“மாபெரும் லெனின், மறைந்து கண்ணுக்குத்தெரியாத திருக்கூட்டத்தில் சேர்ந்துவிட்டார். பேராசிரியரும், இழந்ததை மீட்டுப்பெற வழிகாட்டுபவருமான அவருடைய மறைவினால் உலகமும், தொழிலாளர் உலகமும் இன்று பெரு நஷ்டத்தை அடைந்துள்ளது. அவர் மறைவினால், அடக்கப்பட்டுக் கிடக்கும் உலகத் தொழிலாளருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிறரது அறியாமையையும் தங்கள் பேராசையையும் குடையாகக் கொண்டு நிற்கும் தன்னலக் கும்பல்கள் இன்று இந்தப் பேரிழப்பு குறித்து மவுனம் சாதிக்கின்றன.
மனித இனத்தின் துன்பத்தைத் தணிக்கத் தோன்றிய தோன்றல்களில், நிக்கோலாய் லெனின் இன்று இணையற்றவராகத் திகழ்கிறார். இனி அவர் வழியைப் பின்பற்றுவது என்பது தொழிலாளர்களுடைய பொறுப்பாகும். உலகத் தொழிலாளர்களில் ரஷ்யத் தொழிலாளர்கள் இன்று மிக்க மகிழ்ச்சியும் நிறைவும் உடையவர்களென்று கருத முடியும். தளர்ச்சியின்றிப் பணியாற்றிய அம்மக்கள் ஊழியரே இதற்கு தலையாய காரணமாகும். அவரது மறைவுக்காகவே, அவரது தோழர்களாகிய நாம் ஆற்றாது அரற்றிக் கொண்டிருக்கிறோம்.”
“ தம் சொந்த நாட்டில் நிக்கோலாய் லெனின், அரசியல், சிந்தனை, தத்துவம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய மாபெரும் புரட்சி அழிக்கப்படலாம். ஒருக்கால் மக்களில் ஒரு சிலரின் தன்னலப் போக்கினால் ஒதுக்கித் தள்ளப்படலாம். ஆனால் அது மீண்டும் உயிர்த்து எழுந்து இறுதியாக உலகம் முழுவதிலும் பரவும். கடைசியாக அது உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளரின் வாழ்க்கையை மிகச் சிறப்புள்ளதாகவும், இன்பம் உள்ளதாகவும், ஆக்கும். ஏராளமானவற்றைச் செய்துள்ள அவருக்கு, ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களைப் போலவே உழைக்கவும், வாழவும் உரிமை உண்டு என்ற தெளிவான தோற்றத்தைத் தொழிலாளிக்கு தந்த அவருக்கு நம் அன்பையும் நன்றி உணர்வுடனான வணக்கத்தையும் காட்டுகின்ற முறையில் நாங்கள் எங்கள் கரங்களை உயர்த்துகிறோம்.”