இரண்டும் இரண்டும் நாலு
நாலும் நாலும் எட்டு
எட்டும் எட்டும் பதினாறு ஆகும்...
சொல்லுங்கள், என்றார்
ஆசிரியர் இரண்டும் இரண்டும் நாலு
நாலும் நாலும் எட்டு
எட்டும் எட்டும் பதினாறு ஆகும்
ஆனால் அதோ ஒரு லயர் பறவை
பறக்கிறது ஆகாயத்தில்
குழந்தை அதைப் பார்க்கிறான்
குழந்தை அதைக் கேட்கிறான்
குழந்தை அதை அழைக்கிறான்;
என்னைக் காப்பாற்று என்னுடன் விளையாடு பறவையே!
ஆக, இறங்கி வருகிறது பறவை குழந்தையுடன் விளையாடுகிறது
இரண்டும் இரண்டும் நாலு...
சொல்லுங்கள், என்றார்
ஆசிரியர் குழந்தையோ விளையாடுகிறது
பறவை அதனுடன் விளையாடுகிறது...
நாலும் நாலும் எட்டு எட்டும் எட்டும் பதினாறு ஆகும்
பதினாறும் பதினாறும் என்ன ஆகும்?
பதினாறும் பதினாறும் ஒன்றும் ஆகாது
நிச்சயமாக முப்பத்திரண்டு ஆகாது
எப்படிப் பார்த்தாலும் ஆகாது
அவை அங்கிருந்தே போய்விடும்
தன் பள்ளி மேசைக்கடியில் குழந்தை பறவையை ஒளித்து
வைக்க எல்லாக் குழந்தைகளுமே
அதன் பாடலைக் கேட்கின்றன எல்லாக் குழந்தைகளும்
அந்த இசையைக் கேட்கின்றன
எட்டும் எட்டும் தங்கள் முறைக்குப் போய்விடுகின்றன
பிறகு நாலும் நாலும் இரண்டும் இரண்டும்
அவரவர் முறையில் அங்கிருந்தே ஓடிவிடுகின்றன
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகவும் ஆவதில்லை
இரண்டாகவும் ஆவதில்லை
ஒன்றும் ஒன்றும் கூடப் போய்விடுகின்றன
லயர் பறவை பாடிக் கொண்டிருக்கிறது
குழந்தையும் பாடுகிறது ஆசிரியர் கத்துகிறார்;
கோமாளித் தனத்தை நிறுத்துகிறீர்களா?
ஆனால் மற்ற குழந்தைகளெல்லாம்
இசையைக் கேட்கின்றன
பள்ளியறையின் சுவர்களெல்லாம்
அமைதியாகச் சரிகின்றன கண்ணாடிச்
சன்னல்கள் மணலாக ஆகின்றன
எழுதும் மை நீராக பள்ளி மேசைகள் மரங்களாக
சாக்குக் கட்டி மலைமுகடாக பேனாக்கூடு பறவைாக.