புதை குழியில் வீழாதே - கோவி பால முருகு
பாசிசத்தின் வேர்களிங்கே படருது-கேட்டை பேசிதினம் பிரிவினையைத் தொடருது இமயமுதல் குமரிவரை இமைகளிலே வெறுப்புவைத்து வெறியாட்டம் ஆடுதிங்கே மதவெறி-மனித கறிகேட்டு கூவுதிங்கே சதிநரி! ஏழைகளின் வாழ்வழித்து நிற்குது-முதலாளி வாழவைக்க பொதுத்துறையை விற்குது உச்சிமுதல் கால்வரையும் பிச்சிதினம் சுரண்டுவோரின் கால்பணிந்து சேவையினைப் பெய்யுது-நாடு தோல்மெலிந்து வறுமையுறச் செய்யுது! வருணத்தின் வேறுபாட்டைத் திணிக்குது-சனாதன தருமம்தான் அதற்குமிக இனிக்குது கிருத்துமுதல் அல்லாவரை இருக்கின்ற பிறமதத்தை ஒழித்திடவே திட்டங்கள் தீட்டுது-அதன் இழிந்தசெயல் பேய்பிடித்து ஆட்டுது! ஆரியத்தின் நூல்பிடித்து தொங்குது-அவர் வீரியமாய் தினம்வளர ஏங்குது கம்யூனிச சித்தாந்தம் வம்பர்களின் வாளொடிக்க வளருவதைப் பொறுக்காது எரியுது-அது உளறுவது வெளிச்சமாகத் தெரியுது சங்பரிவார் கூட்டமிங்கே கூடுது-அது எங்குந்தன் வால்நீட்டி ஆடுது! தங்குதடை இல்லாமல் எங்கும்வலம் வந்திடவே மதவெறியைத் தூண்டிபுகழ் பாடுது-அந்தப் புதைகுழியில் வீழ்ந்தமக்கள் வாடுது.
