articles

img

ஆட்சியாளர்கள் சர்வாதிகாரமாக மாறுவதைத் தடுக்க... - கௌதம் நவ்லகா

இது மனித உரிமை செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகா சிறைவாசத்தில்  இருந்தபோது எழுதியதாகும். எல்கார் பரிசத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட 16 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரில் இவரும் ஒருவர்.

“................... இல்லை. சுதந்திரம் தனியாக மரணிக்காது. அதே நேரத் தில், நீதி கால காலத்துக்கும் நாடு கடத்தப்படும். தேசம் துன்பப்படும். அப்பாவிகள் தினந்தோறும் சிலுவையில் அறையப்படுவார்கள்.”  ஆல்பர்ட் காம்யு- “எதிர்ப்பு, கிளர்ச்சி, மரணம்” எனும் நூலில்.  சிறைச்சாலையில் வாழ்வுரிமைக்கான போராட்டம் சுதந்திரத்தை இழந்து சிறை வாசத்தில் இருப்பவரின் சுதந்திரம் பற்றிய புரிதல் மிகவும் தீவிரமானதாகும். கைதியின் பேச்சுரிமை மீது நியாயமற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அவரது செயல்பாடுகளும், நகர்வுகளும் முடக்கப்படும். வாழ்வுரிமையின் உள் ளார்ந்த அம்சங்களான உணவு, குடிநீர், மருத்துவ உதவி ஆகிய அடிப்படை பிரச்சனைகளுக்குக் கூட ஒரு சிறைவாசி குரல் எழுப்ப வேண்டியுள்ளது. இந்த உரிமைகளை சிறை நிர்வாகம் மறுக்கும், தள்ளிப்போடும், தாமதப்படுத்தும்.  சிறைக் கைதி தூய காற்றை சுவாசிக்கவும், ஒரு மணி நேரம் சூரிய ஒளி உடம்பில் படுவதற்கும், தான் விரும்பும் புத்தகங்களைப் படிப்பதற்கும் அல்லது சிறையில் உள்ள நூலகத்திற்கு செல்வதற்கும் கூட சிறை நிர்வாகம் அனுமதி மறுக்கிறது. எனது இரண்டு ஆண்டு கால சிறைவாசத்தில், எனது உரிமைகளுக்காக சிறை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தேன். சிறை நிர்வாகம் காது கொடுத்துக் கேட்கவில்லை. நீதிமன் றத்தின் கதவுகளைத் தட்ட வேண்டி வந்தது. நீதிமன்றம் நான் காலையில் ஒரு மணி நேரம் நடப்பதற்கு அனுமதி வழங்கியது.

ரகசியமாக வைக்கப்பட்டிருந்த சிறைக் கையேடு

மகாராஷ்டிரா தலோஜா சிறையில் உள்ள 3500 கைதிகளில் நான் ஒருவன் மட்டுமே இவ்வாறு நடைபயிற்சி செய்ய முடிந்தது. மும்பை நீதிமன்றம் நான் விரும்பும் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள அனுமதித்தது.  இவை போன்ற சலுகைகள் மற்ற சிறைவாசிகளுக்கு விரிவுபடுத்தப்படவில்லை. சிறைக்குள் அதிகார அடுக்குகளும், சமத்துவமின்மை யும் நிலவுவது ஒரு தனிக் கதை. நான் சிறையில் நுழைந்த போது, மற்ற கைதிகள் எவ்வாறு சிறை விதிகளின்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அது போன்றே நானும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதார்த்தத்தை எதிர் கொண்டேன். ஆனால், இந்தச் சிறை விதிகளை பட்டியலிடும் சிறைக் கையேடு ஏதோ தேசப் பாதுகாப்பு தொடர்புடை யது போன்று ரகசியமாக வைக்கப்பட்டி ருந்தது. சிறைக் கையேட்டின் உள்ளடக்கம் தான் என்ன, அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் கொண்டேன். ஐநா.வின் முத்திரை வாசகமான “குடி மக்களை வலிமை பெற்றவர்களாக்க வேண்டும்” என்பதை மனித உரிமைச் செயல்பாட்டாளர் என்ற முறையில் ஆழமாக நம்புகிறேன். இந்த நம்பிக்கை யானது ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் பின் விளைவுகள் ஒரு பொருட்டல்ல  என்ற மன உறுதி இல்லாத வர்கள் சிறைவாசத்தின் போது காணா மல் போய்விடுவார்கள். போராட்ட மன  உறுதியே ஆதரவற்றவர் என்ற உணர்வி லிருந்து ஒருவரை விடுவிக்கிறது. இன்று காணப்படும் முரண்பாடுகள், வெற்றி பெற இயலாமைகள் இவை எல்லாம் இருந்த போதும் ஒடுக்குமுறைக்கு எதி ரான போராட்டம் ஒருவருக்கு கொஞ்சம் சுதந்திரத்திற்கான வெளியையும் உருவாக்கும். நம்மையும் பாதுகாக்கும்.

என்றும் கற்றுக்  கொண்டே இருப்போம்

சிறையில் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. சக கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுடன் நட்புறவை உருவாக்கிக் கொள்ளவும், அவர்கள் மீது அக்கறை கொள்ளவும் ஏராளமான நேரம் கிடைத்தது. என்னுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆரோக்கியமான அணுகுமுறை, படைப்பூக்கம், மனஉறுதி கண்டு நானும் பலம் பெற்றேன்.   என்னைச் சுதந்திரமான மனிதனாக உணர்ந்தேன். இந்த உணர்வை ஆட்சி யாளர்களால் பறித்துவிட முடியாது. புதிய மனிதர்களை அறிந்து கொண்டேன். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதன் மூலம் எனது யூகங்களைக் கை விட்டேன். இது எனது சிறை வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்தது. எவ்வ ளவு சிறிய வாய்ப்பாக இருந்தாலும், அதைப்பற்றிக் கொள்வதில்தான் சுதந்தி ரம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

கேலிக் கூத்தான  சிறை விதிகள்

வழக்கு விசாரணை முடிந்து தண்டிக் கப்பட்டவர்கள் அனுப்பப்படும் இடம்தான் சிறை என்பது அர்த்தம் இழந்துவிட்டது. சிறைவாசிகளில் 80 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், தடுப்புக் காவலிலும் உள்ளவர்கள் தான். இந்திய அரசும், நீதிமன்றமும் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்காமலேயே மக்களை சிறைகளுக்குள் தள்ளிக் கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு சிறைக் கைதியும் சிறை விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். மகாராஷ்டிரா மாநிலச் சிறை விதிகள் கைதிகள் பாடுவதை யும் ,ஏன் சத்தம் போட்டு சிரிப்பதையும் கூட தடை செய்கிறது (மகாராஷ்டிரா மாநி லச் சிறைக் கையேடு விதி எண் 19). சிரிப்பதற்கும், பேசுவதற்கும் தடை விதிப்பதை ஒரு தாக்குதலாகவே உணர்ந்தேன். ஒரு விசயம் குறித்து சிரித்தாக வேண்டும் என்றால், நானோ மற்ற கைதியோ ஏன் அதை அடக்கிக் கொள்ள வேண்டும். சத்தம்  போட்டு பேசு வது அந்த சந்தர்ப்பத்தை பொறுத்தது. தனிநபர் சிறைகள் தள்ளித் தள்ளி உள்ள நிலையில் எப்படி ஒருவர் ஒருவ ருக்கொருவர் சத்தம் போடாமல் பேசிக் கொள்ள முடியும்?  என்னுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கலாச்சாரக் கலை ஞர்களும் இருந்தனர். குயிலைப் பாட விடாமல் தடுத்துவிட முடியுமா என்ன? அவர்கள் பாடல்கள் எழுதிப் பாடுவார்கள். அது எங்களையும் உத்வேகம் கொள்ள வைக்கும், பாட வைக்கும். எனவே இந்த பத்தாம்பசலித்தனமான, காலத்திற்கு ஒவ்வாத விதிகள் உடைத்தெறியப்பட வேண்டும். சிறையைப் பார்வையிட வந்த அதிகாரியிடம் எங்களது பிரச்சனைகளை முறையிட்டோம்.

அரசை கேள்வி கேட்காமல் அடிபணியச் சொல்லுதல்

அடிபணியச் சொல்லுதல் சிறைக் கைதிகளுக்கு நாளிதழ்கள் மட்டுமே வெளி உலகத்தை காட்டும் கண்ணாடி. நாடு விடுதலை பெற்றது முதல் நாட்டு மக்கள் கடமைகளை முற்றிலுமாக மறந்துவிட்டு உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்ததால் தான் நாடு பலவீனமானது என்று பிரதமர் பேசியது (2022 ஜனவரி 22)என்னை மிகவும் கவ லைக்குள்ளாக்கியது.  இது 1975-77 களில் அவசரநிலை ஆட்சியை நினைவுபடுத்தியது. அப்போ தைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி யின் அரசு இதுபோன்றுதான், உரிமை களை விடக் கடமைகள் மேலானவை என்று பிரச்சாரம் செய்தது.  அரசமைப்புச் சட்டத்தில் திருத்தமும் செய்தது. குடி மகனின் கடமைகளைப் பட்டியலிடும் பிரிவு 51 -ஐ சேர்த்தது. குடிமக்கள் கேள்வி எதுவும் கேட்காமல் அரசுக்கு அடிபணிவதைக் கட்டாயமாக்கி யது. அதுபோன்றே, இப்போது புதிய இந்தியா ,மன்னிக்கவும் பாரதமும் அது போன்ற வழியில் செல்கிறது. இன்றைய ஆட்சியாளர்களின் கடமை யைச் செய்யுங்கள் என்ற உபதேசம் குறுகிய மனப்பான்மை, கீழ்ப்படிதல், அரசு எதைச் செய்தாலும் விமர்சனம் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. என்னை மிகவும்  ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால் நாளிதழ்கள் தங்களின் தலையங்கத்தில் பிரதமரின் இத்தகைய பேச்சு குறித்து கருத்து ஏதும் தெரிவிப்பதில்லை. மாறாக குடிமக்களின் உரிமைகள் பற்றி  விமர்சிக்கப்படுகிறது. பிரதமரை விமர்சிப் பதற்கு அஞ்சுகின்றன.

கருத்துரிமைப் பேச்சும் காஷ்மீரை ஒடுக்கியதும்

பிரதமர் 2023 நவம்பர் 26 ஆம் நாளைய மன் கி பாத் உரையில், மே 1951 இல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் தான் பேச்சுரிமை, கருத்துரிமையைக் கட்டுப்படுத்தியது என்றார். அவருக்கே உரித்தான முறையில், இந்தச் சட்டத்  திருத்தமானது ஜமீன்தாரி முறையை  ஒழிப்பதற்காகவும், ஒடுக்குமுறையில் இருந்து தலித்துகளை பாதுகாப்ப தற்காகவும் கொண்டு வரப்பட்டது என்பதை அவர் மறைத்தார். தனது அரசு பேச்சுரிமை, கருத்துரிமையைப்  பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் கூறிக்கொண்டார். ஆனால், அந்த உரை வெளியான 24 மணி நேரத்திற்குள், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஒன்றிய அரசின் நேரடி ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டது. கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வென்ற ஆஸ்திரேலியாவின் வெற்றி யைக் கொண்டாடியதற்காக சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் பரவலான எதிர்ப்பு எழுந்ததும் காவல்துறை பின் வாங்கியது. ஜம்மு - காஷ்மீர் காவல் துறை போன்று உ.பி. மாநில காவல் துறையும் 2021 இல் இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்களைத் தேசத் துரோகிகள் என்று கைது செய்தது. பத்திரிகையாளர் நிகில் வாகில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் வெறுப்புணர்வைத் தூண்டும் எனக்கூறி ரத்து செய்யப்பட்டது. இரு சமூகங்க ளுக்கு இடையே பகைமையை உருவாக்கும் நோக்கம் என்று இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 153 இல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்க ளில் வெறுப்புணர்வை பரப்புவோர் சுதந்திரமாக பேச அனுமதி அளிக்கப் படுகிறது. அதனால்தான் மும்பை காவல்துறை ஆணையாளர் வளாகத்தில் பாஜக நட்சத்திரப் பேச்சாளர்கள் பத்திரிகையாளர் கூட்டத்தில் வெறுப்பு பேச்சுகளை பேச அனுமதி அளிக்கப்படு கிறது. இது குறித்து மும்பை உயர் நீதி மன்றமும் ஆச்சரியம் தெரிவித்தது. பன்மைத்துவம் ,  கருத்து வேறுபாடு கள்- அதிருப்தியாளர்கள் மீதான சகிப்புப் தன்மை பரவலாக காணப்படுகிறது

துணிச்சலான  குடிமைச் சமூகச் செயல்பாடுகள் அவசியம்

குடிமைச் சமூகத்தின் துணிச்ச லான செயல்பாடுகள் மிகவும் முக்கிய மானதாகும். ஏனெனில், சட்டத்தை உருவாக்குபவர்களோ அல்லது அதை அமல்படுத்துபவர்களோ அல்லது நீதி வழங்குபவர்களோ யாரும் தவறி ழைக்க முடியாதவர்கள் அல்ல. எல்லா  மனிதர்களுமே தவறு செய்யக் கூடியவர்கள் தான். ஆட்சியாளர்கள் சர்வாதிகாரமாக மாறுவதைத் தடுக்க வும் ஆட்சியமைப்பு முறையைக் காப் பாற்றுவதற்கும் குடிமைச் சமூக செயல்பாடுகள் அவசியமானதாகும். பீமாகொரேகான்- 16 (பிகே 16) கைதிகளாகிய எங்களின் கடிதத் தொடர்பு களை சிறைத்துறையானது புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தையும், மனித உரிமை ஆர்வலர்களையும் அணுகினோம். சிறைக் கண்காணிப்பாளர் எங்களை வேறு சிறைகளுக்கு மாற்றத் திட்டமிட்டார். பிகே - 16 கைதிகள் அனைவரும் மறுத்தோம். மும்பை உயர்நீதிமன்றம் சிறைக் கண்காணிப்பாளரை கடுமையாக விமர்சித்தது. சிறை நிர்வாகிகளின் கிரிமினல் அலட்சியத்தால் அருட்தந்தை ஸ்டேன்சுவாமி இறந்தது பற்றியும் விமர்சித்தது.அரசு குடிமக்களின் உரிமை களைக் கட்டுப்படுத்தும் போது, சிறை அதிகாரிகளும் தன்னிச்சையாக செயல் படுகின்றனர். ஆனால்,இவர்கள் கடுமை யான மக்கள் போராட்டத்தின் போது பின் வாங்குகின்றனர். அப்போது, கொரோனா பேரிடரின் போது, அவசர மாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் விரோதச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டி வந்தது. இது நமது காலத்தின் முக்கியமான அம்சத்தைக் காட்டுகிறது.

சட்டத்தின் படி ஆட்சியும் சட்டத்தின் மூலம் ஆட்சியும்

சட்டத்தின்படியான ஆட்சி என்பதும், சட்டத்தின் மூலமாக ஆட்சி என்பதும் வேறுபட்டது. முந்தையது ஜனநாய கத்தின் அம்சம். பிந்தையது எதேச்ச திகாரம் ஆகும். மக்கள் பிரதிநிதி களால் உருவாக்கப்படும் சட்டங்கள்  விழுமியங்களைக்  கொண்டவையாக இல்லை. ஜனநாயக சீர்திருத்தங்க ளுக்கான அமைப்பின் (ஏடிஆர்)  ஆய்வின் படி, 17ஆவது நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 222 மசோதாக்களில் 45 மசோதாக்கள் மக்கள வையில் ஒரே ஒரு அமர்வில் நிறைவேற் றப்பட்டுள்ளன. வேறு 20 மசோதாக் கள் இரு அவைகளிலும் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜம்மு -  காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையைப் பறித்து, இரண்டு யூனியன் பிரதேசங்க ளாக தரமிறக்கம் செய்வதற்கான மசோதாவும் இதில் ஒன்றாகும்.  சர்வாதிகாரப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்தில், எந்த விதமான விவாதமும் ஆய்வும் இன்றி  முக்கியமான மசோதாக்கள் எல்லாம் பலவந்தமாக நிறைவேற்றிக் கொள்ளப் படுகின்றன. சமீபத்தில் உச்ச நீதி மன்றம், அரசு இதுபோன்று எழுத்துப் பிழைகளுடன் கூட அவசரம் அவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்கள்   ஏராளமான வழக்குகள் தொடுக்கப்படு வதற்கு வழிவகுக்கும். இது நீதித்துறை க்கு மேலும் சுமையை அதிகரிக்கும் என்று எச்சரித்தது. ஆனால், விசித்திரமான முறையில் உச்ச நீதிமன்றமானது ஜம்மு -காஷ்மீர் சிறப்புரிமை 370 ஆவது பிரிவை ரத்து செய்ததில் தவறேதும் காணவில்லை. அம்மாநிலத்தை தரமிறக்கியதும்  சட்டரீதியாக சரியென்று கூறியது. 370-ஆவது பிரிவு ரத்துடன் கூடவே, ஜம்மு- காஷ்மீர் முழுவதும் 7000 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஜம்மு- காஷ்மீர் உயர்நீதிமன்றம் கைதுக்கு எதிரான  ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார் பஸ்) மனுக்களை விசாரிக்க மறுத்தது. ஏடிஆர் அமைப்பின் ஆய்வின்படி 15 ஆவது நாடாளுமன்றத்தில்(2009-14) தாக்கலான 71 சதவீத மசோதாக்கள் ஆய்வுக் குழுக்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் 16ஆவது நாடாளு மன்றத்தில் (2014-19) வெறும் 26 சதவீத மசோதாக்கள் தான் ஆய்வுக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

காலனி ஆட்சியின் போலீஸ் ராஜ்யம் போல்

புதிய குற்றவியல் சட்ட விதிகள் மசோதாவை வெட்டிச் சுருக்கப்பட்ட ஆய்வுக் குழு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவை நாடு விவாதிப்பதை அரசு விரும்பவில்லை. அந்த சட்டத் தொகுப்பு, காலனி ஆட்சியின் வெறுக் கத்தக்க போலீஸ் ராஜ்யத்தை மீண்டும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியக் காவல்துறை இன்னும் கூட 1861 ஆம் ஆண்டு இந்தியக் காவல்துறை சட்ட விதிகளின் ஆளுகையின் படி தான் செயல்படுகிறது. அது சமூகக் காவல்துறை போன்றல்ல, அரை ராணுவ அமைப்பு போன்றே வடி வமைக்கப்பட்டது. பாஜக ஆளும் மாநி லங்களில் காவல்துறை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் புல்டோசர் நீதிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது அன்றாடச் செயல்பாடாகவே மாறி விட்டது. புதிய குற்றவியல் சட்டத்தில் காவல்துறை விசாரணைக் காவல் 15 நாளில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இது நீதிமன்ற வாரண்ட் இல்லாமலேயே ஒருவரைத் தேடவும், கைது செய்யவும்  காவல்துறைக்கு தன்னிச் சையான அதிகாரம் வழங்குகிறது. பாரத் நியாய சம்ஹிதா அத்தியாயம் 7  தேசத் துரோகச் சட்டத்தை நயவஞ்சகமான வடிவத்தில் சேர்த்துள்ளது. இது குழப்பமான முறையில், தெளி வாக வரையறுக்கப்படாமல் உள்ளது. குற்றவியல் சட்டங்களில் காலனித்து வத்தை நீக்காமல் குடிமக்களின் உரிமைகளை மையப்படுத்தாமல், குடிமக்களை   அடிபணிபவர்களாக மாற்றுகிறது. ஜூலை 2020 இல் தேசியப் புலனாய்வு நிறுவனம் என்னிடம் 11 நாள் விசாரணை செய்தது. நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டங்கள் குறித்து ஐயப்பாடுகள் இருக்குமானால், நீதிமன் றத்தைத்தான் அணுக வேண்டும். அதை எதிர்த்துப் போராடக் கூடாது என்று புலனாய்வு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கு கடுமையாக மறுப்பு தெரி வித்தேன்.

கட்டுப்படுத்தப்படும் வாழ்வுரிமைகள்

மக்கள் பிரதிநிதிகள் குடிமக்களால் 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் என்பதாலேயே தங்கள் இறையாண்மையை 5 ஆண்டுகளுக்கு அடகு வைத்து விட்டதாக அர்த்தம் இல்லை. அவர்கள் எதைச் செய்தாலும் அதைக் குடிமக்கள் பின்பற்ற வேண்டும் என்பது கிடையாது என்றேன். அநீதியான பிளவுவாதச் சட்டங்களை எதிர்ப்பதற்கு குடிமக்கள் உரிமை பெற்றுள்ளனர் என்று வலியுறுத்தினேன். தேசியப் புலனாய்வுக் குழுவினர் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றிப்பு (பியுடிஆர்) போன்ற சிவில் உரிமை அமைப்புகளை  வெறுக்கின்ற னர். நான் பியுடிஆர் அமைப்பைச் சேர்ந்தவன் என்ற முறையில் இந்துத்துவ தீவிரவாதம் மீதான புலனாய்வு அமைப்புகளின் தோல்விகளை விமர்சிக்கி றேன். இப்போது பிகே - 16 வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரை யும் நீதிமன்றம் விடுவித்து விட்டது. இப்போதாவது அந்த புலனாய்வு விசாரணை அதிகாரிகள் எங்களின் போராட்டம் சரியானது என்பதை ஏற்றுக் கொள்வார்களா? இன்றைய ஆட்சியில் சிறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, வெளியில் இருக்கும் குடிமக்களின் வாழ்வுரிமைகளும் கட்டுப்படுத்தப்படு கின்றன. அவர்களின் குரல் ஒடுக்கப் படுகிறது. இதை எதிர்த்துப் போராடியாக வேண்டும். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற சட்டத்தினால் தான், நாங்கள் சிறைப்பட நேர்ந்தது. விசா ரிக்கப்படாமல், தீர்ப்பேதும் வழங்கித் தண்டிக்கப்படாமல் சிறைக்குள் வீசி எறியப்பட்டோம்.

தீவிர ஒடுக்குமுறை அபாயம்

அபாயம் குடிமை உரிமைகள் மீதான தாக்குத லும், உரிமைகளைக் கோராமல் கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற உபதேசமும்  எதிர்வரும் அபாயத்தை உணர்த்துகிறது. அரசானது அரசின்  கதையாடல்களை ஏற்றுக் கொள்ளாத வர்களை தீவிரமாக ஒடுக்குவதற்கான அபாயம் உள்ளதாகத் தோன்றுகிறது. நிறைவாக திரும்பவும் காம்யு சொற்க ளுடன் முடிக்கிறேன்:

“எனது ஆற்றல் குறைக்கப்படுவ தையும், நான் தினமும் அனுபவிக்கும் வேதனையையும், வார்த்தைகளின் விபச்சாரத்தையும், அவதூறால் பாதிக்கப் படுவதையும், ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்துவதையும், பைத்தியக்கா ரத்தனமான வன்முறைப் பிரயோகம் போற்றப்படுவதையும்  வெளிப்படுத்த மட்டுமே விரும்பினேன்.” நன்றி : வயர் இணைய இதழ்,19.05.2024  தமிழில் : ம.கதிரேசன்