பட்டியலின-பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்கிட மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.குறிப்பாக, பட்டியலின-பழங்குடி வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பள்ளி மேல்நிலைக் கல்வி படிக்கவும் அதனைத் தொடர்ந்து கல்லூரியில் முதுநிலை கல்வி வரை பெறவும் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 1940ம் ஆண்டு முதல் டாக்டர் அம்பேத்கர் வற்புறுத்தியதின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசு செயல்படுத்தியது ஆகும். சுதந்திரத்திற்குப் பிறகும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
10ஆம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் அதற்குமேல் படிப்பை தொடர வழியில்லாமல் இடைநிற்றல் அதிகமாய் உள்ளதை அரசின் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. சுமார் 20 சதவிகித மாணவர்கள் இடைநிற்றலால் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் நிலைமையை உணர்ந்து தான் இந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் அமலாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பட்டியலின வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் பள்ளி மேல்நிலை (+1, +2) கல்வியை முடிக்கவும் தொடர்ந்து கல்லூரியில் பயின்று பட்டங்களை பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. இத்திட்டம் நிறுத்தப்பட்டால் மிக அதிகமான பட்டியலின மாணவர்கள் 10ஆம் வகுப்போடு தங்களது படிப்பை நிறுத்தி விடும் ஆபத்து உள்ளது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக அரசு இம்மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையினை தொடர்ந்து வெட்டி குறைத்து வருகிறது. இத்திட்டத்தின்படி மத்திய அரசு அளிக்க வேண்டிய பங்கினை குறைத்து மாநிலங்களே முழு செலவையும் ஏற்க வேண்டுமென திணித்து வருகிறது. இதனால் மாநிலங்கள் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றன.
தமிழகத்திற்கு ரூ.1546 கோடி பாக்கி
2014 - 2015, 2015-2016 ஆகிய ஆண்டுகளுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையினை மத்திய அரசு அளிக்காததால் தமிழகத்திற்கு 1,546 கோடி ரூபாய் பாக்கி ஏற்பட்டுள்ளது எனவும், அதை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுபோல, இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு மத்திய அரசு 11,000 கோடி ரூபாய் பாக்கித் தர வேண்டி இருந்தது. ஆனாலும், மத்திய அரசு இந்த பாக்கித் தொகையினை மாநில அரசுகளுக்கு வழங்க மறுத்து வருகிறது. 2017-2018ம்ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ. 1,689.30 கோடி ரூபாய், 2018-2019ம் ஆண்டில் ரூ. 1,910.19 கோடியும், 2019-2020ம் ஆண்டில் ரூ. 2,005.70 கோடி மாநில அரசு செலவழித்துள்ளது. 2020-2021ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக தமிழக அரசு 2,110.90 கோடிரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர், பிரதமருக்கு 04.12.2020 அன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்கினை 60 சதமானமாகவும், மாநில அரசின் பங்கினை 40 சதமானம் என்ற அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றி செயல்படுத்த வேண்டுமெனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆனால், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பட்டியலின-பழங்குடி மாணவர்களுக்கு 2018-19ம் ஆண்டில் ஒதுக்கிய தொகை ரூ. 6,000 கோடி மட்டுமே. அதையும் 2019-2020 பட்ஜெட்டில் ரூ. 3,000 கோடியாக குறைத்து விட்டது. 2020-2021 பட்ஜெட்டில் இதற்கு மேல் தொகை உயர்த்தப்படவில்லை. மத்திய அரசு ஒதுக்கியுள்ள இந்த தொகை தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை கூட கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதே உண்மையாகும். மத்திய அரசின் இத்தகையப் போக்கினால் பட்டியலின-பழங்குடி மாணவர் களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டமே ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித் தொகை பெறும் தகுதி படைத்துள்ள 65 லட்சம் பட்டியலின மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி உதவித் தொகை திட்டம்
இதுமட்டுமின்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சிறுபான்மை வகுப்பு மாணவர்களுக்கும் கூட போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை வழங்கும் நடைமுறை உள்ளது. அதாவது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரியினருக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 20,000/- வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. அதையும் படிப்படியாக ஒழித்துக் கட்டி ஒரு புதிய கல்வி உதவித் தொகை திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்த உள்ளது அதிர்ச்சியளிப்பதாகும். பிரதம மந்திரி இளம் சாதனையாளர்கள் உதவித் திட்டம் (pradhan mantri young achidvers scholarship) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இத்திட்டத்தின்படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. (முதல்தலைமுறை) சிறுபான்மை மாணவர்களோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் (EWS) அனைவருக்குமான ஒரே திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு நாடு முழுவதும் தகுதி தேர்வு நடத்தப்படும் எனவும், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிற மாணவர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 62 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் மொத்தத்தில் சில கோடிகளுக்கும் அதிகமாவார்கள். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ. 7,200/- கோடி மட்டும் நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ. 30,000/- வரை மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத் தில் கல்வியில் பின்தங்கியிருக்கிற பட்டியலின-பழங்குடி மாணவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு சமாதி கட்டுவதே பாஜக அரசின் நோக்கமாகும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பட்டியலின-பழங்குடி மாணவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (முதல் தலைமுறையினர்) மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சார்ந்த கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி பகல் கனவாக மாறி விடும்.
பட்டியலின-பழங்குடி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை தொடருவதன் மூலம் மட்டுமே எஸ்.சி.டி எஸ்.டி. மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பினை பெற முடியும். இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துவதோடு, பெரும் நிதிச் சுமையினை மாநில அரசுகளின் தலையில் ஏற்றாமல் மத்திய அரசு 60 சதமானம், மாநில அரசு 40 சதமானம் என பங்கீட்டு செயல்படுத்துவது அவசியமான ஒன்றாகும். இதேபோல, பிற்படுத்தப்பட்ட (முதல் தலைமுறை), சிறுபான்மை மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தையும் செயல்படுத்திட வேண்டும் என வற்புறுத்துவது எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும். இதைத் தவிர்த்து பிரதம மந்திரி இளம் சாதனையாளர்கள் உதவித் திட்டம் என பெயரை மாற்றி கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதி தேர்வு நடத்துவது போன்றவைகளால் பட்டியலின - பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (முதல் தலைமுறை) சிறுபான்மை மாணவர்களின் கல்விக் கண்ணை பறிப்பதாக அமைந்து விடும்.
===கே.பாலகிருஷ்ணன்===
மாநிலச் செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)