்திற்கு பீகாரில் ஒரு விவசாயி விளைவிக்கும் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு தனியார் மொத்த வியாபாரிகள் அளிக் கும் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு வெறும் ரூ.900 முதல் 1000ம் வரை மட்டுமே. ஆனால்நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசுநிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1868. எத்தனை பெரிய வித்தியாசம்? பீகாரின் விவசாயிக்கு எத்தனை பெரிய இழப்பு. இதன் காரணம் என்ன? ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் என்ற சட்டப்பூர்வமான கட்டமைப்பை ஒழித்துக்கட்டி, குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையிலான கொள்முதல் என்ற நடைமுறையை ஒழித்துக்கட்டி மொத்த வியாபாரிகளிடம் அவர்களை அடகுவைத்ததுதான். மண்டிகளை ஒழிப்பதற்கு முன்பு பீகார் விவசாயிகள் அங்கு உத்தரவாதம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கு தங்களது பொருட்களை விற்க முடிந்தது. மண்டிகள் ஒழிக்கப்பட்டதால் படிப்படியாக பீகார் விவசாயிகள்-சிறு, குறு நடுத்தர விவசாயிகள் வேறு வழியில்லாமல் விவசாயத்தை கைவிட்டு, நிலத்திலிருந்து வெளியேறி, தங்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேறி பிழைப்பிற்காக வேறு மாநிலங்களை நோக்கி இடம்பெயர்ந்த பெருந்துயரம்நடந்தது. இன்றைக்கும் அந்த விவசாயிகள் பஞ்சாப்பிலும், ஹரியானாவிலும், பல்வேறு மாநிலங்களிலும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக, கட்டடத்தொழிலாளர்களாக, நகர்ப்புறங்களில் பல்வேறு சிறு வேலைகளைச் செய்து கூலி ஈட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள். 

பாஜகவுடன் கைகோர்த்து நிதிஷ்குமார் பீகாரில் நடத்திக்காட்டிய ‘சீர்திருத்தம்’ இதுதான். இதைத்தானே, இன்றைக்கு தில்லியில் போராடும் விவசாயிகள் எடுத்துக்கூறுகிறார்கள். இது நாடு முழுவதும் நடந்துவிடக்கூடாது என்றுதானே கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடுகிறார்கள்!இந்த வேளாண் விற்பனை சட்டம் அமலானால் வேளாண் விற்பனை ஒழுங்கு முறை கட்டமைப்பு இருக்காது. அரசு கொள்முதலும் இருக்காது. நெல்லுக்கும் கோதுமைக்கு இதர விவசாய விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைகளையும் அரசு தீர்மானிக்காது. பீகாரில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. அங்கு உருவாக்கிய மோசமான நிலையைத்தான் நாடு முழுவதும் உருவாக்கிட மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்கள் இன்று பொருத்தமாக இருக்காது, புதிய சட்டங்கள், சீர்திருத்தங்கள் வேண்டுமென்று மோடி பேசுகிறார். அவர் ‘சீர்திருத்தம்’ என்று, கூறுவது சர்வதேச நிதி மூலதனம், உலக வங்கி மற்றும்ஐஎம்எப் வலியுறுத்தக்கூடிய நவீன தாராளமய கொள்கையைத்தான். அந்த கொள்கை அமலாக்கப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில்ஏற்பட்ட நிலைமை என்ன? பொருளாதார ஏற்றத் தாழ்வு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக, ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆகி வருவது தான் இந்த ‘சீர்திருத்தங்களால்’ ஏற்பட்ட விளைவு.

2017ஆம் ஆண்டு கணக்குப்படி நாட்டில் மேல்தட்டில் உள்ள வெறும் 10 சதவீத குடும்பங்களிடம் நாட்டின் மொத்த சொத்துக்களில் 77 சதவீதம் இருக்கிறது. அதே ஆண்டில் உற்பத்தியான சொத்தில் 73 சதவீதம் மேல்தட்டில் உள்ள வெறும் ஒரு சதவீத கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சென்றது. 2000ஆம் ஆண்டில் இந்தியாவில் 9 பில்லியனர்கள்(மகா கோடீஸ்வரர்கள்) இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2017ல் 119 பில்லியனர்களாக அதிகரித்துள்ளது. இந்த 17 ஆண்டுகளில் மோடி சொல்லும் சீர்திருத்த கொள்கையால் யார் வளர்ந்திருக்கிறார்கள்? கார்ப்பரேட் கம்பெனிகள் தானே?மத்திய அரசினுடைய 3 வேளாண் சட்டங்களும்அமலாக்கப்பட்டால் ஒட்டு மொத்த விவசாயம், உற்பத்தி, வேளாண் வணிகம் அனைத்தும் கார்ப்பரேட் கைகளுக்குள் சென்று விடும். ஒருபுறத்தில்பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து ஒட்டு மொத்த தொழில்களும், கார்ப்பரேட் கைகளுக்கு செல்லக்கூடிய கொள்கையை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது ஒட்டுமொத்த விவசாயத்தையும், கார்ப்பரேட் கம்பெனிகளிடம் சேர்ப்பதற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

கரும்பு பாக்கி காட்டுவது என்ன?
மாநில அதிமுக அரசாங்கம் இந்த மூன்று சட்டங்களையும் ஆதரிக்கிறது. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய வேளாண் அமைச்சரே சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பல்லாயிரம்கோடி ரூபாய் என்று அறிவித்தார். தமிழகத்திலும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் பெருமளவு பாக்கி தரவேண்டியுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியையே தனியார் ஆலை நிர்வாகங்களிடம் தலையிட்டு செலுத்தவைக்க முடியவில்லை. இந்நிலையில் ஒப்பந்த விவசாயச் சட்டம் அமலாகி எல்லா மாநிலங்களிலும் முதலாளிகள், விவசாயிகளினுடைய நிலத்தில் சாகுபடி செய்தால், மோசமான விளைவுகள் ஏற்படும். ஒட்டுமொத்த விவசாயமும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டிற்குள் செல்வது மட்டுமல்ல, சாகுபடிசெய்யக்கூடிய முதலாளிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதாரவிலையும் கிடைக்காது. கொள்முதல் இருக்காது. இதில் ஏற்படும் பிரச்சனைகள் மீது நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது. இந்தப் புதியசட்டத்தின்படி இப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டியவர் மாவட்ட ஆட்சியர்தான். மாவட்ட ஆட்சியர்கள்மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் என்பது நாம் அறிந்ததே.

உணவுப் பாதுகாப்பு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இடதுசாரிகளின் வற்புறுத்தலால் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் சில குறைபாடுகள் இருந்தன. இருப்பினும் ஒட்டுமொத்த தேசத்து மக்களுக்கு அரசு உணவுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது சட்டத்தினுடைய நோக்கம். இத்தகைய அத்தியாவசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமே, மத்திய அரசாங்கத்தின்புதிய வேளாண் சட்டங்களால் சீர்குலையும். அரிசி,கோதுமை உள்ளிட்ட தானியங்களும், உருளை, ங்காயம், எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களும் எவ்வளவு வேண்டுமானாலும் எந்த\வொரு ‘தனிநபரும்’ சேமித்து வைக்கலாம் என்றுபுதிய சட்டத்தில் கூறப்படுகிறது. இதன் பொருள் பதுக்கலைச் சட்டப்பூர்வமாக மாற்றுவது என் பதுதான். ஆகவே இந்த மூன்று சட்டங்களால் கார்ப்பரேட்கம்பெனிகள் வளருமே தவிர, தேசப்பொருளாதாரத்திற்கு எந்த வளர்ச்சியும் ஏற்படப்போவதில்லை. வேலையின்மையை தீர்க்க முடியாது, வறுமைஒழிப்பு சாத்தியப்படாது, 120 கோடி மக்களுடையஉணவு பாதுகாப்பு கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். இந்தப் பின்னணியில்தான் விவசாயிகளின் போராட்டமானது வீறு கொண்டு எழுந்துள்ளது. அவர்களுக்கான போராட்டம் அல்ல, அது தேசம்காக்கும் போராட்டம். சட்டங்கள் ரத்தாகும் வரை இந்தப் போராட்டம் ஓயாது.

===ஜி.ராமகிருஷ்ணன்==
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;