articles

img

கரும்பு இனிப்பு... விவசாயிக்கு கசப்பு! - டி.ரவீந்திரன்

ஆதிகாலம் தொட்டு கரும்பு உழவர்களின் வாழ்வோடு பயணித்து வருகிறது. கரும்பை பயிரிட்ட விவசாயிகள் ஆலை அமைத்து கரும்பு சாறு பிழிந்து வெல்லம், சர்க்கரை, கற்கண்டு தயாரித்து இனிப்புச் சுவையை அனைவ ருக்கும் கொடுத்தனர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

“கரும்பின் எந்திரஞ் சிலைப்பின் அயலது 
இருஞ்சுவல்வாளை பிறமுமாங்கண் கண்பாணை” 

நீர்வளம் மிக்க மருத நிலத்தில் கரும்பு விளை விக்கப்பட்டதுடன் ஆலைகளில் அரைக்கப்பட்ட செய்தி யையும் புறநானூறு கூறுகிறது. கரும்பின் எந்திரம் களிற்றொடு பிரிறும் என்று “ஐங்குறுநூறு” கூறுகிறது. உழவர் தினமாம் பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல், கரும்பு ஆதி முதல் இன்று வரை இடம் பெறுகிறது. கொப்பரையில் பாவைக் காய்ச்சி பாரம்பரிய முறையில் நாட்டுச் சர்க்கரை வெல்லம் தயாரித்து வந்த வழக்கத்திலிருந்து வெள்ளை சர்க்கரையை தயாரிக்கும் நவீன சர்க்கரை ஆலைகள் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அமைக்கப்பட்டன.

நவீன சர்க்கரை ஆலைகள்

1931ல் 29 சர்க்கரை ஆலைகளில் ஒரு லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. விடுதலைக்கு பின்பு உணவு உற்பத்தியில் தன்னி றைவை அடைய வேண்டும் என்று ஐந்தாண்டு திட்டத்தில் இலக்கு தீர்மானித்து 1950ல் ஐந்து கோடி டன்களாக இருநத உணவு தானிய உற்பத்தி இன்று 20 கோடி டன்களாக உயர்ந்துள்ளது. மோடியின் வேளாண் துறை அமைச்சர் அரிசி கையிருப்பு அதிகமாக உள்ளது. எனவே கையிருப்பில் உள்ள ஒரு பகுதி அரிசியை எத்தனால் உற்பத்திக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளார். உலகில் 119 பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 101 வது விதி இடத்தில் உள்ள தாக ஆய்வுகள் கூறுகின்றன. பல கோடி பேர் இந்தி யாவில் இரவு பட்டினியாக தூங்கப் போகிறார்கள் என்ற தேசத்தின் நிலைமை. விடுதலைக்குப் பின் நாட்டில் சர்க்கரை உற்பத்தி யும் அதிகரித்தது. கடந்த ஆண்டு 336 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலகில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். உள் நாட்டின் சர்க்கரை தேவை ஆண்டுக்கு 265 லட்சம் டன்களாகும். அதை விட சர்க்கரை உற்பத்தி 71 லட்சம் டன்கள் அதிகம். கடந்த ஆண்டு 70 லட்சம் டன்கள் சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியும் ஈட்டியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை ஏற்றுமதி செய்திடும் நாடாக இந்தியா விளங்குகிறது.

கரும்பில் இருந்து சர்க்கரை ஆலைகள் சர்க்கரை உற்பத்தி செய்வதுடன் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கரும்பு சாறு. மொல சஸ்சில் இருந்து இயற்கை எரிபொருள் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. 2025 க்குள் பெட்ரோல், டீசல் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்து பயன் படுத்திட இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 9 கோடி பில்லியன் எத்தனால் உற்பத்தியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடியும். அந்நிய செலாவணி மிச்சமாகும். இவை அனைத்துக்கும் அடிப்படை விவசாயிகள் உற்பத்தி செய்து தரும் கரும்புதான் ஆதாரம். கரும்பு ஓராண்டு பயிர் ஆண்டு முழுவதும் பாடுபட்டு கரும்பை வளர்த்து பாதுகாத்து விவசாயிகள் கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகிறார்கள்.

கரும்பு விவசாயிகளின் வாழ்வு இனிக்கிறதா?

கரும்புக்கு கட்டுப்படியாகிற விலை கிடைக்காமல், உரிய காலத்தில் கரும்புக்கான பணம் கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். நாடு முழுவதும் 753 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் ஆண்டு தோறும் 550 சர்க்கரை ஆலைகளே செயல்படும். 347 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளும் உள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சிறு விவசாயிகளுக்கு நாடு முழுவதும் வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தன. இன்று கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை களை ஒழித்துவிட்டு முழுவதையும் தனியார் முதலாளி களிடம் ஒப்படைத்திடும் கொள்கையை மோடி தலை மையிலான பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. 1950க்கு முன்பு நாட்டில் தனியார் சர்க்கரை ஆலை கள் மட்டுமே இருந்தன. தனியார் முதலாளிகள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் கரும்பை வாங்கு வார்கள். விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பு முழுவதையும் கொள்முதல் செய்ய மாட்டார்கள். குறைந்த குத்தகைக்கு விவசாயிகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சர்க்கரை ஆலை முதலாளிகளே கரும்பு பயிரிட்டு கொள்ளை லாபம் ஈட்டினர்.

இந்த நிலையில் கரும்பு விவசாயிகளை பாதுகாத்திட சிலரது முயற்சியில் 1951ல் பிராவ்ரா கூட்டு றவு சர்க்கரை ஆலை முதன் முதலில் அமைக்கப் பட்டது. இதன் பிறகு நாடு முழுவதும் கூட்டுறவு ஆலை கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மதுரை அலங்காநல்லூரில் ஒரு மாத காலமாக ஆலையை திறந்திட கோரி விவசாயிகள் போராடி வரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்பட 16 கூட்டுறவு ஆலைகள் இரண்டு பொதுத்துறை ஆலைகள் உள்ளன. 1966ல் கரும்பு விவசாயிகளை பாதுகாத்திட கரும்பு கட்டுப்பாடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கரும்பு விவசாயிகள்  சந்திக்கும் விலை பிரச்சனை

கரும்புக்கு ஒன்றிய அரசு நியாயமான கட்டுப் படியான விலை என்று சொல்லி எப்ஆர்பி என ஒரு விலையை ஆண்டுதோறும் அறிவிப்பார்கள். 2021-22 பருவ கரும்புக்கு 10 சதவீதம் பிழிதிறனுக்கு ரூ.2900 என்று விலை அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 9.5 பிழிதிறனுக்கு குறைவாக உள்ள தால் ஒரு டன்னுக்கு ரூ.2749.50 தான் விலையாக சர்க்கரை ஆலைகள் வழங்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் பாஜக அரசு ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.15 மட்டுமே விலை யை உயர்த்தியுள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் கரும்பு உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதை விவசாயிகள் ஈடுகட்ட முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்தனர். தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஐந்தாண்டு காலமாக தமிழக கரும்பு விவசாயிகள் ஒரே விலையை பெற்று வந்தனர். மோடி அரசின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் அமலில் இருந்த State Adviced Price (SAP) அறிவித்து வழங்கும் முறையை அதிமுக அரசு கைவிட்டு விட்டது. கரும்புக்கு விலையை நிர்ண ம் செய்து கொள்ள வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை 2018 ஜனவரியில் நிறைவேற்றினார்கள். இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில அரசு கரும்புக்கு விலையை அறிவிக்காமல் சிறிய தொகையை ஊக்கத் தொகையாக வழங்கி வருகின்றன.

                        2021-22 ஆண்டுக்கு
                                மத்திய    மாநில         மொத்த
                  அரசு விலை    அரசு விலை        விலை 
அரியானா        - 2900    - 700         - 3600
பஞ்சாப்             - 2900    - 720         - 3620
உ.பி.,                   - 2900    - 600         - 3500
உத்தரகண்ட்     -2900      - 580         - 3480
தமிழகத்தில்          -2749.50       -        -

அதிமுக அரசு SAPஐ கைவிட்டதால் தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் மற்ற மாநிலங்களில் கரும்பு விவசாயிகள் பெரும் விலையை விட குறைவாக பெறுகின்றனர். தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசு வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு கரும்புக்கு பரிந்துரை விலையை SAP அறிவித்து வழங்கிட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி C2+50 அடிப்படையில் கணக்கிட்டு கரும்புக்கு விலை வழங்கிட வேண்டும். குறைந்த பட்சம் ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 விலை வழங்கிட வேண்டும்.

கரும்பு பண பாக்கி பிரச்சனை

ஆண்டு முழுவதும் பாடுபட்டு உழைத்து சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பை வெட்டி அனுப்பினால் அதற்கு உரிய காலத்தில் பணத்தை  தருவதில்லை. கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 14 நாட்களில் கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். ஆனால் பல மாதங்கள் பணத்தை தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் இன்றைய நிலையில் ரூ.9000 கோடி கரும்பு பண பாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1600 கோடி பாக்கியை பல ஆண்டுகளாக வைத்துள்ளனர். கரும்புக்கு உரிய விலை கிடைக்காததும், உரிய காலத்தில் கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு தராத தாலும் விவசாயிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். வாங்கிய கடனை உரிய காலத்தில் கட்ட முடியாமல் வட்டி, கூடுதல் வட்டியை கட்டி அவதிப் படும் நிலை, மறு சாகுபடிக்கு பணம் இல்லாதது, புதிய கடன்களை வாங்க முடியாதது, திருமணம், குழந்தைகளின் கல்வி, குடும்ப செலவுகளுக்கு பணம் இல்லாமல் நெருக்கடியில் உழலும் நிலை கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. கரும்புக்கு கட்டுப்படியாகிற விலை வழங்குவதன் மூலமும், சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் சர்க்கரை ஆலைகள் தர வைத்திட அரசு தொடர்ந்து தலையிடுவதன் மூலமும் கரும்பு விவசாயிகளை ஓரளவு பாதுகாக்க முடியும்.

கரும்பு சாகுபடி பரப்பு வீழ்ச்சி

2010-11 ல் தமிழ்நாட்டில் 23 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சியடைந்து 2020-21ல் 8.85 லட்சம் டன் சர்க்கரைதான் உற்பத்தி யானது. கரும்பு சாகுபடி பரப்பளவும் கணிசமாக குறைந்துவிட்டது.

வெல்லத்திற்கு விலை  நிர்ணயம் தேவை

தமிழகத்திலும் நாடு முழுவதும் உற்பத்தியாகும் கரும்பில் 25 சதவீதம் குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நாட்டு சர்க்கரை, குண்டு வெல்லம் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக பண்டிகை காலங்களில் விலை உயரும். ஆனால் பண்டிகை காலங்களில் கூட விலை உயர வில்லை. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்கிறது. விவசாயிக ளுக்கு பலனும் இல்லை. மாநில அரசு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து தயாரிப்பாளர்களையும், விவசாயிகளையும் பாதுகாத்திட வேண்டும்.

செங்கரும்புக்கும் விலை இல்லை

தமிழகத்தில் பொங்கலுக்கான செங்கரும்பை விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். பெற்ற பிள்ளையை வளர்ப்பது போல கரும்பு தோட்டத்தை ஆண்டு முழுவதும் சுற்றிச் சுற்றி பாதுகாத்து வளர்த்தெ டுக்கும் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு பத்தாயிரம்  விலை வழங்கிட வேண்டும் என்று கேட்டு வருகிறார் கள். ஆனால் மாநில அரசு ஒரு டன் ஆறாயிரம் ரூபாய்க்கு  கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பில் வழங்கியுள்ளது. இதிலும் கரும்பு தரமாக இல்லை என்பது சொல்லி விலையை குறைக்கின்றனர். ஒரு கரும்பு இருபது ரூபாய் அளவிலேயே செங்கரும்பு விவசாயிகளுக்கு விலை கிடைக்கிறது. அனைத்து வகைகளிலும் பாதிக்கக் கூடியவர்களாகவே விவசாயிகள் உள்ளனர்.

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள்

நாட்டின் பல மாநிலங்களில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு போதிய கூலி, பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. தமிழகத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களை வைத்து முன்னின்று செயல்படும் தரகர்கள் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கின்றனர். மாநில அரசு வெட்டுக் கூலியை நிர்ணயம் செய்து அதை சர்க்கரை ஆலை களே ஏற்றுக் கொள்ளும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். கரும்புத் தோட்டத்தில் விஷப்பாம்புகள் மத்தியில் பணியாற்றும் கரும்பு வெட்டும் தொழிலா ளர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் பத்து லட்சம் ரூபாய் அவரது குடும்பங்களுக்கு கிடைக்கும் வகையில் விபத்து காப்பீடு சர்க்கரை ஆலைகள் செய்திட வேண்டும். கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகன ஓட்டுநர்க ளுக்கும் விபத்து காப்பீடு செய்திட வேண்டும்.

குறைந்த ஊதியத்தில் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள்

நாட்டிலேயே குறைந்த சம்பளத் தொழிலா ளர்களாக சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். தனியார் ஆலைகளிலும், கூட்டுறவு ஆலைகளிலும் இதுதான் நிலைமை. தமிழ்நாட்டில் 2014ல் முத்தரப்பு கூட்டம் நடத்தி சம்பளம் உடன் பாடு செய்யப்பட்டது. 2018ல் காலம் முடிந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக சம்பள உயர்வு பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை. கூட்டுறவு - பொதுத்துறை ஆலைகளில் 21000 பேர் பணி யாற்றிட வேண்டும். இவற்றில் 2800 பேர் நிரந்தரத்  தொழிலாளர்கள். மற்றவர்கள் தினம் ரூ.350 அத்துக்கூலி ஒப்பந்த தொழிலாளர்கள். போதிய தொழி லாளர்கள், திறமையான கரும்பு தொழிலாளர்கள் இன்றி கூட்டுறவு - சர்க்கரை ஆலைகளை மேம் படுத்திட இயலாது. ஒன்றிய அரசு புதியவர்களை நியமனம் செய்திட வேண்டும்.

  • கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு அரை கிலோ சர்க்கரை மானிய விலையில் வழங்கி வந்ததை கைவிட்டதை மீண்டும் செயல்படுத்திட வேண்டும்.
  •  நியாய விலைக்கடைகளில் மானிய விலையில் சர்க்கரை வழங்கிட வேண்டும். கடந்த ஐந்தாண்டு களில் நியாய விலை கடைகளில் சர்க்கரை விலையை இரட்டிப்பாக உயர்த்திவிட்டனர்.
  •  ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ரூ.5000 விலை வழங்கிட வேண்டும்.
  •  மாநில அரசு வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு கரும்புக்கு விலை SAP அறிவித்து வழங்கிட வேண்டும்.
  •  மதுரை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆம்பூர், என்.பி.கே.ஆர் கூட்டுறவு ஆலைகளை மாநில அரசு திறந்து செயல்படுதத வேண்டும்.
  •  அனைத்து கூட்டுறவு ஆலைகளிலும் எத்தனால் பிளாண்ட் அமைத்திட வேண்டும். கிடப்பில் போடப்பட்ட இணை மின்சார திட்டப் பணிகளை முடித்து செயல்படுத்திட வேண்டும்.
  •  கூட்டுறவு - பொதுத்துறை ஆலைகளை பாதுகாத்திட ஒன்றிய அரசு ஐயாயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும்.

 

 

தமிழகத்தில் லட்சக்கணக்கான கரும்பு விவசாயி களை, கரும்பு வெட்டும் தொழிலாளர்களை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாது காத்திட மேம்படுத்திட ஒன்றிய - மாநில அரசுசார் ஆக்கப்பூர்வ திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என்று பொங்கல் நன்னாளில் வலியுறுத்துவோம். 

கட்டுரையாளர் :  பொதுச் செயலாளர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்


 

;