articles

img

வாள், யாரை நோக்கி வீச வேண்டும்? - ஜி.செல்வா

நவீன சமூகம் எதிர்கொள்ளும்  சிக்கல்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்து நிதானமாக உரையாட எத்தனித்துள்ளது இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம்.  சாதியம் - பாலினம் குறித்து மிக வெளிப்படை யான கேள்விகளை எழுப்பி, நிகழ்கால சமூகம் நிலை நிறுத்தியுள்ள நிலப்பிரபுத்துவ சிந்தனை மரபு களை எள்ளலுக்கு உள்ளாக்கி, அடித்து நொறுக்க அடி எடுத்து வைத்துள்ளது சிறப்பம்சம்.  திருமணம் செய்யாமல் ஒன்றாக இணைந்து வாழ்வது மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப உறவின் வடிவங்கள் மாற்றம் பெற வாய்ப்புள்ளதாக உச்ச நீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தது. அதுபோல நவதாராளவாத பொருளாதார சமூக அமைப்பு விளை விக்கும் விளைச்சலில் உருவாகும் பண்பாட்டுச் சூழலையும்  எதிர்கொண்டு பேச வேண்டிய பேச்சுக்கள் ஏராளம் உள்ளது. இது சார்ந்து ஒவ்வொரு தனி நபருக்கும் ஏராளமான கேள்விகளும், தெளிவு பெறுவதற்கான தேவைகள் இருந்தும் அதற்கான வெளி போதுமானதாக இல்லை. இவ்விடத்தில் தான் “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின்  முக்கி யத்துவம் உணரப்படுகிறது.

நாடக உருவாக்கத்தில் படம் உருவாக்கப்படு கிறது. நாடகத்திற்கான கதை பொருளில் சமூகத்திற்கான உரையாடல் மேற்கொள்ளப்படு கிறது.  திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இருவரையும் நுட்பமாக இணைத்து பா. ரஞ்சித் வரைந்த ஓவியம், பேசாப் பொருளை பேசுவதில் துணிவைக் காட்டி உள்ளது. கலைஞர்கள் படத்தில் வாழ்ந்துள்ளனர். படத்தின் கருப்பொருள் மட்டுமின்றி படமே இளமையாக, வண்ணமயமாக உள்ளது. காதல் மனங்களை காட்டுமிராண்டித்தனமாக அழித்த, அழித்துக் கொண்டிருக்கிற சாதிய சக்தி களின் கோர முகத்தை, நம்மைச் சுற்றி நிகழ்ந்த குரூரங்களை களமாக வைத்து முழுமையாக அம்பலப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. இறுகிய சாதிய மனம், இளகி மனிதமயமாகும் தருணங்கள் அற்புத மாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காதலுக்கு எதிராக முட்டுக்கு நிற்கும் கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து பேசிப் பேசி விஷச் சிந்தனைகளை நீக்கு வதற்கு நிதானமான முன்னெடுப்புகள் குறிப்பிடத் தக்கது.

பழமைவாத, பிற்போக்கு சாதிய, மத  சக்திகளுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய பண்பாட்டு, களப் பணிகளை சுட்டிக் காட்டிக் கொண்டே சாதுரியமாக நேச கருத்துக்களை, எதிர்திசையில் நிறுத்தி உரை யாடுவதற்கு இப்படத்தை பயன்படுத்தியதன் ஊடாக தனது அடிப்படை நோக்கத்தையே இயக்குநர் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்.  காதலுக்கு எதிராக, சாதிய ஒடுக்குமுறைக்கு அடிப்படையாக உள்ள சனாதன சக்திகளை, அப்பட்ட மாக அம்பலப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய எத்த னத்தை  கம்யூனிஸ்டுகள் மீது ஏவுவதன் காரணம், வன்மம் இப்படத்திற்கு ஏன் தேவைப்படுகிறது?

மானுட விடியலுக்கு, சமூக சமத்துவத்துக்கு, மனிதநேயத்திற்கு, அற வாழ்வியலுக்கு அடிப்படை யான கம்யூனிச தத்துவ கருத்தியல் மீது  ஒரு முற்போக்கு கலைஞன் வன்மம் கொண்டு வாள் வீசுவது உகந்த செயலா? நம்பிக்கையின்மை, நிராசை,  போராடினால் வெற்றி பெற முடியாது என திட்டமிட்டு உருவாக்கி உள்ள கருத்தியல்களை தகர்த்து, கரம் கோர்த்து இணையாக நகர வேண்டிய காலம் இது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ அதற்கான உரையாடலை முன்னெடுக்கட்டும்! கட்டுரையாளர்:

சிபிஐ(எம்) மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்

;